துருப்பிடித்த உள்ளத்தை தூய்மையாக்கும் கல்வி

கல்விக்கும் இஸ்லாமிற்கும் உள்ள நெருங்கிய பிணைப்பை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? இருண்ட ஐரோப்பிய நூற்றாண்டுகளில் கல்வி ஒளியை ஏற்றிய இஸ்லாமியர்களை எத்தனை பேர் அறிவோம்?

இஸ்லாமிய சாம்ராஜ்யம் அரசோச்சிய நாட்களில் இஸ்லாமிய நாடுகளின் தலை நகரங்களில் பொது நூலகங்கள் இருந்து வந்துள்ளன. ஸ்பெயினின் குர்துபா மற்றும் இராக்கின் பாக்தாத் ஆகிய நகரங்களில் இருந்த பொது நூலகங்களில்  நான்கு லட்சத்திற்கும் அதிகமான நூல்கள் இருந்துள்ளன.

உலகின் மிகப் பெரும் கல்வி நூலகங்களை நிறுவிய வர்கள் இஸ்லாமியர்கள் என்றும் இஸ்லாமியருக்கு எதிராக நடத்தப் பட்ட சிலுவை யுத்தங்களில் இஸ்லாமிய நூலகங்களைக் கைப்பற்றி அதிலுள்ள அரிய நூல்களை எரித்து சாம்பலாக்கி அராபிய நதிகளின் நிறம் கருப்பாக ஓடிய உண்மையாவது நமக்குத் தெரியுமா?

அறிவு என்பது மனிதர்களையும், மிருகங்களையும் பிரித்தறியக் கூடிய ஒரு மகத்தான சக்தி என்றால் அது மிகையாகாது. அறிவுள்ள மனிதருக்கும் அறிவில்லாத வருக்கும் உள்ள வித்தியாசத்தை வாய் திறந்து வெளி விடும் ஒரு வார்த்தையின் மூலம் அப்பட்ட மாக கண்டு கொள்ள முடியும்.

‘கல்வி காணாமற்போன பொருள். அது எங்கிருப் பினும் தேடிப் பெற்றுக் கொள்க’ … ‘ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் கல்வி கட்டாயமாக்கப் பட்டுள்ளது’ … ‘ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது’  என்னும் நபிமொழிகள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிக்கின்றன.

பத்ரு யுத்தக் கைதிகள் தங்களை விடுவித்துக் கொள் வதற்கு செலுத்த வேண்டிய பணத்திற்குப் பகரமாக, பத்து முஸ்லிம் குழந்தைகளுக்கு கல்வி அறிவை ஊட்டுவதன் மூலம் ஒரு கைதி தனது விடுதலையைப் பெற்றுக் கொள்ளட்டும் என இறைத்தூதர் கூறினார்கள்.

உங்களில் சிறந்தவர் யாரெனில், கல்வியைக் கற்பவரும், அதனைப் பிறருக்குக் கற்றுக் கொடுப்பவருமே என்றார்கள்.

யாரொருவர் கல்வியைக் கற்றுக் கொள்ளச் செல்கிறாரோ, அத்தகையவர் திரும்பும் வரை அவர் அல்லாஹ்வின் பாதையில் (போரடக் கூடிய போராளியாக) இருக்கிறார்.

ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனுடைய அனைத்துச் செயல்களும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் மூன்று விஷயங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும்.

1. நிலையான தான தர்மம் (ஸதகத்துல் ஜாரியா) 2. பயனளிக்கக் கூடிய அறிவு 3. தனக்காகப் பிரார்த்திக்கக் கூடிய சிறந்த பிள்ளை.    (முஸ்லிம்)

 

கல்விக்கு இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவம்

அறிவையும் ஆய்வையும் மூல நோக்காகக் கொண்டு பல ஆய்வியல் அமைப்புக்கள் கலிஃபாக்களின் காலத்தி லேயே தோற்றுவிக்கப் பட்டன. குறிப்பாக தாருல் உலூம் (அறிவியல் கூடம்) தாருல் ஹிக்மா, பைத்துல் ஹிக்மா என்பன போன்ற அறிவியல் சார்ந்த கல்வி நிலையங்கள் இவற்றில் மிக முக்கியமானவைகளாகும். இக்கல்வி நிறுவனங்கள், விவசாய, இரசாயனவியல், உயிரியல், புவிவியில், தர்க்கவியல், கணக்கியல், மருத்துவம், தத்துவ வியல், மிருக வியல் போன்ற உலூமுல் அக்லிய்யா என்ற அனைத்து விஞ்ஞானத் துறை பாடங்களில் இலவசக் கல்வியை தொடர்ந்து வழங்கி வந்தன.

இஸ்லாமிய கல்வி நிலையங்கள் தாராளமான நிதி வசதியையும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி, புலமைப் பரிசில்களை தொடர்ந்து வழங்கி வந்தன. இதனால் இஸ்லா மிய  உலகம் அறிவியல், அரசியல், பொருளாதார, சமூக மேம்பாட்டு வளர்ச்சியைக் கண்டு உலகில் தன்னிகரில்லாத கௌரவத்தை உலக அரங்கில் பெற்றிருந்தது.

இஸ்லாம் உச்ச நிலையை அமைய, இஸ்லாமும் கலிஃபாக்களும் முஸ்லிம் நாடுகளும் கல்விக்கும் ஆய்வி யலுக்கும் கொடுத்த கௌரவமே காரணம் என கூறலாம்.

இஸ்லாமைப் பொறுத்தவரை கல்வியின் நோக்கம் என்னவெனில்,

1. ஒழுக்க மேம்பாடு

2. இஸ்லாமிய தனித்துவத்தை- தலைமைத்துவத்தை உருவாக்குதலும் விருத்தி செய்தலும்

3. நம்மைப் படைத்த வல்ல அல்லாஹ்வுக்கு பொறுப்பு கூறல்.

இஸ்லாமியக் கல்வி என்பது அல் குர்ஆன், சுன்னாவின் வழிகாட்டலில் இறைவனுக்கு மட்டும் அடிபணியும், நாம் இறைவனின் பிரதிநிதி (கலிஃபா) என்னும் அடிப்படை யில் நிறுவப்பட வேண்டும்.

பல முஸ்லிம்கள் தமது பிள்ளைகளின் கல்வியைப் பற்றியும் எதிர் காலத்தைப் பற்றியும் தடுமாற்றத்தில் இருப்பதை பார்க்க முடிகின்றது. குறிப்பாக அந்நியர்களின் பாடசாலைகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங் களிலும் கல்வி கற்கும் தமது பெண் பிள்ளைகளின் கல்வி, எதிர் காலம் பற்றி அவர்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

இக்கல்விக் கூடங்களில் காணப்படும் ஒழுக்க சீர்கேடு, பாலியல் முறைகேடுகள், சமய நம்பிக்கையின்மை, பண்பாட்டுச் சீரழிவு போன்றவற்றில் அக்கறையுடன் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

எனவே ஒவ்வொரு இஸ்லாமிய பெற்றோரும் தமது பிள்ளைகளின் ஒளிமயமான எதிர் காலத்துக்காகவும், இஸ்லாமிய இலட்சியத்துடனான அவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும் பின்வரும் விடயங்களை கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்களும் இறைவனிடத் தில் மறுமையில் பதில் சொல்ல வேண்டியவர்கள் என் பதை மறந்துவிட வேண்டாம்.

கல்வியை ஆன்மீகக் கல்வி, உலகக் கல்வி என இரு கூறு களாக்கி நமக்குள் நாமே வகுத்து வைத்தாலும் இஸ்லா மியக் கண்ணோட்டத்தில் கல்வி பொதுவானதாகவே கருதப்படு கிறது. உலக சிற்றின்ப ஆதாயத்துள் சிதைந்து போகும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை விட இம்மை மறுமை இரண்டிற்கும் பயன் தரத்தக்க கல்விக்குத்தான் அல்லாஹ்விடத்தில் அதிக மதிப்பும் மரியாதையும் உள்ளதென்பதை வரலாற்றேடு களைப் புரட்டிப் பார்ப்பதன் மூலம் உணர முடியும்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் இறக்கியருளிய வான்மறை குர்ஆன் இக்றஃ (ஓதுவீராக) என்னும் முதல் ஆணை மூலம் கல்விக்குக் களம் அமைத்துக் கொடுத்தது.

கல்வியை புறக்கணித்த காரணத்தினால்தான் முஸ்லிம் களான நாமின்று மற்றவர்கள் பரிதாபப்படும் அளவு கீழ்த்தரத்தில் உள்ளோம். முன்னேற்ற வேண்டும் என உல கக்கல்விக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்க நினைக்கி றோம். ஆனால், உண்மையான ஞானம் குர்ஆனிலும் நபி மொழிகளிலும் பொதிந்து கிடக்கின்றது. குர்ஆனும் ஹதீதுகளும் மார்க்கத்துக்கு மட்டுமல்ல, உலகத்திற்கும் வழிகாட்டவே செய்கின்றன. அதனால்தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது இறுதி உரையின் போது புனித மக்கா நகரின் அரஃபா வெளியில் குழுமியிருந்த பல்லாயிரக் கணக்கான சஹாபித் தோழர்கள் மத்தியில் ‘இரண்டு விலைமதிக்க முடியாத சொத்துக்களை உங்களிடம் விட்டுச் செல்கிறேன் அவற்றைப்பின் தொடர்ந்து செல்லும் காலமெல்லாம் வழிதவற மாட்டீர் கள். அவ்விரண்டும் வான்மறையாம் அல்குர்ஆனும் வழி காட்டி ஒளியூட்டும் நபிமொழிகளும்’ என்றார்கள்.

சிறியதோ பெரியதோ எந்த ஓர் இபாதத்தை செய்வதாக இருந்தாலும் அதற்கான அறிவைத் தேடிக் கற்று, செய்வதன் மூலம்தான் அதற்கு உரிய கூலியை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்ள முடியும். உடலுக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ அதேபோல் இபாதத்திற்கு இல்ம் மிக அவ சியமாகத் தேவைப் படுகின்றது.

அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்:– ‘அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று நபியே! நீர் கூறுவீராக’ (அல்குர்ஆன் 32: 09)

‘தாவூதுக்கும், சுலைமானுக்கும் கல்வியை நாம் திட்டமாகக் கொடுத்தோம். நம்பிக்கையாளர்களான தன் அடியார்களில் பெரும்பாலானோரை விட எங்களை மேன்மையாக்கி வைத்த எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என இருவரும் கூறினர்’ (அல்குர்ஆன் 27:15)

‘இந்த உதாரணங்களை மனிதர்களுக்காக நாம் சொல்லிக் காட்டுகிறோம். அறிவாளிகளைத் தவிர ஏனையோர் இவற்றை விளங்க மாட்டார்கள்’ (அல்குர்ஆன் 29 : 43)

அண்ணலார் சொல்வதைப்போல, தெளி ஞானம் என் பது வானத்தில் இருந்து பூமியில் பொழியும் மழை நீருக்கு ஒப்பானது. இம்மழையைப் பெற்ற நிலம் மூன்று வகைப் படும். அதில் முதலாவது, சிறந்த விளைச்சலைத் தரும் பசு மையான நிலம், அது பொழிகின்ற மழை நீரைத் தன்னுள் தேக்கி பயிர்கள் பசுமையாகவும் செழிப்பாகவும் உதவு கின்றது.

‘எவரது உள்ளத்தில் புனித குர்ஆனின் எந்தப் பகுதியும் மனனமாக இல்லையோ அந்த உள்ளம் பாழடைந்த வீட்டைப் போன்றதாகும்’ என்னும் ஹதீது சிந்தனைக் கண்ணோட்டம் உள்ளவர்களுக்குச் சிறந்த படிப்பினையாக அமைகின்றதல்லவா? பாழடைந்த வீட்டில் என்னதான் இருக்கப்போகிறது? பேய், பிசாசு, பல்லி, பாம்பு போன்ற வற்றோடு அசிங்கம் நிறைந்த குப்பை கூளங்களே ஆட்சி செலுத்துமே தவிர, வேறு நல்லவை எதுவும் இருக்க துளி கூட வாய்ப்பே இல்லை.

எனவே, உலகக்கல்வியோடு இஸ்லாமிய சமயக் கல்விக்கும் முக்கியத்துவம் அளித்தே ஆக வேண்டும். இஸ்லாமிய பாடசாலைகளுக்கு போய் பயிலாவிட்டாலும் கிடைக்கின்ற வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அவ்வகையில் கோயமுத்தூரில்  சிறந்ததொரு இஸ்லாமிய நூலகத்திற்கு வருகின்ற ஞாயிற்றுக் கிழமை நாற்று நடப்படுகின்றது. தமிழ், மலையாளம், ஆங்கிலம், உருது, அரபி என அனைத்து மொழிகளிலும் முடிந்த அளவு நூல்கள் திரட்டி வைக்கப்பட்டுள்ளன.

அறிவைப் பருக அழைக்கிறோம். அறிவுதான் ஈமானுக்கு முதல் அடிக்கல்.

ஒரு பதில்

  1. Assalamualaikkum

    umari sahab, blog is fine ALHAMDULILLAH

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

<span>%d</span> bloggers like this: