முஸ்லிம்களின் “அழைப்பு” ஆர்வம்

(20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சுத்தி இயக்கம் என்ற பெயரில் முஸ்லிம்களை முர்தத்துகளாக மாற்றும் பணி வெகு தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது.  மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) அப்போது தில்லியிலிருந்து ஜமா அத்துல் உலமா – சார்பில் வெளிவந்து கொண்டிருந்த ‘அல்ஜம் இய்யா’ இதழின் ஆசிரியராக இருந்து வந்தார்.  மௌலானாவின் வயது அப்போது 22 மட்டுமே!  சுத்தி இயக்கத்தின் எதிர் விளைவாக முஸ்லிம்களிடையே ஏற்பட்ட மாற்றங்களை அலசி ஆராயும் வகையில் நீண்டதொரு கட்டுரையை அவர் எழுதினார்.  ஏறக்குறைய எண்பது ஆண்டுகள் கழிந்த பின்பும் இன்றைக்கும் அக்கட்டுரையில் நமக்கு பயனளிக்கக் கூடிய பல செய்திகள் உள்ளன.  ஆகையால், அக்கட்டுரையை தொடராகத் தருகின்றோம்)

புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்த பலர் முர்தத்துகளாக மாறிவிட்டதைத் தொடர்ந்து இந்திய முஸ்லிம்களிடையே சலனமும், குழப்பமும் தோன்றிவிட்டன.  இஸ்லாமியப் பிரச்சாரம், அழைப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றன.  பத்திரிக்கைகளிலும், இதழ்களிலும் இப்பணியின் மேன்மை, முக்கியத்துவம் பற்றி பேசப்படுகின்றது.  அழைப்புப் பணிக்கான சாத்தியக் கூறுகள், வாய்ப்புகளைப் பற்றி அலசி ஆராய கருத்தரங்குகள், அமர்வுகள் கூட்டப்படுகின்றன.  ஒட்டு மொத்தமாகப் பார்த்தோமென்றால் அழைப்புப் பணிக்கான அதீத ஆர்வம் திடீரென்று முஸ்லிம்களின் மனங்களில் முளைத்து விட்டதைப் போன்று தோன்றுகின்றது.  ஆனால், ஆழ்ந்து கவனத்துடன் பார்வையைச் செலுத்தினால் நம்மிடையே அழைப்புப் பணிக்கான ஆர்வமே, தூண்டுகோல் இல்லை என்பது தான் விளங்க வருகின்றது.  வரலாற்றில் இஸ்லாம் அடைந்த வெற்றிக்கு மூலகாரணமாய் திகழ்ந்த, உலகளாவிய தலைமைத்துவத்தையும், ஒட்டுமொத்த ஆட்சி அதிகாரத்தையும் அது பெறக்காரணமாயிருந்த ஙஅழைப்புப்பணி ஆர்வம்ங இன்று நம்மிடம் இல்லை!

ஒரு வேளை அத்தகைய ஆர்வம் இன்று நம்மிடத்தில் இருந்திருந்தால் இத்தகைய கருத்தரங்குகள், மாநாடுகளைக் கூட்டுவதற்கான தேவையே ஏற்பட்டிருக்காது.  மாற்றார்களின் அத்துமீறல்களை எண்ணி நாம் நம்முடைய அவைகளில் கண்ணீர் சிந்துவது நின்றுபோய், அவர்களுடைய சபைகளிலும், கூட்டங்களிலும் நம்முடைய மார்க்கத்தின் வளர்ச்சிளைப் பற்றிய சர்ச்சை நடந்து கொண்டிருக்கும்!

இதைப்பற்றி யோசிக்கையில் சிலசமயங்களில் வியப்பே மேலிடுகின்றது.  நன்மையின் பக்கம் அழைப்பதையும், இறைவனின் தீனை பிரச்சாரம் பண்ணுவதையும் தமது வாழ்க்கையின் அதி முக்கிய நோக்கமாகக் கொண்ட ஒரு மார்க்கத்தின் பின்பற்றாளர்களா இப்படி கூப்பாடு போடுகின்றார்கள்?  தன்னுடைய முழு வாழ்க்கையையும் இறைவனின் செய்தியை மக்களுக்குச் சேர்பிப்பதிலேயே செலவிட்டுவிட்ட ஓர் இறைத்தூதரின் பின்பற்றாளர்களா இப்படி?   எந்த மார்க்கத்தைப் பின்பற்றியவர்கள் ஒரே நூற்றாண்டிற்குள் செங்கடல், மத்திய தரைக்கடலையெல்லாம் தாண்டி தமது மார்க்கத்தைக் கொண்டு சென்றார்களோ, அதே மார்க்கத்தின் கொண்டு சென்றார்களோ, அதே மார்க்கத்தின்  பின்பற்றியவர்களா இப்படி முறையிடுவது? —- வியப்பினால் நமக்கு ஒரு சந்தேகமே தோன்றி விடுகின்றது!  நாம் அதே மார்க்கத்தைத் தான் பின்பற்றிக் கொண்டிருக்கின்றோமா? இல்லை, பனூஇஸ்ராயீல்களைப் போன்று இறைத்தூதர் சென்ற பிறகு மார்க்கத்தையே மாற்றிக் கொண்டு விட்டோமா!

தப்லீக், தப்லீக், தஃபா, தஃவா, அழைப்பு, அழைப்பு – என்று நம்முடைய நாவுகள் சொல்லிக் கொண்டுள்ளன.  அழைப்புப்பணிக்காகவே மையங்களை நிறுவி இஸ்லாத்தைப் பரப்பும் பணியில் நாம் ஈடுபட்டுக் கொண்டுள்ளோம்.  ஆனால், கிறிஸ்துவர்களைப் போல மெஷினரிகள், சொசைட்டிகளை நிறுவி இஸ்லாத்தைப் பரப்பும் பணியில் அதன் பின்பற்றாளர்கள் ஈடுபடுவதும், அழைப்புப் பணியில் அதீத ஆர்வம் காட்டுவதும் இஸ்லாமிய வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்!  மையங்களை ஏற்படுத்தி பணி செய்வதிலும், அழைப்புப் பணி, அழைப்புப் பணி என்று ஓடோடிப் பாடுபடுவதிலும் தான் வெற்றிக்கான சூத்திரம் அடங்கியுள்ளது என்றால், முன் சென்றோர்களை விடவும் நம்முடைய வளர்ச்சியின் வேகம் கண்டிப்பாக கூட வேண்டும்.  ஆனால், உண்மை நிலையோ அதற்கு நேர்எதிராக அல்லவா உள்ளது?  இவ்வளவெல்லாம் இருந்தும் நாம் ஙபின்னேங சென்று கொண்டுள்ளோம்.  இவற்றில் எதுவுமே இல்லாமல் நம்முடைய முன்னோர்கள் எந்தளவுக்கு முன்னேறி இருந்தார்கள் என்றால், உலகின் எல்லா மூலை முடுக்குகளிலும் ஓரிடம் பாக்கி விடாமல் இஸ்லாத்தைக் கொண்டு போய்ச் சேர்ப்பித்து விட்டிருந்தார்கள்.  இன்றைக்கு நாம் இந்தியாவில் ஏழு கோடி (இந்தியா + பாகிஸ்தான் + பங்களாதேஷில் இன்றைக்கு 40 கோடி) முஸ்லிம்கள் இருப்பதற்கும் அவர்கள் தானே காரணம்? —– அப்படியென்றால் நம்மிடத்தில் எங்கே குறை உள்ளது?  இஸ்லாத்தைப் பரப்புவதற்கான சரியான வழிமுறை தான் என்ன? —- என்று நாம் கண்டிப்பாக யோசித்தாக வேண்டும்!

இன்றைக்கு முஸ்லிம்களின் பலவீனங்களுக்கு எல்லாம் உண்மையான காரணம் என்னவென்றால், அவர்களிடமிருந்து இஸ்லாமிய உயிரோட்டம், இஸ்லாமிய ஆன்மா சென்று விட்டது.  முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் தங்களுடைய நிலை என்ன? என்பதையே அவர்கள் மறந்து விட்டார்கள்.  இஸ்லாத்தை அவர்கள் புரிந்து கொண்டார்கள் என்றால், அதனுடைய உண்மையான நோக்கம் என்ன? என்பதை விளங்கிக் கொண்டார்கள் என்றால், இந்த இஸ்லாமிய அழைப்புப் பணி, தஃவா, தப்லீஃக் போன்ற பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு கிடைத்து விடும்!

முஸ்லிம்களாக இருப்பதன் நோக்கம்

இஸ்லாம் என்பதே ஒரு பிரச்சார மார்க்கம் என்று பேராசிரியர் மேக்ஸ் முல்லர் (Max Muller)  கூறுகிறார்.  பிரச்சாரம் பண்ணுவதையே அடித்தளமாகக் கொண்டு கட்டமைந்த, அதன் வலிமையைக் கொண்டே முன்னேற்றம் கண்டு, தன்னுடைய வாழ்க்கைக்கும் இருப்புக்கும் அதனையே சார்ந்துள்ள ஒரு மார்க்கமே இஸ்லாம்!  இஸ்லாத்தின் அடிப்படைப் போதனைகளை ஆராய்ந்து பார்த்தீர்கள் என்றால் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளலாம்.  ஙசத்திய அழைப்புங என்பதற்கான பெயரே இஸ்லாம்; முஸ்லிம்களின் வாழ்க்கைக்கு என்று ஒரு நோக்கம் உள்ளது என்றால், அது நன்மையை ஏவி, தீமையை தடுப்பது (அம்ரு பில் மஃரூஃப், நஹ்யு அனில் முன்கர்) மட்டுமே!  முஸ்லிம்களில் வாழ்க்கைக் குறிக்கோளாக, வான்மறை குர்ஆன் என்ன கூறுகிறது என்றால்,

‘மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காகத் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த சமூகத்தவராய் நீங்கள் இருக்கிறீர்கள்.  நீங்கள் நன்மை புரியும் படி ஏவுகிறீர்கள்;  தீமையிலிருந்து தடுக்கிறீர்கள்; மேலும் அல்லாஹ்வின் மீதும் நம்பிக்கை கொள்கிறீர்கள்.’  (ஆல இம்ரான் – 110)

‘நன்மையின் பக்கம் அழைக்கக் கூடிய ஒரு குழுவினர் உங்களிடையே கண்டிப்பாக இருந்திட வேண்டும்.  அவர்களோ நல்லவை புரியும்படி ஏவ வேண்டும்; தீயவற்றிலிருந்து தடுத்த வண்ணம் இருக்க வேண்டும்.’  (ஆல இம்ரான் – 104)

இன்னோரிடத்தில் கட்டளையிடப்பட்டுள்ளது –

‘(நபியே!) விவேகத்துடனும், அழகிய அறிவுரைகள் மூலமாகவும் உன் இறைவனின் மார்க்கத்தின் பக்கம் அழைப்பீராக!’  (அந்நஹ்ல் -125)

மற்றும்,

‘என் எச்சரிக்கைக்கு பயப்படுகின்ற ஒவ்வொருவருக்கும் நீர் இந்தக் குர்ஆனைக் கொண்டு அறிவுரை கூறுவீராக!’  (காஃப் – 45)

மற்றும்

‘(நபியே!) நீர் அறிவுரை புரிந்த வண்ணம் இருப்பீராக!  நீர் அறிவுரை புரிபவர் மட்டுமே ஆவீர்!’  (அல்-காஷியா-21)

இந்தப் போதனை தான், அண்ணலெம் பெருமானார் அலைஹிஸ் !லாத்து வத் தஸ்லீம் அவர்களுடைய வாழ்வில் முன்னிலை வகித்து வந்தது; அருமைச் சஹாபாக்களின் வாழ்க்கையை அடியோடு மாற்றியமைத்தது.  தஃவாவின், தப்லீக்-கின் தொகுப்பு வடிவமாக அவர்களுடைய வாழ்க்கை விளங்கியது.  அவர்களுடைய அமர்வு, நிற்றல், நடத்தல் என்று வாழ்க்யையின் ஒவ்வொரு செயலும் ‘மக்களை இறைவனின் பக்கம் அழைக்க வேண்டும்; அல்லாஹ்வின் அடியார்களை நேர்வழியில் நடக்கத் தூண்ட வேண்டும்’ என்பதையே தனக்குள் பொதிந்து வைத்துக் கொண்டிருந்தது.

வான்மறை குர்ஆனுடைய, அழகிய முன் மாதிரி சல்லல்லாஹு அலைஹி வசல்லிம் அவர்களுடைய இந்த போதனையின் தாக்கம் முஸ்லிம்களின் மீது நீடித்திருந்த காலம் வரைக்கும், ஒவ்வொரு முஸ்லிமுடைய வாழ்க்கையும் ஒரு முபல்லிஃக் உடைய வாழ்வாக, ஒரு தாயி-உடைய வாழ்வாகவே கழிந்தது.  வியாபாரம், தொழில், வேளாண்மை, அரசியல் – என்று உலகத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் அவர்கள்ஈடுபட்டார்கள்.  ஆனாலும், மனித குலத்தின் எல்லா உறுப்பினர்களிடமும் இறைவன் வழங்கியுள்ள இஸ்லாம் என்ற இந்த அருட்கொடையைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டுமே’ என்கிற உணர்வே அவர்களிடம் மேலோங்கி நின்றது; அதற்காகவே அவர்கள் பாடுபட்டார்கள்.  அவர்கள் உண்மையிலேயே இஸ்லாத்தை மாபெரும் அருட்கொடையாகக் கருதினார்கள்.  ஒவ்வொரு மனிதனிடமும் இந்த அருட்கொடையைக் கொண்டு போய்ச் சேர்ப்பது தங்கள் மீது கட்டாயக் கடமை என்று அவர்கள் ஈமான் கொண்டிருந்தார்கள்.  ஒரு மனிதர் – அவர் எந்த நிலையில் இருந்தாலும் அதே நிலையில் – இக்கடமையை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்.  வியாபாரிகள் தங்களது தொழில் நடவடிக்கைகளின் போது, பிரயாணிகள் தங்கள் பயணத்தின் போது, கைதிகள் சிறைச்சாலைகளில், ஊழியர்கள் தாங்கள் பணியாற்றிய தொழிற்சாலைகளில், விவசாயிகள் தங்களது வேளாண்மை நிலங்களில் இப்புனிதக் கடமையை நிறைவேற்றினார்கள்.  இப்பணியின் மீது எந்த அளவுக்கு பேரார்வம் இருந்தது என்றால், பெண்களும் கூட தீவிரமாக இப்பணியில் பங்கெடுத்துக் கொண்டார்கள்.

இஸ்லாத்தின் உண்மையான வலிமை

இந்த உணர்வு தான் இஸ்லாமிய வலிமைக்கான மைய ஊற்றாக திகழ்ந்தது.  இன்றைக்கு உலகத்தில் பல்வேறு இனங்களைச் சார்ந்த, பலதரப்பட்ட நாடுகளைச் சார்ந்த, பல்வேறு மொழி பேசும் நாற்பது கோடி (இன்று 120 கோடி) முஸ்லிம்களிடையே இஸ்லாம் ஆதிக்கம் செலுத்துகின்றது என்றால், இந்த அழைப்பார்வத்தின் பின்விளைவே அது!

இஸ்லாம் வாளால் பரவியது என்று அதன் எதிரிகள் கூறுகின்றார்கள்.  ஆனால், அழைப்பார்வத்தின் பெருவிளைவே இஸ்லாத்தின் பரவல் என்று வரலாறு காட்சியளிக்கின்றது.  வாளைக் கொண்டு ஒரு வேளை அது பரவியிருந்தது என்றால், அவ்வாளினாலேயே அது அழிந்தும் போயிருக்கும்.  அதனை இல்லாதொழிக்க வேண்டும் என்று இவ்வளவு காலமும் வெறியோடு அதன் மீது பாய்ந்த வாட்கள் தங்களது நோக்கத்தை வென்றிருக்கும்.  ஆனால், பெரும்பாலான இடங்களில் வாளால் அடிமைப்பட்டுக் கிடந்த காலங்களில் தப்லீகைக் கொண்டு வெற்றி பெற்றுள்ளதையே வரலாற்றில் நம்மால் காண முடிகின்றது.  ஒரு புறம் பாக்தாத்தில் இனப்படுகொலை நடைபெற்றுக் கொண்டிருந்தது.  மறுபுறமோ சுமத்ராவில் இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்டுக் கொண்டிருந்தது.  ஒரு புறம் கார்டோபா (உந்துலிஸ் – ஸ்பெயின்)வில் இஸ்லாம் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தது; மறு புறமோ ஜாவாவில் இஸ்லாமியக் கொடி ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது.  ஒரு புறம் சக்லியா-விலிருந்து அது அடித்து விரட்டப்பட்டது; மறு புறமோ ஜாவாவில் அதற்குப் புது வாழ்வு கிடைத்தது.  ஒரு பக்கம், தாதாரியர்கள் அதனுடைய கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டிருந்தார்கள்;மறுபக்கமோ அதே தாதாரியர்களின் உள்ளங்களை அது கொள்ளை கொண்டு விட்டது.  ஒரு பக்கம் துருக்கியர்கள் அதனை அடிமைச் சங்கிலியில் பிணைத்தார்கள்; மறுபக்கமோ, அதற்கு அடிமைப்பட்டுக் காலாகாலம் கிடக்க தங்களது நெஞ்சங்களையே தாரை வார்த்தார்கள்.

அழைப்புப் பணியில் கிடைத்த வெற்றியல்லாமல், பிறகு இது வேறென்ன?  வாளால் இஸ்லாத்திற்குக் கிடைத்த வெற்றிகள் என்று குறிப்பிடப்படுபவன எல்லாம் இன்று அழிந்து போய்விட்டன.  ஸ்பெயின் அழிந்து போய்விட்டது; சக்லியாவின் சுவடேஇல்லை; பாரசீகன் அழிந்து போய் விட்டது.  ஆனால், அழைப்புப் பணி மூலம் வெற்றி கொள்ளப்பட்ட மத்திய ஆப்பிரிக்கா, ஜாவா, சுமத்ரா, சீனம், மற்றும் அல்ஜீரியா, மலாயா, போன்றவை இன்னும் இஸ்லாமிய உயிரோட்டத்தோடு உள்ளன; அழைப்புப்பணி, அழைப்புப் பணியினால் மட்டுமே இஸ்லாம் உயிர் வாழும் என்பதற்கு சாட்சியம் அளித்துக் கொண்டுள்ளன.  கேள்வி என்னவென்றால், இந்த அழைப்புப் பணி, தஃவா மையங்கள் மூலமாகத்தான் நடைபெற்றதா?  இன்றைக்கு அழைப்புப்பணிக்காக நாம் விடுக்கின்றதைப் போன்ற அறை கூவல்களினால் தான் இம்மாபெரும் வெற்றிகள் தகைந்ததா?  கிறிஸ்துவ மெஷினரிகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நாம் இன்று செய்து வரும் உலகளாவிய ஒருங்கிணைப்பு, பத்திரிக்கை – ஊடகப் பயன்பாடு, காகித அறிக்கைப் போர், தீவிர எழுத்தாற்றல் – சொல்லாற்றல் போன்றவற்றால் தான் இந்த வெற்றிகள் அனைத்தும் கிடைத்தனவா?  ‘இல்லை!’ என்று ஒற்றைச் சொல்லில் பதில் சொல்லி விடுகின்றது வரலாறு! —–தொடரும் இக்கட்டுரையில் நாம் அதைப்பற்றியே ஆராயப் போகின்றோம்.  (இன்ஷா அல்லாஹ்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: