பல்கிப் பெருகும் புதிய பித்அத்

 

நவீனங்களாகவும் நூதனங்களாகவும் பல்வேறு விஷயங்கள் இஸ்லாமிய நன்மார்க்கத்தினுள் நுழைந்து கொண்டே உள்ளன. தன்னை ஒரு பித்அத் என அறிமுகப்படுத்தியவாறு யாதொரு பித்அத்தும் விண்ணப்பித்துக் கொள்ளாது. நற்செயல் என்றே ஒவ்வொரு நூதனமும் நுழைகின்றது. சில காலம் சென்றபிறகு, தன்னுடைய கோரக்கொடுக்குகளால் தீண்டி நஞ்சைக் கக்குகின்றது. கொஞ்சம் கொஞ்சமாய் நாம் பார்த்து பார்த்து சேர்க்கின்ற நற்செயல்களை எல்லாம் அழித்து விடுகின்றது. அவ்வகையில் நெடுங்காலமாய் நம்மிடையே சர்வ சாதாரணமாய் வசித்து வருகின்ற ஒரு செயலை தவறென்றும் பித்அத்தென்றும் இக்கட்டுரை அடையாளப்படுத்துகின்றது. ‘செயல்’ என இதனை வகைப்படுத்த இயலாது. இது செயல் அல்ல, இது ஒரு நடைமுறை.

 

இஸ்லாமின் சாராம்சத்தை உறிஞ்சுகின்ற, இஸ்லாமிய உயிரோட்டத்தை சக்கையாக்கி விடுகின்ற ஒரு நடைமுறை.

 

ஒரு வேண்டுகோள்

 

முதலில் ஒரு சிறு வேண்டுகோள். இக்கட்டுரையை வாசிக்கத் தொடங்கிய உடன், ஆம், ஆமாம், இது உண்மைதான் என்றோர் உடன்பாட்டு எண்ணம் உங்களுடைய சிந்தனையில் எழலாம். வேண்டாம், அதனை கவனமாக தவிர்த்து விடுங்கள். அல்லது இல்லை, இவர் சொல்வது சரியல்ல, அப்படியெல்லாம் கிடையாது என்றொரு எண்ணம் மூர்க்கமாகவும் வன்மமாகவும் தோன்றக் கூடும். வேண்டாம், அதற்கும் அனுமதி அளிக்காதீர்கள். அதனையும் கவனமாக தவிர்த்து விடுங்கள். முதலில் இக்கட்டுரையை முழுதாகப் படியுங்கள். அதன்பின்பு, தனியே அமர்ந்து இக்கட்டுரை குறிப்பிடுவது உண்மையிலேயே சரிதானா? என சிந்தியுங்கள். சரியெனத் தோன்றினால், ஹம்தன் லில்லாஹ். தவறென்றால் தூக்கியெறிந்து விட்டு அல்இயாஸு பில்லாஹ்.

 

புதுப் பழக்கமல்ல, புது வடிவம்

 

நாமிங்கே சொல்ல வருவது இஸ்லாமிய சமயநெறியில் நுழைந்துவிட்ட ஒரு புதிய வடிவத்தை, புதுப் பழக்கத்தை அல்ல.

அண்மைக்காலமாக நாம் இஸ்லாமிய இபாதத்துகளுக்கு வழிபாடுகளுக்கு ஒரு புதிய வடிவத்தைக் கொடுத்து வருகிறோம். எல்லாவகையான இபாதத்துகளையும் பணம் சார்ந்த இபாதத்துகளாக மாற்றிக்கொண்டு வருகிறோம். பணம் சார்ந்த வழிபாடு என்னும் இதனைத்தான் புது வடிவம், புது நடைமுறை என இக்கட்டுரை வர்ணிக்கின்றது.

 

வழிபாடுகள் பல்வகை

 

இஸ்லாமிய வழிபாடுகள் பல வகைப்படுகின்றன. ஒவ்வொரு வழிபாட்டிற்கும் நியதிகளும் செய்முறைகளும் வேறுபடுகின்றன. அவற்றை கவனமாக கருத்தில் கொண்டு செயல்பட்டாக வேண்டும். அப்போதுதான் அவ்வழிபாடு இறைவனிடத்தில் ஏற்கப்படும். வான்மறை குர்ஆனை ஓதுவதாக இருந்தால்கூட அதற்கென்றும் ஒரு முறை உள்ளது. ‘அவர்கள் ஓதவேண்டிய முறைப்படி அதனை ஓதுகிறார்கள்’ என அல்குர்ஆன் சொல்கின்றது. (காண்க அல்பகறா 121)

 

ஒருசில இபாதத்துகளை நாம் மனதாலும் ஒருசில இபாதத்துகளை சிந்தனையாலும் இன்னும் ஒருசிலவற்றை உடம்பாலும் சிலவற்றை பொருளாலும் செய்கிறோம். சொல், செயல், சிந்தனை, மெய், பொருள், ஆவி என்றிவ்வாறாக நம்மிடமுள்ள அனைத்து திறன்களாலும் இறைவனை நாம் வழிபட வேண்டியுள்ளது. எந்நெந்த வழிபாட்டை எவ்வாறு செய்யவேண்டுமோ அதனை அவ்வாறுதான் செய்தாக வேண்டும்.

 

நாம் தினந்தோறும் ஐவேளை தொழுகிறோம். உடலாலும் (மெய்யாலும்) சொல்லாலும் சிந்தனையாலும் உள்ளத்தாலும் செய்யவேண்டிய இபாதத் இது. (தொழுகையில் சிந்தனைக்கும் உள்ளத்திற்கும் என்ன வேலை? எனக் கேள்வி எழுப்புவோர் நம்மில் பலர் உள்ளனர். தொழுகையின் வடிவம் முக்கியத்துவம் பெற்று நம்முடைய முஹல்லாக்களையும் பள்ளிவாசல்களையும் கூறு போட்டு விட்டது நாமறிந்த ஒன்றே. தொழுகையின் உளத்தூய்மைக் கோணத்தை வலியுறுத்தி கட்டுரையாசிரியர் எழுதியுள்ள ‘தொழுகை, ஏன்? எவ்வாறு?’ என்னும் நூலை ஆர்வமுடையோர் பார்வையிடுக)

 

நம்மீது கடமையான தொழுகையை நாம்தான் தொழ வேண்டும். கூலிக்கு ஆள்வைத்து தொழ முடியுமா?

 

காலையில் எழுந்ததும் ‘லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து வஹு அலா குல்லி ஷையின் கதீர்’ என பத்து முறை ஓதினால் அன்று சாயந்திரம் வரை இறைவன் நம்மைப் பாதுகாப்பான். ஓர் அடிமையைவிடுவித்த நன்மை கிடைக்கும் என நபிமொழிகள் அறிவிக்கின்றன. இந்த இபாதத்தை சொல்லாலும் அறிவாலும் செய்யவேண்டும். நாவால் மொழிய வேண்டும். சொல்பவற்றை சிந்தனையால் ஏற்க வேண்டும். உளப்பூர்வமாக அக்கருத்தை நம்ப வேண்டும். அப்போதுதான் இப்பெரும் நன்மை நமக்கு கிடைக்கும். உள்ளத்தையும் அறிவையும் ஈடுபடுத்தாமல் வெறுமனே வாயால் மொழிகிறோம் என்றால் ‘முறைப்படி’ என்னும் இலக்கணத்திற்கு பொருந்தி வராது. அவ்வாறே வேறுயாரோ ஒருவர் நமக்காக இந்த செயலை செய்கிறார் என்றாலும் அது தகாது.

 

ஒருசில சூஃபி தரீக்காகளில் எழுபதாயிரம் தடவை கலிமாவை ஓதினால் நரக விடுதலை கிடைக்கும் என நம்புகிறார்கள். அதனை நாமே நாம் நாவால் சொல்லக் கூட வேண்டியதில்லை. அதற்கென ஆட்கள் முல்லாக்கள் உள்ளார்கள். அவர்களே நம் சார்பில் ஓதிவிடுவார்கள். இதனை நீங்கள் அனைவரும் கேள்விப் பட்டிருப்பீர்கள். ஏன் இது கூடாது? என்பதை தனியே விளக்க வேண்டியதில்லை.

உள்ளங்கை நெல்லிக்கனி.

 

பொருள்மயமாகும் பாருலகம்

 

நாம் வாழும் இப்பாருலகம் இப்போது பொருள் மயமாகக் காட்சி அளிக்கின்றது. அருளில்லாருக்கு அவ்வுலகமில்லை. பொருளில்லாருக்கு இவ்வுலகமில்லை என்பார்கள் தமிழில். பொருள் என்பதையே அல்குர்ஆன் அருளென்றும் குறிப்பிடுகின்றது. ஆகையால், பொருள் என்னும் அருள் இல்லையேல் இவ்வுலகமில்லை என்பது நவீன கோட்பாடாகி விட்டது.

 

உலக மக்கள் எல்லாம் இன்று இதனையே நம்புகிறார்கள். முன்னணியில் நின்று முஸ்லிம்கள் இக்கோட்பாட்டை நம்புகிறார்கள். இதனை தனியே வேறொரு கட்டுரையில் ஆராய்வோம். இங்கு நாம் காணவேண்டியது நம்முடைய இபாதாக்களையும் தீர்மானிக்கின்ற எடைக்கல்லாக ‘பணம்’ மாறிவிட்டது என்பதையே.

 

பொருள்சார்ந்த இபாதத்துகள்

பொருள்சார்ந்த இபாதத்துகளாக உருமாறிவிட்ட இபாதத்துகளின் பட்டியலில் அநாதைகளை ஆதரித்தல், புதிதாக இஸ்லாமை ஏற்றோருக்கு தீனை கற்பித்தல், முதியோர் பராமரிப்பு, குர்பானி போன்றன இடம் பெறுகின்றன.

 

அநாதைகளை ஆதரித்தல்

 

அநாதைகளை ஆதரிப்பதை இஸ்லாமிய ஷரீஅத் வெகுவாக வரவேற்கின்றது. நானும் அநாதைகளை ஆதரிப்போரும் சொர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது இரு கைவிரல்களையும் கோர்த்துக் காட்டியுள்ளார்கள்.

 

அநாதைகளை ஆதரிப்பது என்றால் நாம் நமது வீட்டில் வைத்து அவர்களை வளர்க்க வேண்டும். அது மிகவும் சிரமமான நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கஷ்டத்தை விளைவிக்கின்ற செயல். முதலில் அநாதைக்குழந்தையை முதலில் நம்முடைய சொந்தக் குழந்தையைப் போல கருத வேண்டும். நம்முடைய குழந்தையையும் அக்குழந்தையையும் எந்த வேறுபாடு வித்தியாசத்தையும் காட்டாமல் வளர்க்கவேண்டும். இதற்கு நம்முடைய இல்லத்துணைவிகள் ஒத்துழைக்க வேண்டும்.

அடுத்து, தானொரு அநாதை என்னும் எண்ணம் அக்குழந்தையின் உள்ளத்தில் தோன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணோ பெண்ணோ பருவ வயதை எய்த பின்னர் உண்மையைக் கூறவேண்டுமோ தவிர சிறுவயதிலிருந்தே அநாரைத என்னும் எண்ணம் மனதில் பதியாமல் பக்குவமாய் பாதுகாக்க வேண்டும். இவையெல்லாம் எண்ணிப் பார்க்கையிலேயே மலைப்பை ஏற்படுத்துகின்ற பெருஞ்செயல்கள். இதனாற்றான் நானும் அநாதைகளை ஆதரிப்போரும் சொர்க்கத்தில் அருகருகே இணைந்திருப்போம் என அண்ணலார் ஸல்லல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

 

உண்மைநிலை இவ்வாறிருக்க, நாம் என்ன செய்கிறோம்? ஏதோ ஓர் அநாதை இல்லத்திற்கு நன்கொடை அளிக்கிறோம். அநாதைகளை காக்கிறோம், அப்பணியில் நாமும் பங்கு பெறுகிறோம் என பெருமிதம் அடைகிறோம்.

 

இது சரியா, இதுதான் இஸ்லாமிய வழியா?

 

அநாதை இல்லங்களைப் பார்த்திருக்கிறீர்களா? பெற்றோர் அற்ற அநாதைகளுக்கு தேவை அரவணைப்பு. அது அநாதை இல்லங்களில் கண்டிப்பாக கிடைக்காது. என்னதான் வசதியான சூழலில் அவர்கள் வாழ்ந்தாலும் வகைவகையான உண்டிகளை அருந்தினாலும் தாம் ஓர் அநாதை என்னும் எண்ணம் அவர்களுடைய உள்ளத்தில் நிரந்தரமாய் குடியிருக்கும். எப்படிப்பட்ட அநாதை இல்லமும் இவ்வெண்ணத்தை அகற்ற இயலாது.

 

உங்களுடைய வீட்டில் நீங்களும் உங்களுடைய மனைவியும் முடிவு செய்து ஒரே ஒரு அநாதைக் குழந்தையை வளர்க்கத் தொடங்கினால் இன்ஷா அல்லாஹ் அக்குழந்தையின் உள்ளத்தில் இவ்வெண்ணம் இடம்பெறாமல் பக்குவமாக வளர்க்க முடியும். நீங்கள் ஏழையாக இருக்கலாம். சாதாரண வருமானம் உடையவராக இருக்கலாம். ஒரே ஒரு குழந்தைக்கான செலவினங்களை தாக்குப் பிடிக்கலாம். பணச்செலவு ஒரு பெரிய விஷயமில்லை என நீங்கள் முடிவு செய்து வளர்க்கத் தொடங்கினால், அக்குழந்தையை நல்லபடியாக வளர்க்க இயலும். உங்களுடைய உணவோ நீங்கள் அளிக்கின்ற உடைகளோ அளிக்த உள திருப்தியை அக்குழந்தைக்கு உங்களுடைய நடத்தையும் வளர்ப்பும் கண்டிப்பாக அளிக்கும். அதேசமயம், அநாதை இல்லத்தில் வளருகின்ற குழந்தை என்னதான் சுவையான உணவை, அருமையான உடுப்புகளை, சிறந்த கல்வியை பெற்றாலும் இவ்வுணர்வுக்கு பலியாவதை யாராலும் தடுக்க முடியாது.

 

இரண்டாவதாக, உங்களுடைய வீட்டில் நீங்கள் படாதபாடுபட்டு அநாதைக் குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சிறப்பாக அப்பொறுப்பை நிறைவேற்ற முயற்சிக்கும்போது இறைவனுடைய கவனத்தில் பதிகிறீர்கள். உங்களுக்கு இறைவன் தன்னுடைய நல்லருளை அளிக்கிறான். சொர்க்கத்தில் உங்களைக் கொண்டுபோய் தன்னுடைய தூதருக்கு அருகில் வசிக்க வைக்கிறான்.

 

அதல்லாமல், ஓர் அநாதை இல்லத்திற்கு நீங்கள் நன்கொடை அளிக்கிறீர்கள் என்றால் அது எங்ஙனம் அநாதைக் குழந்தையை வளர்ப்பதாக ஆகும்? ஓர் அநாதை இல்லத்திற்கு நன்கொடை அளித்த நன்மை வேண்டுமானால் உங்களுக்குக் கிடைக்கலாம், ஒரு நற்பணிக்கு உதவிய பயன் உங்களுக்குக் கிடைக்கலாம். மாதாமாதம் ஒரு ‘தாருல் அய்தாமு’க்கு ‘டொனேட்’ செய்ததற்காக அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு கைகோர்த்து சொர்க்கத்தில் உலா வருகின்ற நற்பேறு உங்களுக்கு கிடைத்துவிடுமா?

 

தொழுவதாக இருந்தால் நீங்கள் தொழ வேண்டும். உங்களுக்காக வேறொருவர் தொழ முடியாது.

 

முதியோர் இல்லங்களுடைய நிலையும் இதுதான். தற்போது முதியோர் இல்லங்கள் உம்மத்தில் இல்லை அல்லது மிகக்குறைவு. ஆனால், பலரும் அவற்றுக்கான தேவை அதிகரிக்கின்றது எனக்கருதி அவற்றை நிறுவும் முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கி உள்ளார்கள். அவ்விஷயத்திலும் இஸ்லாமிய நிலைப்பாடு இதுதான்.

 

கூட்டுக்குர்பானி

 

ஒவ்வொரு இபாதத்தையும் செய்வதற்கு ஒருமுறை உள்ளது. அதனை அந்தந்த முறைப்படிதான் செய்யவேண்டும். அம்முறைப்படி செய்ய இயலாதோருக்கு ஷரீஅத் சில சலுகைகளை அளிக்கின்றது. தொழுகையை நின்றுதான் தொழுக வேண்டும். நின்று தொழ முடியாதவர்களுக்கு உட்கார்ந்து தொழுக என ஷரீஆ சலுகை அளிக்கின்றது.

 

ஒருவர் குர்பானி கொடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். (ஆசைப்படுவது என்ன? இறை நம்பிக்கையாளராக இருக்கும் அனைவரும் கண்டிப்பாக கொடுத்தே ஆகவேண்டும்) ஆனால் அவரிடம் ஆடு வாங்கி குர்பான் கொடுக்கும் அளவு வசதியில்லை. ‘உங்களால் இயன்றவரை இறைவனுக்கு பயப்படுங்கள்’ என ஷரீஆ கூறுகின்றதல்லவா? தன்னிடம் உள்ள தொகையைக் கொண்டு எப்படியாவது குர்பான் கொடுக்கவேண்டும் என அவர் விரும்புகிறார். ஷரீஅத் அவருக்கு ஒரு வழியைக் காண்பிக்கின்றது. உங்களோடு இன்னும் ஒருவரையோ இருவரையோ கூட்டு சேர்த்துக்கொண்டு குர்பான் கொடுத்து விடுங்கள் என்கின்றது. ஆட்டையோ மாட்டையோ வாங்கி குர்பான் கொடுக்க வழிகாட்டுகின்றது. இங்ஙனம் நீங்கள் கூட்டு சேர்ந்தால் அதனுடைய அதிகபட்ச எண்ணிக்கை ஏழாகத்தான் இருக்க வேண்டும். அதற்கு மிகக் கூடாது என்னும் நிபந்தனையை விதிக்கின்றது.

 

நாம் என்ன செய்கிறோம்? நமக்கு வசதி என்பதற்காக கூட்டுக் குர்பானித் திட்டங்களில் சேர்ந்து கொண்டு குர்பானிக் கடமையை நிறைவேற்றுகிறோம்.

 

குர்பானி என்பது இறைத்தூதர் இறைத்தோழர் இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்களுடைய நினைவுகூர்ந்து அவர்களைப் போன்றே நானும் இஸ்லாமிற்காக என்னால் இயன்றவரை பாடுபடுவேன், என்னிடம் உள்ளவற்றை அர்ப்பணிப்பேன் என்பதை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி.

 

தேவை என்றால் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இஸ்மாஈல் அவர்களை பலியிட்டது போல நானும் என்னுடைய மகனை, மகளை, என்னுடைய சொத்து-சுகங்களை இஸ்லாமிற்காக அர்ப்பணிக்கத் தயார் என்பதை செயலால் இறைவனிடம் சொல்கிறோம்.

 

நீங்கள் ஆடொன்றை வீட்டில் வளர்த்து அதனோடு அன்புடன் பழகி அன்னியோன்யமாக ஆகி பிறகு, அதனை இறைவனுக்காக பலியிடுகிறீர்கள். ஆட்டை அல்ல, அதன்மீது நீங்கள் வைத்த பாசத்தை, பழகிய பழக்கத்தை பலியிடுகிறீர்கள். பழகிய ஆட்டை யாரும் வெட்டுவதற்கு துணியமாட்டார்கள். ஏனென்றால் பாசம் தடுக்கும்.

 

அதனாற்றான், ஷரீஅத் பலி கொடுப்பவர்தாம் ஆட்டை அறுக்க வேண்டும் என கூறுகின்றது. அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது கரத்தால் ஆட்டையும் ஒட்டகங்களையும் பலி கொடுத்துள்ளார்கள். பழகிய வலியை நீங்கள் உணருவீர்கள்.

 

நம்முடைய தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் இப்ராஹீமிய மனப்பான்மையையும் வெளிப்படுத்தும் நிகழ்ச்சிதான் குர்பானி. அதனை நாம்தான் செய்யவேண்டும். நம் சார்பாக இன்னொருவர் செய்ய இயலாது.

 

எல்லா இபாதாக்களையும் பணம் சார்ந்த இபாததாத்களாக நாம் மாற்றிக்கொண்டு வருகிறோம் என்பதற்கு கூட்டுக்குர்பானி சிறந்ததோர் எடுத்துக்காட்டு. குர்பான் கொடுப்பது நம் மீது கடமை. நாமோ கூட்டுக்குர்பானியில் சேர்ந்து கொண்டு கடமை நிறைவேறி விட்டதாக எண்ணிக் கொள்கிறோம். ஐயாயிரம், ஏழாயிரம் இல்லாத ஏழை பாழைகள் தாம் கூட்டுக் குர்பானியில் சேருகிறார்களா? எழுபதாயிரம், பத்து இலட்சம் கொடுக்கும் அளவுள்ள செல்வந்தர்களும்தான் சேருகிறார்கள்.

 

நீங்கள் செய்ய வேண்டிய இந்த இபாதத்தை உங்களுக்காக வேறு யாரோ ஒருவர் செய்ய இயலாது. நீங்கள் கூட்டுக் குர்பானி திட்டமொன்றில் சேருகிறீர்கள் என்றால் ஏதோ ஓர் அமைப்புக்கு நிதியுதவி செய்கிறீர்கள். அவ்வளவுதான்.

 

ஒரு அமைப்புக்கோ ஒரு ஜமாஅத்துக்கோ நீங்கள் அளிக்கின்ற ஆயிரம் ரூபாயை இறைவன் அங்கீகரிக்கிறான் என்றே வைத்துக்கொள்வோம். இறைவா, இஸ்லாமிற்காக நாம் என்னிடமுள்ளவற்றை அர்ப்பணிக்க தயாராக உள்ளேன். இக்கட்டான தருணம் என்றால் என்னிடம் உள்ளவை யாவற்றையும் நான் அளிக்க சித்தமாயுள்ளேன். ஏன், இறைத்தூதர் இப்ராஹீமைப் போல என்னுடைய மகனைக் கூட நான் தியாகம் செய்ய தயாராக உள்ளேன் என நீங்கள் கூறுவதாக இறைவன் எப்படி எடுத்துக் கொள்வான்?

 

உங்களுடைய வீட்டில் பத்து நாள்கள் பதினைந்து நாள்கள் ஓர் ஆட்டை வளர்த்து அதனுடைய சாணத்தைப் பெருக்கிக் கூட்டி அதனை இறைவனுக்காக பலிகொடுக்க நீங்கள் தயாராக இல்லை, நீங்கள் எப்படி இறைவனுக்காகவும் இஸ்லாமிற்காகவும் உங்களிடம் உள்ள அனைத்தையும் தியாகம் செய்ய முன்வருவீர்கள்?

 

ஆக, இந்தப் பண்பைத்தான் நாம் ‘புதிய பித்அத்’ என குறிப்பிடுகிறோம். தொடக்கத்தில் குறிப்பிட்டதைப் போல ஓர் இபாதத்தை எங்ஙனம் செய்யவேண்டுமோ அங்ஙனம்தான் செய்யவேண்டும். அதனை வேறொரு வடிவத்திற்கு மாற்றிச் செய்ய முடியாது. அப்படி நாமாக உருமாற்றினால் இறைவனிடம் அது ஏற்கப்படாமல் போய்விடலாம்.

 

இங்கே வேறொன்றையும் குறிப்பிடத் தோன்றுகின்றது. இக்ளாஸ் என்னும் முஃமின்களின் இயல்பண்பை மனதிற்கொண்டு அதனைப் புரிந்துகொள்ள வேண்டும். நம் உம்மத்தில் ஜமாஅத்களின் எண்ணிக்கை பெருகியதால் இந்த நோய் தோன்றியதோ என என்னுள்ளத்தில் தோன்றுகின்றது. உண்மைநிலையை வல்ல இறைவனே நன்கறிவான். அல்லாஹு அஃலமு பிஸ்ஸவாப்.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

<span>%d</span> bloggers like this: