வரவேற்போம் வசந்தத்தை …

இறைநம்பிக்கையாளர்களின் ஈமானை புதுப்பிக்கும் பருவமழையாக வருடந்தோறும் ரமழான் மலர்கின்றது.

ஒரு சில விஷயங்களை மனதுக்குள் அசை போட்டுப் பார்த்தால் தான் இந்த ரமழான் மாதத்தின் மாண்பும் மகத்துவமும் நமக்குப் புரியும்!

நாம் மனிதர்கள். படைப்பினங்கள் அனைத்திலும் தலைசிறந்த பகுத்தறிவு வாய்க்கப்பட்ட மனிதர்களாக நாம் இருக்கின்றோம்.

விளையாட்டுக்காய் நம்மைப்படைத்து வெறுமனே வையகத்தில் தூக்கி வீசியெறிந்து விடவில்லை வல்ல இறைவன்! அவன் ரஹ்மான்!!

எத்தனை எத்தனை அருட்கொடைகள்; எண்ண, எண்ண குறையாத நிஃமத்துகள்! அல்லாஹு அக்பர்!!

நல்ல உள்ளமும் நேர்சிந்தனையும் கொண்ட மனிதன் ஒருவன் இதைப்பற்றி யோசித்துப் பார்த்தால் கண்டிப்பாக அவனுடைய நெஞ்சத்தில் நன்றி வெள்ளம் பெருக்கெடுத்து கண்ணீர்த்தாரைகளாக கன்னங்களில் ஓடும்.

ஒன்றா? இரண்டா? எண்ணிச் சொல்ல!

 ‘ஒன்றுமே இல்லை என்னிடம்’ என்று இந்த உலகில் யாருமே சொல்லி விட முடியாது.

கல்லில் உள்ள தேரையையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாத இறைவன், கண்ணும் கருத்துமாய் படைத்த மனிதனை மட்டும் ‘அம்போ’ என விட்டுவிடுவானா?

எத்தனை, எத்தனை வசதி வாய்ப்புகள், அத்தனையையும் அள்ளிக் கொடுத்துள்ளானே அந்த ஆண்டவன்!
பாரசீக தேசத்தில் புகழ்பெற்ற ஒரு கவிஞர். ஷைஃக் சஅதி என்பது அவர் பெயர். (ரஹ்மத்துல்லாஹி அலைஹி)

தீராத வறுமை ஆட்டிப்படைக்கின்றது. காலில் செருப்பு எடுத்து மாட்டக் கூட காசில்லை. தன்னைத் தானே நொந்து கொண்டு நடந்தே போகிறார், பக்கத்து ஊருக்கு!

அங்கே தெருவில் ஒரு மனிதன். அவனைப் பார்த்தது தான் தாமதம்! கவலையும் வருத்தமும் பஞ்சாகப் பறந்தோடிப் போய் விட்டன சஅதியிடமிருந்து! சொல்கிறார் –

 ‘காலுக்குச் செருப்பில்லையே என்று
 கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்
 காலே இல்லாதவனைப் பார்க்கும் வரை!’

மற்றவர்களிடம் இல்லாத ஏதோ ஒன்று, எல்லோரிடமும் இருக்கத்தான் செய்கின்றது. கண்களை அகலமாக திறந்து வைத்துக் கொண்டு பார்த்தோ மென்றால் மனக்குறையே ஏற்படாது.

மாறாக, நன்றி உணர்ச்சியே ஊற்றெடுக்கும்.

———— யாருடைய உள்ளத்தில் இந்த நன்றி உணர்வு சரியான விகிதத்தில் வளர்கின்றதோ அவன் தன்னுடைய இறைவனை, சரியாக இனங்கண்டு கொள்கின்றான்.

அஷ்ஹது அன்லா இளாஹ இல்லல்லாஹ் என்று ஓரிறைக் கொள்கை சங்கமத்தில் தன்னையும் ஓர் அங்கமாக இணைத்துக் கொள்கின்றான்.
இவ்வளவு நாள், என்னென்னமோ, எத்தனை எத்தனையோ அருட்கொடை களை, பாக்கியங்களை, வாய்ப்புகளை, எண்ணி, எண்ணி நன்றி செலுத்தி வந்தானே  ———- அவையெல்லாம் இப்போது ஒன்றுமே கிடையாது.

தகதகவென்ற சூரியன் உதித்த பிறகு மின்னி மின்னி எரியும் விளக்குக்கு என்ன மதிப்பு?

ஓரிறைக் கொள்கை என்ற அட்டகாசமான நிஃமத்துக்கு முன்னால், உலகத்தின் வேறு எந்த நிஃமத்துக்கும் மதிப்பே கிடையாது!

நீங்கள் படிக்கவில்லையா? பணங்காசு உங்களிடம் இல்லையா? வருமானம் போதவில்லையா? வியாபாரம் தகையவில்லையா?

——- நீங்கள் மனம் தளர மாட்டீர்கள்; விரக்தி அடைய மாட்டீர்கள்; கவலையில் மூழ்கிப் போக மாட்டீர்கள். நீங்கள் முஃமின்களாக இருந்தால்!

ஏன்?

ஏன்? என்ன காரணம்?

இந்த ஓரிறைக் கொள்கையே தான்!

உலகில் உள்ள ஒட்டுமொத்த பாக்கியங்கள், அருட்கொடைகளை விடவும் ஓரிறைக் கொள்கைதான் மிகப் பெரியது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கின்றீர்கள்.

ஆறோடும் நிலத்தில் அழுக்கு சேருமா?

விளக்கெரியும் வீட்டில் இருள் இருக்குமா?

ஈமானிய ஒளி உள்ள நெஞ்சத்தில் கவலை இருக்குமா?

ஈமானிய ஒளி உள்ள நெஞ்சத்தில் கவலை இருக்குமா?

வருத்தம் இருக்குமா?

அண்ணலெம் பெருமானார் சல்லல்லாஹு அலைஹி வசல்லிம் அவர்கள் –

இறைவா! எங்கள் அண்ணலுக்கு மகாமே மஹ் மூதாவைக் தருவியாக! —

எவ்வளவு அழகாகச் சொல்லிச் சென்றுள்ளார், பாருங்கள் –

‘முஃமினுடைய நிலைமை நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கின்றது. வளமும் வசதியும் வரும் போது நன்றியை வெளிப்படுத்துகின்றான். அல்லாஹ்விடமிருந்து கூலியைப் பெற்றுக் கொள்கின்றான்!

சோதனைகள் வந்து சேர்ந்தால் பொறுமையை மேற்கொள் கின்றான். அல்லாஹ்விடமிருந்து கூலியைப் பெற்றுக் கொள்கின்றான்!’
ஓரிறைக் கொள்கை என்பது, ஈமான் என்பது எத்தகைய மாண்புடையது என்பதை நன்றாக மனதில் பதியவைத்துக் கொண்டவனால் தான் இது முடியும்!

துன்பங்களை நினைத்து கண்ணீர் வடிக்கின்ற, துயரங்களை எண்ணி புலம்பித் தள்ளுகின்ற வெகு சாதாரண மனிதனைப் போல அவன் இருக்க மாட்டான்.

பணத்தைப் பார்த்து விட்டால் தெனாவட்டாய் திரிகின்ற, யாரையுமே சட்டை பண்ணாத கர்வக்காரனாகவும் அவன் இருக்க மாட்டான். ஈமான், அவனிடத்தில் இருக்கின்ற ஈமான் தான் காரணம்!

சகோதரர்களே! உங்களுக்கும் எனக்கும் அப்படிப்பட்ட ஈமானை இறைவன் கொடுத்துள்ளான்.

உலகில் எத்தனையோ கோடிப்பேர்களுக்கு கிடைக்காத அருட்கொடை இது! இந்த ஈமான் நம்மிடம் இருப்பதால் தான், இந்த நன்றியுணர்வு நம்மிடமிருந்து வெளிப்படுவதால் தான், இந்த பொறுமையை நாம் கடைப்பிடிப்பதால் தான் ‘முஸ்லிம்கள்’ என்று நாம் அழைக்கப்படுகின்றோம்.

ஆக, ‘முஸ்லிம்’ என்ற சொல் ஒரு கொள்கையை, ஒரு கோட்பாட்டை வெளிப்படுத்துகின்ற ஒரு சொல்லாக உள்ளது.

‘எந்நிலையிலும் தன்னைப் படைத்த இறைவனுக்கே கீழ்படிபவன்’ — என்பது தான் ‘முஸ்லிம்’ என்கின்ற அரபி வார்த்தைக்குப் பொருள்!

எவ்வளவு அழகான வார்த்தை பார்த்தீர்களா?

உலகின் வேறு எந்த கொள்கையை, எந்த சமயத்தைப் பின்பற்றுபவரும் இவ்வளவு அருமையாக அழைக்கப்பட மாட்டார்!

ஒரு விஷயத்தை நாம் நன்றாகப் புரிந்து கொண்டோம்.

யார் இறைவனுக்கு நல்ல முறையில் கீழ்படிகின்றாரோ, அவர் தான் முஸ்லிம் என்று அழைக்கப்படுகின்றார்.

முஸ்லிம் என்று அழைக்கப்பட அவரே முழுத்தகுதி உடையவர். இப்போது நாம் நம்முடைய விஷயத்துக்கு வருவோம். நாம் முஸ்லிம்களாக இருக்கின்றோம்.

உண்மையிலேயே நாம் முஸ்லிம்களாக இருக்கின்றோமா? உண்மையிலேயே இறைவனுக்கு கீழ்படிபவர்களாக இருக்கின்றோமா? –

—– உங்களுடைய நெஞ்சை நீங்களே கிழித்து உள்ளே எட்டிப்பார்த்து விட்ட விடையைச் சொல்லுங்கள்!

அங்கே ஈமான் இருக்கின்றதா?

அண்ணலெம் பெருமானார் சல்லல்லாஹீ அலைஹி வசல்லிம் ஆச்சரியப்பட்டுக் கொண்டு புகழ்கிறார்களே, அந்த ஈமான் நெசமாலுமே நம்முடைய நெஞ்சுக்குள் இருக்கின்றதா?

இதில் வெட்கப்படுவதற்கோ, மூடிமறைப்பதற்கோ என்ன இருக்கின்றது?

‘இல்லை’ என்பது தான் நிதர்சனமான பதில்! யாருக்குத் தெரிய வேண்டுமோ, அந்த அல்லாஹ்வுக்குத் தான் நம்மை விட நன்றாகவே தெரியுமே!
நாம் ஏன் முஸ்லிம்களாக இல்லை? நம்முடைய நெஞ்சுக்குள் ஈமான் ஏன் ஒழுங்காக இல்லை?

—- என்றால் நம்மிடம் அல்லாஹ்வைப் பற்றிய பயம் இல்லை; இறையச்சம் இல்லை; தக்வா இல்லை!

அல்லாஹ்வைப் பற்றிய பயம் ஏன் இல்லை? தக்வா ஏன் இல்லை?

— என்றால் அல்லாஹ்வைப் பற்றிய சரியான அறிவு நம்மிடம் இல்லை; அவனைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற உண்மையான அக்கறை நம்மிடம் இல்லை!

தக்க அறிவு, தகுந்த அறிவு இல்லாததால் தக்வா இல்லை!

தக்வா இல்லாததால் ஈமானில் ‘தரம்’ இல்லை!

ஈமான் என்கின்ற சட்டையை பெயருக்காய் போட்டுக் கொண்டுள்ளோம். ஏராளமான கிழிசல்களோடு ஒட்டுத் துணிகளோடு கந்தலாய் காட்சியளிக்கின்றது. அழுக்கு வேறு அநியாயத்துக்கு அப்பிப் போய் முடை நாற்றம் எடுக்கின்றது!

இந்த இரண்டு விஷயங்களையும் கையில் ஏந்திக் கொண்டு தான் வருடந்தோறும் ரமழான் நம்மைச் சந்திக்க வருகின்றது. (1) தக்வா (2) இல்ம்
‘இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னால் சென்ற சமூகத்தின் மீது கடமையாக்கப்பட்டத போலவே உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. நீங்கள் தக்வா (இறையச்சம்) உடையவர்களாக மாறிவிடக் கூடும்!’ (அல்பகறா – 183)

மாதம் முழுக்க முறையாக நோன்பு வைப்பதால் — எப்படி நோன்பு வைக்க வேண்டுமோ அப்படி நோன்பு வைப்பதால் —- கண்டிப்பாக நம்முடைய தக்வாவின் அளவு கூடிப் போகும்!

‘ரமழான் மாதம் எத்தகையதென்றால் மக்களுக்கு நேர்வழி காட்டக் கூடிய, நேர்வழி இதுவென்று தெள்ளத் தெளிவாய் அறிவிக்கக் கூடிய, (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்து உணர்த்தக் கூடிய அல்குர்ஆன் அ(ம்மாதத்)தில் தான் இறக்கியருளப்பட்டது!’ (அல்பகறா-185)
இது தான் நேர்வழி! இதில் நடைபோட்டால் தான் வெற்றி வாசலுக்கு போய்ச் சேர முடியும், என்று கைகாட்டி சுட்டிக் காட்டுகின்ற வான்மறை குர்ஆன் இந்த வசந்த மாதத்தில் தான் அருளப்பட்டுள்ளது.

‘கியாமுல்லைல்’ என்றொரு விஷயத்திற்கு ரமழான் மாதத்தில் மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகின்றது.

இரவில் இன்று இதைச் செய்வது என்று பொருள்! தராபீஹ் என்று பொதுவாக அழைப்பதும் உண்டு.

ரமழான் மாதத்தில் தொழுதாலும் சரி, மற்ற மாதங்களிலும் கடைப்பிடித்தாலும் சரி, கியாமுக்லைத் என்பதே குர்ஆனை அதிகமதிகம் ஓதுவது என்பதன் இன்னொரு பெயராகவே திகழ்கின்றது.

அது மட்டுமல்லாமல் ரமழான் மாதத்தில் நன்மையை விரைந்து முடிந்த வரைக்கும் அதிகம் அதிகமாக அறுவடை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் பல தடவை வான்மறை குர்ஆனை ஓதி முடிப்பதும் வழக்கமாய் உள்ளது.

வான்மறை குர்ஆனை திலாவத் செய்வது; அதன் கருத்துக்களை அலசி ஆராய்வது; குர்ஆனுடைய போதனைகளை தம்முடைய வாழ்வில் முடிந்தவரைக்கும் செயல்படுத்துவது எப்படி? என்று சிந்தித்துப் பார்ப்பது; சொல்லிலும் செயலிலும் முழுக்க முழுக் வான்மறை குர்ஆனை பிரதிபலிப்பது எப்படி? என்பதில் மனதைச் செலுத்துவது ——- போன்ற விஷயங்களிலேயே நாம் ரமழானைச் செலவிட வேண்டும்.

இப்படியாக, ஈமானை வளப்படுத்துகின்ற இந்த இரண்டு விஷயங்களையும் நமக்கு வழங்குவதற்காகத் தான் ரமழான் மாதம் வந்து கொண்டுள்ளது.

யார் யாருக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவையும் அள்ளிக் கொள்ள வேண்டும். ரமழான் மாதத்திலும் பிற மதங்களைப் போன்றே சாதாரணமாக வழக்கமான இபாதத்துகளை மட்டுமே செய்து கொண்டு — நோன்பு வைத்ததே பெரிய விஷயம்! என்று நினைத்துக் கொண்டு — போதுமென்ற மனப்பான்மையோடு இருந்து விடக் கூடாது.
எல்லா வியாபாரிகளுக்கும் – தீபாவளியோ, பொங்கலோ, ஓணமோ – சீசன் என்று ஒன்று இருக்கும். சீசன் நேரங்களில் அவர்கள் எப்படி பரபரப்போடு இயங்குகின்றார்கள் என்பதைப் பார்த்திருக்கின்றீர்களா?

ஊன், உறக்கம், சோறு, தண்ணி — எதுவுமே கிடையாது.

காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு பம்பரமாக சுழலுவார்கள். சீசன் நேரத்திலும் அளவான சரக்குகளை மட்டுமே வைத்துக் கொண்டு அன்றாடம் பண்ணுவதைப் போன்றே வியாபாரம் செய்பவன் லாயக்கற்றவன்; கூடிய சீக்கிரமே திவாலாகி விடுவான்.

ஈமான் என்பதும் ஒரு வகையான வியாபாரம் தான்! (பார்க்க – அஸ்சஃப்-61-10) கொள்முதல் செய்யாமலேயே வியாபாரம் பண்ண முடியுமா?

ஆகையால், நாம் ரமழானைப் பயன்படுத்திக் கொண்டு முடிந்த வரைக்கும் கொள்முதலை சேகரம் பண்ணிக் கொள்ள வேண்டும்!

இறை அறிவைப் பெற்றுக் கொள்ள வேண்டும்; இறைஅச்சத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்!

எப்படி பெற்றுக் கொள்வது? எவ்வாறு வளர்த்துக் கொள்வது?

— என்பதற்கான விரிவான வழிகாட்டுதலை ஷரீஅத் அழகாக சொல்லித் தருகின்றது.
ரமழான் மாதத்தை வீணாக்கி விடக் கூடாது என்ற எச்சரிக்கையையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்!
‘இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு எந்த முறைப்படி பயப்பட வேண்டுமோ அப்படி பயப்படுங்கள்; முஸ்லிம்களாக இல்லாத நிலையில் மரணித்து விடாதீர்கள்’ (ஆல இம்ரான் – 102)

சரியான தக்வாவைப் பெற்றுக் கொள்ளவில்லையென்றால் சாகும் போது ஈமான் கூட மிச்சம் இருக்காது. வியாபாரம் திவாலாகி விட்டது என்றால் என்ன இருக்கும்? நஊதுபில்லாஹி பின் தாலிக்க!

வரப்போகின்ற ரமழானை நன்முறையில் பயன்படுத்திக் கொள்வோம். சொட்ட சொட்ட நனைந்து நிற்போம் தக்வா மழையில்!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: