முதல் அத்தியாயம்
நள்ளிரவு நாடகம்
அஞ்சு நிமிஷங்கள் போதும்… அதுக்குள்ல நாம திரும்பி வந்துடலாம். வீட்டிலேர்ந்து என்னைக் கைது செஞ்சுட்டு வந்தப்ப மேஜர் முஹம்மத் அப்துல் கஃப்பார் இந்த வார்த்தைகளத் தான் சொன்னார். 1965வது வருஷம் ஆகஸ்ட் 25ம் தேதி என்னக் கைது செஞ்சு அழைச்சுட்டுப் போனப்ப மேஜர் என்னவோ எங்கிட்ட ரொம்ப கண்ணியமாகத்தான் நடந்துட்டார். கேடுகெட்ட அந்த நாளோட காலை விடிஞ்சப்ப கோட்டையில அதிகாரிங்ககிட்ட நான் ஒப்படைக்கப்பட்டேன். (அரசியல் கைதிங்க எல்லார்த்தையும் அங்கேதான் அடைச்சிருந்தாங்க).
அமெரிக்க எழுத்தாளர் ஜான் சாடங்க் எழுதுன ‘மனிதனும் எலியும்’ ங்கற நாடகத்த நான் படிச்சுட்டிருந்தேன். மணி ஒன்னு ஆயிருச்சு. தூங்கப் போகலாம்னு நெனச்சு நான் புஸ்தகத்த மூடுனப்ப கதவ யாரோ தட்டற சத்தம் கேட்டுச்சு. ஆந்தைகளும் தூங்கிட்டிருக்குற நடுராத்திரியில கதவத் தட்டுவது யாராக இருக்கும்னு நெனைச் சுட்டே கதவத் தொறந்தேன். மீர் ஹுழைபி நின்னுட்டிருந்தார். அவரோட கண்கள்ல பதற்றமும் பீதியும் இருந்துச்சு. உள்ளே கூட்டிக்கிட்டுப்போய் அவரப் பக்கத்துல உட்கார வெச்சுக் கிட்டேன். அன்னைக்கு நடந்த புதிய சேதிகளை அவர் சொல்லத் தொடங்குனார்.
‘அரப் ஏர் நிறுவனத்துல பைலட்டாக இருக்கிறானே யஹ்யா, அவன் காணாம போயிட்டான். ஃகுர்தூமில் இருந்து அடிஸ் அபாபா நகருக்கு போய்க்கிட்டிருந்தானாம். ஃகுர்தூம் நகர்ல விமானத்த தரை இறக்குனதுக்கு அப்புறம் ஆள் எங்கே போனான்னே தெரியலயாம்!’
நண்பன் யஹ்யா ஹுஸைன் காணாம போய்ட்டாங்கற செய்தியக் கேட்டவுடனே என்னோட மனசக் கவலை அப்பிக்கிட்டது. வேளாண்மக் கல்லூரியில படிச்ச பிறகு விமானம் ஓட்டற பயிற்சிய எடுத்துக்கிட்டு அவன் பைலட் ஆயிட்டான். கைநெறைய சம்பாதிச்சுக்கிட்டு இருந்தான். கல்லூரியில தன்னோடு படிச்ச ஒரு பொண்ணையே கல்யாணமும் பண்ணிக்கிட்டான். அழகா ரெண்டு குழந்தைகளும் அவர்களுக்கு இருந்தன. ஒரு குழந்தையோட பேருகூட ‘சுமைய்யா’ன்னு நெனைக்கிறேன். எல்லாவகையான வசதிகளோடு ஆடம்பரமான வாழ்க்கய அவன் வாழ்ந்துக்கிட்டிருந்தான். எனக்குத் தெரிஞ்சு அவனுக்கு எத்தகைய சிக்கலும் வர்றதுக்கு வாய்ப்பில்ல.
‘உனக்கு எப்படித் தெரியும்?’ நான் கேட்டேன்.
‘எந் தங்கச்சி வீட்டுக்காரர் முஹம்மதுவோடும் ழியாவோடும் உட்கார்ந்து பேசிட்டிருந்தேன். அவங்கதான் இதச் சொன்னாங்க.’
‘யஹ்யாவுக்கு அப்படி என்னதான் ஆயிருக்கும்?’
‘எனக்குத் தெரியல. அவங்க என்னென்னவோ காரணங்களை சொல்லிக்கிறாங்க’
கவலையும் வருத்தமும் அவரோட குரல்ல இருந்துச்சு. ‘சி.ஐ.காரங்க அவனக் கடத்திட்டு போயிருக்கலாம்னு யூகிக்கிறாங்க. அதுக்கு காரணம் என்னவாக இருக்கும்னுகூட அவர்களுக்குத் தெரியல. ஃகுர்தூம் ஏர்போட்ல இருக்குற காஃபிடேரியாவுக்கு ஒரு கப் காஃபி குடிக்குறதுக்காக அவன் போனப்ப அங்கேயே மயக்க மடைஞ்சுட்டான், நெனவு தப்பிருச்சு’, தனக்கு தெரிஞ்ச தகவல்கள அவர் சொல்லிக்கிட்டிருக்கறபோதே எங்களோட பேச்சு தெசைமாறி வெறெங்கோ போயிடுச்சு.
இஃவானுல் முஸ்லிமீன் இயக்கத்துக்காரங்கள அரசாங்கம் தேடித்தேடி அரெஸ்ட் பண்ணுதுன்னு ஒரு புதிய தகவல மீர் சொன்னார். அப்படின்னா ஒருவேள யஹ்யாவையும் இதுக்காகத் தான் கைது செஞ்சிருப்பாங்களோ? நான் யோசிச்சுப் பார்த்தேன். அதுவும் இதுவுமா இப்படியே பேசிக்கிட்டே இருந்ததுல அதிகாலை மணி மூனாயிடுச்சு. ஒருவழியா என்னோட நண்பர்கள் கிளம்பி போய்ட்டாங்க. மனசுல கவலையத் தேக்கிட்டு நானும் தூங்கப் போய்ட்டேன்.
தூங்கிக் கொஞ்ச நேரந்தான் ஆயிருக்கும். வரவேற்பறையில யாரோ பேசிக்கற சத்தம் கேட்டுச்சு. மெதுவா கண்ணெ தொறந்து பாத்தேன். வரவேற்பறையில லைட் எரிஞ்சுட்டிருந்துச்சு. நான் தங்கி யிருந்த வூட்டுக்குச் சொந்தக்காரரான என்னோட சித்தி மகன் ரம்ஸி ரொம்ப பதட்டமா அங்கு நின்னுகிட்டிருந்தார். அவரோட மொகத்தில பயங்கரமான பீதி! வீட்டோட கதவ யாரோ தட தடன்னு தட்டுனாங்க. என்னோட காதுக்குப் பக்கத்துல வந்து, ‘ரகசியப் போலிஸார் வந்திருக்கிறாங்கன்னு நெனைக்கறேன். கதவத் தொறக்கறதத் தவிர வேறு வழியில்ல’ன்னு சொல்லிக்கிட்டே ரம்ஸி போய் கதவைத் தொறந்தார். என்னோட கண்கள்ல இருந்த கொஞ்சநஞ்ச தூக்கமும் போயிடுச்சு.
போலிஸ் அதிகாரி வீட்டுக்குள்ளே வந்தார். அவரோடு ஆயுதம் தூக்கிய சிப்பாய்களும் உளவுத்துறையினரும் திபுதிபுன்னு உள்ள நொழைஞ்சாங்க. எதுக்காக இவங்க இந்த நேரத்தில இங்கே வந்திருக்காங்க? ஒருவேள யஹ்யா விஷயமா வந்திருப்பாங்களோ? நான் யோசிக்கத் தொடங்கினேன். ஏதோ பயங்கரமான கனவை பார்க்கற மாதிரி இருந்துச்சு. மேற்கு மாகாணத்தோட தளவாயான ஹாஷிம் மாமாவும் அவர்களோட வந்திருந்தார். அவருக்கும் எங்கள மாதிரியே ஒன்னும் விளங்கல.
‘யார் நீங்க?’ போஸிசாரைப் பாத்து ரம்ஸி கேட்டார்.
‘நான்தான் மேஜர் முஹம்மத் அப்துல் ஃகப்பார் துர்க்’ வந்தவர் சொன்னார்.
‘உங்களோட அடையாள அட்டையைக் காட்ட முடியுமா?’ என்றார் ரம்ஸி.
இந்தக் கேள்வியை அவர் கேட்டதுதான் தாமதம் வந்திருந்த அத்தனை போலிஸ்காரங்களும் உளவுத்துறையினரும் அவரை எரிக்கற மாதிரி பாத்தாங்க. எதுவும் சொல்லாம மேஜர் தன்னோட ஐ.டி கார்டை எடுத்து எங்களுக்கு முன்னால நீட்டினார். எங்களால் அந்தக் கார்டை படிச்சுப் பார்க்கவே முடியல. ஆணி அடிச்சது மாதிரி எங்களோட கண்ணுங்க உறைஞ்சு போயிருந்துச்சு. கார்டுல இருக்குற வெள்ளை எழுத்துகளும் தெரியல, கறுப்பு எழுத்துகளும் தெரியல. ஒன்னும் புரியாம தத்தளிச்சுக்கிட்டிருந்த ஹாஷிம் மாமாவ போலிஸார் வெளியே போகச்சொல்லிட்டாங்க. கதவச் சாத்துன்னு ஒரு சிப்பாய்க்கிட்டே சொன்னாங்க.
கண்ணாமுழி ரெண்டும் வெளியே தெறிச்சு வுழுந்துடற மாதிரி நாங்க இங்கும் அங்கும் பாத்துக்கிட்டிருந்தோம். தாறுமாறா பக்கத்துல நிக்கிறவங்களுக்கும் கேக்கற மாதிரி மூச்சு சீரில்லாம வந்து கிட்டிந்துச்சு.
‘உங்க ரெண்டு பேர்ல அஹ்மத் ராயிஃப் யார்?’ போலிஸ் ஆபிசரின் குரல் மயான அமைதியக் கொலச்சுது.
‘நாந்தான்!’
‘உங்களோட ரூம் எது?’
நான் எதுவும் பேசாம என்னோட ரூமை கை காட்டினேன்.
அந்த ரூமை சர்ச் பண்ணலாமா? ஏதோ அனுமதி கேக்கற மாதிரி எங்கிட்டே அவர் கேட்டார்.
அதைத் தடுக்கற எண்ணத்துல, ‘சர்ச் வாரண்ட் இருக்கா?’ ன்னு ரம்ஸி கேட்டார்.
அதற்குப் பதிலாக, கேலியும் கிண்டலும் கலந்த பரிகாசப் புன்னகை ஒன்றை எங்களை நோக்கி வீசினார். நான் வேண்டாம்னு ரம்ஸியைத் தடுத்து நிறுத்தினேன்.
சோதனை போடுறதுக்காக நாங்க எல்லாம் அந்த ரூம்ல நொழைஞ் சோம். வீட்டோட ஒவ்வொரு இன்ச்சையும் சிப்பாய்ங்க துருவித் துருவி ஆராய்ஞ்சிட்டிருந்தாங்க. நான் அந்த நிமிஷம் வரைக்கும் யஹ்யாவைத் தேடித்தான் இவங்க வந்திருக்கிறாங்கன்னு நெனச்சுக்கிட்டிருந்தேன். அப்படியென்றால் இவங்க எதுக்காக தோண்டித் துருவி ஆராயணும்? அதுவும் ரகசியப் போலிஸார் எதுக்கு இங்கு வரணும்?ங்கற கேள்விகள என்னால கேட்காம இருக்க முடியல. ஒருவேளை இஃக்வான்களையெல்லாம் அரெஸ்ட் செய்வதாகக் கேள்விப்பட்டோமே, அது விஷயமாக வந்திருப் பாங்களோ?
நான் மெதுவா போலிஸ் ஆபீசர்ட்டே போய்க் கேட்டேன் ‘நீங்க எதத் தேடறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?’
‘நாங்க உங்களோட புத்தகங்களயும் நீங்க எழுதியிருக்கற கட்டுரைகளயும் பார்க்க விரும்புறோம்.’
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. புஸ்தகங்களையா? காலங் காலமா நான் தேடித்தேடிச் சேகரிச்சு வைச்சிருக்கற புஸ்தகங் களையா இவங்க சோதனையிடப் போறாங்க? முடியாது. நான் இதை அனுமதிக்கவே மாட்டேன். என்ன ஆனாலும் சரி, நான் இதற்கு உடன்படவே மாட்டேன்.
ஆனா, என்னால எதுவுமே செய்யமுடியல. என்னோட கோபத்தை மென்னு முழுங்கியவனா பேசாம நடப்பத வேடிக்க பார்க்கத்தான் முடிஞ்சுது.
ஏறக்கொறய ஒருமணி நேரம் என்னோட புஸ்தகங்கள இப்படியும் அப்படியுமா புரட்டிப் புரட்டிப் பாத்துக்கிட்டிருந்தாங்க. பல்வேறு தலைப்புகளிலான புத்தகங்கள்ல இருந்து ஒரு குவியலையே சேகரிச்சுக்கிட்டாங்க. அத கொண்டு போய் வீட்டு வாசப்படியில நின்னுகிட்டிருந்த வண்டியில ஏத்திக்கிட்டாங்க. அப்பதான் எனக்கு இன்னொரு விஷயமும் தெரிஞ்சுது. என்னோட தம்பிய கைது செஞ்சப்ப என்னோட புத்தகங்கள்ல ஏறக்கொறய எட்டு பெட்டி களை ரகசியப் போலிஸார் எடுத்துச் போயிருக்கிறாங்க. ஒருவழியா சோதனை முடிஞ்சது. அடுத்து என்ன நடக்குனு எனக்கு நல்லாவே தெரிஞ்சுடுச்சு.
‘நீங்க போய் டிரெஸ்ஸ மாத்திக்கங்க’ — அதிகாரி பக்கத்துல வந்து சொன்னார்.
‘கண்டிப்பாக மாத்திக்கறேன்; ஆனா, எதுக்குன்னு தெரிஞ்சுக்க லாமா?’
‘கவலைப்படறதுக்கு ஒன்னுமில்ல! உளவுத்துறை அலுவலகத்துல வைச்சு உங்களக் கொஞ்சம் விசாரிக்கணும். அஞ்சு நிமிஷம். அஞ்சே நிமிஷம்தான். அப்புறம் உடனே திரும்பிடலாம்.’
நெனவில் நின்ற நாள்
‘நடு ராத்திரியிலேயா?’ நான் கொஞ்சம் இழுத்தேன்.
‘ஆமாம்… நடு ராத்திரியிலேதான்!’ சொல்றப்ப அதிகாரியோட குரல்ல கொஞ்சம் அதிகமாகவே கடுமை இருந்துச்சு.
இனிமே பேசுவது வீண் வேலைன்னு தெரிஞ்சுபோச்சு. நான் ஒன்னும் பேசாம என்னோட ரூமுக்குப் போய் உடைகளை மாத்திக்கிட்டு வந்தேன். ஏதோ நடக்கப் போகுது; நடப்பது எதா இருந்தாலும் நம்மோட கையில எதுவும் இல்லன்னு மனசுல நெனச்சுக்கிட்டு எதுக்கும் தயாருங்கற மனநிலையோட அவங் களோடு சேர்ந்து நடக்கத் தொடங்கினேன். கடுமையான வெய்யில் காலமா இருந்ததாலே ராத்திரி நேரத்திலேயும் ஒரே கசகசப்பா இருந்துச்சு. அதனால, என்னையும் அறியாம நான் தடிச்ச குளிர்கால உடைகள போட்டுகிட்டேன்.
கருக்கல் கலையாத வைகறைப் பொழுதுல எங்க வண்டி பயங்கர வேகமா தூக்கம் கலையாத கெய்ரோ நகரத்து வீதிகள்ல சர்சர்ரென்று விரைஞ்சுச்சு. டிரைவருக்குப் பக்கத்து சீட்டில அதிகாரி உட்கார்ந்திருந்தார். என்ன பின்னால உட்கார வெச்சாங்க. உளவுத் துறையினரும் மத்த போலிசாரும் எனக்குப் பக்கத்துல உட்கார்ந்து இருந்தாங்க. என்னைக் கண்காணிக்கற மாதிரி ரெண்டு போலிஸார் என்னோட ரெண்டு தோள் பட்டைகள ஒட்டி உட்கார்ந்து கிட்டாங்க. என்னோட உள்ளத்துல என்னென்னவோ கேள்விங்க எல்லாம் ஒவ்வொன்னா படையெடுத்து வந்துகிட்டிருந்துச்சு. விடிஆவூட்வித் முன்னாடி அவை அனைத்திற்கும் எனக்கு விடை கெடச்சுடுச்சு.
நான் அறவே எதிர்பார்க்காத விடைகள். என்னால மறக்கவே முடியாத நாள். விழிகளை உயர வைச்சு திகைப்பை நெஞ்சுக்குள் திணிச்ச நாள்.
எழுந்திரிக்கவே ஆசைப்படாம பயங்கரமா சோம்பல் முறிச்சுக் கிட்டு விடியல் புரண்டு கிட்டிருந்துச்சு. நாங்க உளவுத்துறை அலுவலகத்திற்குள்ள நுழைந்தப்ப அலுவலகமே இயங்காம உறைஞ்சு போய்க்கெடந்தது. சுடுகாட்டு வாசம் அடிக்கற மயான அமைதி. அது ஒரு இடுகாடு மாதிரி எனக்குக் காட்சியளிச்சுது.
மேஜர் முன்னால நடந்து போய்க்கிட்டிருந்தார். உளவுத் துறைக் காரங்க புடைசூழ நான் பின்னாடி போய்க்கிட்டிருந்தேன். சாதா ரணமா சிவிலியன்ங்க அணியற சட்டை பேண்ட்டையே அவர் போட்டு கிட்டிருந்தார். நகரத்து நடுவீதியில எதேச்சையா என்னைச் சந்திச்சவர மாதிரி அவர் காணப்பட்டார். அவருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லாதவர மாதிரி அவர் பாட்டுக்கு நடந்து போய்க்கிட்டிருந்தார். யாருக்கும் எந்தத் தீங்கும் தர நெனைக்காத இந்த நல்ல மனிதரிடம்தான் மனித உயிருங்க மாட்டிக்கிட் டிருந்தன. ஆமாமைய்யா ஆமாம்! இந்த நல்ல மனுஷர் நெனைச்சா யாரை வேண்டுமானாலும் உள்ளே தள்ளலாம். யாருக்கு வேண்டு மானாலும் மரண ஓலைய அனுப்பலாம். தன்னோட பாக்கெட்ல இருக்குற ஐ.டி கார்டைக் காட்டி யாரை வேண்டுமானாலும் எதுவும் செய்யலாம். மாட்டிக்கிட்டவன் அந்தக் கார்டை ஒழுங்காக படிக்கவும் முடியாது. அதற்குள் எல்லாம் நடந்துடும். கன்னித் தீவு மூஸாவின் மந்திரக் கோல் அது! அலி பாபாவின் மந்திரம் அது! எந்தக் கதவயும் அதைக் கொண்டு தொறக்கலாம். யாரையும் உள்ளே தள்ளலாம். கார்டைக் காட்டா மலேயே கூட அவரால் இந்த அற் புதங்களயெல்லாம் செய்ய முடியும். அவரை மட்டுமல்ல, அவரை மாதிரியுள்ள எந்த அரசாங்க அதிகாரியையும் யாரும் தடுத்து நிறுத்த முடியாது. அவர்களுக்கு எதிர்ல வாயத் தொறக்கவும் முடியாது.
தப்பித்தவறி யாரேனும் ஒருத்தர் ஏதேனும் போலிஸ் அதிகாரியுட னாவது சண்டைசச்சரவு வைச்சுக்கிட்டா அவரோட கதி அதோகதி தான். அவரோட வீடிருக்கற தெருவில் டயர்களை கிறீச்சிட்டவாறு வேகமா நுழையற ஜீப்புங்க அவரை அள்ளி எடுத்துக்கிட்டு புறம் பேசுபவனும் புகமுடியாத இருட்டுக் கொட்டடியில தள்ளிடும். நொடிநேரமும் அகலாது அவர் கூடவே இருக்கற வானவர் களுக்குக்கூட அவரை எங்கு அடைச்சிருக்கிறாங்கன்னு தெரியாது. பல மாசம் ஓடிப்போன பின்னால அவரக்கொண்டுபோயி நீதி மன்றத்துல நிறுத்துவாங்க. ஒருவேளை நீதிபதி மனசு வெச்சா அவரி டமிருந்து வாக்குமூலம் வாங்கப்படும். இல்லன்னா அதுவும் இல்லாமலேயே அவர் வருடக்கணக்கில் சிறையிலேயே தன்னோட வாழ்நாளைக் கழிக்க வேண்டியிருக்கும்.
உங்களை அரெஸ்ட் செஞ்சு வெசாரணை அதிகாரியின் முன்னால நிறுத்திட்டாங்கன்னா எதுக்காக உங்களை அரெஸ்ட் செஞ்சாங் கன்னு நீங்களே அவருக்கு விளக்கம் அளிக்கனும். எதுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளோம்னு உண்மையிலேயே உங்களுக்குத் தெரியலன்னா அப்புறம் உங்களோட நிலை என்னவாகும்னு அந்த ஆபீசருக்கே தெரியாது. நரகத்துல கெடப்பதாகச் சொல்றாங்களே பயங்கர வேதனை, அது எப்படியிருக்கும்னு நீங்க இங்கேயே வெள்ளோட்டம் பாத்துக்கலாம்.
ராணுவப் புலனாய்வு அலுவலகத்து விருந்தாளியா நான் உட்கார்ந் திருந்தேன். எப்போ என்ன விசாரிக்க கூப்பிடு வாங்களோன்னு எதிர்பாத்து காத்துக்கிட்டிருந்தேன். எனக்குப் பக்கத்துல அப்பாவி மனுஷர் ஒருத்தர் உட்கார்ந்திருந்தார். வெசாரணை அதிகாரி கிட்டேயிருந்து அவருக்கு ஓலை வந்தது. தான் எந்தக் குற்றமும் செய்யலங்கறதுனாலே வெசாரணை அதிகாரி தன்ன உடனே வுட்டு டுவார்னு பெருத்த நம்பிக்கையோடு அவர் உள்ளே நொழஞ்சார். எதுக்காக உங்களக் கைது செஞ்சுருக்கக்கறாங்கன்னு அவர்கிட்டே காரணம் கேட்கப்பட்டது. தனக்கு ஒன்னுமே தெரியாதுன்னு அவர் பரிதாபமா சொன்னார். வேதனையை விநியோகிக்கற சிப்பாய்கள வரவழைச்சு அவங்ககிட்ட இவரை ஆபீசர் ஒப்படெச்சார். உங்களிடம் உள்ளதை கொஞ்சநேரம் இவருக்கு சுவைக்கக் கொடுங்கள்!
எட்டுமணிநேரம் தொடர்ந்து அவரை சவுக்கால் அடிச்சுக்கிட்டே இருந்தாங்க. கொஞ்சநேரங்கூட நிறுத்தாம தொடர்ந்து அடிச்சுக் கிட்டே இருந்தாங்க. அதுக்கு அப்புறம் பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்புக் கழியால அவரோட உடம்போட பல பாகங்கள்லயும் சூடு போட்டாங்க. தங்கிட்டருந்து என்ன எதிர் பார்க்கிறாங்க? எதைச் சொன்னால், தான் தப்பிக்க முடியும்?ன்னு அந்த மனுஷர் யோசிச்சுக்கிட்டே இருந்தார். பாவம் அவருக்கு எந்த விடையும் கெடக்கல. அதற்குள் எனக்கு ஓலை வந்துடுச்சு. அந்த மனுஷர் என்னவானார்ன்னு கடைசிவரைக்கும் என்னால தெரிஞ்சுக்கவே முடியல!
உங்களோட வீட்டுக்குப் பக்கத்துல யாராவது போலிஸ் அதிகாரி குடியிருக்கிறாங்களா? தப்பித்தவறி என்னைக்காவது ஒருநாள் அவரோட மனைவியோடு உங்க மனைவி தகராறு செஞ்சு விட்டிருக்கிறாளா? அவ்வளவுதான் நீங்க தொலைஞ்சீங்க. இப்படி மாட்டிக்கிட்ட ஒரு மனிதரையும் சிறையில நான் பாத்தேன். அவரும் இன்னொரு போலிஸ் ஆபீசரும் ஒரே அபார்ட்மெண்ட்ல குடியிருந்தாங்க. ஒருநாள் அவரோட மனைவிக்கும் ஆபீசரோட மனைவிக்கும் வாய்த்தகராறு முத்திடுச்சு. விஷயம் வெளியே பரவி ஆபீசரும் சண்டைக்கு வந்துவிட்டார். அதுக்குப்பிறகு பலநாள் போனபிறகுதான் சோதனைப்படலம் ஆரம்பிச்சுது. 1954 ஆம் வருஷம் சந்தேகத்தின்பேர்ல பலர் கைது செய்யப்பட்டாங்க.
ஆட்டு மந்தைகளை மாதிரி அள்ளி வளைச்சு ஆட்களைக் கைது செஞ்சதுல இந்த மனிதரும் மாட்டிக்கிட்டார். தன்னோட
பக்கத்து வீட்டுக்காரரைக் கைது செஞ்சுட்டாங்கங்கற தகவல் ஆபீசருக்குத் தெரிஞ்சுடுச்சு. ஒருநாள் சிறைக் கொட்டடியில பக்கத்து வீட்டுக்காரரை அவர் பாத்துட்டார். பழிவாங்க இதை விட அருமையான இன்னொரு சந்தர்ப்பம் அவருக்கு வாய்க்குமா என்ன? அவரோட பெயரை எங்கு சேர்க்கணுமோ அங்கு சேர்த்துட்டார். ஒருசில நிமிஷங்கள்ல அவருக்கு அழைப்போலை வந்துடுச்சு. மக்கள் நீதிமன்றம் (கஞுணிணீடூஞு’ண் இணிதணூt)ங்கற பெயர்ல செயல்பட்டு வந்த ராணுவ நீதிமன்றத்திற்கு அவர கூட்டிக்கிட்டு போனாங்க. துரதிருஷ்டம் அவரை துரத்திக்கிட்டே வந்துச்சு. அன்னைக்குன்னு பாத்து நீதிமன்றத்துல வெசாரணையே நடக்கல. விசாரிக்காமலேயே தண்டனை வழங்குவாங்க சில நாட்கள்ல. அன்னைக்கு அதுதான் நடந்தது. நீதிமன்றத்திற்கு கூட்டிக்கிட்டு போகப்பட்ட குற்றவாளிங்க ரெண்டு வரிசைகள்ல நிறுத்தப் பட்டாங்க. தன்னோட கைத்தடியை நீட்டியவாறு ஒரு சிப்பாய் வேகவேகமா வந்தார். அவருக்குப் பின்னால அதே வேகத்துல ஒரு ஹவில்தாரும் வந்துகிட்டு இருந்தார். அணிவகுத்து நின்றிருந்த குற்றவாளிகளுக்கு முன்னால ரெண்டுபேரும் வந்து நின்னாங்க. முன்னால நிக்கிறவங்க கழுதைகளா? காட்டுமிராண்டிகளா?ன்னு கூட கவலைப்படாம ஹவில்தார் தன்னோட கையில இருக்குற பேப்பரைப் பாத்து காட்டுக் கத்து கத்தினார்.
வலது பக்கம் நிற்பவர்களுக்கு பத்தாண்டு கடுங்காவல். இடது பக்கம் நிற்பவர்களுக்கோ இன்னும் ஐந்தாண்டுகள் அதிகம்.
அதாவது பதினைஞ்சு வருஷம். அல்லாஹு அக்பர். அதற்கு அடுத்த நாள் பக்கத்து வீட்டுக்காரர் லிமான் தர்ராங்கற சிறைச் சாலைக்கு அனுப்பப்பட்டார். ஒரு மலையடிவாரத்துல குன்றுகள்ல பட்டுத் தெறிக்கற வெயில் கொடுமைய அனுபவிச்சவாறு தூக்கவே முடியாத சம்மட்டியைத் தூக்கி ஓங்கி ஓங்கி அவர் பாறைக்கற்களை பல வருஷம் உடைச்சுக்கிட்டிருந்தார்.
திக்குத் தெரியாத காட்டை நோக்கி
சரி, இப்போ நம்மோட கதக்கு வருவோம்.
1965, ஆகஸ்ட், 25 …..
ராணுவப் புலனாய்வுத் துறையின் அலுவலகத்துக்கு நாங்க போனோம். மேஜரும் மற்றமற்ற சிப்பாய்களும் வேகவேகமா மாடிப்படிகள்ல ஏறிக்கிட்டிருந்தாங்க. என்னால கால்களைத் தூக்கிவைக்கவே முடியல. இனந்தெரியாத காரணத்தால் என்னோட தொண்டை அடைச்சுக்கிட்டிருந்துச்சு. வாய் வழியா யாரோ உள்ளே கையவுட்டு இதயத்தைப் பிசைஞ்சுகிட்டிருந்தாங்க. இலைதழை மறைவிலும் சூரியன் தட்டுப்படாத பயங்கரமான தொரு காட்டுக்குள்ள என்னை கூட்டிக்கிட்டு போறமாதிரி தோணுச்சு. நீண்ட தாழ்வாரங்களயும் உயர்ந்த மதில்களயும் கொண்ட இந்த கட்டிடத்திற்குள்ள மனுஷங்க ஒருவருமே இல்லயோன்னு தோணுச்சு. அரசாங்கக் கட்டிடங்கள் அதிலும் குறிப்பா சிறைச்சாலைகள பாத்தாலே பயமளிக்கும் விதத்துல உயரமாகவும் விஸ்தாரமாகவும் இருக்கு. சிறைச்சாலைகளை இப்படித்தான் கட்டணும்னு யார் திட்டமிட்டாங்களோ?
மிகப்பெரிய பலசாலியும் பெயரைக் கேட்டவுடன் குலை நடுங்கிப் போகற புலனாய்வுத்துறை பில்டிங் இதுதான் போலிருக்குதுன்னு நான் நெனச்சுக்கிட்டேன். இப்படிக் கண்டதையும் யோசிச்சுக் கிட்டிருந்த நான் பொறுக்க முடியாம கத்தினேன்: என்னை எங்கே கூட்டிக்கிட்டு போறீங்க?
பீதியோடு நான் கத்துறத கொஞ்சமும் சட்டை செய்யாம மேஜர் அவர் பாட்டுக்கு விடுவிடுவென போய்க்கிட்டே இருந்தார். பஸ்ஸில் பக்கத்து சீட்ல உட்கார்ந்திருப்பவர் மாதிரி பேசிக் கிட்டிருந்தவர் வானத்தப் பொத்துக்கிட்டு குதிச்ச வேத்துக்கிரக மனுஷன மாதிரி மாறிட்டார். நிழல மாதிரி கூடவே வந்து கிட்டிருந்த ரெண்டு சிப்பாய்கள்ட்ட என்னை ஒப்படைச்சுட்டு தன்னோட அறைக்குள்ள அவர் நொழைஞ்சுட்டார். நிமிஷங்கள் கரைஞ்சு கிட்டேருக்க நான் அங்கேயே நின்னுட்டிருந்தேன். வார்த்தைங்க எல்லாத்தையும் இழந்து உதடுகள்லாம் காய்ஞ்சு போச்சு. உள்ளமோ தடதடவென அடிச்சுக்கிட்டிருந்துச்சு. பேசாத பூதம் மாதிரி நின்னுகிட்டிருந்த இந்தப் பில்டிங்குல வானில் இருந்து உதிர்ந்த வால் நட்சத்திரங்களே நிரம்பியிருக்கிற மாதிரி எனக்குப் பட்டுச்சு. பேசாத சுவருகள்ல எல்லாம் மௌனம் அப்பிக் கெடந்துச்சு. பயங்கரமான அந்த மௌனம் தனக்குள் ஏதோ ஒரு மறைவான செய்திய மறைச்சு வைச்சுருக்கிற மாதிரி எனக்குப் பட்டுச்சு. எவ்வளவோ முயன்றும் என்னால அதைத் தெரிஞ்சுக்கவே முடியல. அறியாப் புறத்திலேர்ந்து எதிர்பாராத அந்த ஆபத்து திடீருன்னு என்னோட தலையில கொட்டிட்டா என்ன செய்யறதுங்கற கலக்கம் வேறு என்னோட வயித்துல உருண்டு கிட்டிருந்துச்சு.
என்னையே வெறிச்சுப் பாத்துக்கிட்டிருந்த ஒரு வார்டன் திடீரென என்னோட கண்ணுல பட்டான். எனக்கே தெரியாம என்னோட வாயிலேர்ந்து வார்த்தைங்க வந்துச்சு.
அங்கே பயங்கரமான சித்திரவதைங்க உண்டா?
எங்கே?
நீங்க என்னை கூட்டிகிட்டு போறீங்களே அங்கேதான்.
பள்ளிவாசல்ல நிக்கற பிச்சைக்காரனப் பாக்கற மாதிரி பரிதாபமா அவன் என்ன பாத்தான். நீங்க இப்போதான் மொதமுறையா அரெஸ்ட் ஆறீங்களா?
ஆஹா. என்னை அரெஸ்ட் செஞ்சுதான் இங்கே கூட்டி வந்துள் ளாங்க. ஆனா, என்னைப் போய் அரெஸ்ட் செய்ய என்ன காரணம்? கைதுங்கற வார்த்தையே என்னோட காதுல கஷாயம் மாதிரி ஒலிச்சது. அஞ்சு நிமிஷங்கள்ல வந்துவிடலாம் அஞ்சு நிமிஷங்கள்ல வந்துவிடலாம்னு மேஜர் சொன்ன வார்த்தைங்க என்னோட காதுல திரும்பத் திரும்ப ஒலிச்சுக்கிட்டே இருந்துச்சு. வார்டனின் வார்த்தைங்க என்ன மறுபடியும் இவ்வுலகிற்கு அழைச்சுவந்துச்சு.
பயப்படாதீங்க. கவலைப்படறதுக்கு ஒன்னுமில்ல.
கவலைப்பட ஒன்னுமில்லயா?
ஆமா. சாதாரண அடிதான் உங்களுக்குக் கெடைக்கும்.
இறைவா இது என்ன கொடுமை? அடியில சாதாரண அடி சர்வதேச அடி என்றெல்லாம் இருக்குதா? சாதாரண அடிக்கும் சிறப்பான அடிக்கும் என்ன வித்தியாசம்?ன்னு அப்போ எனக்கு உண்மையிலேயே விளங்கல. அதற்கு அப்புறம்தான் ரெண்டுக்கும் இடையிலே மலையளவு வித்தியாசம் இருக்குதுன்னு அனுபவ பூர்வமா உணர்ந்துகிட்டேன்.
மேஜர் நொழஞ்ச அதே அறைக்குள்ளே என்னையும் கூட்டிகிட்டு போனாங்க. உட்காருன்னு எங்கிட்டே சொன்னாங்க. சுபுஹ் தொழுகைக்கான நேரம் வந்துட்டதால தொழுது கொள்ள அனுமதி கேட்டேன். அனுமதியும் கெடச்சுது. ஆனா, கிப்லா எந்தப் பக்கம்னு தெரியல. மேஜரும் தனக்குத் தெரியாதுன்னு சொல்லிட்டார். இதுமாதிரி நேரங்கள்ல எந்தத்தெசய கிப்லான்னு மனசு தீர்மானிக்குதோ அந்தத்தெசயில தொழுதுக்கலாம்ங்கற விதி ஞாபகத்துக்கு வந்துச்சு.
என்னைக் கைது செஞ்சப்ப கைப்பத்திய புஸ்தகங்களைப் பத்திய ஒரு பட்டியலை மேஜர் தயார் செஞ்சுட்டிருந்தார். கைப்பற்றப் பட்ட புஸ்தகங்கள்ல நான் எழுதிய நூற்கள், என்னோட கடிதங்கள், கட்டுரைகள் அப்படீன்னு ஒருசிலதை மட்டுமே அப்பட்டியல்ல எழுதியிருந்தார். கையிலிருந்த பேனாவை எங்கிட்டே நீட்டி அதுல கையெழுத்து போட சொன்னார். எதைப் பத்தியும் கவலைப் படாம நிதானமாக அவர் காட்டிய இடத்துல கையெழுத்து போட்டேன். ஒருசில நிமிஷங்கள்ல நாங்க மறுபடியும் ஜீப்பில் கிளம்பினோம். கெய்ரோவின் முக்கிய சாலைகள் பலதை வேகமாகக் கடந்து போன ஜீப் டிரைவர் கிட்டே மேலே போகணும்னு மேஜர் சொன்னார். ஆம்! இதே வார்த்தையைத்தான் அவர் சொன்னார்.
கோட்டையின் மாடங்கள் தூரத்துல கண்ணுல பட்டுச்சு. பக்கத்துல போக போக பெரிதாகிட்டே போச்சு. பயங்கரமான தோற்றத்துல அரக்கன் ஒருத்தன் வானத்தை முட்டிக்கிட்டு நிக்கிற மாதிரி எனக்குத் தோணுச்சு. திடீருன்னு ஹழ்ரத் அமர் இப்னுல் ஆஸ் பத்திய ஞாபகம் வந்துச்சு. மாபெரும் வீரரான அந்த சஹாபிதானே எகிப்தை ரோமானியர்கள்டேருந்து வெற்றி கொண்டு அங்கே இஸ்லாம் பரவக் காரணமா இருந்தார். அவரால் தானே நான் இன்னைக்கு முஸ்லிமா இருக்கிறேன். என்னதான் துன்பங்கள் சோதனைங்க வந்தாலும் கெய்ரோவின் கோட்டைகள்ல இஸ்லாம் இலங்கிக் கிட்டே இருக்கும்னு ஏனோ எனக்குத் தோணுச்சு.
வளைஞ்சும் நெளிஞ்சும் போன சுரங்கப்பாதைகள்ல வேகமாக போனது ஜீப். அங்கே சாதாரண சிவிலியன்ங்க யாரும் காணல. சுரங்கப் பாதைங்க முழுக்க சிப்பாய்களே இருந்தாங்க. கையில நீண்ட துப்பாக்கிச் சனியன்கள வெச்சிருந்தாங்க. உதய சூரியனின் கதிர்கள் பட்டு துப்பாக்கிகளோட மேல் முனைகள்ல சொருகி யிருந்த கத்திகள் பளபளன்னு மின்னுச்சு. ஏதோ போருக்குச் போற வங்க மாதிரி தலைகள்ல இரும்புக் கவசங்களை போட்டுருந்தாங்க. ஓரிடத்துல சாத்தியிருந்த கதவுக்கு முன்னால ஜீப் கிறீச்சுன்னு நின்னுச்சு. என்னோட நண்பர்கள் இனிமேல் என்னோடு எப்படி நடந்து க்குவாங்கங்கறது எனக்குப் புரிஞ்சு போச்சு. பாழடைஞ்ச மண்டபம் ஒன்னுல ஆதி காலத்துல புதைக்கப்பட்ட புதைகுழிக்குள் நொழயற மாதிரி எனக்குத் தோணுச்சு. கோட்டையின் சிறைச் சாலைப் பகுதிக்குத்தான் நாங்க வந்து சேர்ந்திருந்தோம். முஹம்மத் அலி பாஷா காலத்துல நடந்த மனுஷத் தன்மைக்கே அப்பாற்பட்ட ரத்தக்களறிகளுக்கும் கொடுமைகளுக்கும் இந்த சிறைச்சாலைதான் சாட்சி. அங்கு போன மறுநாள் காலையிலேயே என்னால தூக்கவே முடியாத பெருஞ் சுமை ஒன்னை நான் தூக்க வேண்டியிருந்துச்சு. வதைகளத் தாங்க இயலாம மூச்சை நிறுத்திட்ட அப்பாவி ஒருத்தரோட பொணத்த.
Filed under: இஸ்லாம் | Leave a comment »