இஸ்லாமை ஏற்றோருக்கான கல்வித்திட்டம்

இஸ்லாமிய

அடிப்படைக் கல்வி

 

96, வின்செண்ட் சாலை, கோட்டைமேடு,

கோயமுத்தூர் – 641 001 தமிழ்நாடு என்னும் முகவரியில் இயங்கிவரும்

 

Centre for Islamic Studies

இஸ்லாமிய கல்வி மய்யம்

 

சார்பாக புதிதாய் இஸ்லாமை ஏற்ற சகோதரர்களுக்காக Islamic Preparatory Course (IPC) என்னும் ஆறுமாத கால இஸ்லாமிய பயிற்சி பாடத்திட்டம் ஒன்றை இறையருளால் அறி முகம் செய்கிறோம். இப்பாடத்திட்டத்தில் கீழ்வரும் வகுப்புகள் நடத்தப்படும் இன்ஷா அல்லாஹ். நாள்தோறும் வகுப்புகள் மாலை 7 மணிமுதல் இரவு 9.30 முடிய நடை பெறும். நாள்தோறும் மூன்று வகுப்புகள் என்னும் வீதத்தில் ஆறுமாத காலத்திற்குள் இப் பாடங்கள் அனைத்தும் முழுமை பெறும் இன்ஷா அல்லாஹ்.

இப்பாடத்திட்டத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என சகோதரர்கள் எண்ணினால் ஆலோசனைகளை வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். உளப்பூர்வமான ஆலோசனைகளுக்காக திறந்த உள்ளத்தோடும் பெருத்த எதிர்பார்ப்போடும் காத்துள்ளோம்.

 

I அகீதா

இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுகள்

1.         பிரபஞ்சத்தின் தோற்றமும் மனிதப் படைப்பும்

2.         இறைவனின் உள்ளானா, இல்லையா?

3.         ஓரிறைக்கோட்பாடும் நாத்திகவாதமும்

4.         ஓரிறைக்கோட்பாடும் மனிதனின் அகமும்

5.         சிலை வணக்கம் தோன்றிய வரலாறு

6.         ஓரிறைவனுக்கான சான்றுகள்

7.         இறைவனின் தன்மைகளும் பண்புகளும்

8.         ஓரிறைவனைவிட்டுவிட்டு வேறிறைவனை வணங்குதல் (ஷிர்க்)

9.         ஓரிறைவனை நிராகரித்தல் (குஃப்ரு)

10.       ஷிர்க்கின் பல்வேறு வகைகள்

(அ)          இறைத்தன்மைகளில் இணைவைத்தல்

(ஆ)          இறைப்பண்புகளில் இணைவைத்தல்

(இ)          இறைவனின் உரிமைகளில்

இணைவைத்தல்

11.       இபாதத் – இறைவனுக்கே வழிப்படுதல்

12.       இதாஅத் – இறைவனுக்கே அடிபணிதல்

13.       இனாபத் – இறைவனை நோக்கி முன்னேறல்

14.       உளூஹிய்யத்

15.       ருபூபிய்யத்

16.       முலூகிய்யத்

17.       ஹாகிமிய்யத்

 

II  ஷஹாதா

இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகள்

1.         இறைவனை நம்பி ஏற்றல்

2.         வானவர்களை நம்பி ஏற்றல்

3.         இறைவேதங்களை நம்பி ஏற்றல்

4.         இறைத்தூதர்களை நம்பி ஏற்றல்

5.         மறுமையை நம்பி ஏற்றல்

6.         நன்றும் தீதும் இறைபுறத்தே என நம்பி ஏற்றல்

 

III  வழிபாடுகள்

1.         தொழுகையின் நோக்கமும் முறையும்

2.         உள்ளச்சத்தோடு தொழுகை

3.         தொழுவது எவ்வாறு?

4.         இரவுத் தொழுகை

5.         நோன்பின் நோக்கமும் முறையும்

6.         ஜகாத் விளக்கமும் சட்டதிட்டங்களும்

7.         ஹஜ் விளக்கமும் சட்டதிட்டங்களும்

8.         பிரார்த்தனையின் சிறப்புகளும் ஒழுங்குகளும்

9.         குர்பானியின் சிறப்புகளும் சட்டங்களும்

10.       திக்ரு என்னும்  இறைநினைவு

11.       ஜிஹாத் ஃபீ ஸபீலில்லாஹ்

12.       பித்அத் என்னும் அனாச்சாரங்கள்

13.       நவீன பித்அத்கள்

 

IV  ஹலால் – ஹராம்

1.         பொருளீட்டல்

2.         தவறான தடுக்கப்பட்ட செயல்கள்

3.         முறைகேடான சமூக நடவடிக்கைகள்

4.         ஆகுமான அனுமதிக்கப்பட்ட செயல்கள்

5.         பெருங்குற்றங்கள்

6.         சிறுசிறு தவறுகள்

7.         சந்தேகத்திற்கிடமளிக்கும் செயல்கள்

8.         திருமணம் – ஹலாலான முறையும் ஹராமான முறையும்

 

V  அன்றாட நடவடிக்கைகள்

1.         காலை விழித்தெழல்

2.         காலைக்கடன்கள்

3.         குளிப்பு முறையும் விதிமுறைகளும்

4.         உணவருந்தும் முறை

5.         உடையும் இஸ்லாமிய பண்பாடும்

6.         ஸலாமின் முக்கியத்துவமும் முறையும்

7.         பிற முஃமின்களுக்குரிய ஆறு கடமைகள்

8.         முஸ்லிம்களின் நலன்நாடல்

9.         மாற்று மதத்தினரோடு உறவுபேணல்

10.       உறங்கச் செல்லுமுன்

11.       உறக்கத்தின் ஒழுங்குகள்

12.       கடைவீதிகளில்

13.       பள்ளிவாசல் ஒழுங்குகள்

14.       மஸ்ஜிதோடு தொடர்பு

15.       சகோதரர்களைச் சந்தித்தல்

16.       வீதியின் ஒழுங்குகள்

17.       அந்நியப் பெண்களோடு

18.       இல்லற வாழ்வின் பொறுப்புகள்

19.       குடும்ப உறவுகளும் கடமைகளும்

20.       பெற்றோர் பணிவிடை

21.       உறவுமுறை பேணல்

22.       மஹல்லாவில்

23.       அண்டை வீட்டாரோடு

24.       இஸ்லாமிய அடையாளத்தைப் பேணல்

25.       முன்மாதிரி முஸ்லிம்

 

VI  வரலாறு

1.         ஸீரத்து முஸ்தஃபா (அண்ணலாரின் வரலாறு)

2.         ஸீரத்துல் அன்பியா (தூதர்களின் வரலாறு)

3.         தாரீஃகுல் குலஃபா (கலீஃபாக்களின் வரலாறு)

4.         தாரீஃகுல் இஸ்லாம் (இஸ்லாமின் வரலாறு)

5.         தாரீஃகுல் ஆலம் (உலக வரலாறு)

6.         சாதிகளும் இந்து மதமும்

7.         இந்தியாவில் இஸ்லாம்

8.         இந்திய சமூகம்

9.         இமாம்களின் வரலாறு

10.       யூதர்களும் கிறிஸ்துவர்களும்

 

VII  ஷரீஅத்

1.         இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமைகள்

2.         இஸ்லாமிய இறைச் சட்டங்கள்

3.         இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள்

4.         இறைநீதியும் மனித நீதியும்

5.         இஸ்லாமிய சட்டங்களும் மனித சட்டங்களும்

6.         தொழிற்துறை சட்டங்கள்

7.         கூட்டு வணிகம்

8.         கடன்களும் வங்கித்துறையும்

9.         இஸ்லாமிய பொருளியல்

10.       இஸ்லாமிய சமூக அமைப்பு

11.       இகாமத்துத் தீன்

12.       அல்ஹுகூமத்துல் இலாஹிய்யா

 

VIII திலாவத் வகுப்பு

1.         குர்ஆன் ஓதக் கற்றுக்கொடுத்தல்

2.         திலாவத் + தஜ்வீத்

3.         முக்கியமான சூராக்கள்

4.         துஆக்கள்

5.         திக்ருகள்

6.         அவ்ராதுகள்

 

IX ஜாஹிலிய்யா

1.         இஸ்லாமிற்கெதிரான கொள்கைகள்

2.         ஜாஹிலிய்யா என்றால் என்ன?

3.         தாகூத் என்றால் என்ன?

4.         இஸ்லாமிற்கெதிரான ஊடகங்களின் போக்கு

5.         அல்அத்யானுல் பாத்திலா – அசத்தியக் கொள்கைகள்

 

X  அழைப்பியல்

1.         இஸ்லாமின் பக்கம் அழைக்கவேண்டியதன் அவசியம்

2.         அழைப்பு முறைகளும் அணுகுமுறையும்

3.         இஸ்லாமிய அழைப்பாளர்களுக்குரிய தகுதிகளும் அருகதைகளும்

 

XI  இஸ்லாமிய பண்புகளும் பண்பாடும்

 

1.         1.         நல்லொழுக்கங்கள்

1.1       உளத்தூய்மை

1.2       எண்ணத்தூய்மை

1.3       பாவமன்னிப்பும் தவ்பாவும்

1.4       இறையச்சம் தக்வா

1.5       இறைசார்பு தவக்குல்

1.6       நிலைகுலையாமை சப்ரு

1.7       கொள்கையுறுதி

1.8       நன்னடத்தை, நற்பண்புகள்

1.9       உறவுபேணல்

1.10    இறைவழியில் செலவு

1.11    உலகப்பற்றின்மை

1.12    உபரி வணக்கங்கள்

1.13    இரவுத்தொழுகை

1.14    குர்ஆன் திலாவத்

1.15    இறைதியானம்

1.16    துஆ

1.17    மறுமை நினைவு

1.18    இறைநெருக்கமும்  இறைத்தொடர்பும்

1.19    மரணநினைப்பு

1.20    கபுறு வேதனை

1.21    அர்ப்பணிப்பு/தியாகம்

1.22    பணிவு (தவாழுஃ)

1.23    மக்கள்சேவை

1.24    வெட்கம்

1.25    இறைதிருப்தியும் எதிர்பார்ப்பும்

1.26    பயமும் பணிவும் (அல்ஃகுழூஃ வல்குஷுஃ)

1.27    வாய்மை

1.28    சினமடக்கல்

 

2.         தீயொழுக்கம்

2.1       பொய்

2.2       பகட்டு

2.3       பெருமை

2.4       பொறாமை

2.5       ஆற்றாமை

2.6       புறம்

2.7       கோள்

2.8       உலகாசை

2.9       கஞ்சத்தனம்

2.10    வீண்விரையம்

2.11    ஆடம்பரம்

2.12    மோசடி

2.13    தவறான எண்ணம்

2.14    மானக்கேடானவை

/ஆபாசம்

2.15    வெட்டிப்பேச்சு

2.16    கர்வம்

2.17    உளவு

2.18    கேலி

2.19    கள்ளப்பார்வை

 

சுவையும் நன்று! மணமும் நன்று!!

குர்ஆனை ஓதி அதன்படி செயல்படுபவன்

கொழுமிச்சங்காயைப் போன்றவன்.

அதனுடைய சுவையும் நன்று! மணமும் நன்று!

 

குர்ஆனை ஓதாமல் அதன்படி செயல்படுபவன் உலர்ந்த திராட்சையைப் போன்றவன்.

அதனுடைய சுவையோ நன்று!

ஆனால், அதற்கு மணமோ இல்லை!

 

குர்ஆனை செயல்படுத்தாமல் ஆனால் அதனை ஓதிவருகின்ற பாவி துளசிச் செடியைப் போன்றவன்.

அதனுடைய மணமோ இனிமையானது!

ஆனால், சுவையோ கசப்பானது!

 

குர்ஆனை செயல்படுத்தாமலும் ஓதாமலும் இருக்கும் பாவி தும்மட்டிக்காயைப் போன்றவன்.

அதனுடைய சுவையோ ஏகக் கசப்பு! அதற்கு மணமும் கிடையாது!!

அறிவிப்பு ˜ அபுமூஸா அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு    பதிவு ˜ புஃகாரி

دعاء القنوت

 

اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ

وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ

وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ

وَإِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ


இறைவா, நீ யாருக்கெல்லாம் வழிகாட்டினாயோ அவர்களில் என்னையும் ஆக்கி வைப்பாயாக. நீ யாருக்கெல்லாம் நலம் அளித்தாயோ அவர்களில் என்னையும் ஆக்கி வைப்பாயாக.

நீ யார் யாருக்கெல்லாம் பொறுப்பு ஏற்றுக் கொண்டாயோ அவர்களில் என்னையும் ஆக்கி வைப்பாயாக. நீ எனக்கு வழங்கியவற்றில் வளத்தை ஏற்படுத்துவாயாக. (பரக்கத்தை ஏற்படுத்துவாயாக)

நீ தீர்மானித்த (விதியின்) தீங்குகளில் இருந்து என்னைக் காப்பாற்றுவா யாக. நீயே தீர்மானிப்பவன். உன்னை மீறி தீர்மானிப்போர் யாருமில்லை.

நீ நண்பனாக்கிக் கொண்டவரை யாரும் இழிவுபடுத்த முடியாது. நீ பகைத்துக் கொண்டவரை யாரும் கண்ணியப்படுத்த முடியாது.

நீ மேன்மையானவன். எங்கள் இறைவா, நீ மேலானவன். உயர்ந்தவன்.

துருப்பிடித்த உள்ளத்தை தூய்மையாக்கும் கல்வி

கல்விக்கும் இஸ்லாமிற்கும் உள்ள நெருங்கிய பிணைப்பை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? இருண்ட ஐரோப்பிய நூற்றாண்டுகளில் கல்வி ஒளியை ஏற்றிய இஸ்லாமியர்களை எத்தனை பேர் அறிவோம்?

இஸ்லாமிய சாம்ராஜ்யம் அரசோச்சிய நாட்களில் இஸ்லாமிய நாடுகளின் தலை நகரங்களில் பொது நூலகங்கள் இருந்து வந்துள்ளன. ஸ்பெயினின் குர்துபா மற்றும் இராக்கின் பாக்தாத் ஆகிய நகரங்களில் இருந்த பொது நூலகங்களில்  நான்கு லட்சத்திற்கும் அதிகமான நூல்கள் இருந்துள்ளன.

உலகின் மிகப் பெரும் கல்வி நூலகங்களை நிறுவிய வர்கள் இஸ்லாமியர்கள் என்றும் இஸ்லாமியருக்கு எதிராக நடத்தப் பட்ட சிலுவை யுத்தங்களில் இஸ்லாமிய நூலகங்களைக் கைப்பற்றி அதிலுள்ள அரிய நூல்களை எரித்து சாம்பலாக்கி அராபிய நதிகளின் நிறம் கருப்பாக ஓடிய உண்மையாவது நமக்குத் தெரியுமா?

அறிவு என்பது மனிதர்களையும், மிருகங்களையும் பிரித்தறியக் கூடிய ஒரு மகத்தான சக்தி என்றால் அது மிகையாகாது. அறிவுள்ள மனிதருக்கும் அறிவில்லாத வருக்கும் உள்ள வித்தியாசத்தை வாய் திறந்து வெளி விடும் ஒரு வார்த்தையின் மூலம் அப்பட்ட மாக கண்டு கொள்ள முடியும்.

‘கல்வி காணாமற்போன பொருள். அது எங்கிருப் பினும் தேடிப் பெற்றுக் கொள்க’ … ‘ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் கல்வி கட்டாயமாக்கப் பட்டுள்ளது’ … ‘ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது’  என்னும் நபிமொழிகள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிக்கின்றன.

பத்ரு யுத்தக் கைதிகள் தங்களை விடுவித்துக் கொள் வதற்கு செலுத்த வேண்டிய பணத்திற்குப் பகரமாக, பத்து முஸ்லிம் குழந்தைகளுக்கு கல்வி அறிவை ஊட்டுவதன் மூலம் ஒரு கைதி தனது விடுதலையைப் பெற்றுக் கொள்ளட்டும் என இறைத்தூதர் கூறினார்கள்.

உங்களில் சிறந்தவர் யாரெனில், கல்வியைக் கற்பவரும், அதனைப் பிறருக்குக் கற்றுக் கொடுப்பவருமே என்றார்கள்.

யாரொருவர் கல்வியைக் கற்றுக் கொள்ளச் செல்கிறாரோ, அத்தகையவர் திரும்பும் வரை அவர் அல்லாஹ்வின் பாதையில் (போரடக் கூடிய போராளியாக) இருக்கிறார்.

ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனுடைய அனைத்துச் செயல்களும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் மூன்று விஷயங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும்.

1. நிலையான தான தர்மம் (ஸதகத்துல் ஜாரியா) 2. பயனளிக்கக் கூடிய அறிவு 3. தனக்காகப் பிரார்த்திக்கக் கூடிய சிறந்த பிள்ளை.    (முஸ்லிம்)

 

கல்விக்கு இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவம்

அறிவையும் ஆய்வையும் மூல நோக்காகக் கொண்டு பல ஆய்வியல் அமைப்புக்கள் கலிஃபாக்களின் காலத்தி லேயே தோற்றுவிக்கப் பட்டன. குறிப்பாக தாருல் உலூம் (அறிவியல் கூடம்) தாருல் ஹிக்மா, பைத்துல் ஹிக்மா என்பன போன்ற அறிவியல் சார்ந்த கல்வி நிலையங்கள் இவற்றில் மிக முக்கியமானவைகளாகும். இக்கல்வி நிறுவனங்கள், விவசாய, இரசாயனவியல், உயிரியல், புவிவியில், தர்க்கவியல், கணக்கியல், மருத்துவம், தத்துவ வியல், மிருக வியல் போன்ற உலூமுல் அக்லிய்யா என்ற அனைத்து விஞ்ஞானத் துறை பாடங்களில் இலவசக் கல்வியை தொடர்ந்து வழங்கி வந்தன.

இஸ்லாமிய கல்வி நிலையங்கள் தாராளமான நிதி வசதியையும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி, புலமைப் பரிசில்களை தொடர்ந்து வழங்கி வந்தன. இதனால் இஸ்லா மிய  உலகம் அறிவியல், அரசியல், பொருளாதார, சமூக மேம்பாட்டு வளர்ச்சியைக் கண்டு உலகில் தன்னிகரில்லாத கௌரவத்தை உலக அரங்கில் பெற்றிருந்தது.

இஸ்லாம் உச்ச நிலையை அமைய, இஸ்லாமும் கலிஃபாக்களும் முஸ்லிம் நாடுகளும் கல்விக்கும் ஆய்வி யலுக்கும் கொடுத்த கௌரவமே காரணம் என கூறலாம்.

இஸ்லாமைப் பொறுத்தவரை கல்வியின் நோக்கம் என்னவெனில்,

1. ஒழுக்க மேம்பாடு

2. இஸ்லாமிய தனித்துவத்தை- தலைமைத்துவத்தை உருவாக்குதலும் விருத்தி செய்தலும்

3. நம்மைப் படைத்த வல்ல அல்லாஹ்வுக்கு பொறுப்பு கூறல்.

இஸ்லாமியக் கல்வி என்பது அல் குர்ஆன், சுன்னாவின் வழிகாட்டலில் இறைவனுக்கு மட்டும் அடிபணியும், நாம் இறைவனின் பிரதிநிதி (கலிஃபா) என்னும் அடிப்படை யில் நிறுவப்பட வேண்டும்.

பல முஸ்லிம்கள் தமது பிள்ளைகளின் கல்வியைப் பற்றியும் எதிர் காலத்தைப் பற்றியும் தடுமாற்றத்தில் இருப்பதை பார்க்க முடிகின்றது. குறிப்பாக அந்நியர்களின் பாடசாலைகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங் களிலும் கல்வி கற்கும் தமது பெண் பிள்ளைகளின் கல்வி, எதிர் காலம் பற்றி அவர்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

இக்கல்விக் கூடங்களில் காணப்படும் ஒழுக்க சீர்கேடு, பாலியல் முறைகேடுகள், சமய நம்பிக்கையின்மை, பண்பாட்டுச் சீரழிவு போன்றவற்றில் அக்கறையுடன் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

எனவே ஒவ்வொரு இஸ்லாமிய பெற்றோரும் தமது பிள்ளைகளின் ஒளிமயமான எதிர் காலத்துக்காகவும், இஸ்லாமிய இலட்சியத்துடனான அவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும் பின்வரும் விடயங்களை கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்களும் இறைவனிடத் தில் மறுமையில் பதில் சொல்ல வேண்டியவர்கள் என் பதை மறந்துவிட வேண்டாம்.

கல்வியை ஆன்மீகக் கல்வி, உலகக் கல்வி என இரு கூறு களாக்கி நமக்குள் நாமே வகுத்து வைத்தாலும் இஸ்லா மியக் கண்ணோட்டத்தில் கல்வி பொதுவானதாகவே கருதப்படு கிறது. உலக சிற்றின்ப ஆதாயத்துள் சிதைந்து போகும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை விட இம்மை மறுமை இரண்டிற்கும் பயன் தரத்தக்க கல்விக்குத்தான் அல்லாஹ்விடத்தில் அதிக மதிப்பும் மரியாதையும் உள்ளதென்பதை வரலாற்றேடு களைப் புரட்டிப் பார்ப்பதன் மூலம் உணர முடியும்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் இறக்கியருளிய வான்மறை குர்ஆன் இக்றஃ (ஓதுவீராக) என்னும் முதல் ஆணை மூலம் கல்விக்குக் களம் அமைத்துக் கொடுத்தது.

கல்வியை புறக்கணித்த காரணத்தினால்தான் முஸ்லிம் களான நாமின்று மற்றவர்கள் பரிதாபப்படும் அளவு கீழ்த்தரத்தில் உள்ளோம். முன்னேற்ற வேண்டும் என உல கக்கல்விக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்க நினைக்கி றோம். ஆனால், உண்மையான ஞானம் குர்ஆனிலும் நபி மொழிகளிலும் பொதிந்து கிடக்கின்றது. குர்ஆனும் ஹதீதுகளும் மார்க்கத்துக்கு மட்டுமல்ல, உலகத்திற்கும் வழிகாட்டவே செய்கின்றன. அதனால்தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது இறுதி உரையின் போது புனித மக்கா நகரின் அரஃபா வெளியில் குழுமியிருந்த பல்லாயிரக் கணக்கான சஹாபித் தோழர்கள் மத்தியில் ‘இரண்டு விலைமதிக்க முடியாத சொத்துக்களை உங்களிடம் விட்டுச் செல்கிறேன் அவற்றைப்பின் தொடர்ந்து செல்லும் காலமெல்லாம் வழிதவற மாட்டீர் கள். அவ்விரண்டும் வான்மறையாம் அல்குர்ஆனும் வழி காட்டி ஒளியூட்டும் நபிமொழிகளும்’ என்றார்கள்.

சிறியதோ பெரியதோ எந்த ஓர் இபாதத்தை செய்வதாக இருந்தாலும் அதற்கான அறிவைத் தேடிக் கற்று, செய்வதன் மூலம்தான் அதற்கு உரிய கூலியை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்ள முடியும். உடலுக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ அதேபோல் இபாதத்திற்கு இல்ம் மிக அவ சியமாகத் தேவைப் படுகின்றது.

அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்:– ‘அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று நபியே! நீர் கூறுவீராக’ (அல்குர்ஆன் 32: 09)

‘தாவூதுக்கும், சுலைமானுக்கும் கல்வியை நாம் திட்டமாகக் கொடுத்தோம். நம்பிக்கையாளர்களான தன் அடியார்களில் பெரும்பாலானோரை விட எங்களை மேன்மையாக்கி வைத்த எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என இருவரும் கூறினர்’ (அல்குர்ஆன் 27:15)

‘இந்த உதாரணங்களை மனிதர்களுக்காக நாம் சொல்லிக் காட்டுகிறோம். அறிவாளிகளைத் தவிர ஏனையோர் இவற்றை விளங்க மாட்டார்கள்’ (அல்குர்ஆன் 29 : 43)

அண்ணலார் சொல்வதைப்போல, தெளி ஞானம் என் பது வானத்தில் இருந்து பூமியில் பொழியும் மழை நீருக்கு ஒப்பானது. இம்மழையைப் பெற்ற நிலம் மூன்று வகைப் படும். அதில் முதலாவது, சிறந்த விளைச்சலைத் தரும் பசு மையான நிலம், அது பொழிகின்ற மழை நீரைத் தன்னுள் தேக்கி பயிர்கள் பசுமையாகவும் செழிப்பாகவும் உதவு கின்றது.

‘எவரது உள்ளத்தில் புனித குர்ஆனின் எந்தப் பகுதியும் மனனமாக இல்லையோ அந்த உள்ளம் பாழடைந்த வீட்டைப் போன்றதாகும்’ என்னும் ஹதீது சிந்தனைக் கண்ணோட்டம் உள்ளவர்களுக்குச் சிறந்த படிப்பினையாக அமைகின்றதல்லவா? பாழடைந்த வீட்டில் என்னதான் இருக்கப்போகிறது? பேய், பிசாசு, பல்லி, பாம்பு போன்ற வற்றோடு அசிங்கம் நிறைந்த குப்பை கூளங்களே ஆட்சி செலுத்துமே தவிர, வேறு நல்லவை எதுவும் இருக்க துளி கூட வாய்ப்பே இல்லை.

எனவே, உலகக்கல்வியோடு இஸ்லாமிய சமயக் கல்விக்கும் முக்கியத்துவம் அளித்தே ஆக வேண்டும். இஸ்லாமிய பாடசாலைகளுக்கு போய் பயிலாவிட்டாலும் கிடைக்கின்ற வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அவ்வகையில் கோயமுத்தூரில்  சிறந்ததொரு இஸ்லாமிய நூலகத்திற்கு வருகின்ற ஞாயிற்றுக் கிழமை நாற்று நடப்படுகின்றது. தமிழ், மலையாளம், ஆங்கிலம், உருது, அரபி என அனைத்து மொழிகளிலும் முடிந்த அளவு நூல்கள் திரட்டி வைக்கப்பட்டுள்ளன.

அறிவைப் பருக அழைக்கிறோம். அறிவுதான் ஈமானுக்கு முதல் அடிக்கல்.

நவீனகால சிக்கல்களுக்கு தீர்வு

இந்நவீன உலகில் நாம் சந்திக்கும் சிக்கல்கள் துன்பங்களுக்கெல்லாம் தீர்வு இறுதித்தூதார் முஹம்மத் (ஸல்) அவர்களுடைய போதனைகளில் மறைந்துள்ளது. மனிதார்களுக்கு வழிகாட்டுவதை இறைவன் தன்மீது விதியாக்கிக் கொண்டுள்ளான். அதன் காரணமாகவே அவன் பல்வேறு நிலப்பகுதிகளுக்கும் பல்வேறு காலக்கட்டங்களிலும் தன்னுடையத் தூதார்களை ஒருவார் பின் ஒருவராக அனுப்பிக்கொண்டே வந்துள்ளான். உலகில் உள்ள எல்லா ஊர்களுக்கும் எல்லா நிலப் பரப்புகளுக்கும் இறைத்தூதர்கள் வந்துள்ளார்கள். அவ்வகையில் தன்னுடைய கடைசித் தூதராக முஹம்மத் (ஸல்) அவர்களை அனுப்பிவைத்தான். அவர்தாம் இறுதித்தூதர்: அவருக்குப்பின் யாரும் இனி தூதராக வரமாட்டார் என்றும் தெளிவுபட அறிவித்தும் விட்டான்ர். அப்படியென்றால் என்ன பொருள்? வழிகாட்டுவதற்கு இனி எந்தத் தேவையும் இல்லை: எல்லாவகையான வழிகாட்டுதலும் வழங்கப்பட்டுவிட்டன. எனில், இன்று இவ்வுலகம் சந்திக்கும் எல்லாவகைப்பட்ட பிரச்சனைகளுக்கும் சிக்கல்களுக்கும் இறுதித்தூதாpன் வாழ்க்கையிலும் போதனைகளிலும் தெளிவான வழிகாட்டுதல் கண்டிப்பாக உண்டு என்பது சரிதானே!

மனிதக் கண்டுபிடிப்புகளின் விளைவாக உலகமெங்கும் வியாபித்துள்ள கருவிகளால் இல்லை பிரச்சனை! அவனுடைய சிந்தனையில் பரவியுள்ள கருத்துகளாலும் கோட்பாடுகளாலும் தான் பிரச்சனைகள் எழுகின்றன. உலக நாடுகள் அனைத்துமே இக்கொள்கை, கோட்பாடுகளைப் பின்பற்றிவரத்தானே செய் கின்றன. ஆகையால் அவற்றின் பிரச்சனைகள் அனைத்திற்கும் இவையே மூலகாரணமாக அமைகின்றன.

தன்னலமும் பொருட்சார்பும் தான் பிரச்சனைகள் அனைத்திலும் முதலிடத்தில் இருக்கின்றன. நிம்மதியை சீர்குலைப்பதில் இவை தலையாய இடத்தை வகிக்கின்றன. மதச்சார்பின்மையும் கடவுள் மறுப்புக் கொள்கையும் மனிதனுக்கு வழங்கிய ‘கட்டற்ற அதிகாரம்ர்’ பிறமனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி சுகம் காண்பவனாக அவனை ஆக்கியது கொடுங்கோன்மை புரிவதிலும் அராஜகம் செய்வதிலும் முன்னணி யில் இன்று அவன் திகழுவதற்கும் இவையே காரணம்! மதச்சார்பின்மையாலும் கடவுள் மறுப்புக் கொள்கை யாலும் உருவான மிகப்பெரிய பிரச்சனைகளுள் இதுவும் ஒன்று! இக்கருத்துகள் கண்டுப்பிடித்து வழங்கிய வற்றில் ‘செல்வப்புழக்கம்’ வர்க்கப் பிரிவினையை ஏற்படுத்தி கொடுமைகளுக்கும்  மோதல்களுக்கும் வழி வகுக்கின்றது. அட்டூழியம் புரியும் நேர்மையற்ற ஆட்சியாளர்களையும் கோஷங்களால் குளிர்ந்து கிடக்கும் நெறிகெட்ட, பண்புகெட்ட தலைமையையும் இவையே உருவாக்குகின்றன. வாழ்க்கையின் இலக்கு குறித்த அறியாமையும் வாழும் வழிமுறை தெரியாமையும் தான் இவற்றால் விளையும் துன்பங்களுக்கு காரணம்.

மனிதர்கள் தமது துன்பங்களிலிருந்து விடுதலை பெற்று வெளியேற வகைசெய்யும் நிலையான அறிவையும் தீர்க்கமான  சிந்தனையும் ஒழுக்க விழுமியங்களையும் இறைத்தூதார்(ஸல்) அவர்கள் வழங்கி யுள்ளார்கள். அல்குர் ஆனிலும் நபிமொழிகளிலும்  அவை பரவிக்கிடக்கின்றன. மனிதப் பிரச்சனை களுக்காக தீர்வு அவற்றில் தான் பொதிந்து கிடக்கின்றது. இறுதித்தூதரின் போதனைகளின் ஒட்டுமொத்த சாறாக அவ்விழுமியங்களையே நாம் கருதுறோம்.

ஓரே அகிலம்: அல்குர்ஆனையும் நபிமொழிகளையும் வாசித்துப்பார்க்கும் போது இவ்விழுமியங்கள் ஒன்றொன்றாக நம் கண்களில் படுகின்றன. அவற்றில் முதலாவதாக நாம் காண்பது ஒரே அகிலம் எனும் கருத்தாக்கம். நம்மைச் சுற்றி நாற்திசைகளிலும் பரவிக் காணப்படும் பல்வேறு வகைப்பட்ட பொருட்கள் படைப்பினங்கள் யாவற்றிலும் ஓர் ஒற்றுமை தென்படவே செய்கின்றது. திட்டமிட்ட சிந்தனையொன்றில்,சீரான நியதியொன்றுக்கு உட்பட்டதாக, தமக்கிடையே முரணற்ற இணக்கத்தைப் பெற்றனவாக அவை இலங்கு கின்றன. சிதறிய சிந்தனையின் வெளிப்பாடாக அவையில்லை. ஒரே சிந்தனையில் பிறந்த தோற்றத்தை அவை பிரதிபலிக்கின்றனவே அன்றி ஒன்றுக்கு மேற்பட்ட சிந்தனையில் உதித்த வேறுபட்ட வடிவங்கள் அல்ல!

அகிலத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் உருவம்  அருவம் அனைத்தும் ஒரு திசை நோக்கியே நகருகின்றன: ஒரே நியதியில் இயங்குகின்றன: சிறப்பாக திட்டமிடப்பட்ட மிகப்பெரிய செயல் ஒன்றின் சிறுசிறு அங்கங்களாகவே இவை திகழுகின்றன.

அகிலத்தையும் அவற்றில் உள்ள அனைத்துப் பொருட்களையும் துகள்களையும் சக்தியையும் படைத்தவன் ஒரே ஒருவன்தான் எனும் முடிவிற்கு நாம்வர இவையே காரணமாக அமைகின்றன. மணற்துகள் களிலிருந்து மலைச்சிகரங்கள் வரை காற்று வெளியிலிருந்து கடலாழம் வரை கண்ணுக்குத்தெரியாத நுண்ணுயிர்கள் முதற்கொண்டு பிரமாண்டமான பெருவெடிப்புவரை அனைத்திலும் ஒரே வர்ணத்தைப் பூசி படைப்பாற்றலின் அற்புதத் திறமையை அழகாக அவன் வெளிப்படுத்திக் கொண்டுள்ளான்.

உலகப் படைப்பில் காணப்படும் இவ்வற்புத நோர்த்தியை குர்ஆனும் ஸூன்னத்தும் படம் பிடித்துக் காட்டுகின்றன. விசாரணைக்குரிய இறுதித் தீர்ப்புநாள் வரும்வரை சத்தியத்தை இவை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். சத்தியத்தை இனங்கண்டுகொண்டால் மனிதச் சிக்கல்கள் மெதுமெதுவாக விடுபட ஆரம்பிக்கின்றன.

ஒரே இறைவன்: அடுத்தபடியாக ஒரே இறைவன் எனும் சித்தாந்தத்தை, ஓரிறைக்கொள்கையை இறுதித்தூதர் (ஸல்) முதன்மைப் படுத்தினார்கள். ஓரிறைவனை ஏற்றுக்கொள்வது எனும் மூலக்கல் மீதாகத்தான் இஸ்லாம் எனும் கட்டிடமே நிலை கொண்டுள்ளது. இஸ்லாம் அறிமுகப்படுத்துகின்ற மற்ற எல்லா நம்பிக்கைகளும் இவ்வாதார ஊற்றிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. இஸ்லாமின் சட்டங்கள், கோட்பாடுகள், புலனறிவிற்கு அப்பாற்பட்ட சித்தாந்தங்கள் எல்லாவற்றுக்கும் இதுவே மையப்புள்ளியாக விளங்குகின்றது.

இறைவனின் தூதர்கள் என்பதால் இறைத்தூதர்களை நாம் நம்புகிறோம்: இறைவனின் தூதர்கள் என்பதால் இறைவனின் வானவர்கள் என்பதால் மலக்குகளை நாம் நம்புறோம். இறைவனின் புறத்திலிருந்து செய்தி கொண்டு வந்துள்ளதால் இறை வேதங்களை நாம் நம்புகிறோம்: இறைவனுடைய திருப்தியின், கோபத்தின் வெளிப்பாடு என்பதால் சொர்க்கத்தையும் நரகத்தையும் நாம் நம்புகிறோம்: இறைவன் நம்மை விசாரிக்கும் நாள் என்பதால் இறுதித்தீர்ப்பு நாளை நாம் நம்புகிறோம்: இறைவன் விதித்திருக்கிறான் என்பதால் கடமைகளை (ஃபர்ளுகளை)நாம் பேணுகிறோம்: உரிமைகளை நிறைவேற்றுமாறு இறைவன் ஆணையிட்டிருப்பதால் அவற்றை நாம் வழங்குகிறோம் இப்படியாக இஸ்லாமுடைய எல்லா அம்சங்களும் ஓரிறைக் கொள்கையோடு பிரிக்க முடியா வண்ணம் பிணைந்துள்ளன.

ஓரிறைவனை நம்பவில்லை என்றால், சொர்க்கத்தை நம்பவேண்டிய அவசியமில்லை: கடமைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை: விசாரணை இறுதித்தீர்ப்பு நாள் எதனையும் நம்பவேண்டியதில்லை: மறுவுலக வாழ்க்கையை நம்பவேண்டியதில்லை உறவுகளைப் பேண வேண்டியதில்லை: உரிமைகளை வழங்க வேண்டியதில்லை:இந்த மையப்புள்ளியை நகார்த்திவிட்டால் இஸ்லாமின் கட்டுக்கோப்பு அனைத்தும் சிதறிப் போய் சின்னாபின்னமாகிவிடும். இஸ்லாம் எனும்பெயரிலும் இறைத்தூதரின் போதனைகள் எனும் வடிவிலும் உலகில் எதுவுமே மிஞ்சியிருக்காது.

இஸ்லாம் வழங்குகின்ற முதற்பாடமே அல்லாஹ் என்றென்றும் நிரத்தாமானவன்: சிரஞ்சீவி என்றும் நிலைத்திருப்பவன்: முற்றுமுதல் ஆற்றலாய் சக்தியாய் ஆனவன்: ஒருவன் தனித்தவன்: ஈடு இணை யாருமில்லாதவன்: ஒப்பிட இயலாதவன்: துன்பங்கள்: துயரங்கள் அனைத்திற்குமான விடுதலைக் கயிறு அவனிடமே உள்ளது: அந்த அல்லாஹ் ஒருவன். தேவையற்றவன்ர்: அவன் பிறக்கவுமில்லைர் யாரையும் பெறவுமில்லை: அவனுக்கு ஈடு இணையாருமில்லை! (அல்குர்ஆன்112).

ஓரிறைவன்தான் என்பதை ஏற்றுக்கொண்டவுடன் இவ்வுலகப் படைப்பினங்கள் அனைத்தும் எதற்காகப் பதைக்கப்பட்டுள்ளன என்ற காரணம் தெளிவாகி விடுகின்றது. ஒழுக்கமாண்புகளும் விழுமியங் களும் புரியத்துவங்குகின்றன. கடமையை நிறைவேற்றவேண்டும் எனும் உணார்வு பீறிட்டு எழுகின்றது. பொறுப்புணார்வு மிகுகின்றது. இவ்வுலகில் உள்ள ஒவ்வொன்றும் அர்த்தம் பொதித்தவையாக அழகு நிரம்பியவையாக மாறிவிடுகின்றன. மனிதன் போகவேண்டிய திசை துலங்கத் தொடங்கிவிடுகின்றது.

ஓரே மனிதகுலம்: சிந்தனைப் பாட்டையில் குர்ஆனும் ஸூன்னாவும் எடுத்துவைக்கின்ற மூன்றாவது விஷயம் ஓரே மனிதகுலம் என்பதாகும்!

நிறம், இனம், தோற்றம், மொழி என்று நாம் பார்க்கும் வேறுபாடுகள் அனைத்தும் அடையாளப் படுத்துவதற்கே என்று இஸ்லாம் முன்வைக்கின்றது. இனவாதமோ அல்லது இவ்வேறுபாடுகள் காரணமாக எழுகின்ற பிரிவினைகளோ பொருளற்றவை. ஒரே பெற்றோருக்குப் பிறந்த பிள்ளைகளே மனிதார்கள் யாவரும்! ஒரே ஜோடியின் சந்ததியினரே யாவரும்! ஆதம் ஹவ்வா என்ற முதல் ஜோடியிலிருந்து பிறந்த ஓர் அகிலக்குடும்பமே இது! மனிதனுக்காக தற்காலிகத் தங்குமிடமாக இந்த பூமியை இறைவன் ஆக்கியுள்ளான். அவனுடைய தந்தை ஆதம் காலத்திலிருந்து இந்தப் பூமியெங்கும் தங்கும் உரிமை படைத்தவனாக அவன் உள்ளான். நாடுகளையும் தேசங்களையும் பிரிக்கும் கோடுகள் யாவும் தற்காலிகமானவை: நிரந்தரமானவையல்ல.

எல்லா மனிதார்களும் சதோரார்களே. நிறம், வார்ணம்,மொழி, உடை போன்றவற்றில் காணப்படும் வேறுபாடுகள் அனைத்தும் புவியியல் காரணங்களாலும் வரலாற்றுக் காரணங்களாலும் விளைந்த தோற்றங்களே! வேறுபட்டுத் தெரியும் இத்தோற்றங்களுக்குள் உண்மையான ஆதமுடைய மகன் இருக்கிறான். அவன் செய்தாக வேண்டிய பணியொன்றும் காத்திருக்கின்றது. இவ்வேறுபாடுகளில் எதுவொன்றும் அவனுக்கு எந்தச் சிறப்பையும் அளித்துவிடாது. சிறப்பு என்று ஓன்று உண்டென்றால் அதற்கான காரணமாக வேறொன்றை குர்ஆன் முன்வைக்கின்றது.

‘‘இறையச்சம் உள்ளவரே உங்களில் உண்மையிலேயே சிறப்புக்குரியவார்’’ (அல்குர்ஆன் 49:13)

அதாவது தன்னுடைய வாழ்க்கைப் பாதை எது என்பதை அடையாளம் காட்டும் ஒளிவிளக்காக அவன் இறையச்சத்தை ஆக்கிக் கொண்டுள்ளான். கொடுக்கல்- வாங்கல், வணிகம், பழக்கவழக்கங்கள், நடவடிக்கைகள், சமயநெறி, பொருளாதாரம், அரசியல், இல்லறம், கூட்டுவாழ்க்கை என்று எல்லாவற்றிலும் இறைவனுக்குப் பயந்து இறையச்சத்தை முன்னிறுத்தியே தன்னுடைய வாழ்க்கைப் பாதையை அவன் வகுத்துக் கொள்கிறான். மற்றபடி மனிதர்கள் யாவரும் சரிசமமானவர்கள். மனித உரிமைகளும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் உறவுமுறைகளும் யாவருக்கும் பொதுவானவை. ஒரே குடும்பத்தின் கோடிக்கணக்கான உறுப்பினர்கள் என்பதால் சமூகம் பொருளாதாரம் என்று எல்லாவற்றிலும் பொதுவான உரிமையைப் பெற்றவார்கள்.

எண்ணிக்கை பெருகிவிட்டதால் இந்த ஓர்மைச் சிந்தனை குறுகிவிட்டது.

ஓரிறைவனை மட்டும் வழிபட்டாக வேண்டும் என்ற சிந்தனையை மனதில்கொண்டு அவ்வழியே உலகைப் பார்த்தால் உண்மை சொரூபம் அப்பட்டமாகத் தெரியும். நிறம் இனம் மொழி என்று எதுவுமே இல்லாமல் மனிதார் அனைவரும் ஒரே பெற்றோருக்குப் பிறந்த ஒரு குடும்பத்துப் பிள்ளைகளாகத் தெரிவர்! குர்ஆனும் நபிமொழிகளும் முன்னிலைப் படுத்துகின்ற ஒரே குலம் எனும் இந்தச் சித்தாந்தத்தில் இன நிற மொழி சிக்கல்கள் அனைத்திற்கு நிவாரணம் இருக்கின்றது.

பல்கிப் பெருகும் புதிய பித்அத்

 

நவீனங்களாகவும் நூதனங்களாகவும் பல்வேறு விஷயங்கள் இஸ்லாமிய நன்மார்க்கத்தினுள் நுழைந்து கொண்டே உள்ளன. தன்னை ஒரு பித்அத் என அறிமுகப்படுத்தியவாறு யாதொரு பித்அத்தும் விண்ணப்பித்துக் கொள்ளாது. நற்செயல் என்றே ஒவ்வொரு நூதனமும் நுழைகின்றது. சில காலம் சென்றபிறகு, தன்னுடைய கோரக்கொடுக்குகளால் தீண்டி நஞ்சைக் கக்குகின்றது. கொஞ்சம் கொஞ்சமாய் நாம் பார்த்து பார்த்து சேர்க்கின்ற நற்செயல்களை எல்லாம் அழித்து விடுகின்றது. அவ்வகையில் நெடுங்காலமாய் நம்மிடையே சர்வ சாதாரணமாய் வசித்து வருகின்ற ஒரு செயலை தவறென்றும் பித்அத்தென்றும் இக்கட்டுரை அடையாளப்படுத்துகின்றது. ‘செயல்’ என இதனை வகைப்படுத்த இயலாது. இது செயல் அல்ல, இது ஒரு நடைமுறை.

 

இஸ்லாமின் சாராம்சத்தை உறிஞ்சுகின்ற, இஸ்லாமிய உயிரோட்டத்தை சக்கையாக்கி விடுகின்ற ஒரு நடைமுறை.

 

ஒரு வேண்டுகோள்

 

முதலில் ஒரு சிறு வேண்டுகோள். இக்கட்டுரையை வாசிக்கத் தொடங்கிய உடன், ஆம், ஆமாம், இது உண்மைதான் என்றோர் உடன்பாட்டு எண்ணம் உங்களுடைய சிந்தனையில் எழலாம். வேண்டாம், அதனை கவனமாக தவிர்த்து விடுங்கள். அல்லது இல்லை, இவர் சொல்வது சரியல்ல, அப்படியெல்லாம் கிடையாது என்றொரு எண்ணம் மூர்க்கமாகவும் வன்மமாகவும் தோன்றக் கூடும். வேண்டாம், அதற்கும் அனுமதி அளிக்காதீர்கள். அதனையும் கவனமாக தவிர்த்து விடுங்கள். முதலில் இக்கட்டுரையை முழுதாகப் படியுங்கள். அதன்பின்பு, தனியே அமர்ந்து இக்கட்டுரை குறிப்பிடுவது உண்மையிலேயே சரிதானா? என சிந்தியுங்கள். சரியெனத் தோன்றினால், ஹம்தன் லில்லாஹ். தவறென்றால் தூக்கியெறிந்து விட்டு அல்இயாஸு பில்லாஹ்.

 

புதுப் பழக்கமல்ல, புது வடிவம்

 

நாமிங்கே சொல்ல வருவது இஸ்லாமிய சமயநெறியில் நுழைந்துவிட்ட ஒரு புதிய வடிவத்தை, புதுப் பழக்கத்தை அல்ல.

அண்மைக்காலமாக நாம் இஸ்லாமிய இபாதத்துகளுக்கு வழிபாடுகளுக்கு ஒரு புதிய வடிவத்தைக் கொடுத்து வருகிறோம். எல்லாவகையான இபாதத்துகளையும் பணம் சார்ந்த இபாதத்துகளாக மாற்றிக்கொண்டு வருகிறோம். பணம் சார்ந்த வழிபாடு என்னும் இதனைத்தான் புது வடிவம், புது நடைமுறை என இக்கட்டுரை வர்ணிக்கின்றது.

 

வழிபாடுகள் பல்வகை

 

இஸ்லாமிய வழிபாடுகள் பல வகைப்படுகின்றன. ஒவ்வொரு வழிபாட்டிற்கும் நியதிகளும் செய்முறைகளும் வேறுபடுகின்றன. அவற்றை கவனமாக கருத்தில் கொண்டு செயல்பட்டாக வேண்டும். அப்போதுதான் அவ்வழிபாடு இறைவனிடத்தில் ஏற்கப்படும். வான்மறை குர்ஆனை ஓதுவதாக இருந்தால்கூட அதற்கென்றும் ஒரு முறை உள்ளது. ‘அவர்கள் ஓதவேண்டிய முறைப்படி அதனை ஓதுகிறார்கள்’ என அல்குர்ஆன் சொல்கின்றது. (காண்க அல்பகறா 121)

 

ஒருசில இபாதத்துகளை நாம் மனதாலும் ஒருசில இபாதத்துகளை சிந்தனையாலும் இன்னும் ஒருசிலவற்றை உடம்பாலும் சிலவற்றை பொருளாலும் செய்கிறோம். சொல், செயல், சிந்தனை, மெய், பொருள், ஆவி என்றிவ்வாறாக நம்மிடமுள்ள அனைத்து திறன்களாலும் இறைவனை நாம் வழிபட வேண்டியுள்ளது. எந்நெந்த வழிபாட்டை எவ்வாறு செய்யவேண்டுமோ அதனை அவ்வாறுதான் செய்தாக வேண்டும்.

 

நாம் தினந்தோறும் ஐவேளை தொழுகிறோம். உடலாலும் (மெய்யாலும்) சொல்லாலும் சிந்தனையாலும் உள்ளத்தாலும் செய்யவேண்டிய இபாதத் இது. (தொழுகையில் சிந்தனைக்கும் உள்ளத்திற்கும் என்ன வேலை? எனக் கேள்வி எழுப்புவோர் நம்மில் பலர் உள்ளனர். தொழுகையின் வடிவம் முக்கியத்துவம் பெற்று நம்முடைய முஹல்லாக்களையும் பள்ளிவாசல்களையும் கூறு போட்டு விட்டது நாமறிந்த ஒன்றே. தொழுகையின் உளத்தூய்மைக் கோணத்தை வலியுறுத்தி கட்டுரையாசிரியர் எழுதியுள்ள ‘தொழுகை, ஏன்? எவ்வாறு?’ என்னும் நூலை ஆர்வமுடையோர் பார்வையிடுக)

 

நம்மீது கடமையான தொழுகையை நாம்தான் தொழ வேண்டும். கூலிக்கு ஆள்வைத்து தொழ முடியுமா?

 

காலையில் எழுந்ததும் ‘லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து வஹு அலா குல்லி ஷையின் கதீர்’ என பத்து முறை ஓதினால் அன்று சாயந்திரம் வரை இறைவன் நம்மைப் பாதுகாப்பான். ஓர் அடிமையைவிடுவித்த நன்மை கிடைக்கும் என நபிமொழிகள் அறிவிக்கின்றன. இந்த இபாதத்தை சொல்லாலும் அறிவாலும் செய்யவேண்டும். நாவால் மொழிய வேண்டும். சொல்பவற்றை சிந்தனையால் ஏற்க வேண்டும். உளப்பூர்வமாக அக்கருத்தை நம்ப வேண்டும். அப்போதுதான் இப்பெரும் நன்மை நமக்கு கிடைக்கும். உள்ளத்தையும் அறிவையும் ஈடுபடுத்தாமல் வெறுமனே வாயால் மொழிகிறோம் என்றால் ‘முறைப்படி’ என்னும் இலக்கணத்திற்கு பொருந்தி வராது. அவ்வாறே வேறுயாரோ ஒருவர் நமக்காக இந்த செயலை செய்கிறார் என்றாலும் அது தகாது.

 

ஒருசில சூஃபி தரீக்காகளில் எழுபதாயிரம் தடவை கலிமாவை ஓதினால் நரக விடுதலை கிடைக்கும் என நம்புகிறார்கள். அதனை நாமே நாம் நாவால் சொல்லக் கூட வேண்டியதில்லை. அதற்கென ஆட்கள் முல்லாக்கள் உள்ளார்கள். அவர்களே நம் சார்பில் ஓதிவிடுவார்கள். இதனை நீங்கள் அனைவரும் கேள்விப் பட்டிருப்பீர்கள். ஏன் இது கூடாது? என்பதை தனியே விளக்க வேண்டியதில்லை.

உள்ளங்கை நெல்லிக்கனி.

 

பொருள்மயமாகும் பாருலகம்

 

நாம் வாழும் இப்பாருலகம் இப்போது பொருள் மயமாகக் காட்சி அளிக்கின்றது. அருளில்லாருக்கு அவ்வுலகமில்லை. பொருளில்லாருக்கு இவ்வுலகமில்லை என்பார்கள் தமிழில். பொருள் என்பதையே அல்குர்ஆன் அருளென்றும் குறிப்பிடுகின்றது. ஆகையால், பொருள் என்னும் அருள் இல்லையேல் இவ்வுலகமில்லை என்பது நவீன கோட்பாடாகி விட்டது.

 

உலக மக்கள் எல்லாம் இன்று இதனையே நம்புகிறார்கள். முன்னணியில் நின்று முஸ்லிம்கள் இக்கோட்பாட்டை நம்புகிறார்கள். இதனை தனியே வேறொரு கட்டுரையில் ஆராய்வோம். இங்கு நாம் காணவேண்டியது நம்முடைய இபாதாக்களையும் தீர்மானிக்கின்ற எடைக்கல்லாக ‘பணம்’ மாறிவிட்டது என்பதையே.

 

பொருள்சார்ந்த இபாதத்துகள்

பொருள்சார்ந்த இபாதத்துகளாக உருமாறிவிட்ட இபாதத்துகளின் பட்டியலில் அநாதைகளை ஆதரித்தல், புதிதாக இஸ்லாமை ஏற்றோருக்கு தீனை கற்பித்தல், முதியோர் பராமரிப்பு, குர்பானி போன்றன இடம் பெறுகின்றன.

 

அநாதைகளை ஆதரித்தல்

 

அநாதைகளை ஆதரிப்பதை இஸ்லாமிய ஷரீஅத் வெகுவாக வரவேற்கின்றது. நானும் அநாதைகளை ஆதரிப்போரும் சொர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது இரு கைவிரல்களையும் கோர்த்துக் காட்டியுள்ளார்கள்.

 

அநாதைகளை ஆதரிப்பது என்றால் நாம் நமது வீட்டில் வைத்து அவர்களை வளர்க்க வேண்டும். அது மிகவும் சிரமமான நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கஷ்டத்தை விளைவிக்கின்ற செயல். முதலில் அநாதைக்குழந்தையை முதலில் நம்முடைய சொந்தக் குழந்தையைப் போல கருத வேண்டும். நம்முடைய குழந்தையையும் அக்குழந்தையையும் எந்த வேறுபாடு வித்தியாசத்தையும் காட்டாமல் வளர்க்கவேண்டும். இதற்கு நம்முடைய இல்லத்துணைவிகள் ஒத்துழைக்க வேண்டும்.

அடுத்து, தானொரு அநாதை என்னும் எண்ணம் அக்குழந்தையின் உள்ளத்தில் தோன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணோ பெண்ணோ பருவ வயதை எய்த பின்னர் உண்மையைக் கூறவேண்டுமோ தவிர சிறுவயதிலிருந்தே அநாரைத என்னும் எண்ணம் மனதில் பதியாமல் பக்குவமாய் பாதுகாக்க வேண்டும். இவையெல்லாம் எண்ணிப் பார்க்கையிலேயே மலைப்பை ஏற்படுத்துகின்ற பெருஞ்செயல்கள். இதனாற்றான் நானும் அநாதைகளை ஆதரிப்போரும் சொர்க்கத்தில் அருகருகே இணைந்திருப்போம் என அண்ணலார் ஸல்லல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

 

உண்மைநிலை இவ்வாறிருக்க, நாம் என்ன செய்கிறோம்? ஏதோ ஓர் அநாதை இல்லத்திற்கு நன்கொடை அளிக்கிறோம். அநாதைகளை காக்கிறோம், அப்பணியில் நாமும் பங்கு பெறுகிறோம் என பெருமிதம் அடைகிறோம்.

 

இது சரியா, இதுதான் இஸ்லாமிய வழியா?

 

அநாதை இல்லங்களைப் பார்த்திருக்கிறீர்களா? பெற்றோர் அற்ற அநாதைகளுக்கு தேவை அரவணைப்பு. அது அநாதை இல்லங்களில் கண்டிப்பாக கிடைக்காது. என்னதான் வசதியான சூழலில் அவர்கள் வாழ்ந்தாலும் வகைவகையான உண்டிகளை அருந்தினாலும் தாம் ஓர் அநாதை என்னும் எண்ணம் அவர்களுடைய உள்ளத்தில் நிரந்தரமாய் குடியிருக்கும். எப்படிப்பட்ட அநாதை இல்லமும் இவ்வெண்ணத்தை அகற்ற இயலாது.

 

உங்களுடைய வீட்டில் நீங்களும் உங்களுடைய மனைவியும் முடிவு செய்து ஒரே ஒரு அநாதைக் குழந்தையை வளர்க்கத் தொடங்கினால் இன்ஷா அல்லாஹ் அக்குழந்தையின் உள்ளத்தில் இவ்வெண்ணம் இடம்பெறாமல் பக்குவமாக வளர்க்க முடியும். நீங்கள் ஏழையாக இருக்கலாம். சாதாரண வருமானம் உடையவராக இருக்கலாம். ஒரே ஒரு குழந்தைக்கான செலவினங்களை தாக்குப் பிடிக்கலாம். பணச்செலவு ஒரு பெரிய விஷயமில்லை என நீங்கள் முடிவு செய்து வளர்க்கத் தொடங்கினால், அக்குழந்தையை நல்லபடியாக வளர்க்க இயலும். உங்களுடைய உணவோ நீங்கள் அளிக்கின்ற உடைகளோ அளிக்த உள திருப்தியை அக்குழந்தைக்கு உங்களுடைய நடத்தையும் வளர்ப்பும் கண்டிப்பாக அளிக்கும். அதேசமயம், அநாதை இல்லத்தில் வளருகின்ற குழந்தை என்னதான் சுவையான உணவை, அருமையான உடுப்புகளை, சிறந்த கல்வியை பெற்றாலும் இவ்வுணர்வுக்கு பலியாவதை யாராலும் தடுக்க முடியாது.

 

இரண்டாவதாக, உங்களுடைய வீட்டில் நீங்கள் படாதபாடுபட்டு அநாதைக் குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சிறப்பாக அப்பொறுப்பை நிறைவேற்ற முயற்சிக்கும்போது இறைவனுடைய கவனத்தில் பதிகிறீர்கள். உங்களுக்கு இறைவன் தன்னுடைய நல்லருளை அளிக்கிறான். சொர்க்கத்தில் உங்களைக் கொண்டுபோய் தன்னுடைய தூதருக்கு அருகில் வசிக்க வைக்கிறான்.

 

அதல்லாமல், ஓர் அநாதை இல்லத்திற்கு நீங்கள் நன்கொடை அளிக்கிறீர்கள் என்றால் அது எங்ஙனம் அநாதைக் குழந்தையை வளர்ப்பதாக ஆகும்? ஓர் அநாதை இல்லத்திற்கு நன்கொடை அளித்த நன்மை வேண்டுமானால் உங்களுக்குக் கிடைக்கலாம், ஒரு நற்பணிக்கு உதவிய பயன் உங்களுக்குக் கிடைக்கலாம். மாதாமாதம் ஒரு ‘தாருல் அய்தாமு’க்கு ‘டொனேட்’ செய்ததற்காக அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு கைகோர்த்து சொர்க்கத்தில் உலா வருகின்ற நற்பேறு உங்களுக்கு கிடைத்துவிடுமா?

 

தொழுவதாக இருந்தால் நீங்கள் தொழ வேண்டும். உங்களுக்காக வேறொருவர் தொழ முடியாது.

 

முதியோர் இல்லங்களுடைய நிலையும் இதுதான். தற்போது முதியோர் இல்லங்கள் உம்மத்தில் இல்லை அல்லது மிகக்குறைவு. ஆனால், பலரும் அவற்றுக்கான தேவை அதிகரிக்கின்றது எனக்கருதி அவற்றை நிறுவும் முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கி உள்ளார்கள். அவ்விஷயத்திலும் இஸ்லாமிய நிலைப்பாடு இதுதான்.

 

கூட்டுக்குர்பானி

 

ஒவ்வொரு இபாதத்தையும் செய்வதற்கு ஒருமுறை உள்ளது. அதனை அந்தந்த முறைப்படிதான் செய்யவேண்டும். அம்முறைப்படி செய்ய இயலாதோருக்கு ஷரீஅத் சில சலுகைகளை அளிக்கின்றது. தொழுகையை நின்றுதான் தொழுக வேண்டும். நின்று தொழ முடியாதவர்களுக்கு உட்கார்ந்து தொழுக என ஷரீஆ சலுகை அளிக்கின்றது.

 

ஒருவர் குர்பானி கொடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். (ஆசைப்படுவது என்ன? இறை நம்பிக்கையாளராக இருக்கும் அனைவரும் கண்டிப்பாக கொடுத்தே ஆகவேண்டும்) ஆனால் அவரிடம் ஆடு வாங்கி குர்பான் கொடுக்கும் அளவு வசதியில்லை. ‘உங்களால் இயன்றவரை இறைவனுக்கு பயப்படுங்கள்’ என ஷரீஆ கூறுகின்றதல்லவா? தன்னிடம் உள்ள தொகையைக் கொண்டு எப்படியாவது குர்பான் கொடுக்கவேண்டும் என அவர் விரும்புகிறார். ஷரீஅத் அவருக்கு ஒரு வழியைக் காண்பிக்கின்றது. உங்களோடு இன்னும் ஒருவரையோ இருவரையோ கூட்டு சேர்த்துக்கொண்டு குர்பான் கொடுத்து விடுங்கள் என்கின்றது. ஆட்டையோ மாட்டையோ வாங்கி குர்பான் கொடுக்க வழிகாட்டுகின்றது. இங்ஙனம் நீங்கள் கூட்டு சேர்ந்தால் அதனுடைய அதிகபட்ச எண்ணிக்கை ஏழாகத்தான் இருக்க வேண்டும். அதற்கு மிகக் கூடாது என்னும் நிபந்தனையை விதிக்கின்றது.

 

நாம் என்ன செய்கிறோம்? நமக்கு வசதி என்பதற்காக கூட்டுக் குர்பானித் திட்டங்களில் சேர்ந்து கொண்டு குர்பானிக் கடமையை நிறைவேற்றுகிறோம்.

 

குர்பானி என்பது இறைத்தூதர் இறைத்தோழர் இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்களுடைய நினைவுகூர்ந்து அவர்களைப் போன்றே நானும் இஸ்லாமிற்காக என்னால் இயன்றவரை பாடுபடுவேன், என்னிடம் உள்ளவற்றை அர்ப்பணிப்பேன் என்பதை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி.

 

தேவை என்றால் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இஸ்மாஈல் அவர்களை பலியிட்டது போல நானும் என்னுடைய மகனை, மகளை, என்னுடைய சொத்து-சுகங்களை இஸ்லாமிற்காக அர்ப்பணிக்கத் தயார் என்பதை செயலால் இறைவனிடம் சொல்கிறோம்.

 

நீங்கள் ஆடொன்றை வீட்டில் வளர்த்து அதனோடு அன்புடன் பழகி அன்னியோன்யமாக ஆகி பிறகு, அதனை இறைவனுக்காக பலியிடுகிறீர்கள். ஆட்டை அல்ல, அதன்மீது நீங்கள் வைத்த பாசத்தை, பழகிய பழக்கத்தை பலியிடுகிறீர்கள். பழகிய ஆட்டை யாரும் வெட்டுவதற்கு துணியமாட்டார்கள். ஏனென்றால் பாசம் தடுக்கும்.

 

அதனாற்றான், ஷரீஅத் பலி கொடுப்பவர்தாம் ஆட்டை அறுக்க வேண்டும் என கூறுகின்றது. அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது கரத்தால் ஆட்டையும் ஒட்டகங்களையும் பலி கொடுத்துள்ளார்கள். பழகிய வலியை நீங்கள் உணருவீர்கள்.

 

நம்முடைய தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் இப்ராஹீமிய மனப்பான்மையையும் வெளிப்படுத்தும் நிகழ்ச்சிதான் குர்பானி. அதனை நாம்தான் செய்யவேண்டும். நம் சார்பாக இன்னொருவர் செய்ய இயலாது.

 

எல்லா இபாதாக்களையும் பணம் சார்ந்த இபாததாத்களாக நாம் மாற்றிக்கொண்டு வருகிறோம் என்பதற்கு கூட்டுக்குர்பானி சிறந்ததோர் எடுத்துக்காட்டு. குர்பான் கொடுப்பது நம் மீது கடமை. நாமோ கூட்டுக்குர்பானியில் சேர்ந்து கொண்டு கடமை நிறைவேறி விட்டதாக எண்ணிக் கொள்கிறோம். ஐயாயிரம், ஏழாயிரம் இல்லாத ஏழை பாழைகள் தாம் கூட்டுக் குர்பானியில் சேருகிறார்களா? எழுபதாயிரம், பத்து இலட்சம் கொடுக்கும் அளவுள்ள செல்வந்தர்களும்தான் சேருகிறார்கள்.

 

நீங்கள் செய்ய வேண்டிய இந்த இபாதத்தை உங்களுக்காக வேறு யாரோ ஒருவர் செய்ய இயலாது. நீங்கள் கூட்டுக் குர்பானி திட்டமொன்றில் சேருகிறீர்கள் என்றால் ஏதோ ஓர் அமைப்புக்கு நிதியுதவி செய்கிறீர்கள். அவ்வளவுதான்.

 

ஒரு அமைப்புக்கோ ஒரு ஜமாஅத்துக்கோ நீங்கள் அளிக்கின்ற ஆயிரம் ரூபாயை இறைவன் அங்கீகரிக்கிறான் என்றே வைத்துக்கொள்வோம். இறைவா, இஸ்லாமிற்காக நாம் என்னிடமுள்ளவற்றை அர்ப்பணிக்க தயாராக உள்ளேன். இக்கட்டான தருணம் என்றால் என்னிடம் உள்ளவை யாவற்றையும் நான் அளிக்க சித்தமாயுள்ளேன். ஏன், இறைத்தூதர் இப்ராஹீமைப் போல என்னுடைய மகனைக் கூட நான் தியாகம் செய்ய தயாராக உள்ளேன் என நீங்கள் கூறுவதாக இறைவன் எப்படி எடுத்துக் கொள்வான்?

 

உங்களுடைய வீட்டில் பத்து நாள்கள் பதினைந்து நாள்கள் ஓர் ஆட்டை வளர்த்து அதனுடைய சாணத்தைப் பெருக்கிக் கூட்டி அதனை இறைவனுக்காக பலிகொடுக்க நீங்கள் தயாராக இல்லை, நீங்கள் எப்படி இறைவனுக்காகவும் இஸ்லாமிற்காகவும் உங்களிடம் உள்ள அனைத்தையும் தியாகம் செய்ய முன்வருவீர்கள்?

 

ஆக, இந்தப் பண்பைத்தான் நாம் ‘புதிய பித்அத்’ என குறிப்பிடுகிறோம். தொடக்கத்தில் குறிப்பிட்டதைப் போல ஓர் இபாதத்தை எங்ஙனம் செய்யவேண்டுமோ அங்ஙனம்தான் செய்யவேண்டும். அதனை வேறொரு வடிவத்திற்கு மாற்றிச் செய்ய முடியாது. அப்படி நாமாக உருமாற்றினால் இறைவனிடம் அது ஏற்கப்படாமல் போய்விடலாம்.

 

இங்கே வேறொன்றையும் குறிப்பிடத் தோன்றுகின்றது. இக்ளாஸ் என்னும் முஃமின்களின் இயல்பண்பை மனதிற்கொண்டு அதனைப் புரிந்துகொள்ள வேண்டும். நம் உம்மத்தில் ஜமாஅத்களின் எண்ணிக்கை பெருகியதால் இந்த நோய் தோன்றியதோ என என்னுள்ளத்தில் தோன்றுகின்றது. உண்மைநிலையை வல்ல இறைவனே நன்கறிவான். அல்லாஹு அஃலமு பிஸ்ஸவாப்.