இறைத்தூதர் கால அரசியல் அமைப்பு

இறைத்தூதர் கால

அரசியல் அமைப்பு

 

 

அல்லாமா சையத் ஸுலைமான் நத்வி

 

தமிழாக்கம்

சையத் அப்துர் ரஹ்மான் உமரி

இறைத்தூதர் காலத்தைய

அரசியல் அமைப்பு

 

அரபுலகில் நீதியுடன் கூடியதோர் அரசை நிறுவுவதில், அரபு மக்களின் அறியாமையும் பாமரத்தன்மையும் காட்டு மிராண்டித்தனமும் தான் இஸ்லலாமிற்கு தடைக்கற்களாக அமைந்தன என்றுதான் பெரும்பாலும் கருதப்பட்டு வருகின்றது. ஆனால், அக்காலத் தில் நிலவி வந்த சமூகஅமைப்பும் அரசமைக்கும் விஷயத்தில் முட்டுக் கட்டையாக விளங்கியது என்று நாம் கூறுவது பலபேருக்கு வியப்பாகத் தெரியும். ஹிஜ்ரி எட்டாம் ஆண்டில் மக்கா வெற்றிக்குப்பிறகு நாகரிக மற்ற அரபுலக மக்கள் அனைவரும் இஸ்லாமை ஏற்றுக்கொண்டார்கள் என்றபோதிலும் பண்பாடு இஸ்லாமிற்கு கட்டுப்படாமல் தலை நிமிர்ந்தே  நின்றது. ஈரான் மன்னருக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அழைப்புமடல் அனுப்பியபோது நிகழ்ந்த  நிகழ்ச்சிகள், அதனால் தோன்றிய எதிர்விளை வுகள், ரோமானிய கைஸரை எதிர்த்து ஹிஜ்ரி 9ம் ஆண்டில் நடைபெற்ற மூத்தா போர், நேர்வழி நின்ற ஃகலீஃபாக்கள் காலத்தில் ஈரானியர்களோடும் ரோமானி யர்களோடும் நடைபெற்ற போர்களுக்கெல்லாம் இப்பண்பாட்டுப் பெருமையே காரணமாக அமைந்தது.

கி.பி ஆறாம் நூற்றாண்டில் இஸ்லாம் உதயமானபோது, இறைத்தூதராக நபியாக அனுப்பப்பட்டபோது உலகின் பெரும்பாலான பகுதிகளை  பாரசீகப் பேரரசும் ரோமானிய சாம்ராஜ்யமும் தான் ஆண்டு வந்தன. அவ்விரு பேரரசுகளின் எல்லைகளும் அரபு நாட்டின் இராக் மற்றும் சிரியா எல்லையில் வந்து சந்தித்தன. அரபுகுலங்களில் நாகரீகமும் பண்பாடும் சிறந்துவிளங்கிய குலங்களாக எவற்றையேனும் நாம் கருதினால் அவை இவ்விரு பேரரசுகளின் கீழ் ஆளப்பட்டு வந்தவையே என்று சற்றும் யோசிக்காமல் கூறலாம். யமன், பஹ்ரைன், அம்மான், இராக் போன்றவை ஈரானிய ஆட்சியின் கீழும், மத்திய அரேபியா, சிரியாவின் எல்லைப் பகுதிகள் போன்றவை ரோமர்களின் ஆட்சியின் கீழும் ஆளப்பட்டுவந்தன.

ஹீறா மாகாணத்தில் ளஃக்மி வம்சத்தினர் ஈரானிய ஆளுமையின் கீழ் மிகப்பெரியதோர் அரசாட்சியை நிறுவியிருந்தனர். நுஃமான் பின் முன்ஸிர் அதக் அரசராக விளங்கினார். இறைத்தூதர் சக காலத்திலும் சிரியா நாட்டு எல்லைகளை ஆண்டுவந்த ஃகஸ்ஸான் வம்ச ஆட்சி ரோமானியர்களின் ஆட்சியின் கீழ் இயங்கிவந்தது. நீண்டகாலம் வரைக்கும் யமன் மாகாணத்தை அரபுக்கள் தன்னிச்சையாக ஆண்டு வந்தனர், என்றாலும் பிற்காலத்தில் அது ஈரானியர்களின் ஆளுமையின் கீழ் வந்துவிட்டது. இறைத்தூதரின் காலத்தில் பாஸான் எனும் பெயர் கொண்ட ஈரானிய ஆளுனர் ஆண்டுவந்தார். இப்பேரரசுகளின் வல்லமை எந்தளவுக்கு அரபுக்களின் சிந்தனையை வியாபித்திருந்தது என்றால் ஆட்சி என்றாலே, அரசமைப்பு என்றாலே அவர்களுக்கு இப்பேரரசர் கள்தான் நினைவுக்கு வருவார்கள். இவ்விரு வல்லரசுகளின் ஆட்சி அல்லாத இன்னோர் ஆட்சியமைப்பை அவர்களால் கற்பனை செய்துகூட பார்க்க இயலவில்லை.ஸ

 

நேரியதொரு குழுவைக்கொண்டு சீரான ஆட்சி

 

சிந்தனைச் சீர்திருத்தத்தை மேற்கொண்டு, அரபுக்களின் பழங்கால புராதன எண்ணங்களை அகற்றினால் போதும், இஸ்லாமியப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் புகுத்தினால் போதும் இஸ்லாமிய ஆட்சியை எளிதாக ஏற்படுத்திவிடலாம் என்கின்ற நிலை இஸ்லாமிற்கு இல்லைஸ, மாறாக, அவர்களது சிற்தனையில் வேருன்றிப் போயிருந்த ஆட்சி  குறித்த அபிப்பிராயங்களையும் அந்நிய சமூகங்களின் ஆட்சி யினால் ஒழுக்கத்திலும் சமூகத்திலும் ஏற்பட்டிருந்த தாழ்வுமனப் பான்மைத் தாக்கங்களையும் அறவே அகற்றவேண்டியிருந்தது.  இவை யனைத்திற்கும் மேலாக, சுயமாக இயற்றிக் கொண்ட சட்டதிட்டங்களின் கொடுமைகளிலிருந்தும் தளைகளிலிருந்தும் ஒட்டுமொத்த மனிதசமூகத் தையும் மீட்கவேண்டியிருந்தது. இறைவனின் சட்டதிட்டங்களை மட்டுமே பின்பற்றியாகவேண்டியதன் அவசியத்தை அறிமுகப்படுத் தியாக வேண்டியிருந்தது. இறைவனின் சட்டதிட்டங்களை விட்டுவிட்டு மனித சட்டங்களை பின்பற்றுவதென்பது இறைவனுக்கு இணைவைக் கின்ற ஷிர்க்கின் வாசலை அகலமாகத் திறந்துவைப்பதற்கு ஒப்பாகும்ஸ. ஆனால் அதே சமயம், எடுத்த உடனேயே ஒரேடியாக இதை அமுல் படுத்திவிடவும் முடியாது. சட்டதிட்டங்கள், ஷரீஅத்தை செயல்படுத்தும் விஷயத்தில் எவ்வாறு படிப்படியான நடைமுறைகளை இஸ்லாம் மேற் கொண்டதோ அதேபோன்ற வழிமுறையையே அரசியல் அமைப்பை நிறுவும் விஷயத்திலும் இஸ்லாம் கைக்கொண்டது.

உலகமக்களையெல்லாம் சீர்திருத்தும் நோக்கத்தில் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டிருந்தாலும் அண்ணலார் அரபுலகிலி ருந்தே தமது பணியைத் தொடங்கினார்கள். ஏனெனில், தமது பணியை நிறைவேற்றவேண்டும் என்றாலும், அப்பணி தமக்குப்பிறகும் காலா காலத்திற்கு நடைபெறவேண்டும் என்றாலும் சீரியதொரு குழுவை சிறப்பாக உருவாக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. இக்குறிப்பை கீழ்க்காணும் இறைவசனம் நமக்கு நன்முறையில் விளக்குகின்றது.

“இவ்வாறே உங்களை நடுநிலை சமூகமாக ஆக்கியுள்ளோம். மற்ற மக்களுக்கு எடுத்துக்கூறும் சாட்சியாளர்களாக நீங்கள் மாற வேண்டும்; உங்களுக்கு எடுத்துக்கூறும் சாட்சியாளராக இறைத்தூதர் மாறவேண்டும் என்பதற்காக”.

(அல்குர்ஆன் 2 @ 143)

இந்தச் சமூகமக்களுக்கு இறைத்தூதரும் மற்றமற்ற மக்களுக்கும் இந்தச் சமூக மக்களும் வழிகாட்டுவார்கள்; தலைமை வகிப்பார்கள்; முறைப்படுத்துவார்கள்; வாழ்க்கைநெறியை சுட்டிக் காட்டுவார்கள். இவற்றை நிறைவேற்றுவதற்காகத்தான் அவர்கள் படைக்கப்பட்டுள்ளார்கள்.

அதேசமயம், இந்த வழிகாட்டுதல், முறைப்படுத்துதல், சீர்படுத்ததுதல் அரபு மக்களுக்கும் தேவைப்பட்டது. ஆகையால், அரேபிய தீபகற்பத்தின் உட்பகுதியிலுள்ள தஹாமா, ஹிஜாஸ், மற்றும் நஜ்த் பகுதி மக்களை சீர்படுத்துவதை இறைத்தூதர் மேற்கொண்டார். தம்முடைய 23 ஆண்டுகால இஸ்லாமியப் பணியில் ஏறத்தாழ பதினாறாண்டு காலம் இக்குலங்களை நேர்வழிப்படுத்துவதிலேயே செலவிட்டார். மக்காவிலிருந்து ஹிஜ்றத் செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டபோது இந்த அம்சத்தை மனதில் கொண்டுதான் இறைத்தூõதர் கள் அவர்கள் மதீனாவைத் தேர்ந்தெடுத்தார்கள். ஏனென்றால், புகலிடம் தருவதற்கு மதீனா முன்வந்ததைப் போன்றே ஹஜ்ர் மற்றும் யமாமாவும் முன்வந்தன. யமன் மாகாணத்தின் தலைவரான துஃபைல் தவ்ஸி தங்களுடைய தவ்ஸ் கோட்டைக்குள் இறைத்தூதருக்கு இடமளிக்கத் தயாராகிவிட்டிருந்தார். ஆனால், பண்பாடு செறிந்த இப்பாதுகாப்பான இடங்களை எல்லாம் விட்டுவிட்டு பேரீச்ச மரங்கள் அடர்ந்த சரளைக்காடான மதீனாவையே  இறைத்தூதர்கள்  அவர்கள் தேர்ந் தெடுத்தார்கள். மதீனாவில் யூதர்கள், இரட்டைவேட நயவஞ்சகர்களான முனாஃபிக்கீன்களின் தொல்லை ஒருபக்கம், புதியஊரின் தட்ப வெப்பநிலை ஒத்துக்கொள்ளாமல் புலம்பெயர்ந்த முஹாஜிரீன்கள் அடைந்த துயரங்கள் ஒருபக்கம் என்று மதீனா நிம்மதியாக வாழத் தகுதியற்ற ஊராக மாறிவிட்டிருந்தது.  காலம் செல்லச்செல்ல மதீனாவை மையமாகக்கொண்டு அரபுதேசம் முழுக்க இஸ்லாம் பரவலாயிற்றுஸ! தொடர்ந்து ஹுதைபிய்யா உடன்படிக்கையின் வாயிலாக மக்கா வெற்றி கொள்ளப்பட்டு இஸ்லாமின் கீழ்வந்த பிறகு அரபுலகின் மற்றமற்ற பகுதிகளில் கவனம் செலுத்துவது எளிதாக ஆயிற்று!. இஸ்லாமிய பணிவட்டம் விரிவாக்கப்பட்டது; அரபுலகம் முழுக்க பார்வை செலுத்தப்பட்டது.

அரபுலகின் உட்பகுதியில் பெரும்பாலான பகுதிகளில் சமுதாயத் தலைவர்கள், ஊர்த் தலைவர்கள் மூலமாகத்தான் இஸ்லாம் பரவியது. இஸ்லாமை  பரப்புவதற்கு  இவ்வழிமுறையையே இறைத் துதர் கையாண்டார்கள். அருகிலுள் தலைவர்கள், பக்கத்திலுள்ள நாட்டா மைகள் என்று ஆரம்பித்து படிப்படியாக எல்லோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் அவர்களில் யாராவது ஒருவர் இஸ்லாமை ஏற்றுக் கொள்வதுகூட ஆயிரக்கணக்கானோர்/ இலட்சக் கக்கானோர் இஸ்லாமை ஏற்றுக்கொள்வதற்கு ஒப்பாகும். ரோமதேசத்து மன்னனுக்கு இறைத்தூதர் எழுதிய கடிதத்தில் இந்த அம்சம் குறிப்பிடப் பட்டிருப்பதைக் காணமுடியும்.‘தாங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளா விட்டால் தங்களுடைய ஆளுமையின் கீழ் வாழும் யாரும் இஸ்லாமை ஒப்புக் கொள்ளமாட்டார்கள். அந்த எல்லாப் பாவத்தையும் நீங்களே சுமக்கநேரிடும். அந்த கடிதத்தைக் கண்ட கைசர் இஸ்லாமை ஏற்றுக் கொள்ள ஏறக்குறைய தயாராகிவிட்டார் என்று  தான் சொல்லவேண்டும். ஆனால், ஆட்சி சுகமும் அதிகார போதையும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாமல் அவரைத் தடுத்துவிட்டடன. அதே சமயம், அபிசீனி யாவின் மன்னர் நஜ்ஜாஷி, இறைத்தூதரின் செய்தியை ஒப்புக்கொண்ட தோடு தம்முடைய உறவினர்கள் ஒருசிலரையும் குழுவாக அண்ணலா ரிடம் அனுப்பி வைத்தார். யமன் மாகாணத் தலைவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இஸ்லாமை ஏற்றுக்கொண்டனர்.

அரபு தேசத்து எல்லைப் பகுதியில் ஃபஸானி வம்சத்து ஆட்சி நிலவிக் கொண்டிருந்தது. சிறுகச் சிறுக அவ்வாட்சியும் அண்ணலாரின் காலத்திலேயே இஸ்லாமியக் குடையின் கீழ் வந்துவிட்டது. இப்போது ஏறக்குறைய அரபுலகம் முழுக்க இஸ்லாமிய ஆட்சியின் கீழ் எனக் கூறலாம். ஆக, இறைத்தூதரின்  கடைசிக்கடமையாக, உலகம் முழுக்க இறைவனின் ஆட்சி எனும் அறிவிப்பை வெளியிடவேண்டியிருந்தது. இறுதி ஹஜ்ஜின்போது குறியீட்டுமொழியில் கீழ்வருமாறு அதனையும் இறைத்தூதர் வெளியிட்டார்கள்.

“காலம் சுழன்று, சுழன்று வானங்களையும்   பூமியை

யும் அல்லாஹ் படைத்த நாளில் இருந்த  வடிவத்

திற்கே இன்று வந்து சேர்ந்துள்ளது!”.

மனோயிச்சைகளுக்கு மதிப்பு கொடுத்து சுயமாக இயற்றப்பட்ட சட்டங்கள், வாழ்வியல் நெறிகளில் நூதனமாகப் புகுத்தப்பட்ட அனாச்சாரங்கள், அராஜகங்கள், அட்டூழியங்கள் நிறைந்த மன்னராட்சிகள் போன்றவற்றை வேரோடு பிடுங்கி வீசியெறிந்த மகத்தான புரட்சி இது!. கைசரையும் கிஸ்ராவையும் ஆட்சிக்கட்டிலில் இருந்து விரட்டியது இந்தப்புரட்சி!. ஆட்களை மட்டும் விரட்டவில்லை, அவர்கள் சார்ந்திருந்த கொள்கைகளையும் விட்டித் துரத்தியது இந்தப் புரட்சி!. முன்னறிவிப்பாக மொழிந்துசென்றார்கள் இறைத்தூதர் அவர்கள்.

“கைசர் ஒழிக்கப்பட்டுவிட்டால் வேறு கைசர் கிடையாது!  கிஸ்ரா ஒழிக்கப்பட்டுவிட்டால் வேறு கிஸ்ரா கிடையாது!”.

நீதி நியாயத்தின் மேல் கட்டப்பட்ட ஓர் அரசாங்கம் எழுப்பப்பட்டது. இறைவன் இயற்றிய சட்டங்களே அவ்வரசாங்கத்தின் சட்டங்கள்! அவ்வரசாங்கத்தின் ஆட்சி என்பது இறைவனின் ஆட்சி!  அவ்வரசாங்கத்தில் பார்க்கப்போனால் ஒவ்வொரு மனிதனும் ஆள்பவனாகவும் இருந்தான்!  ஆளப்படுபவனாகவும் இருந்தான்! ஏனென்றால் இஸ்லாமிய அரசென்பது மன்னர்களுடைய, மன்னர் குடும்பங்களுடைய முடியாட்சி அல்ல!. மாறாக, அரசாட்சி முழுக்க முழுக்க அல்லாஹ்வுக்கே சொந்தம். அவனுடைய பிரதிநிதிகளாக இருந்து அரசை நடத்தவேண்டியது முஸ்லிம்கள் அனைவர்மீதும் கடமையான ஒன்று. இறைவனைத்தவிர வானக்குடையின் கீழ், வையகப்பரப்பின் மேல் யாரொருவரும் அரசுசெலுத்த முடியாது. இறைவனுடைய சட்டங்கனைத்தவிர வேறு யாருடைய சட்டங்களும் அங்கு செயல்படுத்தப்படவில்லை. ஆட்சிசெலுத்தப்படுவோரின் இனம் சார்ந்த, மொழி சார்ந்த, கொள்கை சார்ந்த, நிறம், குலம், கோத்திரம், நாடு சார்ந்த எந்தவிதமான தராதரங்களும் அங்கே பார்க்கப்படவில்லை. அரசாங்கத்தின் சட்டங்கள், சட்டங்களை அமுல்படுத்தும் முறை, ஆட்சிமன்ற அமைப்பு, நீதி, நியாயம், சட்டதிட்டங்கள் போன்றவை மட்டுமே அலசிஆராயப்பட்டன.

இந்த நோக்கங்களை எல்லாம் நிறைவேற்ற உலகிலுள்ள மற்றமக்களை விட அரபுக்கள் உகந்தவர்களாக இருந்தார்கள். இவற்றை நிறைவேற்றத் தேவையான உட்திறமைகளையும், வெளிப்புற சிறப்பம் சங்களையும் அவர்கள் பெற்றிருந்தார்கள். அப்போதைய உலகத்தின் இருபெரும் வல்லரசுகளாக விளங்கிய பாரசீக, ரோமானிய பேரரசு களுக்கு இடையே அரேபியா அமைந்திருந்தது. அப்பேரரசுகளை வென்று அடக்க, அரேபியா புவியியல் ரீதியாக தகுந்த இடத்தில் வாய்ந்திருந்தது. உலகில் நிலவிவரும் தீயஅரசுகளை வென்றுஅடக்கி நீதி நியாயத்துடன் கூடியதோர் அரசை நிலைநிறுத்தும் அல்லாஹ்வுத்தஆலாவின் நோக்கத்தை நிறைவேற்றவேண்டுமானால் குறிப்பிட்ட சில உட்திறமை கள் அத்தியாவசியமாகத் தேவைப்பட்டன. அவை அனைத்தும் அரபு மக்களிடம்  பூரணமாக அமைந்திருந்தன. இயற்கையாகவே அவர்களிடம் குடிகொண்டிருந்த வீரமறம், விடாப்பிடியான போராட்ட குணம், எப்பேற்பட்ட இன்னல்களையும் சகித்துக்கொள்ளும் போக்கு, வானமே இடிந்து விழுந்த போதிலும் வைராக்கியத்தை விட்டுக்கொடுக்காத மனப்பாங்கு — என்று இவையனைத்துமே இஸ்லாமிய அரசாங்கத்தை கட்டமைப்பதில் பெருந்துணையாக அமைந்தன.

கலப்பற்ற தூய எண்ணம்(இஃக்ளாஸ்), இறைவனுக்கென்றே செயல்படும் குணம்(லில்லாஹிய்யத்), நிலை குலையாத பொறுமை(சப்ரு), இறைவனை மட்டுமே சார்ந்திருக்கும் பண்பு (தவக்குல்), அல்லாஹ்வின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை போன்ற ஆன்மீகப் பண்புகள் வளர்த்தெடுக்கப்பட்டால்தான் மேற்கண்ட இயற்கைக் குணங்கள் முழுமையாக வெளிப்படும்.ஆகையால், ஆட்சியதிகார விஷயத்தில் உலகில் நிலவிவந்த மனனராட்சி முறை, அரசகுலப் பெருமை, அரசவையினரின் பகட்டு, பந்தா, மக்கள் மனங் களில் வலுக்கட்டாயமாகப் பதியவைக்கப்படும் ஆட்சியாளர்களைப் பற்றிய பயம், அச்சம், மரியாதை, ஆட்சியைத் தக்கவைப்பதற்காக மக்களுடைய சிந்தனைகளில் திணிக்கப்படும் ஆட்சியாளர்களைப் பற்றிய தெய்வாம்சம் — இன்னும் அவைபோன்ற எல்லா அம்சங்களை விட்டும் அவர்கள் வெகுகாலம் விலக்கி வைக்கப்பட்டார்கள்.

உலகைப் படைத்த அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட, தூயபண்புகளைக் கொண்ட, ஒழுக்கத்தில் சிறந்த, குற்றங்குறைகளற்ற ஓர் வழிகாட்டியின் தோழமையில் பயிற்சி எடுத்துக்கொண்டு, இறை யச்சம், தூயஎண்ணம், ஒளிரும் உள்ளம், ஈமானியப் பேரொளி போன்ற வற்றை எளிதாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் அவர்களுடைய வாழ்வும், வளர்ச்சியும் அமைந்திருந்தது. பிற்காலத்தில் இறையாட்சியின் கீழ், சட்டதிட்டங்களைக் கண்களில் ஒற்றி, இம்மிபிசகாது இடைவிடாது அவர்கள் கடைபிடித்ததற்கு இவையே காரணங்களாக அமைந்தன.

இத்தகு நியதிகளின் மீது கட்டமைக்கப்படும் ஓர் அரசாங்கம், கீழ்க்காணும் விதிகளைக் கொண்டிருக்கும்.

(1) அதற்கென்று சில குறிப்பிட்ட அடிப்படை நெறிமுறைகள்

இருக்கும்.

(2) இந்நெறிமுறைகள், மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட வறண்ட

சட்டதிட்டங்களின் மீது அமையாமல்மனித இயல்பில்பில்பதிந்துள்ள    ஒழுக்கம் மற்றும் இறைவனுக்கு கீழ்படிதல் போன்றவற்றை சார்ந்ததாக இருக்கும்.

இஸ்லாமின் ஆட்சியமைப்பு இத்தகு நெறிமுறைகளின் மீதே கட்டமைக்கப்பட்டது. நேர்வழிநின்ற ஃகுலஃபாயே ராஷிதீன்கள் காலம்வரைக்கும் அவ்வாறே தொடர்ந்தது. இந்த அரசியலமைப்பினால் விளைந்த மிகப்பெரிய பலன் என்னவென்றால் உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை, பெரியவன், சிறியவன், வெள்ளையர், கறுப்பர், அரபி, அரபியல்லாதவன் என்கிற பாகுபாடு அறவே ஒழிந்துபோனது. யமன், பஹ்ரைனைச் சார்ந்த ஈரானிய பூர்வகுடியினர், நஜ்த், ஹிஜாஸைச் சார்ந்த அரபியர், எத்தியோப்பியாவைச் சார்ந்த ஆப்பிரிக்கர் என்று அனைவருமே ஒரே அணியில் வந்து நின்றனர். ஆட்சியாளர்கள், அரசர்களுக்கென்று ஐரோப்பியா தயாரித்து வைத்திருந்த ஆட்சிக் கட்டில்களையெல்லாம் இந்த அரசியலமைப்பு தூக்கிதூரவீசியது. ஆட்சிக்கடிவாளத்தைக் கையில் பிடித்துள்ள ஆளுனர்களுக்கும் சாதாரண  அன்றாடங்காய்ச்சிக் குடிமகன்களுக்கும் இடையே எந்த வொரு வித்தியாசமும் காணப்படவில்லை.

 

முஹம்மதிய சமத்துவம்

 

சட்டரீதியிலான சமத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு இஸ்லாம் அறிமுகப்படுத்திய அரசாட்சி, அரபுக்களைப் பொறுத்தவரை ஒன்றும் புதிய விஷயம் கிடையாது. அவர்கள் ஏற்கனவே கோத்திரத் தலைவர்களின் தலைமையின் கீழ் சுயமரியாதையோடும் தன்மானத் தோடும்தான் வாழ்ந்துவந்தனர் என்றொரு கருத்து பொதுவாக முன் வைக்கப்படுகின்றது. இது மிகவும் தவறானதொரு கருத்தாகும். அரபுலகில் நீண்டகாலமாக ளஃமி, ஃகுமைரி, :கஸ்ஸானி என்ற மூன்று அரசாங்கங்கள் இருந்துவந்தன. பொதுவாக உலகில் முடியாட்சிகள் எப்படி இருக்குமோ அவ்வாறே இவ்வரசாங்கங்கள் செயற்பட்டுவந்தன. யமனிலிருந்த சபா மற்றும் ஹுமைர் அரசுகளும் அவ்வாறே. கன்தா-வில் ரோமானியர்களின் மேலாண்மையின் கீழ்ஆட்சிசெலுத்தி வந்த அரசும் இவ்விதமே செயல்பட்டுவந்தது.

கோத்திரத்துத் தலைவர்கள் பெரும்பாலும் மக்களுடைய விருப்பத்திற்கேற்ப, அல்லது அவர்களிடம் இருந்த வீரமறம், வள்ளல் குணம் போன்றவற்றை முன்வைத்து  தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்கள். ஆயினும்கூட, மற்ற மக்களுக்கு இல்லாத ஏராளமான சிறப்புரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. போரில் கிடைத்த வெற்றிப் பொருட்களில் மற்றமக்களுக்கு இல்லாத வகையில் தலைவர்களுக் கென்று சிறப்புப்பங்கு இருந்தது. சஃபிய்யா, முர்பா:க், நஷீதா, ஃபகூல் என்றெல்லாம் அவை அழைக்கப்பட்டன. அவை அனைத்தையும் இல்லாதொழித்து ஃகும்ஸை(அய்ந்தில் ஒரு பங்கு) இஸ்லாம் கடமை யாக்கியது. பொது அவைகளில் தலைவர்களுக்கு முன்னால் வெளிப் படையாக மக்கள் பேசுவதற்குக்கூட சுதந்திரம் வழங்கப்படவில்லை. ‘நாங்கள் நினைத்தால் மக்களுடைய வாய்களை அடைத்துவிடுவோம், நாங்கள் பேசத்தொடங்கினால் மக்கள்தம் வாய்களை அடைத்துக்கொள் வார்கள்’ என்று யூதசமயம் சார்ந்த பண்டைக்கால அரபுப்புலவன் ஒருவன் பாடுகிறான்.

கோத்திரத்துத் தலைவர்களின் கால்நடைகளுக்கென்று தனி மேய்ச்சல் நிலங்கள் ஒதுக்கப்பட்டன. மற்றவர்கள் யாரும் அதில் காலைக்கூட வைக்கமுடியாது. ‘இறைவனும் அவனுடைய தூதரும் தவிர வேறுயாரும் மேய்ச்சல் நிலங்களில்  இடஒதுக்கீடு செய்ய  வியலாது’ என்ற இறைத்தூதரின் ஆணையின் விளைவாகத்தான் பஸூஸ் போரே மூண்டது.  இந்த சடங்கையும், தவறான மரபையும் அடியோடு  ஒழிப்பதற் காகத்தான் இறைத்தூதர்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கீழ்வருமாறு அறிவித்தார்கள் @

“இறைவனையும் இறைத்தூதரையும் தவிர மேய்ச்சல் நிலங்களை ஒதுக்கீடு செய்யும் உரிமை வேறு யாருக்கும் இல்லை!”

அரசாங்க அலங்காரங்களோடு உயர்ந்த அரண்மனை மாட மாளிகைகளில் சகல வசதிகளோடு தாங்கிய சௌந்தர்ய சிம்மாசனங் களில் பெருமை மிகு பட்டாடைகளை உடுத்திக் கொண்டு உடல் முழுக்க பொன் நகைகளைப் போர்த்திக் கொண்டு பொன்னாலும், வெள்ளி யாலும் இழைக்கப்பட்ட இருக்கைகளில் சுற்றி நிற்கும் இளநங்கையர் வீசும் சாமரத்திலிருந்து வெளிப்படும் காற்றை அனுபவித்துக் கொண்டு உல்லாச வாழ்க்கையில் திளைத்துக் கொண்டிருந்த ஆட்சியாளர்கள் அரசவை பிரபுக்களுக்கு செலுத்தப்பட்டு வந்த மரியாதையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த அறிவிப்பு செய்யப்பட்டது.  ஒரே மூச்சில் அவர்கள் பெற்றிருந்த செயற்கையான கௌரவத்தையும், போலியான கண்ணியத்தையும் இறைத்தூதரின் அறிவிப்பு ஊதித் தள்ளி விட்டது. பொன்னாலும் வெள்ளியாலும் அலங்கரிக்கப்பட்ட இருக் கைகளும், பட்டாடைகளும், பட்டு விரிப்புகளும் தடை செய்யப் பட்டன.  பொன் நகைகளையும், வெள்ளி ஆபரணங்களையும் ஆண்கள் அணிவது தடை செய்யப்பட்டது.  ஆட்சித் தலைவரும் அவருடைய அதிகாரிகளும் பொதுமக்கள் எளிதாகச் சந்தித்துக் கொள்ளும் பள்ளி வாசல்களையே தங்களுடைய செயலகங்களாக ஆக்கிக் கொண்டனர்.  ஆட்சியாளர்களின் வருகையை கட்டியம் கூறி அறிவிக்கும் நடை முறையும் பராக், பராக் ஒலி ஓசைகளும் ஒழிந்து போயின.  ஆட்சி யாளரை சந்திக்க வந்துள்ளோரை வடிகட்டுவதற்காக நியமிக்கப் பட்டிருந்த தனி அதிகாரிகள் காணாமல் போயினர்.  அரசவைக்கே அணி கலன்களாக திகழ்ந்த பொன் ஆசனங்களும், வெள்ளி இருக்கைகளும்  இல்லாது போயின.  ஆடைகளை வைத்து இறைத்தூதரையும்,அவரு டைய தோழர்களையும் பாகுபடுத்திப் பார்க்க இயலாத நிலை நிலவியது.

ஒரு முறை, சிரியா நாட்டிலிருந்து அழகான ஒரு மேலாடையை நபித்தோழர் ஒருவர் வாங்கி வந்தார். அரபுலகத்தின் பல்வேறு பகுதி களிலிருந்தும் இறைத்தூதரை சந்திக்க தினந்தோறும் மக்கள் வந்து கொண்டேயிருக்கின்றனர். வருகை தரும் அத்தகைய மக்கள் பிரதிநிதி களை சந்திக்கும் போதும் வெள்ளிக்கிழமையன்று சிறப்பு சொற்பொழி வாற்றும் போதும் இந்த மேலாடையை அணிந்து கொண்டால் அழகாக வும் இருக்கும்! கௌரவமாகவும் இருக்கும். ஆகையால்  இறைத்தூதரே!   இதை வாங்கிக் கொள்ளுங்கள் என்று உமர் இப்னு ஃகத்தாப் கூறினார்.  ஆனால், இறைத்தூதர் உடனடியாக அந்த ஆடையை கையில் வாங்கி இரண்டாகக் கிழித்து எறிந்து விட்டார்கள்.  ஆடம்பரச் செருக்கோடும், ஆணவ வெளிப்பாட்டோடும் விளங்குவதற்காக முஸ்லிம்களின் தலைவர் ஏற்படுத்தப்படவில்லை.  எந்த மனிதன் இதை அணிகின் றானோ மறுமையில் அவனுக்கு இது போன்ற எதுவுமே கிடைக்காது என்று இறைத்தூதர் தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினார்கள்.

அவைகளில் அமர்ந்திருக்கும் முறைகளில் கூட தலைவருக்கும், தொண்டர்களுக்குமிடையே காணப்பட்ட பாகுபாட்டை இறைத்தூதர் போக்கினார்கள்.  அண்ணலாரின் அவைக்கு அறிமுகமில்லாத புதிய மனிதர் ஒருவர் வந்தார் என்றால், இறைத்தூதர் யார்? என்றே அவரால் கண்டுபிடிக்க இயலாது.  வேறு வழியின்றி அவர் உட்கார்ந்திருக்கும் மனிதர்களிடம் யார் இங்கே இறைத்தூதர்? என்று கண்டிப்பாக விசாரிக்க வேண்டியிருக்கும்.  நபித்தோழர்கள் சைகைகளால் சுட்டிக் காட்டுவார் கள். இதைத் தவிர்ப்பதற்காகவாவது ஒரு சிறு மேடையை அமைத்துக் கொள்ளலாம் என்று நபித்தோழர்கள் முற்பட்ட போது கூட இறைத்தூதர் தடுத்து விட்டார்.

அந்த காலகட்டத்தில் (அந்தக் காலகட்டத்தில் மட்டுமல்ல, எல்லாக் காலகட்டத்திலும்) ஆட்சியாளர்களும், மன்னர்களும் அரச வையை  சார்ந்தவர்களும் சட்டம் தொட முடியாத தூரத்தில் இருந்தார்கள்.  சட்ட நெறிமுறைகள் அவர்களை ஒரு போதும் கட்டுப்படுத்தாது.  ஆனால், இங்கு பார்த்தால் இறைத்தூர் இடத்திலும் அவருடைய வீட்டார் களிடத்திலும் தான் முதன் முதலில் இறைவனின் சட்டம் செயல்படத் தொடங்கும். (இறைவன் மன்னிப்பானாக, ஒரு வேளை) இறைத்தூதரின் வீட்டைச் சார்ந்தவர்கள் ஏதேனும் ஒரு தவறை செய்து விட்டால்   அவர்களுக்கு  இரட்டிப்பு தண்டனை கிடைக்கும் என்று இறைவன் கட்டளையே பிறப்பித்திருந்தான்.  மதீனாவின் உயர் குலத்தைச் சார்ந்த ஃபாத்திமா பின்த் கைஸ் எனும் பெண்மணியின் மீது திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டது. அப்பெண்மணியின் கைகளை வெட்டி விடுமாறு இறைத்தூதர் தீர்ப்பு அளித்து விட்டார்கள்.  பெருமையும், பாரம்பரியமும் கொண்ட உயர் குலத்துப் பெண்மணி ஒருவரின் கைகள் வெட்டப் படுவதா?  மதீனா நகர மக்களுக்கும் நபித்தோழர்களுக்கும் இந்த விஷயம் மனதை மிகவும் உறுத்தியது.  எப்படியாவது  இறைத்தூதரிடம் பேசி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதற்காக இறைத்தூதரின் அன்பையும், பாசத்தையும் பெற்ற உஸாமா இப்னு ஜைத் அவர்களை பரிந்துரைக்காக அனுப்பி வைத்தார்கள்.  ஃபாத்திமாவுக்காக பரிந்து பேசிய உஸாமாவைப் பார்த்து திட்ட வட்டமாக  இறைத்தூதர் கூறினார்கள்“உங்களுக்கு முன்னால் சென்ற சமூகத்தினர் அழிக்கப் பட்டதற்கு என்ன காரணம் தெரியுமா?  சாதாரண மனிதன் ஒருவன் தவறு செய்தால் உடனே அவனை தண்டிப்பார்கள். அதே தவறை உயர் குலத் தவர்களோ, பணம் படைத்தவர்களோ செய்து விட்டால் அவர்களை விட்டு விடுவார்கள்.  சட்டத்திலிருந்து விலக்கு அளித்து  விடுவார்கள் !”  தெளிவான திடமான குரலில் இறைத்தூதர் தொடர்ந்தார்கள் – “என்னுடைய மகள் ஃபாத்திமா திருடி இருந்தாலும் தயக்கமே இல்லாமல் அவளுடைய கைகளையும் நான் வெட்டுவேன்!”

ஒரு முறை, பொதுநலநிதியிலிருந்து நபித்தோழர்களுக்கு பொருட்களை இறைத்தூதர் பங்கிட்டு அளித்துக் கொண்டிருந்தார்கள்.  கிராமப் புறத்திலிருந்து ஒரு மனிதர் வந்தார்.  அதிகமான பொருட்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கின்ற பேராசையில் இறைத்தூதர் மீது விழுந்து பிடுங்கலானார்.  இறைத்தூதரின் கைகளில் பேரீச்ச மரத்துப் பிரம்பொன்று இருந்தது.  அந்தப் பிரம்பால் அவரை அடித்து விட்டார்கள்.  அவருடைய முகத்தில் காயம் ஏற்பட்டு விட்டது.  அதைப் பார்த்து விட்ட இறைத்தூதர்  உடனடியாக சொன்னார்கள் – வாருங்கள்ஸ  என்னைப் பழி தீர்த்துக் கொள்ளுங்கள்!  அந்த மனிதர் !;‘இறைத்தூதரேஸ  தேவை யில்லை. நான் அதைப் பொருட்படுத்தவே இல்லை’ என்று கூறி விட்டார்.                                                                                 (பதிவு @ அபுதாவுது)

ஒரு முறை, இறைத்தூதரின் அவையில் போர்க்களத்தில் பிடிக்கப்பட்ட அடிமைப்பெண்கள் ஏராளமாகக் குவிந்திருந்தார்கள்.  திருகையைச் சுற்றுவது, மாவு இடிப்பது, நீர் இறைப்பது என்பது போன்ற கடினமான வீட்டு வேலைகளை செய்து செய்து இறைத்தூதரின் மகள் ஃபாத்திமாவின் கைகளிலெல்லாம் காப்பு காய்த்து விட்டது.  தந்தையின் அனுமதி பெற்று ஓர் அடிமைப் பெண்ணை வேலைக்கு அமர்த்திக் கொள்ளலாம் என்கின்ற எதிர்பார்ப்போடு அண்ணலாரின் அவைக்கு ஃபாத்திமா வந்தார்கள்.  கண்களில் ஏக்கத்தோடு தம் தந்தையிடம் கைகளைக் காட்டினார்கள்.  ஓர் அடிமைப் பெண்ணை தரக்கூடாதா? என்கிற கோரிக்கையையும் வைத்தார்கள். “பத்ருப் போரில் அனாதை யாக்கப்பட்டவர்கள் உன்னை விட அதிக உரிமை உடையவர்கள்” என்று கூறி இறைத்தூதர் அந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டார்கள்.                                             (பதிவு @ அபுதாவுது)

வட்டி வியாபாரம் முற்றிலுமாக தடை செய்யப்பட்ட போது தன்னுடைய சிறிய தந்தை அப்பாஸ் அவர்களுக்கு வரவேண்டிய வட்டி நிலுவைத் தொகை அனைத்தையும் இறைத்தூதர் தள்ளுபடி செய்து விட்டார்கள். அறியாமைக் காலத்தில் இருந்து தொடரும் மோதல் களுக்காக இனிமேல் யாரும் பழிதீர்க்கக் கூடாது என்கின்ற ஆணை அமுல்படுத்தப்பட்டபோது தம்முடைய சொந்த கோத்திரத்தின் சார்பில் எல்லா வகையான வழக்குகளிலும் பழி வாங்குதலை கைவிடுவதாக இறைத்தூதர் அறிவித்தார்கள்.  இஸ்லாமிய சமூக அமைப்பின் நிதி ஆதாரங்களான ஜகாத், மற்றும் உஷ்ரு (வேளாண்மை விளைபொருள் களுக்கான ஜகாத்அதாவது பத்தில் ஒரு பங்கு) போன்றவற்றை    இறைத்தூதரின் குடும்பமும், ஏனைய முஸ்லிம் குடும்பங்களைப் போன்றே கட்டுப்பட்டிருந்தது.

சாதாரண மக்களை விட தாங்கள் தலைசிறந்தவர்கள் உயர் குடித் தோற்றப் பிறப்பைக் கொண்டவர்கள் என்கின்ற எண்ணத்தைப் பொது வாக எல்லா ஆட்சியாளர்கள், மன்னர்களும் மக்களுடைய சிந்தனையில் திணித்திருந்தார்கள். ஆனால், இங்கோ இறைவன் புறத்திலிருந்து இறைத்தூதருக்கு அளிக்கப்பட்ட சிறப்புப் பட்டயமே “இறைவனின் அடிமை” என்பது தான்!  இறைவனுக்கு அடிமையாக விளங்குவதில் தான் மற்றெல்லா மக்களை விடவும் இறைத்தூதர் முன்னணியில் தலை சிறந்து விளங்கினார்கள்.  தாங்கள் கண்ணியப்படுத்தப்பட வேண்டும், மரியாதை செலுத்தப்பட வேண்டும் என்பதற்காக ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த எல்லா வகையான அரசவை நடைமுறை களையும் மரபுகளையும் இறைத்தூதர் ஒழித்துக் காட்டினார்கள்.  ‘ராஜாதி ராஜன்   என்று  ஒரு மனிதன் அழைக்கப்படுவதையே இறைவன் மிகவும் வெறுக்கிறான்’ என்றார்கள் இறைத்தூதர்.  ஒரு முறை ஒரு தோழர், இறைத்தூதரைப் பார்த்து சைய்யிதினா (எங்கள் தலைவரே) என்று அழைத்தார்.  உடனே இறைத்தூதர் “இறைவனை மட்டுமே இவ்வாறு அழைக்க வேண்டும்” என்று குறுக்கிட்டார்.  மற்ற இறைத்தூதர்களை விட மக்கள் தம்மை சிறப்பாக எண்ணுவதைக் கூட இறைத்தூதர் அனுமதிக்கவில்லை.

ஒரு முறை சூரியகிரகணம் ஏற்பட்டது.  எதேச்சையாக அதே நாளில் தான் இறைத்தூதரின் அருமை மகன் இப்ராஹீமின் மரணம் நிகழ்ந்தது.  இறைத்தூதரின் மகன் இறந்து விட்டார் என்பதற்காகத் தான் சூரியகிரகணம் நிகழ்ந்துள்ளது என்று மக்கள் பேசிக் கொண்டார்கள்.  இதைக் கேள்விப்பட்ட இறைத்தூதர் கிரகணத் தொழுகை முடிந்த உடன் மேடையில் ஏறி நின்று இதைச் சுட்டிக் காண்பித்து உரையாற்றினார்கள்.

“சூரியனும் சந்திரனும் இறைவனின் இரண்டு அத்தாட்சிகள்.  எந்தவொரு மனிதனின் இறப்போடும், பிறப்போடும் அவற்றுக்கு யாதொரு தொடர்பும் இல்லை”என்று கூறி மக்களுடைய தவறான நினைப்பை நிராகரித்தார்கள்.

ஒரு முறை இறைத்தூதரின் அவைக்கு வெளியூரிலிருந்து ஒரு மனிதர் வந்திருந்தார்.  இறைத்தூதரைக் கண்ணால் கண்டதும் அவரு டைய மனதில் இனம் புரியாத கலக்கம் ஏற்பட்டது.  மனம் திடுக்கிட்டு உடல் நடுங்கலானார்.  நிதானமாகவும், அமைதியாகவும் அவரைப் பார்த்து இறைத்தூதர் “என்னைப் பார்த்து எதற்காக பயப்படுகிறீர்கள்?  காய்ந்து போன இறைச்சித் துண்டை உணவாக உட்கொண்டு கொண்டி ருந்த ஒரு சாதாரண அரபிப்பெண்மணியின் வயிற்றில் பிறந்தவன் தான் நான்!” என்று கூறினார்கள்.

ஒரு முறை கைதி ஒருவர் இறைத்தூதரின் அவைக்கு கொண்டு வரப்பட்டார்.  “இறைவா!  நான் உன் பக்கம் மீள்கிறேன்.  முஹம்மது வின் பக்கம் மீளவே மாட்டேன்”  இதைக் கேட்ட அண்ணலார், “இவர் என்ன கூறுகிறார் என்பதை உணர்ந்திருக்கிறாரா?  இதே வார்த்தைகளை இவர் ஏதேனும் ஒரு மன்னரின் அவையில் கூறியிருந்தால் அதை அவர்கள்  மிகப் பெரிய அவமரியாதையாகக் கருதி இவரைத் தூக்கிப் போட்டிருப் பார்கள்!” என்று கூறினார்கள்.

ஒரு முறை இறைத்தூதர் தொழ வைத்துக் கொண்டிருந்தார்கள்.  தொழுகை முடியும் தருவாயில் ஒரு கிராமவாசி, “இறைவாஸ  என் மீதும் முஹம்மதுவின் மீதும் கிருபை செய்!  வேறு யாருக்கும் கருணை காட்டி விடாதே!” என்று கூறி விட்டு சென்று விட்டார்.  தொழுகையை முடித்த இறைத்தூதர் அந்தக் கிராமவாசியை தடுத்து நிறுத்திக் கூப்பிட்டார்கள்.  “எல்லையேயில்லாத இறைவனின் கருணையை நீ இந்த அளவிற்கு குறுக்கி விட்டாயே!” என்று கூறினார்கள்.  உண்மை என்னவென்றால், அரசாங்க விசுவாசத்தைப் பெறுவதற்காக இத்தகைய வார்த்தைகளை சர்வ சாதாரணமாக எல்லோரும் கூறி வந்தார்கள்.  இவ்வார்த்தைகளைக் கேட்டு மனம் மகிழ்ந்து போகும் மன்னர்களும், அரசர்களும்  தன்னைப் புகழ்ந்தவர்களுக்கு பொற்கிழிகளையும் பாரட்டுப் பத்திரங்களையும் வழங்குவது வழக்கம்.

 

பொதுநிதியைப் பற்றிய புதிய கண்ணோட்டம்

அரசாங்க வெற்றிகளையும், போரில் வென்ற பொருட்களையும் தங்களுடைய சொந்த சொத்துக்களாக மன்னர்கள் கருதி வந்தார்கள்.  தங்களுடைய சொந்தத் தேவைகளை சீரும், சிறப்புமாக நிறைவேற்று வதற்கு மட்டுமே இந்த உடைமைகளைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.  ஒரு வேளை, அந்தப் பொருட்களிலிருந்து யாருக்கேனும் எதையேனும் கொடுத்து விட்டால் அதை ஏதோ மிகப்பெரிய பெருந்தன்மை என்றும், கொடைக்குணம் என்றும் கருதிக் கொண்டார்கள்.  ஆனால், இஸ்லாமிய அரசியல் அமைப்பில் அரசாங்கத்து வருமானம் அனைத்தும் அல்லாஹ் வின் சொத்து என்றே கருதப்பட்டது.  அவை அனைத்தும் பைத்துல் மால் என்றழைக்கப்படும் பொதுநிதியில் மட்டுமே சேரும்.  பொதுநிதி முழுக்க முழுக்க முஸ்லிம்களின் பயன்பாட்டுக்கே உரியது.  ஜகாத், ஸதக்கா வரிகள் ஜிஸ்யா போன்று பல வகைகளிலும் வசூலிக்கப்படும் வருமானம் அனைத்தும் ஆட்சித் தலைவர் என்ற முறையில் இறைத்தூதரின் கரங் களுக்கே வந்து சேரும். ஆனால், இறைத்தூதர் ஒரு போதும் அதைத் தம்முடைய சொந்த உடைமையாகக் கருதிக் கொண்டதேயில்லை.  முஸ்லிம்களின் சொத்து என்றே அதை அவர் அறிவித்தார்கள்.  தன்னு டைய சொந்த உபயோகத்திற்காக அதை ஒரு போதும் பயன்படுத்திக் கொண்டதேயில்லை.  ஜகாத் பொருட்கள் எதனையும் தன்னுடைய குடும்பத்தாரோ தன்னுடைய பரம்பரையான ஹாஷிம் குலத்தாரோ பயன்படுத்தவே கூடாது; அது அவர்களுக்கு ஹராம் என்று இறைத்தூதர் அறிவித்தார்கள். இறைவனின் ஆணைக்கேற்ப அப்பொருட்களை ஏழைகளும், தேவையுடையோரும் மட்டுமே பயன்படுத்தத் தகுதியுடை யவர்கள். “எந்த ஒரு பொருளையும் நானாக உங்களுக்கு கொடுக்கவும் முடியாது; நீங்கள் பெறவேண்டிய ஒரு பொருளை என்னால் தடுக்கவும் இயலாது.  நான் பங்கிடுபவன் மட்டுமே.  யாருக்கு எதை எதை பங்கிட்டுத் தருமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளதோ அவ்வாறே நான் பங்கிடுகிறேன்” என்று கூறினார்கள்.

இன்னோர் இடத்தில், ‘நான் பங்கிடுபவன் மட்டுமே, கொடுப்ப வனோ அல்லாஹ் ’என்று கூறியுள்ளார்கள்.  போர்க்களத்து வெற்றிப் பொருட்கள் (கனீமத்) போரளிகளுக்கு இடையே பங்கிட்டு வழங்கப் பட்டன.  இறைத்தூதருக்கு ஐந்தில் ஒரு பாகம் (ஃகுமுஸ்) மட்டுமே வந்து சேர்ந்தது.  இந்தப் பாகத்தை தமக்காகவும், தம்முடைய குடும்பத்தினர் களுக்காகவும் மட்டுமல்லாது போர்க்களத்து வெற்றிப் பொருட்களை பெறத் தகுதியில்லாத தேவையுடைய மற்ற முஸ்லிம்களுக்காகவும் செலவு செய்தார்கள்.  இது போன்றே போர் நடை பெறாமலேயே வெற்றி கொள்ளப்பட்ட பொருட்கள் இதே காரணத்திற்காக இறைத்தூதரின் வசம் வந்து சேர்ந்தன.  தம்முடைய குடும்பத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்தற்குப் பிறகு அப்பொருட்கள் அனைத்தையும் இஸ்லாமிய நலன்களுக்காகவும், முஸ்லிம்களின் தேவைகளுக்காகவும் தான் இறைத் தூதர் செலவு செய்தார்கள். “முஸ்லிம்களின் தேவைகளுக்காகவே இப்பொருட்கள் உள்ளன”என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்கள்.

 

கந்தலாடையோடு கூடிய தலைவர்

ரோமானிய தேசத்தின் பாரசீக சாம்ராஜ்யத்தின் வெளிப்பகட்டு அரண்மனை அலங்காரங்கள், அரசவை பந்தோபஸ்துகள் போன்ற வற்றை எல்லாம் பார்த்து அதே போன்ற அலங்காரமும், ஆடம்பரமும் இஸ்லாமிய அரசுக்கும் தேவை என்கிற சிந்தனை   நபித்தோழர்களுக்கும் ஏற்பட்டிருந்தது.  ஆகையால், தம்முடைய எளிமையான, உலகப்பற்றற்ற ஆடம்பரத்தை விரும்பாத பணிவான வாழ்க்கைக்குப் பதிலாக இறைத் தூதர் ரோமானிய கைசர்களைப் போன்று பாரசீகப் பேரரசர்களைப் போன்று   நல்லதொரு வசதியான வாழ்க்கையை மேற்கொள்ளக் கூடாதா? என்று அடிக்கடி சிந்திக்கத் தலைப்பட்டார்கள்.

ஏதோ ஒரு காரியத்திற்காக ஒரு முறை உமர் இப்னு ஃகக்தாப் இறைத்தூதரின் அறைக்குள் நுழைந்தார்கள்.  உள்ளே பார்த்தால், தவிர்க்க முடியாத அத்தியாவசியத் தேவைகளுக்கான ஒரு சில பொருட்கள் மட்டுமே காணப்பட்டன. பேரீச்ச மரத்து இலைகள் நிரப்பப்பட்ட தோலினாலான தலையணை ஒன்றின் மீது இறைத்தூதர் சாய்ந்தி ருந்தார்கள்.  கிழிந்து போயிருந்த ஈச்ச மரத்துப்பாய் ஒன்றின் மீது படுத்திருந்தார்கள்.  பட்டை பட்டையாக பாயின் சுவடுகள் முதுகில் படிந்திருந்தன.  தன்னுடைய கண்களை அங்குமிங்குமாக உமர் ஓட்டிப் பார்த்தார்.  காய்ந்து போன ஒன்றிரண்டு தோல் உறைகளைத் தவிர்த்து வேறு எந்தவிதமான வீட்டு உபயோகப் பொருட்களும் அங்கு காணப் படவில்லை.  ஓரிடத்தில் ஒரு மூலையில் கொஞ்சம் கோதுமை குவிந்து கிடந்தது. உமருடைய கண்கள் கசிந்து கண்ணீரை உகுக்கலாயின.  எதற்காக கண்ணீர் சிந்துகிறீர்கள்? என்று இறைத்தூதர் கேட்டார்கள்.  இறைத்தூதர் அவர்களே!  அழாமல் எப்படி இருக்க முடியும்?  படுக்கை யில்லாததால் தாங்கள் பாயில் படுத்துள்ளீர்கள்.  பாயின் சுவடுகளோ தங்கள் முதுகில் பளிச்சிடுகின்றன.  இதோ தங்களிடம் இருக்கின்ற ஒட்டுமொத்தப் பொருட்களையும் என் கண்களால் பார்த்துக் கொண்டுள்ளேன்.  இன்னொரு பக்கம் அங்கே கைசரும், கிஸ்ராவும் வசதியோடும், ஆடம்பரமாகவும் வாழ்க்கையை அனுபவித்துக் கொண் டுள்ளார்கள்.  தாங்களோ இறைவனின் தூதராகவும் இருக்கிறீர்கள்!  அவர்கள் உலகைப் பெற்றுக் கொள்ளட்டும்.  நாம் மறுமையை அனுபவிப்போம் என்கிற உணர்வு உங்களுக்குத் தோன்றவில்லையா உமரே!” என்று இறைத்தூதர் கேட்டார்கள்.

இன்னோர் அறிவிப்பின் படி ‘இறைவனின் தூதரே!’  ரோமா னியர்கள் பாரசீகர்கள் போல தங்களுடைய சமூகத்தினர்களும், எல்லா வகையான வாழ்க்கை வசதிகளையும் பெற்றுத் திகழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.  அவர்களோ இறைவனை ஏற்கவும் இல்லை; வழிபடவும் இல்லை. இருந்த போதிலும் வாழ்க்கை வசதிகள் அனைத்தையும் பெற்றுள்ளார்கள் என்று உமர் அவர்கள் கூறினார்கள்.அதற்குப் பதிலாக இறைத்தூதர் “நீங்கள் இப்படியா சிந்திக்கிறீர்கள் உமரே!  ஈரானியர்களுக்கும், ரோமர்களுக் கும் எல்லா இன்பங்களும் இந்த உலகத்திலேயே கொடுக்கப்பட்டு விட்டன” என்று கூறினார்.                                                                                   (புகாரி, முஸ்லிம்)

இறைத்தூதர்  நல்லதொரு  வாழ்க்கையை வாழக் கூடாதா? என்று ஏக்கத்தோடு  தன்னுடைய எதிர்பார்ப்பை வெளியிட்ட இதே உமர் தான் தன்னுடைய ஆட்சிக் காலத்தில், ஒட்டுப் போடப்பட்ட மேலா டையை அணிந்து கொண்டு ஓலைக்குடிசையில் வாழ்க்கை நடத்திக் கொண்டு எளிமைக்கே அடையாளமாக திகழ்ந்து கொண்டிருந்தார்.  அட்டகாசமான ஆடம்பர மாளிகைகளில் சர்வ பலத்தோடு வீற்றிருந்த ரோம தேசத்து ஈரானிய பேரரசின் மன்னர்களெல்லாம் இந்த உமரைப் பார்த்துத் தான் குலை நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.  எல்லாப் போர்க் களங்களிலும் வெற்றி முஸ்லிம்களின் கைகளுக்கேப் போய் சேர்ந்து கொண்டிருந்தது.

கைஸ் இப்னு ஸஅத் என்றொரு நபித்தோழர், வெளிநாடு ஒன்றிற்கு விஜயம்  செய்திருந்தார்.  தங்களுடைய தலைவருக்கு முன்னால்  அந்நாட்டு மக்கள் சிரம் தாழ்த்தி மரியாதை செலுத்துவதைக் கண்டு அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார்.  இப்படி கூட மரியாதை செலுத்தலாம்  என்றிருந்தால்  அதற்கு  மிகவும் தகுதியானவர் இறைத்தூதர் மட்டும் தான் என்று அவர் மனதிற்குள்ளாக நினைத்துக் கொண்டார்.  ஊர் திரும்பிய வுடன் இறைத்தூதரை சந்தித்து தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தி னார்.  “ஒரு போதும் அவ்வாறு செய்யலாகாது.  ஒரு வேளை, யாருக்காவது சிரம் தாழ்த்தி ஸஜ்தா செய்யுமாறு நான் ஆணையிடுவதாக இருந்தால்  பெண்களிடம் தங்கள் கணவர்களுக்கு ஸஜ்தா  செய்யுமாறு  ஆணை யிடுவேன்!”என்று இறைத்தூதர் கூறினார்.

இன்னோர் அறிவிப்பின் படி, “என்னுடையஅடக்கஸ் தலத்தின் வழியாக நீங்கள் சென்றால் என் கல்லறைக்கு ஸஜ்தா செய்வீர்களா? என்று இறைத்தூதர் கேட்டார்கள்.  இல்லை, மாட்டோம் என்று அவர் பதிலளித்தார்.  அப்படியென்றால் இப்போதும் நீங்கள் அவ்வாறு செய்யக்கூடாது ”என்று இறைத்தூதர் கூறினார்கள்.

நபித்தோழர் மஆத் சிரியா நாட்டுக்குச் சென்று திரும்பிய போது இறைத்தூருக்கு முன்னால் ஸஜ்தா செய்தார்கள்.  இறைத்தூதர் திகைப் போடு  மஆதே என்ன இது? என்று கேட்டார்கள். ரோம தேசத்து மக்கள்   தங்கள்   தலைவர்களுக்கும், வழிகாட்டிகளுக்கும் முன்னால் இவ்வாறு சிரம் தாழ்த்திப் பணிவதை நான் கண்டு வந்துள்ளேன்.  ஆகையால், அது போன்றே தங்களுக்கும் நான் ஸஜ்தா செய்ய ஆசைப்பட்டேன்  என்று அவர் கூறினார்.  அதற்கு அண்ணலார் “இறைவனுக் குத் தவிர வேறு யாருக்கும் ஸஜ்தா செய்யக் கூடாது.  அப்படி செய்ய அனுமதி இருந் திருந்தால் தங்களுடைய கணவர்களுக்கு மனைவிகள் சிரம் பணியட்டும் என்று நான் ஆணையிட்டிருப்பேன்” எனக் கூறினார்கள்.

தங்களுடைய வழிகாட்டியும் மற்ற மன்னர்கள், ஆட்சியாளர் களைப் போல அலங்காரத்தோடும், ஆடம்பரமாகவும் விளங்க வேண் டும் என்று அரபு மக்கள் ஆசைப்பட்டிருப்பதையே இந்த அறிவிப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.  ஆனால் தம்முடைய போதனைகள், வாழ் வியல் நடைமுறைகள், தூய நெறி காட்டுதல் போன்றவற்றின் மூலமாக அற்புதமானதோர் எடுத்துக்காட்டை இவ்வுலகிற்கு இறைத்தூதர் வழங் கியுள்ளார்கள். ஆணவச் செருக்கு,ஆடம்பரப் பெருமை, அலங்கார வாழ்வு போன்றவற்றை இறைவன் நேசிப்பதில்லை.  இஸ்லாமியக் கண் ணோட்டத்தில் சிறப்பானதும் கிடையாது. நுரையை விடவும் நீர்க் குமிழிகளை விடவும் இந்த உலக வாழ்க்கை அற்பமானது.  தன்னுடைய வான்மறை குர்ஆனின் மூலமும், இந்தப் பேருண்மையை  இறைவன் பல்வேறு தருணங்களில் உணர்த்தியுள்ளான். அழகான முன்மாதிரியாக வாழ்ந்து இறைத்தூதரும் இதை நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.  இதே முன்மாதிரியைத் தான் இறைத்தூதருக்குப் பின்னால் வந்த நேர்வழி நின்ற ஃகலீஃபாக்கள் நால்வரும் பின்பற்றி நடந்தார்கள்.  இந்த எளிமையே இஸ்லாமிய அருஞ்செயலாகவும் மாறி நின்றது.

 

இறையடியார்களுக்கு வழங்கப்பட்ட பரிபூரண உரிமைகள்

 

பொதுவாக ஓர் அரசாங்கத்துக்கு கிடைக்கும் வருமானம் முழுவதும் ஆட்சியாளர்களின் சுகபோக வாழ்வுக்காகவும், அவர்கள் யாருக்கெல்லாம் சிபாரிசு செய்கின்றார்களோ அவர்களுக்கும் செல விடப்படுகிறது.  இதன் காரணமாக பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகிக் கொண்டே செல்கின்றனர்.  ஏழைகளின் தேவை களும் அவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல் கின்றன.ஆனால், இறைத்தூதர் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட இஸ்லாமிய அரசாங்கத்தின் பொதுநிதியிலிருந்து பயனடைவதற்கு செல்வமோ, ஆட்சியாளர்களோடான நெருக்கமோ காரணமாக அமை யாமல் தேவைகளே அளவுகோலாகக் கொள்ளப்பட்டன.  செல்வந்தர் களை விட ஏழை பாழைகளின் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டது.  அரபுலகத்தில் அடிமைகளும், அடிமைப் பெண்களும் மனிதர் களாகவே மதிக்கப்படாது இருந்த போது இறைத்தூதர் சுதந்திரமான மனிதர்கள் பெற்றிருந்ததைப் போலவே அவர்களுக்கும் முழு உரிமை களை   வழங்கினார்கள்.  இறைத்தூதர் அவர்களிடம் ஒரு மூட்டை நிறைய பொற்காசுகள் ஒரு முறை வந்தன.  அவை அனைத்தையும் அடிமைப் பெண்களுக்கும் மற்ற பெண்களுக்குமாக பிரித்துப் பிரித்து வழங்கி விட்டார்கள் என்று அன்னை ஆயிஷா அறிவிக்கிறார்.  அது போன்றே அரசாங்க உதவித் தொகைகள் வழங்கப்படும் பொழுது அடிமைகளுக்கு மற்ற அனைவரையும் விட முன்னுரிமை அளிக்கப் பட்டது.

(இரு செய்திகளும் அபுதாவுதில் உள்ளன)

 

சுதந்திர எண்ணம்

 

அரசர்களின் அவைகளில் அனுமதி பெறாது வாயைத் திறப்பது கூட பெருங்குற்றம்.  அனுமதி கிடைத்தாலும் செயற்கையான வார்த்தை அலங்காரங்கள் ஜோடனைப் பேச்சுகள் போன்றவற்றைக் கோர்த்து அடிமைத்தனத்தையும், கையாலாகாத்தனத்தையும் பவ்யமாக வெளிப் படுத்தும் சொற்களையே கூற வேண்டும்.  மரபுரீதியிலான பீடிகைப் பேச்சுகளையும் கட்டாயம் இணைத்துக் கொண்டாக வேண்டும்.  இஸ்லாமிய ஆட்சி அமைப்பில் இறைத்தூதரின் மீது எந்த அளவுக்கு நபித்தோழர்கள் மரியாதையையும், கண்ணியத்தையும் கொண்டிருந் தார்கள் என்றால் பேச்சு மூச்சற்ற பறவைகளைப் போல அசையாது அவையில் நின்றிருப்பார்கள்.  அப்படியிருந்த போதிலும், தயக்கமே இல்லாமல் நினைத்ததை எல்லாம் சொல்லி விடக் கூடிய உரிமை எல்லோருக்கும் இருந்தது.  வெளியிலிருந்து யாரேனும் அறிமுகம் இல்லாத நபர் வந்தாரென்றால் முஹம்மதே என்று விளித்துப் பேசத் தொடங்கிவிடுவார்.  அவர் என்ன கேட்டாலும், எப்படிக் கேட்டாலும் மனம் கோணாது  இறைத்தூதர்  பதிலளிப்பார்கள்.  கேட்பவர் இறை வனுக்குக்  கீழ்ப்படிந்த முஸ்லிமாக இருந்தால் இறைத்தூதரே! என்று அழைத்துப் பேச்சைத் தொடங்குவார்.  அண்ணலாருக்குக் கட்டாயம் கட்டுப்பட வேண்டும் என்பதை எல்லா முஸ்லிம்களும் இறைநம்பிக் கைக்கு அடுத்த கடமையாக கருதுகிறார்கள்.  அதே சமயம், இறைத் தூதரின் கருத்து அவர்களுடைய சொந்தக் கருத்து தான் என்பது தெரிந்து விட்டால்  தயக்கமே இல்லாமல் அதற்கு மாற்றுக் கருத்தை உடனுக் குடன் தெரிவிப்பார்கள்.  அவ்வனைத்துக் கருத்துகளையும் இறைத்தூதர் பெருந்தன்மையோடு கேட்டுக் கொள்வார்கள்.  தன்னுடைய கருத்துக்கு மாற்றமான கருத்தாக இருந்தாலும் சரியான கருத்தாக இருந்தால் தாமதிக்காமல் ஏற்றுக் கொள்வார்கள்.  ஓர் அடிமையும், அடிமைப் பெண்ணும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.  இந்நிலையில் அந்த அடிமைப் பெண் விடுதலை ஆகி விட்டால் என்ன செய்வது?  அந்த அடிமையையே கணவராக ஏற்றுக் கொண்டிருக்கலாமா? தேவையில் லையா?  தீர்மானிக்கும் உரிமையை அந்த அடிமைப் பெண்ணுக்கே இஸ்லாம் வழங்கியுள்ளது. அவள் விரும்பினால் அந்தக் கணவருட னேயே திருமண உறவைத் தொடரலாம்.  இல்லையென்றால் வேறு ஓர் ஆணை தேர்ந்தெடுத்து திருமணம் முடித்துக் கொள்ளலாம். அன்னை ஆயிஷாவின்   அடிமையாக பரீரா என்ற இளம் பெண் இருந்தார்.  அப் பெண்ணுக்கு ஆயிஷா விடுதலை அளித்து விட்டார்கள்.  விடுதலை கிடைத்ததும் தம்முடைய கணவரோடு – அவர் அடிமையாக இருந்த காரணத்தினால் – திருமண உறவைத் தொடர அப்பெண் விரும்ப வில்லை.  தன்னுடைய மனைவியின் பிரிவைத் தாங்க இயலாத அவரு டைய கணவர் அவருக்குப் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தார்.  இறைத்தூதரிடம் சென்று முறையிடலானார்.  இறைத்தூதரும் பரீராவை அழைத்து அவரை ஏற்றுக் கொள்ளுமாறு சிபாரிசு செய்தார்கள்.  “இறைத்தூதரே!  இது தங்களுடைய ஆணையா?”என்று பரீரா கேட்டார்.  இல்லை இது வெறும் பரிந்துரை தான் என்ற பதில் கிடைத்த போது மன்னிக்க வேண்டும், என்னால் தங்களுடைய சிபாரிசை ஏற்றுக் கொள்ள இயலாது என்று துணிவாக தன் இயலாமையை வெளிப்படுத்தி விட்டார்.  (புகாரி)  தனக்கு முன்னால் தைரியமாக நின்று தன்னுடைய எதிர்த்துப் பேசி விட்டாளே என்றெல்லாம் எண்ணி அப்பெண்ணை இறைத்தூதர் தண்டிக்கவோ கண்டிக்கவோ இல்லை.

பத்ருப் போருக்காக போர் பாசறைகளை அமைக்கும் போது இறைத்தூதர் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே கூடாரங்களை அமைக்குமாறு கட்டளையிட்டார்கள்.  போர்க்கலையில் கரைகண்ட சில நபித்தோழர்கள் அண்ணலாரை அணுகி பணிவோடு இறைத்தூதரே, இறைஆணையின்படியா இவ்விடத்தைத் தாங்கள் தேர்ந்தெடுத் துள்ளீர்கள்?  அல்லது தங்களுடைய சொந்த அபிப்பிராயத்திலா? என்று கேட்டார்கள்.  நானாகத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று இறைத் தூதர் பதிலளித்த போது இறைத்தூதரே தயவு செய்து இந்த இடத்தை தேர்வு செய்ய வேண்டாம்.  போரில் வெற்றி பெற வேண்டுமென்றால் அதே அங்கே தெரியும் கிணற்றுக்குப் பக்கத்தில் கூடாரங்களை அடிப்பது தான் சிறந்தது, என்று தங்கள் கருத்தைத் தெரிவித்தார்கள்.  இறைத்தூதர் தயங்காது அக்கருத்தை ஏற்றுக் கொண்டார்கள். இன்னும் இதைப் போன்ற வேறு பல நிகழ்வுகளிலும் இறைத்தூதர் சஹாபாக்களின் கருத்துகளை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். உலக விஷயங்களில் அனுப வத்தினால் நீங்கள் பெற்றுள்ள அறிவு சரியாகத்தான் இருக்கும் என்று அது குறித்து தம்முடைய அபிப்பிராயத்தையும் தெரிவித்துள்ளார்கள்.  மக்காவை விட்டு புலம் பெயர்ந்து மதீனாவை வாழ்விடமாக ஆக்கிக் கொண்ட போது மதீனத்து மக்கள் இரு வேறு பேரீச்சை மரங்களை ஒட்ட வைத்து மகரந்த சேர்க்கை செய்து வருவதை அண்ணலார் கண்டார்கள்.  ஏதோ சடங்குக்காக இவ்வாறு செய்கிறார்கள் என்று  எண்ணிக் கொண்டு  இவ்வாறு செய்யாமலிருந்தால் பரவாயில்லை என்று தம்முடைய அபிப்பிராயத்தை வெளியிட்டார்கள். அதை அன்சாரிகள் ஏற்றுக் கொண்டு ஒட்டு மகரந்த சேர்க்கையைத் தவிர்த்துக் கொண்டார்கள்.  அவ்வாண்டு விளைச்சல் மிகவும் குறைந்து போனது.  விளைந்த பழங் களும் தரமானவையாக இல்லை.  தாம் கூறிய கருத்து தான் விளைச்சல் குறைந்து போனதற்குக் காரணம் என்பதை அறிந்த இறைத்தூதர் மேற்கண்ட கருத்தை கூறினார்கள்.  தொடர்ந்து இறைவ னின் வஹியைப் பெற்று நான் அறிவிக்கும் மார்க்க விஷயங்களில் மட்டும் அப்படியே என்னுடைய கருத்தைப் பின்பற்றுங்கள், மற்றபடி உலக நடைமுறை களில் உங்களுக்கு எது சரி என்று படுகின்றதோ அவ்வாறே செய்து வாருங்கள் என்று கூறினார்கள்.                                            (பதிவு – முஸ்லிம்)

உலக விஷயங்களில் அனுபவ அறிவுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறிந்து கொள்கிறோம்.  அதே சமயம் இறைவனின் வஹியைப் பெற்று இறைத்தூதர் அறிவிக்கும் விஷயங்களில் மாற்றுக் கருத்து கொள்ளாமல் அப்படியே பின்பற்ற வேண்டும்.  ஒரு வேளை நமக்கு அது முழுமையாக விளங்காமல் போனாலும் இறைவனின் நாட்டம் அவ்வாறே உள்ளது என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

ஹுதைபியா உடன்படிக்கையின் போது முஸ்லிம்களுக்கு சாதகமில்லாத பல்வேறு நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு நிராகரிப்பாளர்களோடு இறைத்தூதர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.  மிகவும் பணிந்து போய் நாம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம் எனும் கருத்து உமர் போன்ற சஹாபாக்களின் உள்ளங்களிலெல்லாம் தோன்றி விட்டது.  ஈமானிய ரோஷத்தால் அவர்கள் நிலைகொள்ளாமல் தவித்தார் கள்.  இறைத்தூதருக்கு முன்னால் வந்து நின்று கொண்டு “யா ரசூலல் லாஹ்!  சத்தியமாக தாங்கள் இறைவனின் தூதர் தானே?!” என்று கேட்டார்கள்.  ஏனில்லை?  கண்டிப்பாக நான் இறைவனின் தூதரே தான் என்ற பதில் கிடைத்த போது, பகைவர்கள் அசத்தியத்தின் மீது தானே உள்ளார்கள்? என்று தொடர்ந்து கேட்டார்கள்.  ஆம் ஏன் இல்லாமல்? என்ற பதில் கிடைத்த போது  அப்படியிருக்கும் போது எதற்காக நான் பகைவனுக்கு முன்னால் பணிந்து போய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்?என்று அங்கலாய்த்தவாறு கேட்டார்கள்.அதற்கு அண்ணலார் “நான் இறைவனின் தூதராவேன்.  அவனுக்கு மாறு செய்ய என்னால் இயலாது.  கண்டிப்பாக அவன் எனக்கு உதவி செய்வான்” என்று கூறி விட்டார்கள். இறையில்லம் கஅபத்துல்லாஹ்வை வலம் வந்து ஹஜ் செய்வோம் என்று தாங்கள் கூறினீர்கள் அல்லவா? என்று சஹாபாக்கள் மேலும் கேட்ட போது, இவ்வாண்டே செய்ய உள்ளோம் என்று குறிப்பிட்டுக் கூறினேனா? என்று இறைத்தூதர் எதிர் கேள்வி கேட்டார் கள்.  இல்லையென்று அவர்கள் பதிலளித்த போது மீண்டும் நாம் வருவோம்; இறையில்லம் கஅபத்துல்லாஹ்வை தரிசிப்போம் என்று அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இறைத்தூதர் பதிலளித் தார்கள்.  இருந்த போதிலும் அவர்  திருப்தி அடையவில்லை.  அபுபக்கரை அணுகி அவரிடமும் தன்னுடைய அதிருப்தியை முறையிட்டார்.  இறைத்தூதர் என்ன பதிலை அளித்தார்களோ அதே பதிலையே அபுபக்கரும் அளித்தார்.  கடைசியில் உண்மையை விளங்கிக் கொண்ட உமர் அவர்கள் தாம் அத்துமீறி நடந்து கொண்டதாக மிகவும் வருந்தினார்.  அதற்கு பரிகாரமாக தான தருமங்களை அளித்தார்;நோன்புகளை நோற்றார்; அடிமைகளையும் விடுவித்தார்.  (புகாரி)  உமர் அவர்கள் இறைத்தூதரின் கருத்தை மாற்ற எவ்வளவோ வாதாடிப் போராடிய போதும் இறைத்தூதர் அவர்கள் தம்முடைய முடிவை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை என்பதையே இந்த அறிவிப்பிலிருந்து நாம் விளங்கிக் கொள்கிறோம்.  ஏனென்றால், இறைத்தூதரின் சொந்தக் கருத்து கிடை யாது.  மாறாக, இறைவனின் தீர்மானம்.

அதே உடன்படிக்கையின் போது நடைபெற்ற இன்னொரு சம்பவத்தையும் நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு இறையில்லம் கஅபத்துல்லாஹ்வை தரிசிப் பதற்காக கட்டியிருந்த இஹ்ராமை களையுமாறு இறைத்தூதர் ஆணை யிட்டார்கள்.  இறையில்லத்தை   தரிசிப்பதற்காக பேரார்வத்தோடு புறப்பட்டு வந்த சஹாபாக்களால் இந்த அதிர்ச்சியை தாங்கிக் கொள்ள  இயலவில்லை.  வருத்தத்திலும், விசனத்திலும் மூழ்கிக் கிடந்த சஹா பாக்கள் இறைத்தூதரின் ஆணையை செயற்படுத்த முன் வரவில்லை.  தாங்கள் அனைவரும் கவலையால் சோர்ந்து போய் கிடப்பதை  கண்ட  பிறகாவது இறைத்தூதர் தம்முடைய முடிவை மாற்றிக் கொள்ள மாட்டாரா? என்று அவர்கள் அனைவரின் உள்ளத்திலும் ஒரு நப்பாசை!   இறைவனின்  ஆணையை துச்சமாக நினைத்து தங்களுடைய கருத்தி லேயே இவர்கள் பிடிவாதமாக இருக்கிறார்களே? என்று இறைத்தூதர் மிகவும் கவலைப்பட்டார்.  இறைத்தூதரின் கவலையைப் போக்கும் வகையில் அன்னை உம்முஸலமா ஒரு யோசனையை தெரிவித்தார்கள்.  யா ரசூலல்லாஹ்!  முதலில் தாங்கள் இஹ்ராமைக் களைந்து மக்கள் பார்க்கும் வண்ணம் கொண்டு வந்த கால்நடையை அறுத்துப் பலியி டுங்கள்.  இறைத்தூதரும் அவ்வாறே செய்தார்கள்.  சத்தியப்பேரொளியின் விட்டில்களான சஹாபாக்கள் இறைத்தூதரின் தீர்மானத்தை இனி யாராலும் மாற்ற இயலாது என்பதை சந்தேகமற உணர்ந்து கொண் டார்கள். அனைவரும் இஹ்ராமைக் களைந்து தங்களுடைய கால்நடை களை அறுத்துப் பலியிட முனைந்தார்கள்.

இந்த சம்பத்தில் நமக்கு இரண்டு படிப்பினைகள் உள்ளன.  ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தீர்மானம் இறைவனின் புறத்திலிருந்து வழங்கப்பட்ட ஆணை.  யார் என்ன சொன்னாலும் எத்தகைய கருத்தைத் தெரிவித்தாலும் இறைவனின் கட்டளையை மீற இறைத்தூதர் தயாராக இல்லை.அதே சமயம் இஹ்ராமைக் களைவதில் அன்னை  உம்முஸலமா தெரிவித்த யோசனையை இறைத்தூதர் ஏற்றுக் கொண்டார்கள்.  ஏனென்றால் மனிதர்களின் உளவியலோடு சம்பந்தப்பட்ட விஷயம் அது.  இறைத்தூதரின் கட்டளையை அலட்சியப்படுத்தும் மக்களை வழிக்குக் கொண்டு வரவேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? என்று அனுபவம் மற்றும் அறிவின் அடிப்படையில் இறைத்தூதரின்  மனைவி தெரிவித்த யோசனை அது.

சில சமயங்களில் சரிவர விளங்கிக் கொள்ளாததாலும், தாங்கள் என்ன செய்கிறோம் என்கின்ற உணர்வே இல்லாததாலும் மனித பல வீனங்களின் காரணத்தினாலும் கோபம் போன்ற உணர்ச்சி வசப்படு வதாலும் இறைத்தூதரின் மீது துணிந்து மக்கள் ஆட்சேபணைகளை எழுப்பியதும் உண்டு.  அது போன்ற சமயங்களில், மிகவும் பெருந்தன் மையோடு மக்களின் குற்றச்சாட்டுகளை இறைத்தூதர் சகித்துக் கொள்வார். எல்லை மீறிப் பேசுகிறார்கள், அத்துமீறுகிறார்கள், அவை யடக்கம் தவறுகிறார்கள் என்பதற்காகவெல்லாம் யாரையும் இறைத்  தூதர் தண்டித்ததே கிடையாது.

வயல்களுக்கு நீர் பாய்ச்சுவது தொடர்பாக ஜுபைர் அவர்க ளுக்கும்  இன்னோர்  அன்சாரித்  தோழருக்குமிடையே ஒரு முறை வாக்கு வாதம் வலுத்து விட்டது.  கிணற்றுக்குப் பக்கத்தில் கிணற்றைத் தொட் டவாறு  ஜுபைரின்  வயல்  இருந்தது.  அதனை அடுத்து கிணற்றுக்கு சற்று தூரம் தள்ளி அந்த அன்சாரித் தோழரின் வயல் இருந்தது.  யாருடைய வயலுக்கு முதலில் நீர் பாய்ச்சுவது என்று அவர்களுக்குள் தகராறு.  ஒவ்வொருவரும் தன்னுடைய வயலுக்கே முன்னுரிமை என்று வாதித் தார்கள்.  கடைசியில் வழக்கு இறைத்தூதரின் அவைக்கு வந்தது.  கிணற் றுக்குப் பக்கத்தில் யாருடைய வயல் இருக்கின்றதோ, அவருக்குத் தான் முன்னுரிமை என்பதே இஸ்லாமின் சட்டம். கிணற்றுக்குப் பக்கத்தி லுள்ளவரின் அனுமதியைப் பெறாமல் அடுத்த வயலுக்காரர் வாய்க் காலை வெட்டி தன்னுடைய நிலத்துக்கு நீர் பாய்ச்ச முடியாது.  ஜுபைரிடம் இறைத்தூதர் “முதலில் ஓரளவுக்கு நீங்கள் நீர் பாய்ச்சிய பிறகு அவருக்கு விட்டுக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள்.  ஆனால் இந்தத் தீர்ப்பினால் அன்சாரித் தோழர் திருப்தியடையவில்லை.   கோபத்தில் என்ன கூறுகிறோம் என்று கூட கவலைப்படாமல் யா ரசூலல்லாஹ்!  தங்களுடைய அத்தை மகன் என்பதற்காக ஜுபைருக்கு சாதகமாக தாங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளீர்கள் என்று கூறி விட்டார்.  இறைத்தூதரின் முகத்தின் நிறமே மாறி விட்டது.  கோபத்தின் அறிகுறிகள் தென்பட்டன.  இறைத்தூதர் வழங்கிய தீர்ப்பு நியாயமான தீர்ப்பு.  அதை அவர் ஒப்புக் கொண்டிருக்க வேண்டும்.  அது தான் அவருக்கு நல்லது.  ஆனால், யோசிக்காமல் அவருடைய ஆட்சேபணையை கிளப்பியதால் சட்டத்தின் படி இறைத்தூதர் மறுபடியும் தீர்ப்பை வழங்கினார்கள்.  “ஜுபைரே, உங்கள் வயலுக்கு எவ்வளவு நீர் தேவைப்படுகின்றதோ  அந்த அளவுக்கு நீரைப் பாய்ச்சிக் கொள்ளுங்கள்.  அதன் பிறகு நீரை தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்.  பக்கத்து வயலுக்குப் பாய விட வேண்டாம்”என்று கூறி விட்டார்.

ஒரு முறை இறைத்தூதர் பொதுநிதிப் பொருட்களைப் பங்கிட்டு அளித்துக் கொண்டிருந்தார்.  பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் வேகவேகமாக வந்து நின்றார்.  அவருடைய பெயர் ஃதுல் ஃகுவய்சிரா.  இறைத்தூதரே!, நியாயத்தோடு நடந்து கொள்ளுங்கள் என்று அவர் கூக்குரலிடலானார்.  அவரைப் பார்த்து இறைத்தூதர் கூறினார்கள் “நானே  நியாயமாக நடந்து கொள்ளவில்லையென்றால், வேறு யார் தான் நடந்து கொள்வார்?”  அந்த மனிதரின் பொருந்தாப் பண்பைக் கண்டு உமருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.  இறைத்தூதரே, இந்த மனிதனின் தலையை ஒரே வீச்சில் சீவி விடட்டுமா? என்று கேட்டார்கள்.  அவரை சமாதானப்படுத்திய பிறகு இறைத்தூதர் கூறினார்கள் – “இவருடைய வம்சாவழியில் இன்னும் சிலர் தோன்றுவார்கள்.  அவர்களுடைய வணக்க வழிபாடுகளைப் பார்த்தால் நாம் செய்வதெல்லாம் ஒரு வணக்கமா? என்று நீங்கள் குறைபட்டுக் கொள்வீர்கள்.  அவர்கள் குர்ஆனை  ஓதுவார்கள்.  ஆனால், அது அவர்களின் தொண்டைக்குழியை விட்டு கீழே இறங்கவே இறங்காது.  முஸ்லிம்கள் தங்களுக்கிடையே கருத்து வேறுபாடுகளால்   பிரிவு   பிரிவுகளாக   ஆகும் காலத்தில்  தங்களுக் கென்று  தனித்ததோர் அமைப்பை  இவர்கள் ஏற்படுத்திக் கொள் வார்கள்”  (இதே போன்றதொரு கூட்டம் அமீருல் முஃமினீன் அலி அவர்களின் காலத்தில் கவாரிஜ் என்ற பெயரில் தோன்றியது)

எல்லைமீறிப் பண்பில்லாமல் மக்கள் நடந்து கொண்டதற்கு இந்த  இரு சம்பவங்களும் எடுத்துக்காட்டுகள்.  இத்தகைய சம்பவங் களில் ஈடுபட்டவர்கள் ஒரு வேளை முனாஃபிக்கீன்களாகக் கூட இருக் கலாம்.  இருந்த போதிலும் தவறாகப் புரிந்து கொண்ட ஒருவர் தராதரம் தெரியாமல் தகுதியறியாமல் நடந்து கொண்டாலும் இறைத்தூதர் சகிப்புத்தன்மையோடு பொறுமை காத்துள்ளார்கள்.  வாய்மையை சொல்வது  வாய்மையோடு வாழ்வது வாய்மையின் பக்கம் வழிகாட் டுவது வாய்மையையே பின்பற்றுவது போன்ற விஷயங்களில் தகுதி, கௌரவம், பெருமை, பதவி போன்றவற்றையெல்லாம் பெரிதாகக் கருதக் கூடாது என்ற படிப்பினையை தனக்குப் பின்னால் வந்த கலீஃபாக் கள் இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு இத்தகைய நிகழ்ச்சிகளின் மூலமாக இறைத்தூதர் காட்டித் தந்துள்ளார்கள்.

அதிகாரிகளும் ஆளுநர்களும் உண்மையில் கலீஃபாவின் பிரதிநிதிகளாகத் தான் திகழ்கிறார்கள்.  ஓர் ஆளுநரை குறை சொல்கி றோம் என்றால் அந்த கலீஃபாவின் மீது குற்றம் சாட்டுகிறோம் என்று தான் பொருள்.  இறைத்தூதர் நியமித்த அதிகாரிகளின் மீது மக்கள் குறை கூறிய சம்பவங்களும் நடந்துள்ளன.  அத்தகைய தருணங்களில் தான் நியமித்த அதிகாரியின் மீது குறை கூறுவது என்றால் தன் மீதே குறை கூறுவதாகத்தானே  அர்த்தம்? என்று எண்ணி அந்த அதிகாரியைக் காக்கும் நோக்கில் ஏதேனும் ஒரு சில சட்ட விதிகளை சுட்டிக் காட்டி பொதுமக்களை சமாதானப்படுத்தும் முயற்சியையோ அல்லது ஏதேனும் காரணங்களை கற்பித்துக் கூறி மழுப்பும் முயற்சியையோ ஒரு போதும் இஸ்லாமிய ஆட்சித் தலைவர் செய்ததே கிடையாது.  இரண்டு தரப் பாரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நியதிகளை வரையறுத்து இறைத்தூதர் கூறியுள்ளார்கள்.  அநீதி இழைக்கப்பட்டவனின் முறை யீட்டை எண்ணி பயந்து கொள்ளுங்கள்.  அவனுக்கும் இறைவனுக் குமிடையே தடுக்கும் திரைகள் எதுவுமில்லை.  அவனுடைய முறையீடு உடனுக்குடன் அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளப்படும் என்று அதிகாரி களை நோக்கியும் உங்களுடைய  அதிகாரிகளை   உங்களுடைய செயல் களால் திருப்திப்படுத்துங்கள் என்று மக்களை நோக்கியும் இறைத்தூதர் கூறியுள்ளார்கள்.

இதுவாவது பரவாயில்லை, அதிகாரிகளின் மீது தான் மக்கள் குறைபட்டுக் கொள்கிறார்கள்.  இதை விடக் கடினமாகவும் தகுதி குறை வாகவும் இறைத்தூதரோடு மக்கள் நடந்து கொண்ட சம்பவங்களையும் வரலாற்றில் நாம் பார்க்கலாம்.  அத்தகைய மக்களிடம் கூட இறைத்தூதர் நீதி நேர்மையோடு மென்மையாகவும், பணிவாகவுமே நடந்து கொண்டார்கள்.

ஒரு முறை வேகமாக வந்த ஒரு காட்டு அரபி இறைத்தூதரின் தோள் துண்டை பலமாகப் பற்றி இழுத்தார்.  இறைத்தூதரின் கழுத் தெல்லாம் சிவந்து விட்டது.  அவரை நோக்கி இறைத்தூதர் திரும் பினார்கள். “அந்த இரண்டு ஒட்டகங்களையும் எனக்குக் கொடுத்து விடுங்கள்.  நீங்கள்  தரப்போவது  ஒன்றும்  உங்களுடைய   சொந்த சொத்து கிடையாது.  உங்கள் அப்பாவின் ஆஸ்தியும் கிடையாது.” என்று அவர் கூறினார். “அஸ்தஃக்ஃபிருல்லாஹ்; அஸ்தஃக்ஃபிருல்லாஹ் ;அஸ்தஃக் ஃபிருல்லாஹ்!” என்று மூன்று முறை கூறிய இறைத்தூதர் நீங்கள் செய்த காரியத்துக்கு என்னை இந்த அளவுக்குத் துன்புறுத்துகிறீர்களே இதற்குப் பழிவாங்காமல் நான் உங்களுக்கு எதனையும் தர மாட்டேன்.” என்று கூறினார். ஆனால் அந்த மனிதரோ இறைத்தூதரின் பேச்சை சட்டை செய்வதாகவே காணோம்.  அவரை மன்னித்த இறைத்தூதர் அவருக்கு அவர்  கேட்ட  இரண்டு  ஒட்டகங்களையும் தந்து விடுமாறும் ஒன்றின் மீது கோதுமை மூட்டைகளையும் இன்னொன்றின் மீது பேரீச்சம் பழ மூட்டைகளையும் ஏற்றித் தருமாறும் கட்டளையிட்டார்கள்.

ஒரு முறை இறைத்தூதரை சந்திக்க கிராமப்புறத்து அரபி ஒருவர் வந்தார். அவரிடம் இறைத்தூதர் கடன்பட்டிருந்தார்.  கிராமப்புறத்து அரபிகள் பொதுவாகவே கடினமானவர்கள்; பண்பற்று காட்டுமிராண் டிகளைப் போல் நடந்து கொள்வார்கள்.  இறைத்தூதரிடம் கொடுத்த கடனை வாங்குவதற்காக வாயில் வந்தபடியெல்லாம் அவர் பேசத் தொடங்கினார்.  அது கண்ட சஹாபாக்கள் அவரை அடக்கினார்கள்.  யாரிடம் என்ன பேசுகிறாய்? என்று உணர்ந்து பேசுமாறு கண்டித்தார்கள்.  ஆனால், இறைத்தூதரோ அவரை விட்டு விடுங்கள் . அவ்வாறு நடந்து கொள்ள அவருக்கு உரிமை இருக்கின்றது.  அவர் செய்தது உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் அவருக்கு சேர வேண்டியதைக் கொடுத்து விடுங்கள் என்று கூறினார்கள்.  அப்புறம் அந்த அரபிக்கு தர வேண்டிய கடன் தொகையை விடவும் கூடுதலாகத் தந்து அனுப்பி வைத்தார்கள்.

ஒரு முறை கடைவீதியில் நாட்டுப்புறத்து அரபி ஒருவர் மாமிசத்தை விற்றுக் கொண்டிருந்தார்.  இறைத்தூதர்கள் அவரிடம் பேரீச்சம்பழங்களுக்குப் பகரமாக மாமிசத்தை வாங்கிக் கொண்டார்கள்.  வீட்டிற்கு வந்து பேரீச்சங்கனிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அவரிடம் கூறினார்கள்.  வீட்டுக்கு வந்து பார்த்தால் வீட்டில் பேரீச்சம் பழங்கள் இல்லை. வெளியே வந்து அந்த வியாபாரியிடம் நிலைமையைத் தெரி வித்தார்கள்.  அவனோ ஏமாற்றி விட்டீர்கள் என்று ஏதோதோ சொல்லிப் புலம்பத் தொடங்கி விட்டார்  மக்களெல்லாம் ஒன்று கூடி விட்டார்கள்.  கத்திக் கூப்பாடு போடுவதற்கு என்ன இருக்கிறது? அப்படி என்ன இறைத் தூதர் உன்னை ஏமாற்றி விட்டார்கள்? என்று அந்த வியாபாரியை கடிந்து கொண்டார்கள்.  இறைத்தூதரோ மக்களைப் பார்த்து அவரை விட்டு விடுங்கள். அவ்வாறு கூற அவருக்கு உரிமை இருக்கிறது என்று கூறி விட்டு மறுபடியும் அந்த வியாபாரியை சமாதானப்படுத்தினார்கள்.  மீண்டும் அவர் புலம்பத் தொடங்கினார்.  மக்கள் மறுபடியும் அவரை தடுக்க முயன்றார்கள்.  அவரை விட்டு விடுங்கள்; அவருக்கு அந்த உரிமை இருக்கிறது. என்று மறுபடியும் இறைத்தூதர் தெரிவித்தார்.  இவ்வாறு ஒன்றிற்கு பலமுறை நடைபெற்றது. பிறகு, உமக்குத் தேவை யான பேரீச்சம்பழங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஓர் அன்சாரித் தோழரின் வீட்டிற்கு அந்த வியாபாரியை இறைத்தூதர் அனுப்பி வைத் தார்கள். அதை வாங்கிக் கொண்டு திரும்பி வரும் வழியில் அந்த வியா பாரி இறைத்தூதரையும் அவருடைய தோழர்களையும் சந்தித்தார்.  முஹம்மதே! இறைவன் உங்களுக்கு நல்லதையே வழங்கட்டும்.சொன்ன படியே நல்ல விலையைத் தாங்கள் தந்து விட்டீர்கள்.  பொருளையும் சிறப்பானதாகத் தந்தீர்கள் என்று இறைத்தூதரின் பெருந்தன்மை               யாலும், நன்னடத்தையாலும் மனம் நெகிழ்ந்து அவர் கூறினார்.

இவையனைத்தும் இறைத்தூதர் முஸ்லிம்களோடு கடைப் பிடித்த  நடைமுறைகள்.  இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாத யூதர்கள் இறைத்தூதரோடு வரம்பு மீறி நடந்து கொண்ட போதும் இறைத்தூதர் இதை விடவும் அழகான முறையில் நடந்து கொண்டார்கள்.

ஜைத் இப்னு சஃனா ஒரு காலத்தில் யூதராக இருந்தார்.  கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.  ஒரு முறை அவரி டமிருந்து கடனாக ஒரு தொகையை இறைத்தூதர் பெற்றிருந்தார்.  கடனை அடைப்பதாக கூறியிருந்த கடைசி தினத்துக்கு ஒன்றிரண்டு நாட்கள் முன்னதாகவே கடனை வசூலிக்க அவர் இறைத்தூதரிடம் வந்தார்.  இறைத்தூதரின்  மேலாடையை வலிமையோடு பற்றி இழுத்தார்.  அப்துல் முத்தலிபின் வாரிசுகளே இப்படித்தான்.  வாங்கி விட்டு ஒழுங்காகப் பணம் கட்ட மாட்டார்கள் என்று வாய்க்கு வந்த படி திட்டத் தொடங் கினார். பக்கத்தில் நின்று கொண்டிருந்த உமருக்கு கோபம் பெருக் கெடுத்தது.  இறைவனின் எதிரியே!  இறைவனின் தூதருடனா இப்படி யெல்லாம்  நடந்து கொள்கிறாய்? என்று வேகமாகக் கேட்டார்கள்.  இறைத்தூதரோ உமரே!  நீங்கள் செய்வது கொஞ்சம் கூட சரியில்லை. நீங்கள் என்ன செய்ய வேண்டும்?  அவரை சமாதானப்படுத்த வேண்டும்.  கொடுத்த கடனை வசூலிக்க அவருக்கு முழு உரிமை இருக்கின்றது.  வாங்கிய கடனை எப்படியாவது செலுத்துமாறு என்னிடம் நீங்கள் கேட்டுக் கொள்ள வேண்டும்.  அதை விட்டு விட்டு இப்படி யெல்லாம் நடந்து கொள்ளக் கூடாது என்று கூறினார்கள்.  தொடர்ந்து உமரிடம் போய்  இவருக்கு நாம் செலுத்த வேண்டியதை கொடுத்து விடு; அதற்கும் மேலாக இருபது ஸாஉ (ஒரு வகையான கொள்ளளவை) நிரம்ப பேரீச்சம்பழங்களையும் கொடுத்து விடுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.  இறைத்தூதரின் இந்த அணுகுமுறையை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஜைத் விழிகள் விரிய திகைத்துப் போய் நின்று விட்டார்.  அதே நிமிடத்தில் அண்ணலாரை இறைத்தூதராக ஏற்றுக் கொண்டு இஸ்லாமிய நெறியையும் தழுவி விட்டார்.

இறைத்தூதரிடம் ஒரே ஒரு ஜோடி ஆடை தான் இருந்தது.  அதுவும் மிகவும் கெட்டியான கம்பளி ஆடை.  அணிந்து கொண்டால் வியர்வையால் நனைந்து வாசம் வீசும்.  எதேச்சையாக ஒரு முறை கடை வீதியிலுள்ள யூதன் ஒருவன் கடையில் சிரியா நாட்டிலிருந்து மெல்லிய ஆடைகள் வந்திருந்தன. ஓர் ஆடையை கடனுக்கு வாங்கிக் கொள்ளலாம் என்று அன்னை ஆயிஷா  யோசனை தெரிவித்ததால் அந்தக் கடைக்கார னிடம் ஒரு நபரை இறைத்தூதர் அனுப்பி வைத்தார்கள்.  சரி, சரி இதுவா செய்தி? என்று அந்தக் கடைக்காரன் எள்ளலோடு கூறினான்.அதாவது, ஆள் அனுப்பி சரக்கை வாங்கிக் கொண்டு காசு தராமலேயே முஹம்மது ஏமாற்றி விட நினைக்கிறாரோ? என்று அர்த்தம்.  இதைக் கேள்விப்பட்ட அண்ணலார், மக்கள் அனைவரையும் விட நான் மிகவும் நேர்மை யானவன் என்பது அவனுக்குத் தெரியாமலா இருக்கும்? என்று கூறியதோடு நிறுத்திக் கொண்டார்கள்.

 

பொதுமக்களுக்கான கேட்கும் உரிமை

 

முஹம்மது ஸல் அவர்கள் இறைவனின் தூதர் என்பதோடு முஸ்லிம்களின் தலைவராகவும் விளங்கினார்கள். தலைவர் எனும் நிலையில் வைத்து பொதுமக்கள் கேட்ட தாறுமாறான கேள்விகளை எல்லாம் பொறுத்துக்கொண்டார்கள். நிதானமாக அவர்களுக்கு விஷயத்தை   விளக்கிக் கூறினார்கள். சரியானபடி தீர்ப்பளித்தார்கள். மேற் கண்ட சம்பவங்களிலிருந்து இதனையே நாம் தெரிந்துகொள்கிறோம். இன்றைக்கு நாம் பார்க்கும் மற்றமற்ற தலைவர்களோடு முஸ்லிம்களின் இந்தத் தலைவரையும் சற்று ஒப்பிட்டுப் பாருங்கள். அரசியல் தலைவர் களும் அரசர்களும் எத்தகைய அகம்பாவத்தோடு நடந்துகொள்வார்கள் என்பது ஊரறிந்த ரகசியம். ஆட்சியாளர்களின் அவைகளில் மக்கள் எப்படியெல்லாம் மரியாதையோடு நடந்துகொள்ளவேண்டும் என்ப தற்கு ஆயிரம் ஆயிரம் விதிமுறைகள் உள்ளன. அவையடக்கத்தின் அவ் விதிகளுள் ஏதே÷னும் ஒன்றினை யாரெனும் ஒருவர் மீறிவிட்டால் என்ன ஆகும்? என்பதை சொல்லத்தேவையே இல்லை. இப்படியெல்லாம் தண்டிப்பதை அவர்களுடைய சட்டங்கள் ஆகுமாக்கிவைத்திருந்தன. இவையனைத்திற்கும் மேலாக யாரும் அவர்களை எக்கேள்வியும் கேட்க முடியாது. கேள்விகளுக்கும் விசாரணைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் அவர்கள். அவர்கள் செய்வது நல்லதோ கெட்டதோ எதுவாகயி ருந்தாலும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டது அது. ஆனால், இஸ்லாமைப் பொருத்தவரை ஆட்சியாளரோ, குடிமகனோ யாராக இருந்தாலும் சட்டத்திற்கு முன்பு ஒன்றுதான். யாரையும் விசாரிக்லாம்; தவறிழைத் திருந்தால் யாரையும் தண்டிக்கலாம்.

இறைத்தூதர் ஸல் அவர்களின் நிலை என்ன என்பதையும் கொஞ்சம் இங்கே நாம் யோசித்துப் பார்க்கவேண்டும். குற்றங் குறைகளற்ற மாசுமருவற்ற தூயதிருத்தூதர். நியதிகளுக்கும் வரம்பு களுக்கும் அப்பாற்பட்டோ, நெறிமுறைகளை மீறியோ எந்தவொரு வார்த்தையையும் எந்தவொரு சமயத்திலும் வெளிப்படுத்தாத நெறி யாளர். நல்லதை நினைத்தே பொதுமக்களின் நலனை நாடியே எந்த வொரு சொல்லையும் செயலையும் சொன்னவர்; செய்தவர். இறைத்தூதர் தவறிழைத்திருப்பார் என்று கருதுவது கூட குற்றம். பெரும் பாவம். அத்தகைய எண்ணமே இறைநம்பிக்கை ஈமானை விட்டு நம்மை குப்புறத் தள்ளிவிடும். ஆட்சியதிகாரம், அரசியல் நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் அத்தகைய மனிதப்புனிதரோடும் இப்படியெல்லாம் கேள்வி கேட்கலாம் என்று இஸ்லாம் அனுமதி அளித்திருக்கின்றது என்றால் என்ன அர்த்தம்? தலைவர்கள், ஆட்சியாளர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும்? அவர்களுக்கான வரைமுறை என்ன? என்பதை செயல்வடிவில் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான்!. தமக்குப் பின்னால் வரும் ஆட்சித்தலைவர்கள் பொதுமக்களின் கேள்வி கேட்கும் உரிமையை, தட்டிக்கேட்கும் உரிமையை ஒருபோதும் பறித்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இஸ்லாமிய ஆட்சித்லைவர் ஸல் அவர்கள் பொதுமக்களோடு அன்பாகவும் பெருந்தன்மையோடும் நடந்துகொண்டார்கள்.

இறைத்தூதரின் காலத்திலும் நாகரீக அரசுகள் பல காணப்பட்டன. பேரும் புகழும் பெற்ற அரசான ஈரானிய அரசாங்கத்தில் மன்னரின் அவையில்  நேருக்கு நேராக நின்று மன்னரை கேள்வி கேட்பதெல்லாம் கனவில் கூட நடைபெறாத காரியம். கிரேக்கத்திலும் ரோமதேசத்திலும் ஒருகாலத்தில் ஜனநாயக அரசாங்கங்கள் இருந்து வந்தன என்றெல்லாம் வரலாற்றில் படிக்கத்தான் செய்கிறோம். அத்தகைய மக்களாட்சி அரசுகள்  கூட உண்மையில் பிரபுக்கள், அதிகாரிகளின் அரசுகளாகத்தான் இருந்தன.  அவ்வரசுகளுக்கும் மக்களுக்கும் யாதொரு சம்பந்மும் கிடை யாது. அதிகாரிகளையோ, பிரபுக்களையோ மக்கள் கேள்வி கேட்க வெல்லாம் முடியாது. அத்கைய அவைகளில் இப்படிப்பட்ட மனித நேயத்தையோ, பெருந்தன்மையையோ, அன்பையோ, குடிமக்கள் மீதான அக்கறையையோ, மன்னிக்கும் மனப்பாங்கையோ, குடிமக்களின் அத்துமீறலை பொறுத்துக் கொள்ளும் உயர்ந்த உள்ளச் சிறப்பையோ,  நடுநிலை வழுவாத நீதி நியாயத்தையோ, வான்சிகரத்தில் குடிகொண்ட ஒழுக்க மாண்பையோ ஒருபோதும் காணமுடியாது!ஐயா, ஒருபோதும் காணமுடியாது.  தூயஎண்ணம், நேரியநெஞ்சம், மாசமருவற்ற பத்தரை மாற்று ஒழுக்கம் போன்றவற்றின் சுவடுகளைக்கூட அவர்களால் எட்டிப் பிடிக்க இயலாது. இவற்றையெல்லாம் அவர்கள் குறிக்கோள்களாகக் கொண்டதே இல்லை. அவர்களைப் பொருத்தவரைக்கும் பிறந்த மண்ணும் தாய்நாடும் தான் வணக்கத்திற்குரிய தெய்வம். தாய்நாட்டைப் பூசிக்கும் பாதையில் அவர்கள் என்னவேண்டுமானாலும் செய்வார்கள். தங்களுடைய நாட்டு எல்லைக்கு அப்பாலும் மனிதர்கள் வசிக்கிறார்கள், இரத்தமும் சதையும் கொண்ட ஜீவராசிகள் அவர்கள் என்பதையே சிந்திக்க மறுத்தார்கள்.  இந்தத் தளைகளையெல்லாம் உடைத்தெறிந்து சட்டங்களுக்கு முன்னால் ஆட்சியாளர்களின் நிலை என்ன? என்பதை உலகிற்கு காட்டிக் கொடுத்தது இஸ்லாம்!. மேற்கண்ட சம்பவங்களை உற்றுப்பாருங்கள். யாரிடம் மக்கள் கேள்வி கேட்கிறார்கள்? வெறுமனே ஆட்சியாளரிடமா? இல்லை, இல்லை. இவரும் தவறு செய்வார் என்று எண்ணத் தோன்றாத, எண்ணக் கூடாத ஒரு மனிதரிடம், இல்லை, இல்லை, ஓர் இறைத்தூதரிடம் மனிதப்புனிதரிடம் அல்லவா மக்ககள் இப்படியெல்லாம் கேள்வி கேட்டுள்ளார்கள்!!.

 

ஆட்சித்துறையில் ஆலோசனை

 

முஹம்மத் ஸல் அவர்கள் இறைவனின் திருத்தூதர். இறைவனுக்கும் அவருக்கும் இடையே வஹி எனும் வலுவான தொடர்பு உள்ளது. இறைவனின் வழிகாட்டுதல் என்றென்றும் உள்ளது. அதுமட்டுமல் லாமல் மதிநுட்பமும், தொலைநோக்கும் கொண்ட அறிவுத்திரு உருவமாக முஹம்மத் ஸல் விளங்கினார் என்பதை முஸ்லிம்கள் அனைவரும் வேற்றுக்கருத்து ஏதுமின்றி ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அறிவுச்சிகரத்தில் அமர்ந்திருக்கும் எந்தவொரு மனிதரும் தம்மைவிடக் கீழானநிலையில் உள்ளோரிடம் ஆலோசனைகளை அடியோடு கேட்பது கிடையாது என்பதுதான் உலக இயல்பு. ஆனால்,  இறைவனின் தூதர் எல்லாக் காரியங்களிலும் முஸ்லிம்களிடம் ஆலோசனை கேட்டுள் ளார்கள். முஸ்லிம்களின் மனத்திறன் அதிகரிக்கவேண்டும் என்பதற் காகவும் ஆட்சித்தலைவர்கள் விஷயத்தில் இஸ்லாமின் நடைமுறை களை செயல்படுத்தி பிற்காலத்தில் தன்னைத் தொடரும் ஃகலீஃபாக் களுக்கு அழகிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தி வைக்கவேண்டும் என்பதற்காகவும்தான்!. இறைத்தூதருக்கு அருளப்பட்ட இறைஆணை யும் இதையே முன்வைக்கின்றது.

“இறைவனின் தூதரே! ஆட்சியதிகார, நிர்வாக விஷயங்களில் அவர்களோடு ஆலோசனை கலந்துகொள்வீராக”               (அல்குர்ஆன் 3 @  00 )

இந்த இறையாணையை அப்படியே இறைத்தூதர் நிறைவேற்றினார்கள். நிறைவேற்றுமாறு முஙஸ்லிம்களைத் தூண்டினார்கள். முஸ்லிம்களின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இதனைச் சுட்டிக்காட்டி இறைவனும் புகழ்ந்து கூறினான்.

“அவர்களுடைய காரியங்களோ கலந்தாலோசனை அடிப்படையிலேயே நிகழ்கின்றன.”

(அல்குர்ஆன் 42 @38)

ஆட்சிநிர்வாகமும், அரசியல் அமைப்பும் அண்ணலாரின் காலத்தில் முழுமையடையவில்லை என்ற போதிலும் எண்ணற்ற காரியங்களில் சஹாபாக்களிடம் (நபித்தோழர்களிடம்) இறைத்தூதர் ஆலோசனை கேட்டுள்ளார்கள், அவ்வாலோசனைகளின் அடிப்படையில் செயல்பட் டுள்ளார்கள் என்பதை ஹதீதுகளிலும் வரலாற்றிலும் நம்மால் காண முடிகின்றது. இதற்கு என்னதான் காரணமாய் இருக்கமுடியும்? இத்த கைய நிர்வாகக்காரிங்களில் பரஸ்பரம் ஆலோசனை செய்துகொண் டால்தான் நல்லதொரு முடிவையும் தீர்மானத்தையும் எடுப்பது எளிதாக இருக்கும், என்பதை முஸ்லிம்களுக்கு உணர்த்தவேண்டும் என்பதே.!; மற்றபடி, ஆலோசனை கேட்டாகவேண்டிய அவசியம் இறைத்தூதருக்கு அறவே இல்லை என்பது யாவரும் அறிந்ததே.!

மதீனா சென்ற பிறகு முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. குடியிருப்புகள் பெருகிவிட்டன. கூட்டுத்தொழுகைக்காக மக்களை எவ்வாறு ஒன்றுதிரட்டுவது என்றொரு சிக்கல் தோன்றியது. அதுகுறித்து இறைவழிகாட்டுதலோ, வஹியோ எதுவும் அருளப்பட வில்லை. தம்முடைய தோழர்களையெல்லாம் ஒன்றுதிரட்டி இறைத் தூதர் ஆலோசனைள் கேட்டார்கள். மக்களை வழிபாட்டிற்கு ஒன்று திரட்டும் நோக்கில் யூதர்களும் கிறிஸ்தவர்களும் முரசு கொட்டுவது வழக்கம், நாமும் அதுபோன்றே செய்யலாம் என்று ஒருசிலர் கருத்து தெரிவித்தார்கள். ஒருசிலர், தொழுகை நேரங்களில் கொடியொன்றைக் கம்பத்தில் கட்டி உயரத் தூக்கிக்காட்டலாம் என்று கூறினார்கள். ஆனால், இவையெதுவுமே இறைத்தூதருக்குப் பிடிக்கவில்லை. ஒரு மனிதரை நியமித்து தொழுகை குறித்து மக்களிடம் அறிவிக்கச் செய்யலாம்,என்று உமர் ரழியல்லாஹு அன்ஹு ஆலோசனை கூறினார்கள். அந்த ஆலோச னையை இறைத்தூதர் அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அப்பணிக்கென பிலாலை நியமித்தார்கள். “அஸ்சலாத்துல் ஜாமிஆ” என்று அறைகூவி அவர் மக்களை அழைக்கலானார். சிலநாட்கள் சென்றபிறகு அண்ணலா ரின் கனவில் தற்போதைய அதான் முறை செய்து காட்டப்பட்டது. பொங்கும் இறைவழிகாட்டுதல் காரணமாக வேறுபல சஹாபாக்களும் அதே கனவைக் கண்டார்கள். ஓடோடிவந்து அண்ணலாரிடம் தாங்கள் கண்ட கனவை ஒப்பித்தார்கள். அதன்படி, அவ்வாறே மக்களை அழைக்குமாறு பிலாலிடம் இறைத்தூதர் கட்டளையிட்டார்கள்.

பத்ருப் போர் நடைபெற்றபோது, ஊரைவிட்டு வெளிக்கிளம்பி சற்றுதூரம் வந்தபின்பு எதிரிகளை எதிர்கொள்ளும் விஷயத்தில் தமது தோழர்களிடம் இறைத்தூதர் ஆலோசனை கேட்டார்கள். எல்லோரும் தத்தமது அபிப்பிராயங்களைத் தெரிவித்தார்கள். அன்சாரிகளின் தலைவர் களில் ஒருவர்,“நீங்களும் உங்களுடைய இறைவனும் போய் எதிரிக ளோடு போரிடுங்கள்” என்று மூஸா அலைஹிஸ்ஸலாமிடம் இஸ்ர வேலர்கள் சொன்னது போல நாங்கள் ஒருபோதும் சொல்லமாட்டோம். இறைவனின் மீது ஆணையாக, தாங்கள் எங்களை கடற்கரைக்கு அழைத்துச் சென்று கடலுக்குள் குதியுங்கள் என்று கூறினாலும் தயங்காது நாங்கள் குதிப்போம்!”. அதன்பின்பு போர்க்ககளத்தை நோக்கி இறுதித் தூதர் படைவீரர்களோடு முன்னேறினார்கள். ஓரிடத்தை அடைந்த பின்பு அங்கேயே முகாமிட்டுக்கொள்ள நாடினார்கள். இராணுவ நடவடிக்  கையிலும், போர்க்கலையிலும் பரிச்சயம் மிகுந்த தோழர் ஒருவர் அண்ண லாரை அணுகி, “இறைவனின் தூதரேஸ! இறைவழிகாட்டுதலின் அடிப் படையில் தாங்கள் இங்கு முகாமிட்டுள்ளீர்களா? அல்லது, இது தங்க ளுடைய முடிவா?” என்று வினவினார். இது இறைவனின் ஆணை யொன்றும் கிடையாது, என்னுடைய அபிப்பிராயம்தான் என்று இறைத் தூதர் தெளிவுபடுத்தியபோது, அவர் கூறினார் @“இறைவனின் தூதரேஸ! நாம் இந்த இடத்தில் பட்டாளமிடுவதைவிட தண்ணீரை வசப்படுத்தத் தோதாக உள்ள அந்த இடத்தில் கூடாரமடிப்பதே மேல்”. அவர் கூறிய யோசனையை ஏற்றுக்கொண்டு அவ்வாறே அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் தங்குமாறு படையினருக்கு ஆணையிட்டார்கள்.

போர் முடிவுற்று ஏராளமான கைதிகள் பிடிபட்டபோது, கைதிகள் விஷயத்தில் என்ன செய்வது என்று தம்முடைய தோழர்களை ஒன்று கூட்டி ஆலோசித்தார்கள். தோழர்களும் ஆளாளுக்கு ஓர் அபிப் பிராயத்தைத் தெரிவித்தார்கள். இறுதியில் இறைத்தூதர் ஸல் தோழர் அபுபக்கரின் ஆலோசனையின்படி நஷ்டஈட்டுத்தொகை பெற்றுக் கொண்டு அக்கைதிகளை விடுவித்தார்கள்.

உஹது போரின்போதும் இவ்வாறே நிகழ்ந்தது. நகரைவிட்டு வெளியேறி போரிடலாமா? அல்லது, நகரிலேயே தங்கியிருந்து போரி டலாமா? என்று தமது தோழர்களிடம் இறைத்தூதர் வினவினார்கள். அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூல் போன்ற முனாஃபிக்கீன்கள் உள்ளிருந்தே போராடலாம் என்று யோசனை தெரிவித்தார்கள். சத்தி யத்திற்கு உறுதுணையாகத் திகழும் உத்வேகங்கொண்ட கொள்கை யுறுதித் தோழர்கள் எல்லாம் ஊரை விட்டு வெளியேறி முன்னேறிச் சென்று எதிரிகளைச் சந்திக்கவேண்டும் என்று கூறினார்கள். ஊருக் குள்ளாக இருந்து போராடவேண்டும என்பதே இறைதூதரின் கருத் தாகவும் இருந்தது. தம்முடைய கருத்துக்கு மாற்றமாக, தோழர்களின் கருத்தை ஏற்றுக்கொண்டு ஊருக்கு வெளியே சென்று போராடலாம் என்று முடிவெடுத்தார்கள் அண்ணலார். அரசியல் நடவடிக்கைகளில் ஆலோசனைக்கு எந்தளவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்பதற்கு அதுவோர் அற்புதமான உதாரணமாகும்.

ஹுனைன் போரின்போது, ஹவாஸின் குலத்தைச் சேர்ந்தவர்கள் இறைத்தூதரைத் தேடி வந்தார்கள். போர்க்களத்தில் சேகரிக்கப்பட்டு பொதுநிதியில் சேர்க்கப்பட்ட எங்களுடைய பொருட்களை திருப்பித் தந்துவிடவேண்டும் என முறையிட்டார்கள். கைதிகளையும் ஒப்ப டைத்துவிட்டு பொருட்களையும் தந்துவிட முடியாது. ஏதேனும் ஒன்றைப் பெற்றுக்கொள்ளுங்கள், என்று இறைத்தூதர் கூறினார்கள். அப்படியென்றால், கைதிகளாகப் பிடிக்கப்பட்டோரை ஒப்படைத்து விடுங்கள் என்று அவர்கள் கூறிவிட்டார்கள். இறைத்தூதரும் அதை ஏற்றுக்  கொண்டுவிட்டார்கள். இறைத்தூதர் ஒரு முடிவெடுத்துவிட்டால் அதற்கு மாற்றமான கருத்து கூறுவதற்கோ, அல்லது அந்த முடிவில் மாற்று அபிப்பிராயம் கொள்வதற்கோ யாருக்கும் அருகதையோ, தைரியமோ இல்லை என்ற போதிலும், இறைத்தூதரே தமது தோழர்களை ஒன்று கூட்டி அவர்களுக்கு முன்னால் சொற்பொழிவொன்றை நிகழ்த்தினார்கள் “உங்களுடைய சகோதரர்கள் இறைநிராகரிப்பிலிருந்து மீண்டு வந்துள் ளார்கள். ஆகையால், கைதியாகப் பிடிக்கப்பட்டவர்களை விட்டு விடலாம் என்று நான் கருதுகிறேன். என்னுடைய கருத்தை ஒப்புக் கொள்பவர்கள் தங்கள் வசம் உள்ள கைதிகளை விடுவித்துவிடலாம். அப்படி விடுவிக்க மனமில்லாதவர்கள், பொதுநிதிப் பணம் வந்து சேர்ந்தவுடன் ஈட்டுத்தொகை பெற்றுக்கொண்ட பிறகு விடுவிக்கலாம்.” இறைவனின் தூதரே! உங்களுடைய அபிப்பிராயத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.”என்று தோழர்கள் அனைவரும் ஒரேகுரலில் உரத்து முழங்கினார்கள். உணர்ச்சிவசப்பட்டு ஒரேயடியாக அவர்கள் கூறியதை இறைத்தூதர் ஏற்றுக்கொள்ளவில்லை.“தனித்தனியாக, ஒவ்வொரு நபராகக் கூறவேண்டும்; அப்போதுதான் யார்யாருக்கு உடன்பாடு என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். ஆகையால், ஒவ்வொருவரும் தத்தமது பிரதிநிதிகளை என்னிடம் அனுப்பிவையுங்கள்.” என்றார்கள். அவ்வாறே அப்பிரதிநிதிகளோடு உரையாடிய பிறகே, தம்முடைய முடிவில் அனைவருக்கும் திருப்தி என்பதைத்தெரிந்துகொண்டார்கள்.

 

நீதிமிக்க அரசே கருணைகொண்ட அரசு

 

அரசியல் சாசனத்தை உருவாக்குவதிலும் அரசியல் அமைப்பை நிறுவுவதிலும் இஸ்லாம் எய்திய மற்றொரு மைல்கல் என்னவென்றால், அரசாங்கத்தையும் அது இறைவழிபாடாக, இறைவணக்கமாக மாற்றியது தான்!. அடக்குமுறை, கொடுங்கோன்மை, மனிதநேயத்திற்கே இடங் கொடாத எந்திரத்தனம், சூழ்ச்சி, சதி, சந்தர்ப்பவாதம், குழிபறிக்கும் மனப்பாங்கு, அடிவருடித்தனம், ஆதிக்ககுணம், அராஜகம் என்று மிருக குணங்களே நிரம்பி வழிகின்ற ஒரு துறையில், அரசியல் பாதையில் எந்தப்பாவமும் பாவமேஅல்ல!; என்று நினைப்பு குடிகொண்டிருந்த களத்தில் இத்தகைய புரட்சிகரமான மாற்றத்தை  இஸ்லாம் ஏற்படுத்தியது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அரசியல் துறையை எந்த ளவுக்கு இஸ்லாம் மேலேமேலே உயர்த்தியது என்றால் வானை முட்டிக்கொண்டு அர்ஷ்ஷைத் தொட்டுக்கொண்டு நின்றது. ஏராளமான நபித்தோழர்கள் அறிவிக்கின்ற எண்ணற்ற ஹதீதுகளில் இவற்றை நாம் காணலாம்.

“நீதிநேர்மை கொண்ட ஓர் அரசாங்கம், இறைஅமைதியின் நிழலாகும். பாதிப்புக்கும் துன்பத்திற்கும் ஆளாகியுள்ள இறையடியார் களெல்லாம் அந்நிழலில் இளைப்பாருவார்கள்; அமைதியடை வார்கள்.”

நபித்தோழர் அபுபக்ர் ஸித்தீக் கூறுகிறார்கள் @

“நீதிநேர்மை கொண்ட நியாயமான அரசன் என்பவன், மண்ணுலகில் அல்லாஹ்வின் நிழலாவான்; இறைவனின் அம்பு ஆவான்.”

“நீதிமான் அரசனுக்கு மறுமை நாளில் இறைவனின் நிழல் கிடைக்கும்” என்று இறைத்தூதர் ஸல் கூறியுள்ளார்கள்.

 

ஒழுக்கச்சிறப்பும் நேர்மையும் கொண்ட அரசு இறைவழிபாடே

 

ஒழுக்கத்தோடும் நல்விதமாகவும் இறைத்தூதரின் வழிமுறையை கடைப்பிடிப்பவர்களுக்கு, அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப, மற்றமற்ற நற்காரியங்களுக்குக் கிடைப்பதுபோன்றே நற்கூலி    கிடைக்கும்  என்று  இஸ்லாம் கூறுகின்றது.

இத்தகு இஸ்லாமிய அறிவுறுத்தலின் விளைவாக, அரசாங்கமும் அரசாங்கம் சார்ந்த செயல்களும் இறைவழிபாடு என்ற வட்டத்திற்குள் வந்துவிட்டன. நம்பிக்கை துரோகம், வாக்குமோசடி, சூழ்ச்சி, அத்து மீறல், வரம்புமீறல், அநீதி போன்றவை இஸ்லாமிய அரசியல் காரணமாக வழக்கொழிந்து போய்விட்டன. அமீர் முஆவியா ரழி தன்னுடைய ஆட்சிக்காலத்தில் ரோமானியர்களோடு குறிப்பிட்ட காலத்திற்கு சமாதான ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருந்தார். ஆனால், ஒப்பந்தகாலம் முடியும்முன்னே, படைகளைக் கிளப்பிக்கொண்டு எல்லைப்பகுதியை நெருங்கி, ஒப்பந்த காலம் எப்போது முடியும் என்று காத்திருக்கலானார். ஒப்பந்தகாலம் முடிந்தவுடனேயே எதிரிகளின் மீது படைதொடுத்து விடவேண்டும் என்பதே அவருடைய நோக்கம். அப்படையில் வந்தி ருந்த ஸஹாபியொருவர் இந்தச் சூழ்ச்சியை அடையாளம் கண்டு கொண்டார். முஆவியாவை அணுகி ஆட்சேபம் தெரிவித்தார். வாக்குமீறி இப்படி நம்பிக்கைத் துரோகம் செய்வதை இறைத்தூதர் வெறுத் துள்ளார்கள் என்பதை உணர்த்தினார். சாதாரண படைவீரர் ஒருவர் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்ட முஆவியா தமது முடிவை மாற்றிக்கொண்டார்.

எந்தவொரு அரசாங்கமாக இருந்தாலும் வரி வசூலிக்கவும், வருமானத்தை ஈட்டவும் கடுமையைக் கைக்கொண்டே ஆகவேண்டி யுள்ளது. ஆட்சியாளர்கள் கொஞ்சம் மென்மையாக நடந்து கொண் டாலோ, அலட்சியமாக இருந்துவிட்டாலோ போதும் கஜானா காலியாகி விடும். குற்றவாளிகள் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படும் போது ஆட்சியாளர்களின் கருணைப்பார்வையை அவன் கொஞ்வமும் எதிர் பார்க்க முடியாது. சூழ்ச்சிசெய்து, பொய்ச் சாட்சிகளை தயார்படுத்தி எதை யாவது, எப்படியாவது செய்து தன்னை குற்றமற்றவன் என்று நிரூ பிக்கவே அவன் எத்தனிப்பான். அதை குற்றமென்றே கருதமாட்டான். முடியாட்சியாகஇருந்தாலும் சரி, மக்களாட்சியாக இருந்தாலும் சரி இத்தகைய காட்சிகளை நாம் சர்வ சாதாரணமாகக் காணலாம். வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி நாகரீகத்தின் உச்சாணிக் கொம்பில் இன்று ஐரோப்பா நின்றுகொண்டுள்ளது. எல்லா நாடுகளிலும் கல்வி பரவலாக்கப்பட்டுவிட்டது. அரசியல் நடவடிக்கைகளை அனைத்து தரப்பு மக்களும் நன்கு அறிந்துள்ளார்கள். அரசாங்கத்தில் மக்களுடைய உரிமைகள் என்னென்ன என்பதை அனைவருமே அறிந்துள்ளார்கள். இவ்வளவு இருந்தபோதிலும் அரசாங்கம் சற்றே கவனக்குறைவாகவோ, அலட்சியமாகவோ இருந்துவிட்டால், ஒருவர்கூட தாமாக முன்வந்து செலுத்தவேண்டிய வரிகளை, அரசாங்கக் கட்டணங்களை செலுத்த முன்வரமாட்டார்கள். குற்றவாளிகளின் நிலையும் இதேதான். நான் குற்றமிழைத்துவிட்டேன்; என்னை தண்டியுங்கள்! என்று எந்தக் குற்ற வாளியும் தானாக முன்வந்து நீதிமன்றத்து குற்றவாளிக் கூண்டில் ஏறி  நிற்க மாட்டார். ஒன்று தலைமறைவாகிவிடுவார்கள்!; அல்லது நீதிமன் றங்களில் தாங்கள் குற்றவாளிகள் இல்லை என்று நிரூபிப்பதற்காக, ஆயிரக்கணக்கில் செலவு செய்வார்கள். இவ்வளவுக்கும் மற்ற நாடுக ளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஐரோப்பிய நாடுகளில் தண்டனை களும் குறைவு. தண்டனை என்பதை அவர்கள் பழிவாங்கும் நடவ டிக்கை என்று எண்ணுவதால் தண்டனைகளில் கடுமையும் குறைவு. தண்டனைகளுக்குப் பதிலாக அவர்கள் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவே விரும்புகிறார்கள். அப்படியிருந்தபேபாதிலும் எந்த ஓர் ஐரோப்பியனும் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொள்வதே கிடையாது. உண்மையைப் புறந்தள்ளிவிட்டு, நேர்மைக்கு மாற்றமாக, வெட்க வுணர்வு ஒருசிறிதுமில்லாமல், துணிந்து நான் செய்யவே இல்லை என்று வழக்காடுவோரை ஆயிரக்கணக்கில் நாம் அங்கு பார்க்க முடியும். மக்களாட்சி முறையின், சுதந்திர உணர்வின் வெளிப்பாடு என்றுதான் இதைக் கருதுகிறார்கள்.

ஓர் அரசாங்கம் உயர்ந்த ஒழுக்கவிழுமங்களின் அடிப்படையில் நிறுவப்பட்டிருந்தால் அதனுடைய நிலை இதற்கு நேர்மாற்றமாகவே இருக்கும். அவ்வரசாங்கத்தின் கீழ் வாழும் ஒவ்வொரு குடிமகனும் அரசாங்கத்தின்  அனைத்து செயல்பாடுகளையும் சமயத்தோடு தொடர்பு படுத்தியே பார்ப்பான். சமயம் தொடர்பான செயல்களைப் போன்றே அரசாங்கம் சார்ந்த செயல்களுக்கும் நற்கூலியும், தண்டனையும் தனக்கு உண்டு என்று அவன் ஆணித்தரமாக நம்புவான். எந்தவிதமான  கட்டாயத் திற்கும், நிர்ப்பந்தத்திற்கும் அடிபணியாமல் தன்னுடைய அனைத்து செயல்களுக்கும் தானே முழுப்பொறுப்பாளி என்ற கடமையுணர்வோடு சிந்தித்துச் செயல்படுவான். உயர்ந்த ஒழுக்கமும் ஆன்மீக உணர்வும் சிறந்து விளங்கினால்தான் இத்தகு வெளிப்பாட்டைக் காணமுடியும்.

இஸ்லாமிய அரசியல் அமைப்பு முழுக்க, முழுக்க ஒழுக்க நியதி களின் மீதே நிறுவப்பட்டிருந்தது. இவற்றின் வெளிப்பாடு எவ்வாறி ருக்கும் என்பதற்கும் இஸ்லாம்தான் சரியான உதாரணம். சதக்கா (தான தர்மம்) ஜகாத் (ஏழைவரி) போன்றன அரபுக்களைப் பொருத்தவரைக்கும் புதிய விஷயங்கள். வறுமையாலும் இயலாமையாலும் பீடிக்கப் பட்டிருந்த அரபுக்களுக்கு ஜகாத்தும் சதக்காவும் மிகவும் கஷ்டமாகத் தோன்றின. எனவேதான், கஅப் இப்னு அஷ்ரஃபை கொலை செய் வதற்காகச் சென்ற முஹம்மத் இப்னு முஸ்லமா கடைப்பிடிக்க கஷ்டமான இஸ்லாமியக் காரியங்களில் இவற்றையும் சுட்டிக்காட்டு கிறார். சதக்õவையும் ஜகாத்தையும் வசூலிப்பதற்காக இறைத்தூதரின் காலத்திலேயே ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருந்த போதிலும் முறையான அலுவலகமோ நடைமுறையோ ஏதும் பின்பற்றப்படவில்லை. இத்த கைய சூழ்நிலையில் அரபு நாட்டில் ஏதேனும் ஒரு மக்களாட்சி ஜனநாயக அரசு ஏற்பட்டிருந்தாலும் ஜகாத்தை அவ்வரசினால் திறம்பட வசூலித் திருக்க இயலாது. நினைத்துப் பார்க்கமுடியாத இடையூறுகள் எல்லாம் ஏற்பட்டிருக்கும். இஸ்லாமிய அமைப்பின் ஒழுக்கச்சிறப்பை இங்கு தான் நம்மால் பார்க்க முடிகின்றது. இஸ்லாமிய குடிமகன் ஒவ்வொரு வரும் தான் செலுத்தவேண்டிய ஜகாத்தையும் வரிகளையும் தானாக முன்வந்து மனப்பூர்வமாக இறைத்தூதருக்கு முன்னால் கொண்டுவந்து வைத்ததையும் இறைத்தூதரின் பிரார்த்தனைகளைப் பெற்றுக்கொண்டு திரும்பிச் சென்றதையும் நாம் காண்கிறோம். ஸஹீஹ் புஃகாரியில் பதிவாகியுள்ள, அப்துல்லாஹ் இப்னு அபி அவ்ஃபா அறிவிக்கும் ஒரு செய்தி…..

இறைத்தூதர் ஸல் அவர்களிடம் ஏதேனும் கூட்டத்தார் தமது ஜகாத் பொருட்களை அனுப்பி வைப்பார்களேயானால் அக்கூட்டத்தார்களுக் காக இறைத்தூதர் ஸல் இறைவனிடம் பிரார்த்தனை புரிவார்கள். இறைவா!, இந்த குடும்பத்தினர் மீது உனது கருணையப் பொழிவாயாக! என்று துஆ செய்வார்கள். என்னுடைய தந்தை எங்கள் சார்பில் ஜகாத் பொருட்களைக் கொண்டுவந்தபோதும் இவ்வாறே நிகழ்ந்தது. இறைவா!, அபி அவ்ஃபா குடும்பத்தார் மீது கருணையைப் பொழிவா யாக!” என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.

அதி இப்னு ஹாதிம் தன்னுடைய சமூகத்தின் தலைவராக இருந்தார். சமூகத்தின் ஒட்டுமொத்த வருமானத்தில் நாலில் ஒரு பாகம் அவருக்குக் கிடைத்து வந்தது. இஸ்லாமிய வருகைக்கு முன்பு வரை இது தலைவர் களின் உரிமையாகக் கருதப்பட்டது. இஸ்லாமை ஏற்றுக்கொண்ட பிறகு முதன்முதலாக அதி, தம்முடைய கோத்திரத்தின் ஜகாத்தை கொண்டு வந்து இறைத்தூதரிடம் சேர்ப்பித்தார். இது குறித்த இன்னுமொரு தகவல் ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது @ ஒருமுறை ஆட்சித்தலைவர் உமர் அவர்களைக் காண அதி வந்தபோது அதியைப் பார்த்து உமரவர்கள் கூறினார் @ “முதன்முதலாக ஒரு சமூகத்தின் சதக்காவைப் பார்த்து இறைத்தூதரும் தோழர்களும் முகம் மலர்ந்தார்கள் என்றால், அது உங்களுடைய சமூகத்தின் சதக்காவை நீங்கள் கொண்டுவந்த போதுதான்!”.

பனூ தமீம் கோத்திரத்தார் தங்களது சதக்காவைக் கொண்டவந்தபோது இறைத்தூதர் கூறினார்கள் @“ இது எங்கள் வம்சத்தின் சதக்காவாகும்”

தனிநபர்களின் நிலையோ இதைவிட ஆச்சரியத்தைத அளிக்கக் கூடியது. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழி அறிவிக்கிறார் @ தான தருமங்களின் சிறப்புகளைப் பற்றி இறைத்தூதர் ஸல் தொடர்ந்து கூறிக் கொண்டேயிருப்பார்கள். நாங்கள் அதைக்கேட்டு சந்தைக்குச் சென்று நாள் முழுக்க கூலிவேலை செய்வோம். பொழுதுசாய்ந்து எங்களுக்குக் கூலி கிடைத்தபிறகு, அதைக்கொண்டுவந்து சதக்கா செய்வோம்!”.

 

குற்றங்கள் காணாமற்போயின

 

குற்றங்கள் அடியோடு ஒழிந்துபோயின என்று கூறினால், மனித இயல்புக்கே மாற்றமான, விழிகளை விரிய வைக்கும் விஷயமாக அது இருக்கும். குற்றங்கள் எந்தளவுக்குக் குறைந்துபோயின என்றால், நாட்டில் குற்றங்களே நடப்பதில்லையோ என்று பார்ப்போர் எண்ணு மளவுக்கு நிலைமை மாறிவிட்டிருந்தது. சந்தர்ப்பவசத்தால் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் கூட, உணர்ச்சிவேகத்திலிருந்து விடுபட்ட வுடன், இறைநம்பிக்கையால் தூண்டப்பட்டு, எப்படியாவது இந்தப் பாவக்கறையைப் போக்கிக்கொள்ளவேண்டுமே என்று புழுவாய்த் துடித் தார்கள். நபித்தோழர்கள் அண்ணலாரின் அவையில் வந்துநின்று, நேர்மையுள்ளத்தோடு தாங்கள் செய்த பாவச்செயலை முறையிட்ட சம்பவங்களை நம்மால் பார்க்க முடிகின்றது. உலக வரலாற்றில் வெறும் எங்குமே பார்க்கமுடியாத, கேள்விப்பட்டிராத காட்சிகள் இவை!!. குற்றத்தை தாமாக முன்வந்து ஒப்புக்கொள்ளும் இந்தக் காட்சியைக் காணும்போது வேறொன்றையும் நாம் மனதில் கொள்ளவேண்டும். சமூகச் சீர்திருத்தத்தை மனதில் கொண்ட நுண்ணறிவோடு இஸ்லாம் குற்றங்களுக்கான தண்டனைகளில் கடுமையைக் கையாள்கின்றது. திருட்டுக் குற்றத்தில் பிடிபட்டவனின் கையை வெட்டச்சொல்கின்றது. முறைகேடான பாலுறவில் ஈடுபட்டவனை கசையால் அடிக்குமாறும், கல்லால் அடிக்குமாறும் கூறுகின்றது. இத்தகைய கடுமையான தண்டனை  முறைகள் இருந்தபோதும் தப்பித்தவறி குற்றஞ்செய்தவர்கள் தாமாக முன்வந்து ஒப்புக்கொண்டார்கள் என்பதை எண்ணிப்பார்க் கும்போது உண்மையிலேயே மெய்சிலிர்க்கின்றது; மேனி நடுங்கு கின்றது.

மாஇஸ் இப்னு மாலிக் என்பது ஒருவருடைய பெயர். ஒரு வேலைக்காரியோடு அவருக்கு தகாதஉறவு ஏற்பட்டுவிட்டது. தான் செய்தது தவறு என்பதை உணர்ந்தவுடன் அண்ணலாரைத் தேடி வந்து நின்றார். குற்றத்தைக் கூறி, தலை குனிந்து, தன்னைத்தண்டிக்குமாறு வேண்டினார். இறைத்தூதர் அவரைக் கவனிக்காது வேறுபுறம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். தான் தவறு செய்துவிட்டதாகவும், தன்னைத் தண்டிக்குமாறும் அவர் மீண்டும் கூறினார். இவ்வாறு அவர் கூறிக் கொண்டேயிருந்தார். அண்ணலார் கண்டுகொள்ளவே இல்லை. இவ்வாறு நான்கைந்து முறை சொன்னபிறகு, ‘நீங்கள் அவளோடு படுக் கையை பகிர்ந்து கொண்டீர்களா?!’ என்று அண்ணலார் கேட்டார்கள். ஆம் என்றார். ‘நீங்கள் அவளோடு உடலுறவில் ஈடுபட்டீர்களா?!’ என்று அண்ணலார் கேட்டார்கள். ஆம் என்றார். ‘நீங்கள் அவளிடம் உங்கள் இச்சையைத் தீர்த்துக் கொண்டீர்களா?’ என்று அண்ணலார் கேட்டார்கள். ஆம் என்றார். இவ்வளவையும் கேட்டபிறகே,அவரைக் கல்லால் அடித்துக்கொல்லுமாறு ஆணை பிறப்பித்தார்கள். தண்டனையை நிறைவேற்ற முற்படும்போது, அவர் வேதனை தாங்காது அங்குமிங்கும் ஓடலானார். அதனைக் கண்ட ஒரு நபித்தோழர் ஒட்டகத்தின் எழும்பை எடுத்து ஓங்கி அடித்தார். மூச்சு நின்று போனது. இதைக் கேள்விப்பட்ட அண்ணலார், அப்படியென்றால் அவரை விட்டுவிட்டிருக்கலாமே? அவர் தவ்பா – பாவமீட்சி – செய்திருக்கலாமே? இறைவனிடம் மன்னிக் கப்பட்டிருக்கலாமே?” என்று கூறினார்கள்.

குற்றவியல் சட்டத்தில் புதியதொரு நடைமுறையை இங்கே நாம் கற்றுக் கொள்கிறோம். ஒரு குற்றவாளி தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு, தண்டனையை ஏற்கத் தயாரான பிறகு, தண்டனை நிறை வேறும் பட்சத்தில், ஓடத்தொடங்கினாலோ, தண்டனை வேண்டாம் என்று மறுத்தாலோ, தன்னுடைய ஒப்புதல் வாக்குமூலத்தை அவர் திரும்பப் பெற்றுவிட்டதாகக் கருதி தண்டனையை நிறுத்திவிட வேண்டும். அதன்பிறகு அவருடைய வழக்கு அல்லாஹ்விடமே தீர்ப்பாகும்.

ஓர் இளைஞன் நோயால் கடுமையாக பீடிக்கப்பட்டிருந்தான். நோய் இருக்கும்போதே தவறான செயலைச் செய்துவிட்டான். யாருக்குமே தெரியவில்லை. இறைவனுக்குப் பயந்து அவன் தன்னைப் பராமரிப்பவர்களிடம் உண்மையைக் கூறி, இறைத்தூதரிடம் சென்று தண்டனை என்ன என்று கேட்டுவருமாறு சொல்லி அனுப்பினான். அவனுடைய நோயைக் கருத்தில் கொண்டு, எளிய தண்டனையை அண்ணலார் அளித்தார்கள்.

கஅப் இப்னு அம்ர் என்றொரு நபித்தோழர். இறைத்தூதரின் அவையில் வந்துநின்றார். ஒரு அந்நியப் பெண்ணிடம் உறவுகொள் வதைத் தவிர வேறு அனைத்துவகை உல்லாசங்களையும் அனுபவித்து விட்டதாகக் கூறி, தன்னைத் தண்டிக்குமாறு தலை குனிந்து நின்றார்.

ஹுனைன் போருக்குப் பிறகு, நாற்புறங்களிலும் இஸ்லாம் பரவத் தொடங்கிவிட்டது. லஹ்ம் என்ற பெயரைக் கொண்ட ஆப்பிரிக்கர் ஒருவர் அஷ்ஜஃ வம்சத்தைச் சேர்ந்த ஒரு மனிதரைக் கொலை செய்து விட்டார். இரண்டு தரப்பார்களும் வழக்கை அண்ணலாரிடம் கொண்டு வந்தார்கள். கொலையாளி யாரென்று தெரியவில்லை. ஆகையால், பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈட்டை தந்துவிடுமாறு அண்ணலார் தீர்ப்பளித்தார்கள். அத்தீர்ப்பை கொலையுண்டவரின் வம்சத்தினர் ஒப்புக் கொள்ளவில்லை. பழிவாங்கியே தீருவோம் என்று அடம் பிடித்தார்கள். வாதம் வலுத்துக் கொண்டே போனது. இரண்டு தரப்பாருக்கும் இடையே சண்டையும் கைகலப்பும் ஏற்பட்டுவிடும் போல் தோன்றியது. ஒரு மனிதர் எழுந்துநின்று கூறினார் @ இறைவனின் தூதரே! இப்போதுதான் இஸ்லாம் பரவத்தொடங்கியுள்ளது. தாங்கள் இப்போதே சலுகை காட்டத்தொடங்கிவிட்டால், அப்புறம் நிலைமை மிகவும் சிக்கலாகி விடும், என்று கூறினார். எனினும் அண்ணலார் நஷ்டஈட்டை பெற்றுக் கொண்டு வழக்கை முடித்துக்கொள்ளுங்கள் என்று தமது தீர்ப்பையே மறுபடியும் வலியுறுத்திக் கூறினார்கள். நிலைமை மேலும்மேலும் மோசமாவதைக் கண்டு ஒருமனிதர் எழுந்து நின்றார் @ இறைவனின் தூதரே! கொலை செய்தது நான்தான்! குற்றவாளி நான்தான்! என்னைத் தண்டியுங்கள்! எனக்காக இறைவனிடம் பாவமன்னிப்பு கோருங்கள்.!!

……………………………………………………. 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: