நூற்கள்

தொழுகை ஏன் எவ்வாறு

 

சையத் அப்துர் ரஹ்மான் உமரி

 

 

 

முன்னுரை

 

தொழுகைக்கு எந்த அளவு இஸ்லாமில் முக்கியத்துவமும் சிறப்பும் இருக்கின்றது என்பது யாவரும் அறிந்த ஒன்றே!. இஸ்லாமை ஏற்றுக்கொள்ளும் ஒரு மனிதனின் மீது சுமத்தப்படுகின்ற முதல்கடமையாகவும், இறுதிவரை அவன் கடைபிடித்து ஒழுகவேண்டிய முக்கிய கடமையாகவும் தொழுகை உள்ளது.

நமக்கிடையே இன்று தொழுகை ஒரு வழிபாட்டுச் சடங்கு என்ற அளவிலேயே உள்ளது. உண்மையில் ஷரீஅத்தின் குறியீட்டு அடையாளமாகவே தொழுகை திகழ வேண்டும். தூதரின் தோழர்கள் தூய சஹாபாக்கள் காலத்தில் தொழுகை ஒரு கொள்கைக் குறியீடாகவே அடையாளம் காணப்பட்டது. இஸ்லாமை யார் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளார்? யார் இஸ்லாமில் இன்னும் முழுமையாக நுழையவில்லை? என்பதை இனங்கண்டு கொள்ளும் கருவி யாகவே தொழுகை திகழ்ந்து வந்தது. அதனால் தான், முஸ்லிம்களாக தங்களை இனங்காட்டிக் கொண்டால் தான் இஸ்லாமிய சமூக அமைப்பினுள் ஊடுருவி குழப்பங்களை ஏற்படுத்த இயலும் என்று விரும்பிய இரட்டைவேட முனாஃபிக்குகள் கூட தவறாது பள்ளிவாசலுக்கு தொழுக வந்து கொண்டிருந்த காட்சியை நம்மால் காண முடிகிறது.

கொள்கை வேறுபாட்டை விளக்கிக் காட்டும் கலங்கரை விளக்கத்தை இன்று நாம் சடங்கு வட்டத்தில் அடைத்துச் சிறை வைத்து விட்டோம். தொழ வராதவர்கள் கூட இன்றைக்கு நம்மிடையே இறையில்லக் காப்பாளர்களாக வலம் வருகின்ற அவல நிலையைக் காண முடிகிறது.

தொழுகை என்பது இஸ்லாமிய இதாஅத்துக்கும் இறை நிராகரிப்புக்கும் இடையிலான எல்லைக்கோடு என்பதை குர்ஆனும், சுன்னாவும் நமக்கு தெளிவாக உணர்த்திக் கொண்டு உள்ளன.

திருமறை குர்ஆன் கூறிக்கொண்டுள்ளது.

அல்லாஹ்வின் பக்கம் திரும்பியவர்களாய் (அதில் நிலைத்திருங்கள்) அவனுக்கு

மட்டுமே பயப்படுங்கள், தொழுகையை நிலைநாட்டுங்கள். இணை வைக்கும்

முஷ்ரிக்கீன்களாக ஆகி விடாதீர்கள். (ரூம் – 31)

எல்லாக் கொள்கைகளையும் புறக்கணித்துவிட்டு ஓரிறைக் கொள்கை மட்டுமே ஹக் என்று அடையாளங்கண்டு அல்லாஹ்வின் பக்கமே திரும்பி விட்டால், அதிலேயே நிலைத்திருக்க ஆசைப்பட்டால், அல்லாஹ்வுக்கு மட்டுமே பயந்து வாழ விரும்பினால் அதற்கான வெளிப்பாடு தொழுகை மட்டுமே! அதே போல் முஷ்ரிக்கீன்களை விட்டும் விலகிநிற்க விரும்பினால், இறை நிராகரிப்பாளர்களை விட்டும் வேறுபடுத்திக் காட்டிக் கொள்ள விரும்பினால் அதற்கான வழியும் தொழுகை ஒன்றே!

எனவே தான், தொழுகைக்கு சஹாபாக்கள் மிகுந்த முக்கியத்துவத்தை அளித்துள்ளார்கள். ஜமாஅத்தோடு தொழுக வராதவன் முனாஃபிக் என்று முடிவு கட்டினார்கள். ஷிர்க்கையும், ஈமானையும் வேறுபடுத்திக் காட்டும் தொழுகையை சிதைத்துக் கொள்வதை அவர்கள் விரும்பவில்லை. பிற்காலத்தில் தொழுகை அமைப்பில் சிற்சில குறைபாடுகள் ஏற்பட்டதைக் கூட அவர்களால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை.

ஈமானை ஏற்றுக் கொண்ட பிறகு இறைவனை, இறைவழியை தன் வாழ்க்கை இலட்சியத்தை என்றும் பசுமையாக இறை நம்பிக்கையாளன் தன் நினைவில் நிறுத்த வேண்டும். நினைவில் இருந்து நீங்கிவிட்டால் இறைவனும் நீக்கி விடுவான்.

எவர்கள் அல்லாஹ்வை மறந்துவிட்டு இருக்கிறார்களோ அவர்கள் தங்களையே  மறந்துவிடும்படி அல்லாஹ் செய்து விட்டான். (ஹஷர் – 19)

இரவு பகல் ஐவேளை முறையாகத் தொழுது கொண்டிருந்தால் எங்கிருந்து வரும் மறதி? அலட்சிய அழுக்கும், மறதி மாசும் மனதில் என்றுமே படியாது அல்லவா? அப்படியே வந்தாலும் திக்ருல்லாஹ் என்ற ஓடை அடித்துக் கொண்டு சென்று விடாதா அவ்வழுக்கை?

எவர்கள் இறையச்சம் தக்வாவைப் பெற்றிருக்கிறார்களோ அவர்களுக்கு

ஷைத்தானுடைய தாக்கத்தினால் ஏதேனும் தீய எண்ணம் ஏற்பட்டால் உடனே அவர்கள்

“நினைவு” கூறுகிறார்கள். விழிப்படைந்து விடுகிறார்கள்! (அஃராஃப்-201)

அழுக்கை அகற்றும் தொழுகையின் இந்தப் பண்பினைத் தான் புஃகாரியின் ஹதீஸ் கீழ்வருமாறு வர்ணிக்கிறது.

“உங்களில் ஒருவர் வீட்டு முற்றத்தில் ஆறொன்று ஓடிக் கொண்டுள்ளது. நாளொன்றுக்கு ஐந்து முறை அதில் அவர் குளிக்கிறார் என்றால் மிஞ்சி இருக்குமா அவர் உடம்பில் அழுக்கு எதுவும்?” என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள். “இல்லை! அவர் உடம்பில் அழுக்கெதுவும் ஒட்டியிருக்காது!” என்றார்கள் தோழர்கள். “ஐவேளைத் தொழுகையின் உதாரணமும் அவ்வாறே! தொழுகைகளைக் கொண்டு அல்லாஹ் தவறுகளைத் துடைத்து விடுகிறான்!” என்றார்கள் பெருமானார்  (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்).

நாம் இன்றைக்கு தொழுகையை சடங்காக ஆக்கிவிட்டதால், அது தன் இயற்தன்மையை இழந்து நிற்கின்றது. முகவரி அற்றுப் போய்விட்டது. வெற்றுச் சடங்குகள் இறைவனின் நெருக்கத்தை என்றுமே பெற்றுத் தருவதில்லை. அவை மோதல்களையும், பிளவுகளையுமே உருவாக்குகின்றன. அவற்றைத் தான் நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டுள்ளோம்.

நாம் தொழுகையை தொலைத்து விடும் நிலையில், முற்றிலும் அபாய கட்டத்தில் உள்ளோம். நாம் ஒரு பக்கம் உள்ளிருந்தவாறே தொழுகையை சுரண்டிக் கொண்டிருக்க வெளியிலிருக்கும் தாகூத்திய சக்திகளும் தம் பங்குக்கு தொழுகைக்கு சமாதிகட்ட நினைக்கின்றன. இறையில்லங்களைக் குறி வைத்து தாக்குகின்றன!

அண்ணலெம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி ல்லம்) அவர்கள் எச்சரித்துச் சென்றுள்ளார்கள்.

(ஒரு காலம் வரும் அப்போது) இஸ்லாமின் பிடிமானங்கள் ஒவ்வொன்றாக, ஒவ்வொன்றாக அறுந்து விழுந்து கொண்டே செல்லும். ஒவ்வொரு பிடிமானம் அற்று விழும் போதும் (அதை இறுக்கிக்கட்ட முயற்சி பண்ணாமல்) மக்கள் எஞ்சியுள்ளவற்றைக் கொண்டே திருப்தி அடைந்து கொள்வார்கள்! முதன் முதலாக அறுந்து வீழ்வது ஆட்சியதிகாரம் ஆகும். கடைசியாக அறுந்து வீழ்வது தொழுகை ஆகும்! (தர்கீப்)

அத்தகைய கேடுகெட்ட நிலையை நோக்கி நாம் சென்று கொண்டுள்ளோமோ என்று மிகவும் அச்சமாக இருக்கின்றது. நமக்கு முன்னால் சென்ற பனூ இஸ்ராயீல்கள் இதே போன்றதொரு நிலையை அடைந்து உள்ளார்கள். ஃபிர்அவ்ன் மீதான பயத்தினாலும் கொடுமைகளைத் தாங்க முடியாமலும், துணிச்சலையும், தக்வாவையும் ஜிஹாதிய உணர்வையும் இழந்து போய், அவர்கள் கூட்டுத் தொழுகையையே கைவிட்டு விட்டார்கள். இதனை வான்மறை குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

மேலும் நாம் மூஸாவுக்கும் அவருடைய சகோதரருக்கும் வஹி அறிவித்தோம். உங்களுடைய சமுதாயத்துக்காக எகிப்தில் சில இல்லங்களை கிப்லா ஆக்கிக் கொண்டு தொழுகையை நிலை நாட்டுங்கள்! (யூனுஸ் – 87)

அரசு பயங்கரவாதம், ஆட்சியாளர்களின் கொடுங்கோன்மை போன்றவற்றை தாங்கமுடியாமலும் தங்களுடைய சொந்த ஈமான் பலம் குன்றிப் போய்விட்டதாலும், கூட்டுத் தொழுகையையே அவர்கள் கைகழுவி விட்டார்கள். என்ன கொடுமை இது? மார்க்கத்தின் முக்கியமான பிடிமானத்தையே – கடைசிப்பிடிமானத்தையே – அவர்கள் இழந்துவிட்டபோது அவர்களுடைய தீன் – இஸ்லாம்- மரண விளிம்புக்கே சென்றுவிட்டது!

செத்துப்போன உணர்வுகளை உயிர்ப்பித்து இஸ்லாமிய எழுச்சியூட்டிய பிறகே மூஸா அலைஹிஸ்ஸலாம் கூட்டுத் தொழுகை முறையை – இகாமத்துஸ் சலாத்தை மறுநிர்மானம் செய்தார்கள்.

அத்தகைய ஒரு மோசமான முன்னுதாரணம் நம்முடைய சமூக வாழ்விலும் ஏற்பட்டு விடக்கூடாது. நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

ஹுனைன் போரின் போது முஷ்ரிக்கீன்கள் ஒரு மரத்தின் கிளையை நிர்ணயித்து அதில் தமது வாட்களை தொங்கவிட்டிருந்தார்கள். “ஸாதுல் அவ்தாத்” என்று பெயர் சூட்டி அதனைப் புனிதப்படுத்தினார்கள். அதே போல தமக்கும் ஓர் அடையாளக் குறியீடு – வாட்களைத் தொங்கவிட – ஏற்படுத்தித் தருமாறு தோழர்கள் அண்ணலார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வேண்டுகோள் வைத்தார்கள். “நீங்கள் பனூ இஸ்ராயீல்களைப் போலவே செயல்படுகிறீர்கள். நிச்சயமாக உங்கள் முன்னால் சென்ற சமூகத்தினரை நீங்கள் அப்படியே பின்பற்றுவீர்கள்!” என்று கடிந்து கூறினார்கள் அண்ணலார் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்)

தொழுகையைப்பற்றி ஏற்கனவே தமிழில் பல நூற்கள் வெளிவந்துள்ளன. ஏறக்குறைய அனைத்துமே தொழுகையின் வடிவத்தைப் பற்றி பேசுகின்றன. தொழுகையின் வடிவத்தில் எழுந்த கருத்து மோதல்கள் நம்முடைய பள்ளிவாசல்களைப் பிரித்து, முஹல்லாக்களைப் பிளவுபடுத்தி விட்டதையும் நாம் காண்கிறோம். அவ்வரிசையில் அமையாமல் இந்நூல் தொழுகையின் நோக்கத்தைப் பற்றியும், அதன் உயிரோட்டத்தைப் பற்றியும் பேசுகிறது.

என்னால் இயன்றவரை தொழுகை சம்பந்தமான முக்கியமான விஷயங்களைத் தொகுத்துள்ளேன். உங்களுடைய தொழுகையில், தொழுகை பற்றிய உங்களுடைய கண்ணோட்டத்தில் ஒரு சின்னஞ்சிறு மாற்றத்தையாவது ஏற்படுத்தினால் அதுவே இந்நூலுக்கான வெற்றியாகும்!

நீண்ட முன்னுரையைப் படிக்கும் வழக்கம் பொதுவாக தமிழ் முஸ்லிம்களுக்கு இல்லை என்பதால் நாம் நேரடியாக நூலுக்குள் செல்வோம்.

உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்த நல் உள்ளங்கள் வெளிவரத் துணை நின்ற நட்புக்கரங்களுக்கு உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நூலை வெற்றிகரமானதாக ஆக்கித் தந்தருளுமாறும் தொகுத்தவனுக்குத் தன்திருப்தியை வழங்குமாறும் வல்ல அல்லாஹ்விடம் மன்றாடுகிறேன்.

பணிவுடன்

சையத் அப்துர் ரஹ்மான் உமரி

 

 

உட்பொதிந்தவை

 

1. தொழுகையின் நோக்கம்

 

மனிதப்படைப்பின் நோக்கம்

அடிபணியும் முஸ்லிம்கள்

திக்ருல்லாஹ்

தொழுகை – சலாத் என்றால் என்ன?

மார்க்கத்தில் தொழுகையின் நிலை!

தீனின் துவக்கப் புள்ளியும் தொழுகையும்

இறைவனோடான ஒப்பந்தம்

அடையாளம் மட்டுமல்ல, அஸ்திவாரமும் கூட!

நம்முடைய நிலை!

 

2. தொழுகை முறை

 

தொழுகைக்கான தயாரிப்பு

தொழுகை நேரங்கள்

தொழுகையின் வடிவம்

தொழுகும் முறை

ருகூஃ

சுப்ஹான ரப்பியல் அளீம்

ஸஜ்தா

தஷஹ்ஹுத்

பாவங்களைக் கழுவும் நீரோடை

தயார்படுத்தம் சுன்னத்துகள்

ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு

இஹ்ஸானுஸ் சலாத்

ஹிஃப்ழுல் குர்ஆன்

 

3. தொழுகையைத் தாக்கும் நோய்கள்

 

சோம்பல்

வஸ்வஸா-ஊசலாட்டங்கள்

ஓதுவதில் கவனமின்மை

திருட்டு

பகட்டு-ரியா

 

4. இகாமத்துஸ் சலாத்தும் இகாமத்தும் தீனும்

 

முஸ்லிம் உம்மாவின் கடமை

இன்னல்களுக்கான அருமருந்து

துன்பங்களைப் போக்க வல்லது

 

5. சமூகங்களின் வாழ்வும் வீழ்ச்சியும்

 

6. நினைவிலேயே கழிகின்றன நிமிடங்கள்

 

1. தொழுகையின் நோக்கம்

 

மனிதப்படைப்பின் நோக்கம்

மனிதன் இவ்வுலகில் வீணாக படைக்கப்படவில்லை. தேவையற்று அவன் விட்டு வைக்கப் பட வில்லை. வேலையற்று இறைவன் விளையாட்டுத் தனமாய் மனிதனையும் மகத்தான பிரபஞ்சம் மற்றுமேனைய பொருட்களையும் படைக்கவில்லை. மாறாக ஒரு தெளிவான நோக்கத்திற்காகவே மனிதன் படைக்கப்பட்டுள்ளான். அவன் பயணிக்க வேண்டிய ஓர் இலட்சியப் பாதை அவன் முன்னே திட்டவட்ட             மானதாய் உள்ளது. உலகையும், உலகு இயங்கும் முறையையும் கருத்தூன்றி கவனிப்பவர்கள் இவ்வுண்மையை தெளிந்த சிந்தையோடு ஒப்புக் கொள்கின்றார்கள்.

வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒருங்கமைப்பிலும் இரவு- பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடை யோருக்குப் பல சான்றுகள் உள்ளன. அவர்கள் எத்தகையவர்கள் எனில் நிற்கும் போதும், உட்காரும் போதும், படுத்திருக்கும் போதும் – ஆக எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை நினைக்கிறார்கள். மேலும் வானங்கள் மற்றும் பூமியின் அமைப்பைப் பற்றி சிந்திக்கிறார்கள்.(பிறகு உணர்ச்சி பொங்க முழங்குகிறார்கள்) ‘எங்கள் இறைவா! இவை அனைத்தையும் நீ வீணாகப் படைக்கவில்லை!’

(ஆல இம்ரான் -190,191)

இவ்வுலகின் உயர்படைப்பினமாக மனிதனைப் படைத்து மற்ற அனைத்து படைப்பினங்களையும் அவனுக்குக் கீழ்படிந்து கடமையாற்ற வைத்த இறைவன் எந்த நோக்கமுமின்றி வெட்டி வேலையாக, விளையாட்டுச் செயலாக இவற்றை செய்திருக்க வாய்ப்பே இல்லைஸ அப்படி ஒரு வேளை மனிதன் நினைத்துக் கொண்டால் அது அவனுடைய மடத்தனமாகவே இருக்கும்.

மனிதன் (அவிழ்த்துவிடப்பட்ட காளைமாட்டைப் போன்று) வெறுமனே விட்டு விடப்படுவான் என்று எண்ணிக் கொண்டுள்ளானா? (அல் கியாமா – 36)

வான்மறை குர்ஆனில் வல்ல அல்லாஹ் நம்மைப் பார்த்துத் தான் கேட்கிறான் –

உங்களை நாம் வீண் விளையாட்டாய் படைத்துள்ளோம் என்ற எண்ணிக் கொண்டுள்ளீர்களா?

(முஃமினூன்-115)

இல்லையில்லை, இல்லவே இல்லை! ஒரு தெளிவான நோக்கத்திற்காகத்தான் அவன் நம்மைப் படைத்துள்ளான்.

நான் ஜின்களையும், மனிதர்களையும் எனக்கு அடிபணிய வேண்டும் என்பதற்காகவே அன்றி வேறு எதற்காகவும் படைக்கவில்லை! (ஸாரியாத் – 56)

அடிபணியும் முஸ்லிம்கள் –

இந்நோக்கத்தை நன்கு விளங்கி, மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு, முழுமையாக அடிபணிகிறவர்களே முஸ்லிம்கள் ஆவார்கள். நம்முடைய வாழ்வை நாம் எப்படி நடத்த வேண்டும் என்று தெளிவான பாதையை இறைவன் வகுத்துத் தந்துள்ளான். அச்சுப் பிசகாமல் அப்படியே அப்பாதையைப் பின்பற்றுவோம் என்று நாம் ஒப்புக் கொண்டுள்ளோம். ஆகையால் நாம் முஸ்லிம்கள் கீழ்படிகிறவர்கள் அடிபணிகிறவர்கள் என்று அழைக்கப்படுகிறோம்!

இறைவனுக்கு மட்டுமே அடிபணிகின்ற இந்தத் தன்மை நம் முழுவாழ்க்கையையும் சூழ்ந்து உள்ளது. இறைவனின் வஹி மீது அளவற்ற நம்பிக்கை, அவனுடைய தீர்மானங்களின் மீதான ஈமான், அவனுடைய ஆணைகளுக்கும், கட்டளைகளுக்கும் கட்டுப்படுகின்ற தன்மை. அவனுடைய ஆற்றல், அதிகாரத்துக்கு முன்னால் தாழ்ந்து போகின்ற மனப்பான்மை, அவனுடைய கோபத்தை எண்ணி பயம், அவனுடைய திருப்தியையும் அன்பையும் தேடும் குணம், துன்பங்கள் துயரங்களின் போது பொறுமை, நிலைகுலையாமை, கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றும் பண்பு தடுக்கப்பட்ட, தவறான செயல்களை விட்டு விலகி இருத்தல், தேவையற்ற, வெட்டிவேலைகளைத் தவிர்த்து விடல், விரும்பத்தகுந்த நற்செயல்களில் ஆர்வம், மனதில் மனிதநேயத்தின் வளர்ச்சி, பொதுமக்கள், மானுட குலத்து நலனின் மீதான அக்கறை, தீனையும், ஷரீஅத்தையும் பரப்பும் முயற்சி, வாய்மைக்கும் சத்தியத்திற்கும் உறுதுணையாய் விளங்கும் தன்மை, தீமைக்கும் அசத்தியத்துக்கும் எதிராய் ஜிஹாத், தீனை நிலைநாட்டவும் ஷரீஅத்தை செயல்படுத்தவும் இடைவிடாத முயற்சி. ஆக, இவை அனைத்துமே அடிபணிதலில், இபாதத்தில் அடங்குகின்றன. இவற்றில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர்களே, இறைவன் பார்வையில் உண்மையான முஃமின்களாக கணிக்கப்படுவார்கள்!

நம்மைப் படைத்து நமக்குத் தேவையான வாழ்க்கை வசதிகளையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்த இறைவன் நம் வாழ்க்கைக்கான வழி காட்டுதல்களையும் வழங்கியே உள்ளான். நம்முடைய இலட்சியப்பாதை எது? எந்த வழியை நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டால் வெற்றி பெறுவோம், என்பதையும்

அறிவித்துக் கொடுத்துள்ளான்.

“நாம் அவனுக்கு வழிகாட்டிவிட்டோம். இனி அவன் நன்றி உள்ளவனாகவும் இருக்கலாம் அல்லது நன்றி கொன்றவனாகவும் இருக்கலாம்.” (தஹ்ர் – 3)

(நன்மை, தீமையின்) தெளிவான இரு வழிகளை நாம் அவனுக்கு காட்டிவிட்டோம். (பலத் – 10)

ஆக, நம்முன் இருவழிகளும் உள்ளன. அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிபணிந்து முஸ்லிமாக வாழும் வழியையா? அல்லது, அல்லாஹ்வுக்கு மாறு செய்து அவன் கோபத்துக்கு ஆளாகும் வழியையா? எதனை நாம் தேர்ந்தெடுக்கப் போகின்றோம்? இது தான் நம்முன் உள்ள சவால், சோதனை! நாம் முஃமின்களாக

இருப்பதும் இல்லாமல் போவதும் இதற்கான விடையிலேயே தான் உள்ளது!

மலக்குகளால் ஸஜ்தா செய்யப்படும் உயர்மாண்பு படைத்த மனிதன் இதற்கான சரியான விடையை விளங்கி வழிபடுவதை அவனுடைய நிரந்தரப் பகைவனான இப்லீஸ் ஒரு போதும் சகித்துக் கொண்டிருக்க மாட்டான். அவனை எப்படியாவது எவ்வழியிலாவது வழிகெடுக்கவே முயற்சி செய்வான்.

(காண்க – 15 – 39)

நம்முன் இரண்டு வழிகளும் தெளிவாக இருந்த போதிலும் நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் ஷைத்தானையும் அவனுடைய தோழர்களையுமே அதிகமாக சந்தித்துக் கொண்டுள்ளோம். இறைவனை நம்மால் தினந்தோறும் சந்திக்க இயலாது. அவன் வழியின் பக்கம் அழைக்கின்ற வானவர்களையோ, தூதர்களையோ நாம் சந்திப்பதில்லை. ஆனால் ஷைத்தானை மனித உருவிலும், வேறு வடிவங்களிலும் நாம் சந்தித்துக் கொண்டே உள்ளோம். *நாம் நம்முடைய தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவன் இலாபத்தைக் கொண்டு வந்து நம் கண் முன்னால் நிறுத்துகின்றான். ஷரீஅத்தையும், சரியென்று நீ நினைப்பதையும் விட்டுக் கொடுத்தால், சட்டென்று ஒரு பொய் பேசினால், நேர்மையைக் கொஞ்சமே கொஞ்சம் கலங்க அடித்தால் பெருத்த லாபம் கிடைக்குமே என்று ஆசைகாட்டுகின்றான். கரன்ஸி நோட்டுகளோடு நம் முன்னே பார்ட்டி நம்முடைய பதிலுக்காக காத்திருக்கும் போது நம்முடைய ஈமான் கொஞ்சம் கலக்கமடையத்தான் செய்கின்றது. பயணத்தில், பிரயாணத்தில் அழகிய மங்கையரும் தவறான காட்சிகளும் நம் தக்வாவைச் சோதிக்கத்தான் செய்கின்றன. உழைத்துக் களைத்து, வேலையை முடித்து மாலைப்பொழுதினை நாம் அடையும் போது நண்பர்களில் ஒருவனாக நம்முன்னே அவன் வந்து நிற்கின்றான். பொழுது போக்கு நிகழ்ச்சி ஒன்றிற்கு போகலாம் வாவென்று வலிய அழைக்கின்றான். தொழுகை தடைபடுமே என்று நாம் தயங்கி நின்றாலும் விடுவதில்லை. கடைசிக்கு கடைவீதியையாவது சுற்றிவரலாம் வா என்கின்றான். கடைவீதி! மலிவான விலைக்கு தக்வாவை அங்குதானே எடைக்கு எடுத்துக் கொள்கிறார்கள்.

வாழ்க்கை வழி காட்டிய இறைவன் நம்வழிப்பயணத்தில் எதிர்ப்படும் இந்தச் சிக்கலுக்கு தீர்வொன்றைச் சொல்லாமல் இருப்பானோ? இறைவனை மறந்த உள்ளத்தைத் தானே ஷைத்தான் தேடி வருவான், என்றும் சுடர் எரிந்து கொண்டிருக்கும் அறையில் எப்படி வரும் இருட்டு? எனவே அல்லாஹ் ஜல்லஷானஹுத் தஆலா தன் திருமறையில் விளக்கொன்றை, தீர்வொன்றை விளக்கியுள்ளான்.

என்னை நினைவு கூறுவதற்காகத் தொழுகையை நிலை நிறுத்துவீராக இருப்பதும் இல்லாமல் போவதும் இதற்கான விடையிலேயே தான் உள்ளது! (தாஹா – 14)

ஆக, தொழுகையின் நோக்கம் இதுதான்! இறைவனை நினைவு கூர்வது! அல்லாஹ்வை நினைவு படுத்திக் கொண்டே இருங்கள். அல்லாஹ்வை மறந்து விடாதீர்கள். அவன் உங்களை எதற்காகப் படைத்தான்? எந்த நோக்கத்திற்காக நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்? என்பதை மறந்து விடாதீர்கள் என்று, தொழுகை நமக்கு நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது. நம்முடைய ஈமானை இலட்சியத்தைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.

சகோதர, சகோதரிகளே! இதற்காகத்தான் இந்த நோக்கத்திற்காகத்தான் இறைவன் நம்மீது ஐவேளைத் தொழுகையை கடமையாக்கி உள்ளான். தொழுகையின் பொழுதுகளையும், நேரங்களையும் சற்று சிந்தித்துப் பார்த்தால் இது விளங்கி விடும். நாம் நம்முடைய ஒவ்வொரு தினத்தையும் தொழுகையைக் கொண்டே துவக்குகிறோம். நாம் அதிகாலையில் விழித்து எழுந்ததும் இறைவனுக்கு முன்னால் கைகட்டி நின்று ‘இறைவா நான் உன்னுடைய அடிமை! உன்னுடைய வழியிலேயே என் வாழ்நாளைக் கழிப்பேன்! உன் கட்டளைகளை ஒரு போதும் மீற மாட்டேன்’ என்று உறுதிப்பிரமாணம் எடுத்துக் கொள்கிறோம்.

இறை நினைப்பிலேயே நம்முடைய நாள் துவங்குகின்றது. பிறகு படிப்படியாக உலக காரியங்களில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பிக்கிறோம். வேலை, வியாபாரத்தில் மூழ்கிவிடுகிறோம். உலக அலங்காரம் நம்மையும் விட்டு வைப்பதில்லை. நம்முடைய ஈமானும் கொஞ்சம் மங்கி தேய்ந்துவிடும் போலுள்ளது. திடீரென்று ஹய்ய அலல்ஃபலாஹ் என்றொரு குரல்! நாம் உடனே தயாராகி இறையில்லத்தை அடைகிறோம். இறைநினைவும், ஈமானிய உணர்வும் மீண்டும் புத்தெழுச்சி பெறுகின்றன. திரும்பி வந்து தொடர்ந்து நாம் நம்முடைய வேலைகளில் மூழ்கினாலும், நம்முடைய ஈமான் வலிமை பெற்று கவசமாக நம்மை காக்கின்றது. அப்பொழுது தான் தொழுது முடித்து வந்த ஒருவன், வந்தவுடனே பொய் சொல்வானா? ஏமாற்ற நினைப்பானா? நேர்மையைத் தொலைப்பானா? இல்லை! சாத்தியக் கூறுகள் குறைவு தானே!

மனதை மயக்கும் மாலைப் பொழுதில் தொடர்ந்து இரண்டு தொழுகைகள் அசரும், மஃரிபும் நம்மை அடைகின்றன. உலகின் ஷைத்தான்கள் எல்லாம் மாலைப் பொழுதில் தான் கும்மாளம் போடுகின்றார்கள். கடைவீதிகள் கலகலக்கின்றன. ஷாப்பிங் கூட்டம் அலை மோதுகின்றது. வியாபாரத்தோடு வேறு விஷயங்களும் சூடு பிடிக்கின்றன. பொழுது போக்கு, மனமகிழ் நிகழ்ச்சிகள் எல்லாம் மாலை நேரங்களில் தாம் அரங்கேறுகின்றன. மாலைக் காட்சிகளுக்கு மக்கள் அலை அலையாய் வருகிறார்கள். வேறு வம்பு வேண்டாம், வீடு சென்று விடலாம் என்றாலும் அங்கும் ஒரு ஷைத்தான் வரவேற்பறையில் சம்மணம் போட்டுக் கொண்டு அமர்ந்துள்ளான். சிறப்பான காட்சிகள் எல்லாம் சேனல்களில் சாயங்காலம் தான் தொடங்குகின்றன. ப்ரைம் ஹவர்ஸ் என்று அந்த நேரத்து நேயர்களைக் கொண்டுதான் ரேட்டிங்கே கணக்கிடப்படுகின்றது.

ஆக, பெரிதாய் வலை விரிக்கப்படும் படுபயங்கர மாலைப் பொழுதில், அசரும் மக்ரிபும் வந்து நம்மைக் காக்கின்றன. ஷைத்தானிய தாக்குதலை அவை தடுக்கின்றன. கடைசியில், நாம் நம்முடைய வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு இபாதத் கணக்கை, ஆன்மிகக் கணக்கை அல்லாஹ்விடம் இஷாத் தொழுகையில் ஒப்படைக்கிறோம். ‘என்னிறைவா! என்னால் இயன்றவரை உன் வழியில் இந்நாளை கழித்துவிட்டேன்!’என்று திருப்தி அடைந்தவர்களாக நம்முடைய வாழ்வு அதன்படி கழிந்திருந்தால் திருப்தி அடைந்தவர்களாக படுக்கைக்குச் செல்கிறோம்.

சகோதர, சகோதரிகளே! கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அல்லாஹ் ஏன் தொழுகையை ஐந்து வேளைகளில் பிரித்து பிரித்து வைத்துள்ளான்? அதுவும் குறிப்பிட்ட நேரங்களில் தொழுவதையே கடமையாக ஆக்கியுள்ளான்? நேரம் தவறினால் தொழுகை கூடாது என்று கூறியுள்ளான்? என்ன காரணம்?

ளுஹரிலும், அசரிலும் அவசர அவசரமாக ஓடிச் சென்று அரக்கப்பறக்க தொழுதுதள்ளுவதைவிட நிம்மதியாக இரவிலோ, சுபுஹ்விலோ நிறைவேற்றுவதுதானே சிறந்தது? ஏன், ஐவேளைத் தொழுகைகளையும் ஒன்றாக்கி ஒரே வேளையில் நிம்மதியாக ராஹத்தாக தொழுகக் கூடாது? அல்லது பிறமதத்தவர்கள் செய்வது போல ஏதேனும் ஒரு நாளை ஒதுக்கி ஒரு வாரத்தைய ஒட்டுமொத்த தொழுகைகளை எல்லாம் தொழுதாலும் நல்லது தானே? விடுமுறை நாளிலோ, அல்லது விடுமுறை போட்டுக் கொண்டோ அமைதியாகத் தொழுகலாம் அல்லவா?

ஷரீஅத் இதற்கெல்லாம் அனுமதி அளிக்காததற்குக் காரணம் இது ஒன்று தான், திக்ரு! இறைவனை நினைவு கூறுவது, இலட்சியத்தை நினைவு கொள்வது, திசைமாறிச் செல்லாமல் நிலைத்து இருப்பது!

திக்ருல்லாஹ்

நாம் மனதில் நினைக்கும் “எண்ணங்களே செயல்களாக வடிவம் பெறுகின்றன!” என்று அண்ணலார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இதனையே குறிப்பிடுகிறார்கள். நாம் எதைப்பற்றி அடிக்கடி சிந்தித்துக் கொண்டே இருக்கிறோமோ, அது அப்படியே நம் மூளையில் பதிந்து போய், அதை நோக்கி, அதை அடைய நாம் படிப்படியாய் முயற்சி செய்ய ஆரம்பிக்கிறோம். நம் சிந்தையை ஆக்கிரமிக்கும் எண்ணங்களே நம் செயல்களுக்கான பாதையைத் தீர்மானிக்கின்றன!

நாம் படைக்கப்பட்ட நோக்கத்தைப் பற்றியும் நம்மீது இறைவன் சுமத்தியுள்ள கடமைகளைப் பற்றியும் தொழுகை நமக்கு நினைவூட்டிக் கொண்டே உள்ளது. வாழ்விலக்கை நினைவில் கொண்டு சரியான பாதையை நாம் பற்றிப் பிடித்துக் கொள்கிறோம்.நம்முன் வாய்விரித்து அகலமாய் காத்துக் கொண்டிருக்கும் கணவாயை அடையாளங்கண்டு அதனை விரைந்து கடக்க தயாராகிவிடுகிறோம். (காண்க – 90 – 11)

நினைவூட்டுவதே தொழுகையின் நோக்கம்! வல்ல அல்லாஹ் வேறு பல இடங்களிலும் இதனையே கூறி உள்ளான்.

மேலும் தன் இறைவனின் பெயரை நினைவு கூர்ந்தான்.தொழுகையை நிறைவேற்றினான்.

(அல்அஃலா – 15)

உம் இறைவனின் பெயரை நினைவு கூர்ந்து கொண்டிருப்பீராக! மேலும் அனைத்தையும் விட்டு அவனுக்காகவே ஆகிவிடுவீராக! (முஸ்ஸம்மில் – 8)

‘தபத்தல் இலைஹி’ அவனுக்காகவே ஆகிவிடு! என்பதன் பொருள் அவனையே தொழுதுவா என்பதை இதற்கு முந்தைய வசனத்தை முன்வைத்துப் புரிந்து கொள்கிறோம்.

தொழுகை என்றாலே திக்ருல்லாஹ் தான் என்பதை இன்னுமொரு வசனம் மிகத் தெளிவாகவே குறிப்பிடுகின்றது.

்”இறைநம்பிக்கை கொண்டவர்களே! வெள்ளிக் கிழமை அன்று தொழுகைக்காக அழைக்கப்படும் போது அல்லாஹ்வை நினைவு கூர்வதன் பக்கம் விரைந்து சொல்லுங்கள்! (ஜும்ஆ-9)

தொழுகை-சலாத்-என்றால் என்ன?

சலாத் என்றால் ஒரு பொருளை நோக்கி முன்னேறுவது என்பது நேரடிப் பொருள் ஆகும்.ருகூஃ, தஃழீம், தழர்ருஃ, துஆ போன்றவையும் இதே பொருளிலேயே பயன்படுகின்றன. பன்னெடுங்காலமாகவே சலாத் என்ற இச்சொல் இபாதத் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. கல்தானி மொழியில் (The Ancient Chaldeans – What is Now Southern Iraq) துஆ மற்றும் தாழ்மை பணிவு (தழர்ருஃ) எனும் பொருளில் வழங்கி வந்துள்ளது. ஹிப்ரு மொழியில் (Language of Ancient People Living in what in now Israel and Palastine, who Established The King of Israel and Judah) வழிபாடு மற்றும் சிரம் குனிதல் (ருகூஃ) எனும் பொருளில் வழங்கி வந்துள்ளது.

நரகை நோக்கி தீயவர்களை முன்னோக்கி அழைத்துச் சென்று தள்ளுவதைக் குறிக்கவும் வான்மறை இதே சொல்லையே கையாள்கிறது.

விரைவில் அவன் நரகில் போடப்படுவான் (லஹப் – 3)

கொழுந்து விட்டெரியும் நரகத்தில் போய் வீழ்வான். (இன்ஷிகாக் – 12)

நரகத்தில் வீசப்படுவதும் தான்! (வாகிஆ – 94)

இறைவனை நோக்கி நம்மை முன்னேற்றுகின்றது. இறைவனை நாம் நெருங்கச் செய்கின்றது என்பதால் தான் தொழுகையை சலாத் என்று அழைக்கிறோம்.

மார்க்கத்தில் தொழுகையின் நிலை

தீனின் தொழுகை மிகமிக முக்கியமான இடத்தை வகிக்கின்றது! ஈமானையும் குப்ரையும் பிரிக்கின்ற எல்லைக் கோடாகத் திகழ்கின்றது. அண்ணலெம் பெருமானார் சல்லல்லாஹு அலைஹி வசல்லிம் அருளியுள்ளார்கள்“நிராகரிப்புக்கும், நம்பிக்கைக்கும் இடையே தொழுகையை விடுவது எல்லைக் கோடாகும்!”(திர்மிதி)

அன்ன பைனர் ரஜுலி வ பைனஷ் ஷிர்க்கி வல் குஃப்ரி தர்க்குஸ் சலாத்தி என்றொரு ஹதீஸும் முஸ்லிமில் பதிவாகி உள்ளது.

அண்ணலார் காலத்தில் சஹாபாக்கள் இதற்கு மிகவும் முக்கியத்துவம் தருபவர்களாக இருந்தார்கள். காஃபிரையும் முஸ்லிமையும் அவன் தொழுகைக்கு பள்ளிக்கு வருவதைக் கொண்டு தான் பிரித்து அறியப்பட்டது. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூதின் ஓர் அறிவிப்பிலிருந்து நாம் இதை விளங்கிக் கொள்கின்றோம். எப்படி உலக இயக்கங்கள், தமது பொதுக் குழுவில் தொடர்ந்து பங்குபெறாத ஒருவனை தமது உறுப்பினராக அங்கீகரிக்க மறுக்கின்றனவோ அவ்வாறே தொழுகாத ஒருவனை முஸ்லிமாகக் கருதாத நிலையே அன்று நிலவியது!

தீனில் தொழுகைக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருந்தது என்பதை உமர் (ரழியல்லாஹு அன்ஹு) தம்முடைய ஆளுநர்களுக்கு எழுதியுள்ள ஓர் அரசாணையிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.                       “உங்களுடைய செயல்களிலேயே என்னிடம் மிகவும் முக்கியத்துவம் பொருந்தியது தொழுகையே ஆகும். எவன் அதைப் பேணுபவனாகவும் கண்காணிப்பவனாகவும் இருக்கின்றானோ அவன் தன்னுடைய தீனைக் காத்துக் கொள்வான். எவன் அதைத் தொலைத்துவிட்டானோ மற்ற தீனுடைய விஷயங்களை இதை விடவும் அதிகமாக தொலைத்துவிடுவான்!”

ஆகையால், தெரிந்தே ஒருவன் தொழுகையை விடுகிறான் என்றால் அவன் நிராகரிப்பின் குஃப்ரின் எல்லைக்குள் காலடி வைத்துவிட்டான் என்று பொருள். ஈமானுடனான அவனுடைய தொடர்பு அற்றுவிட்டது என்றும் பொருள். அந்த அளவுக்கு அதிமுக்கியம் வாய்ந்த அம்சம் தொழுகையில் என்ன இருக்கின்றது என்பதை சற்று விரிவாய் காண்போம் வாருங்கள்!

தீனின் துவக்கப்புள்ளியும் தொழுகையும்

தன்னை வணங்குவதற்காக மனிதனைப் படைத்த இறைவன் மனிதனுக்கு சேவை செய்ய முழு உலகையும் படைத்துள்ளான். உலகில் உள்ள எல்லாப் பொருள்களும் மனிதனுக்காகவே இயங்கிக் கொண்டுள்ளன. சூரியன், சந்திரன், கடல், மலை, மேகம், காற்று, வெப்பம், குளிர் என்று யாவுமே மனிதனுடைய நலத்திற்காகவே செயற்படுகின்றன. ஒன்றுமறியா பிஞ்சுக் குழந்தை தாயின் கர்ப்பப்பையிலிருந்து வெளிவரும் போதே அதற்கு தேவையான எல்லாவற்றையும் இறைவன் ஏற்பாடு செய்து வைத்துள்ளான். தாயின் மார்பகங்கள் அதற்குத் தேவையான உணவைச் சேகரம் பண்ணியுள்ளன. அள்ளி அணைத்து அரவணைத்துக் கொள்ள உற்றார் உறவினர்கள் சூழ்ந்து உள்ளனர். அதற்குத் தேவையான உணவைச் செழிக்கச் செய்யவே ஆதவனும் உதயமாகின்றான். தானிய விதையொன்றினை முளைக்கச் செய்யவே நைட்ரஜன் சுழற்சி ஏற்பட்டு கார்மேகம் மழையைப் பொழிகின்றது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம், வல்லவன் நமக்காகச் செய்திருக்கும் ஏற்பாடுகளை!

இவற்றை சிந்தித்துப் பார்க்கும் நம்பிக்கையுள்ள மனிதனின் உள்ளத்தில் நன்றியுணர்வு

பெருக்கெடுக்கின்றது! நன்றியுணர்வு மனதில் பெருகும் போது அன்பும் ஊற்றெடுக்கின்றது!

இந்நன்றியுணர்வின், இவ்வன்பின் தெள்ளிய வெளிப்பாடு தான் தொழுகை! படைப்புகளை சிந்தித்துப் பார்த்து இறைவடினை விளங்கிக் கொள்கின்றவன் இறைவனுக்கு நன்றி செலுத்த நினைக்கின்றான். தொழுகைக்காக வந்து நிற்கின்றான். நன்றியுணர்வு அற்றவனிடம் நம்பிக்கையும் இற்றுப் போய்விடுகின்றது. அத்தகையவன் தொழுகைக்கு தலைமுழுகாமல் என்ன செய்வான்?

ஏற்கனவே நாம் கண்ட சலாத்தின்பொருளான “முன்னேறிச்செல்லுதல்” என்பதை மீண்டும் எண்ணிப் பாருங்கள். நன்றியுணர்வு பெருக்கெடுத்து நாயகனைத் தேடிச் செல்லும் இந்தச் செய்கைக்கு சலாத் என்ற சொல் சரியாகப் பொருந்திப் போகின்றது இல்லையா?

இமாம் அப்துல் ஹமீது ஃபராஹி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) தன்னுடைய தஃப்ஸீரு நிளாமில் குர்ஆனில் எழுதுவதாவது.

“முறையான இல்ம் (அறிவு) சரியான செயல் (அமல்) இவற்றின் மீதே தீன் நிலை கொண்டுள்ளது. தன்னுடைய இறைவனை அறிந்து கொள்வது. அவனுக்கும் தனக்குமான தொடர்பினைப் புரிந்து கொள்வது. இதுவே அறிவு ஆகும். பிறகு இவ்வறிவினை அலட்சியப்படுத்தாமல் இருக்க வேண்டும். இவ்வறிவு அன்பையும், நன்றியுணர்வையும் கண்டிப்பாக தோற்றுவித்தே தீரும்! உள்ளத்தில் உருவாகின்ற இவ்வன்பின், இந்நன்றியுணர்வின் வெளிப்பாடாகத்தான் அமல்கள் அமைகின்றன. தாக்கம் விளைவு, உள்ளமை வெளிப்பாடு போன்றவற்றிற்கிடையே என்ன தொடர்பு உள்ளதோ அதே தொடர்பு தான் அறிவிற்கும், செயலுக்கும் இடையே இல்முக்கும், அமலுக்குமிடையே உள்ளது. அதாவது, இல்ம், ஈமானோடும் அமல், இஸ்லாத்தோடும் தொடர்பு கொண்டுள்ளன!”

“பிறகு இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. எவ்வாறு செயல் என்பது அறிவின் பிரதிபலிப்பாய் உள்ளதோ, அவ்வாறே சொல் (கவ்ல்) லுக்கும் பிரதிபலிப்பாய் உள்ளது. அதாவது அறிவுக்கும், செயலுக்கும் இடைநிலையில் சொல் உள்ளது. எண்ணங்களின் முதல் வெளிப்பாடாய் சொல் உள்ள அதே சமயம் அது செயல்களின் துவக்கமாகவும் உள்ளது”.

சொல்லின் மொழியாய், ஏற்றலின் வெளிப்பாடாய் தொழுகை உள்ளது!. எழுவது, அமர்வது, குனிவது, ஸஜ்தா செய்வது, கைகளை உயர்த்துவது, விரலை நீட்டிக் கொண்டிருப்பது இவையெல்லாம் எதைத்தான் குறிக்கின்றன? செய்கைகளின் மொழியில் நம்முடைய சொல்லின், ஏற்றலின் வெளிப்பாடு இவை! ஈமானுக்குப் பிறகு இதாஅத்துக்களில் நம்முடைய முதல்பதிவு தான் இது! இது அமல்களின் தலைவாசல், திறவுகோல், எனவே தான் ஷரீஅத்தின் தலைவாசலாக தொழுகை கருகப்படுகின்றது! எண்ணற்ற வசனங்களை இவ்வுண்மையையே பேசுகின்றன.

உதாரணமாக- அவர்கள் மறைவாக இருற்தபோதும் இறைநம்பிக்கை கொன்வார்கள், தொழுகையை

நிலைநாட்டுவார்கள். (அல்பகறா ˜ 03 )

இறைவனைப் பற்றிய நம்முடைய அறிவின் (மஃரிஃபத்) முதல் வெளிப்பாடே தொழுகை தான் என்பது இதிலிருந்து விளங்குகின்றது. ஷரீஅத்தின் தலைவாசலே தொழுகை எனும் போது எல்லா அமல்களும் இதிலிருந்து தான் பிறக்கின்றன.

எனவே, குர்ஆனில் எங்கெல்லாம் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் ஈமானுக்குப் பிறகு அமலன் ஸாலிஹா – நற்செயல்கள் – என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஈமான் கொண்டு நல்அமல்களைச் செய்கின்றவர்களைத் தவிர. (அத்தீன் – 6)

இதையே விளக்கமாக விவரிக்க வேண்டிவந்தால் அங்கு தொழுகையே தலையாய இடம் வகிக்கின்றது.

நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, நற்செயல்களைச் செய்து மேலும் தொழுகையை நிலை நாட்டுகிறார்களோ….. (அல்பகறா – 277)

எல்லா நல் அமல்களுக்கும் தலைப்பாக இங்கே தொழுகையே இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் ஹஜ்ஜில் – ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூவும் ஸஜ்தாவும் செய்யுங்கள். உங்கள் இறைவனுக்கு அடிபணியுங்கள்! (அல்ஹஜ் – 77)

நம்முடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொள்பவர்கள் யாரெனில் அவ்வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காட்டி அறிவுரை கூறப்படும் போது அவர்கள் ஸஜ்தாவில் விழுந்து விடுகிறார்கள். இறைவனைப் புகழ்ந்து துதிக்கிறார்கள். அவர்கள் பெருமை அடிக்க மாட்டார்கள். மேலும், அவர்களுடைய விலாப்புறங்கள் படுக்கைகளை விட்டும் உயர்ந்து விடுகின்றன. அச்சத்துடனும், ஆவலுடனும் தங்கள் இறைவனை அழைக்கின்ார்கள். (ஸஜ்தா- 15,16)

இவை போன்ற வசனங்கள் குர்ஆனில் அளவற்று உள்ளன. இவற்றில் ஈமானின், இறையறிவின் (மஃரிஃபத்தின்) முதல் வெளிப்பாடு தொழுகை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தொழுகையையும்

ஈமானையும் இணைக்கும் இடைநிலை, அன்பும், நன்றியுணர்வும் தான்! இன்னும் ஈமானடைய, இறையுறிவுடைய முதல் ஊற்றே இவ்வன்பும் நன்றியுணர்வும் தான்! இன்னும் எல்லா அமல்களுக்கும் மூலமான தொழுகையின் முதற்காரணியும் இவைதான்! தொழுகைக்கும், நன்றியுணர்வுக்கும் உள்ள தொடர்பை பெரிதாய் விளக்க வேண்டியதில்லை. தொழுகையின் உயிரோட்டமே சூரத்துல் ஃபாத்திஹா தான். சூரத்துல் ஃபாத்திஹா முழுக்க முழுக்க நன்றியுணர்வினாலேயே நிரப்பப்பட்டுள்ளது. இதுதவிர வேறுசில இடங்களிலும் தொழுகை நன்றியுணர்வினால் உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

என்னை நினைவு கூறுங்கள். நானும் உங்களை நினைவில் வைப்பேன்! எனக்கு நன்றி செலுத்துங்கள் நன்றி கொல்லாதீர்கள்! (பகறா – 152)

இறைவனோடான ஒப்பந்தம்

ஒரு பொருளின் உண்மையான நிலையை சரிவர விளங்கிக் கொண்டால்தான் அதைப்பற்றிய மதிப்பு நம் மனதில் பிறக்கும். தராதரம் என்ன என்பதை எந்த அளவு நாம் விளங்கிக் கொள்கின்றோமோ அந்த அளவுக்கு அதற்கு மதிப்பு அளிப்பவர்களாக மாறிவிடுவோம். தொழுகையின் நிலையை நாம் நன்கு புரிந்து கொண்டால் தான் தொழுகையை விடுபவன் (தாரிக்குஸ் சலாத்) எவ்வாறு நிராகரிப்பின் (குஃப்ரின்) வாசலில் நுழைகின்றான் என்பதை விளங்கிக் கொள்ளவும் முடியும்.

ஆன்மாக்களாக இருந்த போது நம்மோடு அல்லாஹ் ஓர் ஒப்பந்தம் செய்துள்ளான். நாமும் அதை ஒப்புக் கொண்டே வந்துள்ளோம். அத்தியாயம் அஃராஃப் 172ம் வசனத்தில் அல்லாஹ் அதனை விளக்கியுள்ளான். ‘அலஸ்து ஒப்பந்தம்’ என்ற அவ்வொப்பந்தம் நன்றி மற்றும் ஏற்றலின் ஒப்பந்தம் (Ooath of Allegiance) ஆகும்.

இந்த ஒப்பந்தத்தையே அல்லாஹ் மீண்டும் வேறு வடிவில் அத்தியாயம் அல்பகறாவின் 152ம் வசனத்தில் தெளிவுபடுத்தியுள்ளான்.

இறைத்தூதரை அனுப்பிவைத்த நோக்கத்தை அறியாதனவற்றை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும் வகையில் தெளிவுப்படுத்திய பின்பு இவ்வசனம் அமைந்துள்ளதையும் மனதில் கொள்ள வேண்டும்.

நினைவு கூறுங்கள் என்றால், தொழுது வாருங்கள்! இந்த உம்மத்தோடான அல்லாஹுத் தஆலாவின் ஒப்பந்தம் சலாத்தின் மூலமாகத்தான் உள்ளது. தொழுகையில் நாம் உறுதியோடு நிலைத்திருக்கும் நாள்வரைக்கும் ஒப்பந்தத்தில் நிலைத்திருப்போம். இறைவனுடைய உதவியைப் பெறும் தகுதி உடையவர்களாக இருப்போம். இஸ்லாமிய எதிரிகளையும், ஷைத்தானையும் எதிர்கொள்ளும் துணிவு கொண்டவர்களாக இருப்போம்.

அடையாளம் மட்டுமல்ல, அஸ்திவாரமும் கூட

தொழுகை என்பது இஸ்லாத்தின் நல்அமல்களின் அடையாளமாக மட்டும் இல்லை. ஷரீஅத்தின் அஸ்திவாரமாகவும் அமைந்துள்ளது. எனவே எந்த சமூகம் தொழுகையின் நிலையை மறந்து அதன் சிறப்பியல்புகளைப் புறக்கணித்து அதனைத் தொலைத்து விடுகின்றதோ அது நாளடைவில் வழிகேட்டின் அதல பாதாளத்தில் முகம் குப்புற வீழ்ந்து விடுகின்றது.

முன்சென்ற சமூகங்களைப் பற்றி வான்மறையில் இறைவனின் திருவாக்கு –

அவர்களுக்குப் பிறகு பிற்சந்ததிகளாகத் தோன்றிய மக்கள் தொழுகையைத் தொலைத்துவிட்டார்கள். மன இச்சைகளை பின்பற்றினார்கள்! அத்தகையவர்கள் வழிகேட்டின் தீயவிளைவுகளை விரைவில் சந்திப்பார்கள். (மரியம் – 59)

தொழுகையைத் தொலைத்து விட்டார்கள் என்றால் தொழுவதை விட்டுவிட்டார்கள். அக்கறை இன்றியும் அலட்சியத்தோடும் தொழுது வந்தார்கள். ஓர் உம்மத்துடைய வீழ்ச்சிக்கான முதல் அடையாளம் ஆகும் இது! ஏற்கனவே கண்டது போல தொழுகையே முஃமினுடைய ஈமானையும் அமலையும் அல்லாஹ்வோடு பிணைக்கின்றது. இத்தொடர்பு அற்றுப் போகும் போது மனிதன் இறைவனை விட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்கின்றான். இறைவனை நோக்கி அல்ல, இறைவனுக்கு எதிரான திசையில் அவனுடைய பயணம் துவங்குகின்றது. மனஇச்சைகள் கூட வந்து சேர்ந்து கொள்கின்றன. நமக்கு முன்சென்ற உம்மத்துகள் வழிகேட்டில் மூழ்கி அழிந்து போனதற்கு துவக்கக் காரணம் அவர்கள் தொழுகையைத் தொலைத்ததே என்ற அல்லாஹ் இங்கு கூறுகிறான்.

நம்முடைய நிலை

நாம் இன்று முஸ்லிம்கள் ஏறத்தாழ 120 கோடி பேர் இருக்கின்றோம். நாமும் தொழுது வருகின்றோம். இந்த உரைகல்லில் நம்முடைய தொழுகையையும் உரசிப் பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தன்மை இருக்கின்றது. உண்மையில் ஒரு பொருளின் தன்மையே அதற்குரிய அடையாளமாக விளங்குகின்றது. அந்த தன்மை இல்லாது போனால் அது தன் மதிப்பை இழந்து விடுகின்றது. விஷத்தின் தன்மை ஆளைக் கொல்லவில்லை, கொல்லும் தன்மை அதில் இல்லை என்றால்

என்ன பொருள்? அது கலப்படம், அது விஷமே அல்ல என்று பொருள் (தெளிவாய் விளங்கவே விஷத்தின் உதாரணம் தந்துள்ளேன்)

அவ்வாறே தொழுகைக்கும் ஓர் இயற்தன்மை உள்ளது. தொழுகையை விட்டு நீக்க முடியாத நிலைத்த தன்மை அது.

அல்லாஹ் அதைப்பற்றி,

தொழுகையை நிலைநிறுத்துவீராக! தொழுகை மானக்கேடான, மற்றம் தீய செயல்களை தடுக்கின்றது. (அன்கபூத் – 45)

ஆனால் நடைமுறை வாழ்வில் நாம் பார்ப்பது என்ன? ஐவேளை விடாமல் தொழுதுவரக் கூடிய எத்தனையோ தொழுகையாளிகள் சர்வசாதாரணமாக பொய் பேசுகின்றார்கள். வியாபாரத்தில் எல்லாவகையான தந்திரங்களையும் கையாள்கின்றார்கள். நம்பிக்கை மோசடி செய்கின்றார்கள். இன்னும் என்னென்னவோ……….

நீரின் குளிர்ச்சியைப் போல, நெருப்பின் சூட்டினைப் போல தொழுகையின் தடுக்கும் தன்மையும் உண்மையானால் இவர்களை ஏன் அது தடுக்கவில்லை? என்றொரு கேள்வி எழுகின்றதல்லவா?

நம் கவனத்துக்கு இரண்டு விஷயங்கள் வருகின்றன. (1) தொழுகை கண்டிப்பாக அதன் வேலையை செய்தே தீரும். தொழுகையாளியிடம் இத்தகைய இயல்புகள் காணப்பட்டால் அவர்கள் தொழுகையாளிகளே இல்லை என்று தான் அர்த்தம். (2) இல்லையென்றால், நஊது பில்லாஹ் குர்ஆன் தவறான தகவலை தந்துள்ளது என்று தான் பொருள்.

ஆக வெறுமனே தொழுது வந்தால் மட்டுமே அது தொழுகையாகி விடாது. எப்படி முறையாகத் தொழுது வர வேண்டுமோ அப்படி தொழுது வர வேண்டும். தொழுகை என்பது சடங்கு அல்ல! இஸ்லாம் என்பதும் சடங்கு சம்பிரதாயங்களின் தொகுப்பு மதம் அல்ல!

தொழுகை சரியாக இல்லாதபோது, அதனை முறைப்படி தொழுகாத போது, அது நம்முடைய உள்ளத்து ஈமானிய வெளிப்பாடாய் அமையாதபோது, இறைவனுடனான தொடர்பு இயல்பாகவே குறைகிறது. இறைத்தொடர்பும், இறை நெருக்கமும் இல்லாமல் போனால் மனோஇச்சைகள் உள்ளத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அவற்றின் பின்னால் படுவேகமாக மனிதன் செல்ல ஆரம்பிக்கின்றான். இவ்வாறாக அவனுடைய ஒழுக்கம், நடவடிக்கைகள், பழக்கவழக்கங்கள் என்று எல்லாமே மனஇச்சைகளின் தான்தோன்றித்தனமான வழிகாட்டுதல்களின் அடிப்படையில் அமைகின்றன. இறையாணைகளை அவன் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இறுதியில் வழிகேட்டை தவிர வேறு எதை அவன் அடைய முடியும்? இதைத்தான் வான்மறை –

2. தொழுகை முறை

தொழுகைக்கான தயாரிப்பு

அண்ணலெம் பெருமானார் (சல்லல்லாஹு அலைஹி வசல்லிம்) விண்ணுலகப் பயணம் மிஃராஜின் போது வல்ல அல்லாஹ்வை சந்தித்து தொழுகைக்கான கட்டளையைப் பெற்றுக் கொண்டார்கள். அவ்வாறே ஒவ்வொரு தொழுகையும் ஒரு முஃமினைப் பொறுத்தமட்டும் அவனளவில் அல்லாஹ்வோடான சந்திப்பாகவே இருக்கின்றது.

அண்ணலெம் பெருமானார் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லிம்) கூறியுள்ளார்கள் –

உங்களில் ஒருவர் தொழுகும்போது தம் இறைவனிடம் தனிமையில் உரையாடுகின்றார். (சஹீஹுல்புஃகாரி)

ஓர் அடியான் தொழுகையில் தன்னுடைய இறைவனோடு உரையாடுவதற்காகச் செல்கின்றார். எனவே அதற்குரிய தயாரிப்புகளோடு செல்ல வேண்டும். நாம் சாதாரணமாக பலதரப்பட்ட மனிதர்களை பல்வேறு காரியங்களுக்காக சந்தித்துக் கொண்டே உள்ளோம். நாம் சந்திக்கப் போகின்ற நபர் எத்தகையவரோ, அதற்கேற்றவாறு நம்மை தயார்படுத்திக் கொள்கின்றோம். அவருடைய தகுதி, தன்மைகளுக்கு ஏற்றவாறே சந்திக்க வேண்டியிருந்தால் சாதாரண உடையிலேயே சந்திக்கின்றோம். அதே சமயம் ஒரு பெரிய அதிகாரியையோ, உயர்நிலை மேலாளரையோ சந்திக்க வேண்டி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தால், பலமணிநேரம் முன்னதாக தயாராகிக் கொள்கின்றோம். உடைகளை கவனமாக தேர்ந்தெடுக்கின்றோம். பேசவேண்டிய உரையாடலை மனதுக்குள்ளாகவே அசை போட்டுப் பார்த்துக் கொள்கின்றோம். என்ன கேட்பார்? என்ன பதில் சொல்வது? என்பதையெல்லாம் திட்டமிட்டுக் கொள்கின்றோம். அவருடைய அலுவலகத்தை நோக்கிச் செல்ல சாலையில் இறங்கிய பின் நம்முடைய சிந்தனை அதையே சுற்றிசுற்றி வருகின்றது. எதிரே வருவோர், போவோர் என்ற எதிலும் கவனம் செல்வதில்லை. நீண்டநாள் சந்திக்காத நண்பரொருவர் எதிரே வந்தாலும் தவிர்த்து விடுகின்றோம். ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு ஒரு மணிநேரம் இரண்டு மணி நேரம் முன்னதாகவே கிளம்பிச் சென்று காத்திருக் கின்றோம்.

சாதாரணமாக நம்மைவிடச் சற்று மேம்பட்ட மனித ஒருவரை சந்திப்பதற்காகவே நாம் இத்தனை சிரத்தை, சிரமங்கள் முன்னேற்பாடுகள் செய்யும் போது நம்மையெல்லாம் படைத்த அல்லாஹ், ஆற்றல்மிக்க அதிகாரங்கொண்ட அல்லாஹ் உலகையும் பிரபஞ்சத்தையும் கட்டி ஆளும் அல்லாஹ், மாபெரும் வல்லமை படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ்வைச் சந்திக்க நாம் எந்தளவு, எப்படியெல்லாம் முன்னேற்பாடுகளை தயாரிப்புகளைச் செய்ய வேண்டி இருக்கும்?

சற்ற யோசித்துப் பாருங்கள், எந்த அளவுக்கு நம்முடைய மனதில் அல்லாஹ்வைப்பற்றி மதிப்பச்சமும் பயபக்தியும் இருக்கின்றதோ அந்த அளவே தயாரிப்புகளும் இருக்கும் (அல்லாஹ்வைப் பற்றி இறையறிவைப் பொறுத்தே தக்வாவும் அமையும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.)

ஓர் அடியான் இறையில்லத்திலிருந்து அழைப்போசை வந்தவுடன் தன்னுடைய எல்லாக் காரியங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு இறைவனைச் சந்திக்க தயாராகி விடுகின்றான். அச்சத்தோடும், நடுங்கியவாறும் ஒழு செய்ய ஆரம்பிக்கின்றான். இறைவனைச் சந்திக்கப் போகின்றோம் என்கிற நினைப்பே அவனை நிலை தடுமாறச் செய்கின்றது. அவனுடைய பாவங்களை நினைவில் வந்து அலைக்கழிக்கின்றன. அல்லாஹ் தன்மீது சுமத்தியுள்ள பொறுப்புகளை, தான் எந்த அளவு கடமை உணர்வுடனும் அக்கறையோடும் நிறைவேற்றுகின்றோம் என்கிற சிந்தை அவன் மனதைத் துண்டாடகின்றது. ஒழு செய்ய ஆரம்பிக்கும் போது முகத்தில் வழியும் தண்ணீரோடு அவனுடைய கண்ணீரும் கலக்கின்றதுஸ

நாம் இறைவனை எப்படி சந்திப்பது? அவனோடு என்ன பேசுவது? எந்த முகத்தோடு பேசுவது? என்பதையெல்லாம் அவன் யோசிக்கின்றான். எத்தனை ரகஅத்துகள் தொழப் போகின்றோம் எந்த ரகஅத்தில் எந்த சூறாவை ஓதப் போகின்றோம் என்பதையெல்லாம் அவன் ஒழுவின் போதே தீர்மானித்துக் கொள்கின்றான்.

ஓர் உண்மையான இறைநம்பிக்கையாளன் இத்தகைய உணர்வுகளோடு தான் ஒழு செய்ய வேண்டும். இப்படி செய்யப்படுகின்ற இஃக்ளாஸான ஒழுவைச் சிறப்பித்துத் தான் கீழ்க்கண்ட ஹதீஸ்கள் பேசுகின்றன.

நிச்சயமாக எனது சமுதாயத்தவர்கள் ‘மறுமைநாளில் ஒழுவுடைய சுவடுகளால் முகம், கை, கால்கள் ஒளிமயமானவர்களே!’ என்று அழைக்கப்படுவார்கள். எனவே உங்களில் எவருக்குத் தமது ஒளியை நீளமாக்கிக் கொள்ள முடியுமோ அதனைச் செய்து கொள்ளட்டும், என்று இறைத்தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள். (சஹீஹுல்புஃகாரி)

முஃமின் ஒழுச் செய்த உறுப்புகளில் எல்லாம் அணிகலன்கள் ஆபரணங்கள் அணிவிக்கப்படும்!

(ரியாளுஸ் ஸாலியீன், மேற்கோள் – சஹீஹ் முஸ்லிம்)

ஓர் இறை நம்பிக்கையாளன் ஒவ்வோர் உறுப்பாக கழுவக்கழுவ அவனை விட்டு அவனுடைய பாவங்கள் அகற்றப்படுகின்றன.

ஒரு முஸ்லிமான (அல்லது முஃமினான) இறையடியான் ஒழுச் செய்து தம் முகத்தைக் கழுவும் போது அவர் கண்களால் செய்த பாவங்கள் யாவும் கடைசிச் சொட்டு தண்ணீரோடு வெளியேறி விடுகின்றன. அவர் கைகளைக் கழுவும் போது கைகளைப் பயன்படுத்தி செய்த பாவங்கள் யாவும் கடைசிச் சொட்டு தண்ணீரோடு வெளியேறி விடுகின்றன. அவர் கால்களைக் கழுவும் போது கால்களால் நடந்து சென்று செய்த பாவங்கள் யாவும் கடைசிச் சொட்டு தண்ணீரோடு ெஎவளியேறி விடுகின்றன. கடைசியில் அவர் எல்லாப் பாவங்களும் நீங்கி பரிசுத்தமானவராக ஆக்கிவிடுகின்றார்.

(ரியாளுஸ் ஸாலியீன், மேற்கோள் – சஹீஹ் முஸ்லிம்)

சகோதர, சகோதரிகளே! கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். வெறும் தண்ணீரைக் கொண்டு கைகால்களைக் கழுவுவதற்காகவா இவ்வளவு சிறப்புகள்? இவ்வளவு பெருமைகள்? நிச்சயமாக இல்லை!மாறாக ஒழு செய்பவனுடைய உள்ளம் எந்நிலையில் உள்ளது? அவன் யாரைச் சந்திப்பதற்காக தயாராகி கொண்டுள்ளான்? எந்நிலையில் சந்திக்கப் போகின்றான், ஆர்வத்துடனா? அசட்டையுடனா? அவனுடைய உள்ளம் நிகழப்போகின்ற சந்திப்பை எண்ணி பயப்படுகின்றதா? இல்லையா என்பதையெல்லாம் பொறுத்துத் தான் இவ்வளவு நன்மைகளும்!

வெறும் கை, கால்களைக் கழுவுகின்ற சடங்குச் செயல் அல்ல ஒழு! இறைவனைச் சந்திக்க செல்லும் அச்சமுள்ளதோ இறைநம்பிக்கையாளனின் ஆர்வமும், பயமும் கலந்த முன்னேற்பாடு! எனவே தான் அதுவே ஓர் இபாதத்தாக ஆகி விடுகிறது. ஒவ்வொரு அமலையும், ஒவ்வொர் இபாதத்தையும் நாம் இரண்டு வகைப்படுத்தலாம். (1) சாதாரணமாக நிறைவேற்றுவது. (2) சிறப்பாக நிறைவேற்றுவது. செய்தை அழகாகச் செய்வதும். சிறப்பாக நிறைவேற்றுவதையே, அழகாக செய்வதையே இஹ்ஸானுல் இபாதா என்று அழைக்கின்றோம். சந்திப்பை எண்ணி பயந்து நடுங்கி கண்களில் நீர்வர செய்யப்படும் இத்தகைய ஒழுவையே அண்ணலார் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லிம்) இஹ்ஸானுல் ஒழு என்று குறிப்பிடு கின்றார்

அதுவே ஓர் இபாதத்தாக ஆகி விடுகிறது. ஒவ்வொரு அமலையும், ஒவ்வொர் இபாதத்தையும் நாம் இரண்டு வகைப்படுத்தலாம். (1) சாதாரணமாக நிறைவேற்றுவது. (2) சிறப்பாக நிறைவேற்றுவது. செய்தை அழகாகச் செய்வதும். சிறப்பாக நிறைவேற்றுவதையே, அழகாக செய்வதையே இஹ்ஸானுல் இபாதா என்று அழைக்கின்றோம். சந்திப்பை எண்ணி பயந்து நடுங்கி கண்களில் நீர்வர செய்யப்படும் இத்தகைய ஒழுவையே அண்ணலார் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லிம்) இஹ்ஸானுல் ஒழு என்று குறிப்பிடுகின்றார்கள். இத்தகைய ஒழுவுக்குத் தான் மேற்கண்ட சிறப்புகள் அனைத்தும்!

எவன் (இஹ்ஸானுல் ஒழுவை) அழகிய முறையில் ஒழுவைச் செய்கின்றாரோ அவர் நகக் கண்கள் வழியாக அவருடைய எல்லாப்பாவங்களும் வெளியேறி விடுகின்றன! (ரியாளுஸ் ஸாலிஹீன், மேற்கோள் – சஹீஹ்முஸ்லிம்)

தன்னுடைய வாழ்வொப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்ளவும், தான் இறையடிமை என்பதை இறைவனின் சமூகத்தில் நின்ற நிரூபித்துக் கொள்ளவும் தான் ஓர் இறையடியான் இறைவனைச் சந்திக்க தொழுகையினால் அவன் அடையும் விளைவுகளை எல்லாம் இஹ்ஸானுல் ஒழு நிலையிலேயே பெற்று விடுகின்றான். அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன. இஹ்ஸானுல் ஒழுவே அவனுக்கு போதுமானதாக ஆகிவிடுகின்றது.

அண்ணலெம் பெருமானார் (சல்லல்லாஹு அலைஹி வசல்லிம்) கூறுகின்றார்கள்-

எவர் இத்தகைய ஒழுவைச் செய்கின்றாரோ அவருடைய முந்தைய குற்றங்கள் யாவும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன. அவர் தொழுவதும், பள்ளிக்கு நடந்து செல்வதும் அவருக்கு உபரியான (நன்மையாக) அமைந்துவிடுகின்றன! -சஹீஹ்முஸ்லிம்- (பாபு ஃபழ்வில் ஒழு)

இஹ்ஸானுல் ஒழு செய்துவிட்டு, தன் இறைவனைச் சந்திக்க வேண்டும் என்பதை தவிர வேறு எந்த எண்ணமும் இல்லாமல் இஒரே குறிக்கோளுடன் செல்பவனுக்குத் தான் இவ்வளவு சிறப்பும் என்பதையும் அண்ணலார் (சல்லல்லாஹு அலைஹி வசல்லிம்) கோடிட்டுக் காட்டியுள்ளார்கள்.

எவர் இவ்வாறு ஒழு செய்துவிட்டு தொழுகையைத் தவிர வேறு எந்த எண்ணமும் இல்லாமல் பள்ளிவாசலுக்குச் செல்கின்றாரோ அவருடைய கடந்த கால பாவங்கள் யாவும் மன்னிக்கப்படும்! -சஹீஹ்முஸ்லம்- (பாபு ஃபழ்வில் ஒழு)

நடந்து செல்வதும், பள்ளியில் காத்திருப்பதும் கூட அவனுக்கு நன்மையையே பெற்றுத் தருகின்றன. அண்ணலெம் பெருமானார் (சல்லல்லாஹு அலைஹி வசல்லிம்) சொல்கின்றார்கள்-

தம் வீட்டில் நன்முறையில் ஒழுச் செய்து கொண்டு கடமையான தொழுகை ஒன்றினை நிறைவேற்ற இறையில்லம் ஒன்றுக்கு யாரேனும் சென்றால் அவர் எடுத்து வைக்கும் காலடிகளுள் ஒன்று அவர் பாவத்தை அழிக்கும். இன்னொன்று அவர் அந்தஸ்த்தை உயர்த்தும்! (ரியாளுஸ் ஸாலிஹீன் மேற்-சஹீஹ் முஸ்லிம்)

உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலமெல்லாம் தொழுதவரைப் போன்றவரேயாவார். அவர் வீடு திரும்புவதை தொழுகையைத் தவிர வேறெதுவும் தடுக்கவில்லை! (ரியாளுஸ் ஸாலிஹீன்)

தொழுகை நேரங்கள்

தொழுகைக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நேரங்களைப் பற்றியும் எண்ணிப் பாருங்கள். அவை செய்யத் தகுந்த நேரங்கள், துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படத்தக்க நேரங்கள், மனிதனின் உள்ளத்துக்கு நிம்மதியைத் தரும் நேரங்கள். உலகில் உள்ள அனைத்தும் சூரிய, சந்திர, தாரகைகள் உட்பட தஸ்பீஹ், தஹ்லீல் செய்யும் நேரங்களுக்கு ஒப்பவே நம்முடைய தொழுகை நேரங்களும் வகுக்கப்பட்டுள்ளன. சுபுஹ், ளுஹர், அசர், மக்ரிப், இஷா என்று ஒவ்வொன்றையும் உற்று நோக்குங்கள். இந்த கண்ணோட்டமும், கருத்தோட்டமும் முழுக்கச் சரியே என்று ஒப்புக் கொள்வீர்கள்.

வைகைறை நேரத்திலொரு தொழுகை, சுபுஹ் தொழுகை! உள்ளத்துக்கு அமைதியையும் அரவணைப்பையும் தரும் அற்புத நேரம் அது. வைகறை விழித்தெழும் மனிதன் சலனமற்ற உள்ளளத்தோடு திருப்தியாக எழுகின்றான். புத்துணர்வு பொங்கியெழும் அக்கருக்கல் பொழுதினில் அவனோடு சேர்ந்து பறவைகளும், புள்ளினங்களும் துயில் கலைந்து பள்ளியெழுகின்றன. தம் பல வண்ணப் பாடல்களால் படைத்தவனைத் துதி செய்கின்றன. தம் பல வண்ணப் பாடல்களால் படைத்தவனைத் துதி செய்கின்றன. இதோஸ சற்று நேரத்தில் உதயமாகும் இளங்கதிரவனும் தன்னைப் படைத்தவனுக்கான வணக்க அணிவகுப்பில் கலந்து கொள்கின்றான். தானே வழிபடுபவனாயிருக்க தன்னைப் போய் வணங்குகின்றார்களே மூடமனிதர்கள் என்று கருதியவாறு தானும் ஒரு படைப்பினமே! என்பதை நிரூபிக்கின்றான்.

ஏழு வானங்களும் பூமியும் மற்றும் இவற்றிலுள்ள அனைத்துமே அவனுடைய தூய்மைப் புகழ் பாடிக் கொண்டுள்ளன. அவனைப் புகழ்வதுடன் அவனைத் துதி செய்து கொண்டிராத எந்தவொரு பொருளுமே இல்லை. ஆயினும் அவை துதி செய்வதை நீங்கள் புரிந்து கொள்வதில்லை! (பனூ இஸ்ராயீல் – 44)

வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் சிறகடித்துப் பறக்கும் பறவைகளும் அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா, என்ன? ஒவ்வொன்றும் தன்னுடைய தொழுகையையும் துதிமுறையையும் அறிந்திருக்கின்றது! (அந்நூர் – 41)

பொழுது ஏறி உச்சியை அடைகின்றது. உலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் பகற்தொழுகை – ளுஹர் தொழுகை – வருகின்றது. இறைவனிட்ட ஆணைகளைச் செய்வதற்குப் பெயர் தானே இபாதத்தும் இதா அத்தும்! சொன்ன வேலைகளைச் சரி வர செவ்வனே செய்து கொண்டிருக்கின்றன உலகிலுள்ள அனைத்தும். ஆணையை அடியொற்றி அணுவளவும் மீறாமல் கடைமையாற்றிக் கொண்டிருக்கின்றன. கதிரவனிலிருந்து கடலலைகள் வரை! தன்னைச் சுற்றி பார்வைகளை ஓட்டும் இறைநம்பிக்கையாளன் இந்த உலகளாவிய இறைவழிபாட்டுணர்வைக் கண்டு திகைத்துப் போகின்றான். தானும் அதிலே திளைக்க இறையில்லம் நோக்கி ஓடுகின்றான். ‘இறைவா! நானும் உன் கட்டைளையை மீறமாட்டேன். மீறவே மாட்டேன்’ என்று தன் இறைநம்பிக்கையை, ஈமானை, கீழ்படிதலை இதா அத்தை மெருகேற்றிக் கொள்கின்றான்.

அல்லாஹ் படைத்துள்ள பொருள்களுள் எதனையும், இவர்கள் பார்க்கவில்லையா? – அவற்றின் நிழல்கள் வலப்புறமும், இடப்புறமும் அல்லாஹ்வின் திருமுன் எவ்வாறு பணிந்து விழுகின்றன என்பதை! இவை அனைத்தும் பணிவை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்ற. வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களும், அனைத்து வானவர்களும் அல்லாஹ்வின் திருமுன் சிரம் பணிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒரு போதும் ஆணவம் கொள்வதில்லை. அவர்கள் தங்களுக்கு மேலே இருக்கின்ற அதிபதிக்கு அஞ்சுகின்றார்கள். தஙகளுக்கு இடப்படும் கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படுகின்றார்கள்! (அந்நஹ்ல்48-50)

மாலை மயங்கும் பொழுதில் நாம் அசர் தொழுகையை அடைகின்றோம். மாலைப் பொழுது நமக்கு ஒரு முக்கியமான விஷயத்தை நினைவுபடுத்துகின்றது. எல்லா ஆரம்பத்துக்கும் ஒரு முடிவு உண்டு – என்பதே அது! எல்லா துவக்கப் புள்ளிக்கும் ஒரு முற்றுப்புள்ளி கண்டிப்பாக உண்டு. உலகில் உள்ள எந்தப்பொருளும் அதற்கு விதிவிலக்கு அல்ல. காலையில் பளிச்சிடும் கிரணங்களோடு கிளம்பிய ஆதவன் மாலையில் சோகமாய் காய்ந்து போகின்றான். சுறுசுறுப்போடு கூட்டை விட்டுக் கிளம்பிய பறவையினங்கள் வேலையை முடித்துக் கொண்டு வேகமாய் வந்து கூடடைகின்றன. எல்லாப் பொருட்களுக்கும் இறுதி உண்டு என்பதைச் சொல்லாமல் சொல்லுகின்றன. ஏகவல்லமை படைத்த ஆற்றலொன்று தான் எஞ்சியிருக்கும் என்பதை உறுதி செய்கின்றன. இறைநம்பிக்கையாளன் தன் இறைவனின் முன்னால் கைகட்டி நின்று தொழுகின்றான். தவ்பா செய்கின்றான். தன் முடிவை எண்ணி – ஏதாகுமோ? எப்படியிருக்குமோ? – கவலைப்படுகின்றான். இஸ்திக்ஃபார் செய்கின்றான்.

அடுத்து மக்ரிபுடைய நேரம். ஒரு வாசல் அடைபட்டு இன்னொரு வாசல் திறக்கும் நேரம். உலகம் தன்னுடைய பகல்நேரத்தை சுருட்டி எடுத்துக் கொண்டு இன்னொரு உலகில் இரவு நேரத்தில் நுழைகின்றது. வெய்யிலின் உக்கிரமம் நிழலின் தண்மையாய், பகலின் கடுமை இரவின் தென்றலாய் மாறுகின்றது, பகல் முழுவதும் உழைத்துக்களைத்த மனிதன் இரவின் தாலாட்டில் தன்னை மறக்கத் தொடங்குகின்றான். தன்னைச் சுற்றி இவ்வளவு பெரிய மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதை உள்ளத்தில் உணர்வுள்ள எவனாவது கவனிக்கத் தவறுவானா? உலக வாழ்வு முடிந்து போய் மரணத்திற்குப் பிறகு ஆலமேபர்ஸத்தில், ஆன்மாக்களின் உலகில் இன்னொரு வாழ்வு தொடங்க உள்ளது என்பதை அவனுக்கு இந்த மாற்றம் நினைவுபடுத்தாதா? பார்க்கப் பார்க்க பட்டப்பகலையும், முழு உலகையும் இரவின் போர்வைக்குள் மறைத்துவிட்ட வல்ல இறைவனின் முன்னால் தலைசாய்த்து தன்பணிவை, தாழ்மையை, இயலாமையை, கட்டுப்பாட்டை வெளிப்படுத்தாமல் இருப்பானா?

இனிவருகின்ற இஷாவின் பொழுது சுயபரிசோதனை இஹ்திஸாபு-க்குரிய நேரமாகும். இருட்டு வலிமையடைந்து இயக்கத்தின் கடைசிச்சுக்கானையும் நிறுத்தி விடுகின்றது. மனிதன் எல்லாவற்றையும் விட்டு ஒதுங்கி வீடடங்கி ஓய்வில் முடங்கி நாளைய பயணத்திற்கான ஆற்றலை இளைப்பாறித் திரட்ட நினைக்கின்றான். தூங்கச் செல்லுமுன் தன் இறைவனுக்கு முன்னால் நின்று தொழுது தன் கடமையுணர்வை வெளிப்படுத்தவும், தன்னுடைய கணக்கு வழக்கை ஒப்படைக்கவும் தோதான பொழுது தானே இது! ஒருவேளை தூங்கப் போகும் அவன் மறுநாள் எழுந்திரிக்காமலே போய்விடவும் வாய்ப்பு உள்ளது அல்லவா?

தஹஜ்ஜுத் உடைய நேரம், அமைதிக்கு தோதான நேரம் நிம்மதியை வழங்கும் நேரம் இதைவிடச் சிறப்பானது. வேறெதுவுமே இல்லை! வானெல்லையிலிருந்து பூமிப்பாதாளம் வரை எங்கும் அமைதி, சலனமற்ற நிலை. அனைவரும், அனைத்துமே உறங்கிக் கொண்டுள்ளன. ஒருவேளை ஷைத்தானும் தூங்கி விட்டிருக்கலாம்! ஆனால் ஓரிறைவன் மட்டுமே உறங்காவிழிகளோடு கண்காணித்துக் கொண்டுள்ளான். ‘வெளிீயருகே உள்ளவானில் எழுந்தருளி ரஹ்மத்தின் அழைப்பை, தவ்பா ஏற்றலின் அழைப்பை,

கேட்பதை எல்லாம் வழங்கும் அறிவிப்பை விடுத்துக் கொண்டே உள்ளான். எவ்வளவு அற்புதமான நேரம் அது!உல்லாச வாழ்வை விரும்புபவர்களும், சரி உலகை வெறுத்து பற்றற்றுப் போனவர்களும் சரி, அனைவருமே அந்நேரம் அருமையானது தான் என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். தூங்குபவன் தூக்கத்தை இனிமையாய் அனுபவிக்க இதுதான் சரியான தருணம் என்று நினைக்கிறான். விழித்திருப்பவனோ, விழித்திருக்க இது தான் உகந்த நேரம் என்று கருதுகின்றான். உண்மை தானே? தூங்குவதற்குச் சிறந்த நேரம் தானே விழித்திருக்கவும் சிறந்த நேரமாக இருக்க முடியும்? சிறந்தவற்றை அர்ப்பணித்தால் தானே உயர்ந்தவற்றைப் பெற முடியும்! எனவே, படைப்பாளனை நெருங்க நினைப்பவர்கள் படுக்கைகளைத் துறந்து பணிவோடும், பயத்தோடும் கைகட்டி நிற்கின்றார்கள். அவர்களுடைய கோரிக்கைகைளச் செவி மடுக்கத்தாதனே நேரமொதுக்கி வானுலகைவிட்டு நெருங்கி வந்து நிற்கிறான் நாயகனும்!

தொழுகைக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த நேரங்கள் ஒவ்வொன்றையும் ஆழமாய் உற்று நோக்குங்கள். இவை சிறப்பான நேரங்கள் தாம் என்பதை முழுமனதோடு ஒப்புக் கொள்வீர்கள்.

அகிலமே இறைவனுக்குக் கட்டுப்பட்டம், இறை ஆணைகளுக்குக் கீழ்படிந்தும் இயங்கிக் கொண்டுள்ளதை அறிகின்றோம். தஸ்பீஹ் செய்கின்றன. இறைவனின் பெருமையைப் பறைசாற்றுகின்ற, நிலைத்து நின்று இறையாணைகளை நிறைவேற்றுகின்றன. இறைநம்பிக்கையாளனும் தன்னுடைய தொழுகையில் இவ்வுணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். குர்ஆன் தொழுகையை, தஸ்பீஹ் என்றும் ஹம்த் என்றும் குறிப்பிடுகின்றது. குர்ஆனுடைய திலாவத் என்றும் தொழுகையை அழைக்கின்றது.

“எனவே துதியுங்கள். அல்லாஹ்வை நீங்கள் மாலை நேரத்தை அடையும் போதும், காலை நேரத்தை அடையும் போதும்!” (ரூம்-17)

உம் இறைவனைப் புகழ்வதுடன் அவனைத் துதிப்பீராக! சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும்!” (காஃப்-39)

“மேலும், இரவிலும் அவனது திருமுன் ஸஜ்தா செய்யும்! இரவின் நீண்ட நேரங்களில் அவனைத் துதித்துக் கொண்டிரும்.” (தஹ்ர்-26)

“இரவில் எழுந்து தொழுவீராக, ஆனால் கொஞ்ச நேரம்ஸ அதாவது பாதி இரவு அல்லது அதைவிடச் சற்ற குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ (தொழுவீராகஸ) மேலும், குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக!” (முஸ்ஸம்மில் – 2-4)

ஆகையால் தான் அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லிம்) தொழுகையை தஸ்பீஹ், தக்பீர் கிரா அத் என்று விளக்கியுள்ளார்கள்.

“தொழுகை என்பதே புகழ்பாடல், பெருமையை பறைசாற்றல், குர்ஆன் ஓதல் என்பது தான்!”

இன்னோரிடத்தில்…….

“தொழுகை என்றால் குர்ஆன் ஓதுவதும் கண்ணியமும் வல்லமையும் கொண்ட அல்லாஹ்வை நினைவு கூருவதும் ஆகும். எனவே, நீ தொழுகையில் நின்றால் இவற்றிலேயே மூழ்கிப் போய்விடு!”

தொழுகையின் வடிவம்

தொழுகையின் வடிவத்தின் பக்கம் கவனத்தைச் செலுத்துங்கள்! உலகில் தாழ்மையையும், பணிவையும், இயலாமையையும், கையாலாகாத்தனத்தையும், அடிமைக்குணத்தையும் வெளிப்படுத்த மனிதன் உருக்கொடுக்கும் நிலைகளையெல்லாம் ஒன்று திரட்டி தொழுகை வடிவமைக்ப்பட்டுள்ளது. தொழுகையினைத் துவங்கும் மனிதன் கைகட்டி, தண்கள் தாழ்த்தி, கால்களை நிலைக்கச் செய்து இடம்வலம் எத்திசையிலும்பார்வையினை ஓட்டாமல் பணிவோடும் பயத்தோடும் பக்குவமாகவும் மௌனனமாகவும் நிற்கிறான். கைகட்டி, வாய்பொத்தி அடுத்தஆள் முன்னால் நிற்பதை எந்த சுயமரியாதையுள்ள மனிதனாவது ஒப்புக் கொள்வானா? இறைவனுக்கு முன்னால் தனக்கென்று எந்த அடையாளமும் இல்லை. சுயமரியாதையும் இல்லை. தான் ஒரு அடிமை, கையாலாகாதவன் என்பதை இவ்வாறு நிற்பதன் மூலமாக இறைநம்பிக்கையாளன் வெளிப்படுத்துகின்றான்.

அடுத்து ருகூஃதலைக்குனிவு, தலைக்குனிவு என்ற சொல்லே அடிமைத்தனத்தைக் காட்டவில்லையா? தலைக்குனிவு என்ற சொல்லை எங்கேயெல்லாம் நாம் பயன்படுத்துகின்றோம் அடிமைப்புத்தியைச் சுட்டிக்காட்ட, அவமானப்பட்டதை எடுத்துக் கூற, இழிவை உணர்த்த…… என்று கீழ்த்தரமான நிலையை விளக்கத்தானே இந்த சொல்லையே நாம் பயன்படுத்துகின்றோம். என்னைத் தலைகுனிய வைத்து விட்டான் என்று சொல்கின்றோம். வேறுவார்த்தை சொல்லத்தெரியாமல், பதில் அளிக்க இயலாமல் பேச்சுமூச்சற்றுப் போகும் நிலையைத்தானே இவ்வாக்கியம் உணர்த்துகின்றது. தலையைக் குனிவதை இழுக்கின் அடையாளமாகத்தானே நாம் பார்க்கின்றோம். காலில் மிதிபடும் மண்ணிலிருந்து பிறந்த மனிதனுக்கு கண்ணியமும், கொளரவமும், மதிப்பும், மரியாதையும் இன்றைக்கு உள்ளதென்றால் அவற்றை அளித்தது யார்? தலைகுனிந்து நிற்பதாக இருந்தால் அத்தகைய அல்லாஹ்வுக்கு முன்னால் தானே நிற்க வேண்டும்! எனக்கென்று அந்த அடையாளமும் இல்லை. எல்லாம் நீயாகத் தந்தவையே! என்று அவன் புகழ் பாட வேண்டும்!

அடுத்து ஸஜ்தா. தரையில் சிரம் தேய்த்தல்! அடிமைத்தனத்தின் உச்சக்கட்டம் இது. கையாலாகாத்தனத்தின் ஆகக்கெட்ட கீழ்த்தரம் இது. தன்னுடைய மனதில் பெருமை, ஆணவம், தற்பெருமையின் நிழல் கூடப்படியாத இறைநம்பிக்கையாளனே முழுமையாகச் சஜ்தா செய்ய இயலும். கீழ்த்தரமான அருவெறுக்கத்தக் விந்துத்துளியிலிருந்து படைக்கப்பட்ட மனிதனுக்கு பெருமை என்ன வேண்டிக்கிடக்கின்றது? ஒருதுளி விந்து ஆடையில் பட்டுவிட்டால் எவ்வளவு அருவெறுப்பு அடைகின்றோம். முகத்தைச் சுளிக்கின்றோம். எவ்வளவு விரைவில் ‘நஜீஸி’லிருந்து தூய்மையாக குளித்துக் கொள்கிறோம். அந்த ஒரு துளி விந்திலிருந்து தானே நாம் பிறப்பெடுத்தோம். அப்படியென்றால் நம்முடைய நிலை என்ன? அதுவும் தூய அல்லாஹ்வுக்க முன்னால்! இறைவா! நான் ஒன்றுமே இல்லை – என்று இறைநம்பிக்கையாளன் ஸஜ்தா செய்யும் போது மனப்பூர்வமாக உணருகிறான். தான் கையாலாகாதவன், கீழ்த்தரமானவன், பரதேசி, பிச்சைக்காரன் என்பதையும் உள்ளத்தில் உணருகின்றான்.

“மக்களே! நீங்கள் தாம் அல்லாஹ்விடத்தில் கையேந்துகின்ற பிச்சைக்காரர்கள். அல்லாஹ்வோ தேவையற்றவன், பணக்காரன், புகழுக்கு உரியவன்!” (ஃபாத்திர்-15 )

இந்த உணர்வு ஏற்பட்ட பிறகு அவன் தன் தலையை – பிறருக்கு முன்னால் நிமிர்ந்து நிற்கும் தலை, வணங்காசிரசை – தரையில் தேய்க்கின்றான். தன் மாண்புகளை, போலி மரியாதைகளை எல்லாம் அல்லாஹ்வுக்கு முன்னால் தொலைத்து தூக்கி எறிந்துவிட்டு தன்னை ஒரு பணிவுள்ள அடிமையாக வெளிப்படுத்தகின்றான்.

தஷஹ்ஹுத்! இறைவனுக்கு முன் மண்டியிட்ட அமர்ந்து தன் பணிவை வெளிப்படுத்தும் காட்சி.

இவ்வாறாக தொழுகையின் நிலைகள் அனைத்துமே முழுமையான அடிமைத்தனத்தை வெளிப்படுத்துகின்றனவாக அமைந்துள்ளன. இவற்றை சரிவரப்புரிந்து கொண்டுள்ள இறைநம்பிக்கையாளன், செவ்வனே இவற்றை நிறைவேற்றுகின்றான். ஒவ்வொன்றையும் முழு உணர்வோடு செய்கின்றான். அவன் கைகட்டி ஙநிலைஙயில் நிற்கும் போது கொட்டாவி விடுவதில்லை. கைகைளைச் சொறிந்து கொள்வதில்லை. கண்களை அலையவிடுவதில்லை. இவ்வாறு ‘நிலை’யில் நிலைத்து நிற்காமல் இவை போன்ற செயல்களைச் செய்கின்றவன் வழிபட வரவில்லை. வரவழைக்கப்பட்டிருக்கின்றான். வேறுவழியின்றி வணங்குகின்றான் என்று பொருள்.

தொழுகும் முறை

கைகளை உயரே தூக்கி அல்லாஹ்வின் பெருமையை உரத்துக் கூறியவாறு தக்பீர் கட்டுகின்றோம். பின்பு நம்முடைய தொழுகையை துஆயே இப்றாஹீம் இலிருந்து துவக்குகின்றோம்.

சைய்யிதினா இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம் ஓதிய துஆ இது. இவற்றின் பொருளை முதலில் பார்ப்போம்.

வானங்களையும் பூமியையிம் முதன்முதலாகப் படைத்தவனின் பக்கம் ஒரு மனத்துடன் என் முகத்தை திருப்பிவிட்டேன். மேலும், ஒரு போதும் நான் இணைவைப்பாளர்களில் உள்ளவன் அல்லன்! (6-79)

என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் அகிலங்களின் அதிபதியாகிய ரப்புல் ஆலமீன் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். அவனுக்கோ யாரும் இணையில்லை. இவ்வாறே எனக்குக் கட்டளை இடப்பட்டுள்ளது. இறைவனுக்கு மட்டுமே கீழ்பட்டு வாழும் முஸ்லிம்களில் முதலாமவனாக நான் உள்ளேன். (6-162,163) என்னிறைவா! நீயே அரசன். உன்னையன்றி வேறுயாரும் வழிபட தகுதிபடைத்தவரில்லை. நீ தூய்மையானவன் என்பதை உன்னைப் புகழ்ந்து கூறுகின்றேன்.

யாவற்றையும் துறந்து ஒருமனதோடு இறைவழிபட்டில் நான் ஒன்றிவிட்ட நிலையை அடியான் இவ்வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்றான். தன்னுடைய தொழுகையும் பலியிடும் தியாகமும் தன்னுடைய வாழ்க்கையும் மரணமும், இறைவனுக்காகவே ரப்புல் ஆலமீனுக்காகவே! என்று அவன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கின்றான்.

சகோதரர்களே! சகோதரிகளே! தொழுகை என்பது இறைவனுக்கும் அடியானுக்கும் இடையிலான ஒப்பந்தம் என்பதை முன்பே கண்டோம். ஒப்பந்தங்களில் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியத்துவம் பெறுகின்றது. பொறுக்கி எடுத்து பொருத்தமான வார்த்தைகளே ஒப்பந்தத்தில் எழுதப்படுகின்றன, இல்லையா? இப்பொழுது யோசித்துப் பாருங்கள். மேற்சொன்ன வார்த்தைகளை யாரால் சொல்ல இயலும்? இது ஓர் ஒப்புதல் வாக்குமூலம் அல்லவா? வெறும் வார்த்தைத் தொகுப்பு, அர்த்தம் புரியா மந்திர உச்சாடனம் இல்லையே! எவருடைய வாழ்க்கை ‘இஸ்லாமிய’ நிலையில் கழிந்து கொண்டுள்ளதோ

அவர்தாம் ஒருமனதோடு (ஹனீஃபிய்யத்) இவ்வார்த்தைகளை, இவ்வொப்புதலை அளிக்க முடியும்!

இன்னொரு கோணத்திலும் நாம் இதை யோசிக்க வேண்டும். இவை யாருடைய வார்த்தைகள்? யாரை இவை நினைவுபடுத்துகின்றன? ஹழ்ரத் சைய்யிதினா இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைஸ நாம் இந்த வார்த்தைகளை மொழியும் போது நம்முடைய சிந்தையில் இப்றாஹீம் அவர்களுடைய முழுவாழ்க்கையும் ஓடவேண்டும். அவர் எவ்விதம் ஓரிறைக் கொள்கையை அடையாளம் கண்டு கொண்டார். இறைஅழைப்புப் பணியை எங்கே எவ்விதம் துவக்கினார். எத்தனை எத்தனை இடையூறுகளை, இன்னல்களை எதிர்கொண்டார், தன்னுடைய தந்தை மற்றும் சுற்றத்தாரையும், உற்றார், உறவுகளையும் உதறித்தள்ளிவிட்டு எவ்வாறு ஹிஜ்ரத்துக்கு துணிந்து நின்றார் என்பதையெல்லாம் மனதில் கொணர வேண்டும். வாழ்க்கையும் மரணமும் ரப்புல் ஆலமீனுக்காக என்பதை அவர் உவமானமாக வார்த்தைத் தோரணமிட்டுக் கூறவில்லை. அவருடைய வாழ்வின் ஒவ்வொரு வினாடியிலும் அவர் மௌத்தை எதிர் கொண்டார். அவருடைய யதார்த்த வாழ்வின் அப்பட்டமான வர்ணனை இது. மிகையோ, அதிகப்பிரசங்கமோ அல்ல!

இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடிடைய வாழ்வுப் பாதையை சிந்தனையில் கொண்டவர்களாக அவருடைய இஃக்ளாஸ், ஹனீஃபிய்யத் போன்றவற்றை பெற்றவர்களாக நாம் தொழுகைக்குள் நுழைகின்றோம். ஓர் இறையடியான் இங்கு தான் ஒரு சடங்குத் தொழுகையாளி அல்ல என்பதை உணருகின்றான். தான் ஒரு முசல்லி மட்டுமல்ல ஒரு முஜாஹிதும் கூட என்பதை அவன் புரிந்து கொள்கின்றான். நன்றியோடு கடமையாற்றுவேன் என்று தன் இறைவன் திருமுன் நம்பிக்கையோடு சபதம் செய்கின்றான்.

இந்த சபதத்தை சாதாரணமாக நிறைவேற்ற இயலாது, வல்லாவகையான அர்ப்பணிப்புகளையும் அது விலையாகக் கேட்கும்! என்பதையும் அவன் திட்டவட்டமாகப் புரிந்து வைத்துள்ளான்.

பிறகு நாம் சூரத்துல்ஃபாத்திஹாவை ஓதுகின்றோம். உலகில் இதைவிட அருமையான, இதைவிட அற்புதமான ஒரு துஆவை நம்மால் பார்க்க இயலாது, இதை, படைத்த வல்லவனே பேராளன் அல்லாஹ்வே நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளான். ஆகச் சிறப்பான ஒரு துஆவையே நாம் கேட்கின்றோம். அப்புறம், கேட்கும் பொருள்! அதுவும் சிறப்பானது. உலகில் உள்ள பொருள்கள் நிஃமத்துகள் எல்லாவற்றையும் விட உன்னதமானதையே சிறப்பானதையே – ஹிதாயத்தை, நேர்வழியை – நாம் கேட்கின்றோம். அதுவும் யாரிடம்? சிறப்பானதொரு சக்தியிடம்! யாரிடம் கேட்டால் இல்லை என்ற பதிலே கிடைக்காதோ அத்தகைய கரீமிடம் அர்ஹமுர் ராஹிமீனிடம் கேட்கின்றோம்.

தொழுகை என்பது இறைவனுடனான உரையாடல் என்பதை ஏற்கனவே பார்த்துள்ளோம். தொழுகையில் நாம் மொழிகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் அல்லாஹ் கவனமாகக் கேட்டு பதில் அளிக்கிறான்.

அண்ணலெம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லிம்) கூறுவதைக் கேளுங்கள் –

“நான் தொழுகையை எனக்கும் என் அடியானுக்கும் இடையில் பங்கிட்டுவிட்டேன்!” என்று அல்லாஹ் கூறுகிறான். “பாதி எனக்காக! பாதி என்அடியானுக்காக! என் அடியானுக்கு அவன் வேண்டியது கிடைக்கும்.”

அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் – என்று அடியான் கூறும் போது,

என் அடியான் எனக்கு நன்றி செலுத்துகின்றான் – என்று அல்லாஹ் கூறுகிறான்.

அர்ரஹ்மானிர் ரஹீம் – என்று அடியான் கூறும்போது,

என் அடியான் என்புகழ் பாடுகின்றான் – என்று அல்லாஹ் கூறுகிறான்.

மாலிக்கி யவ்மித்தீன் – என்று அடியான் கூறும் போது,

என் அடியான் என்னைப் பெருமைப்படுத்துகின்றான் – என்று அல்லாஹ் கூறுகிறான்.

இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்தஈன் – என்று அடியான் கூறும் போது,

இது எனக்கும் என் அடியானுக்கும் இடையிலானது, என் அடியானுக்கு அவன் வேண்டியது கிடைக்கும் – என்று அல்லாஹ் கூறுகிறான்.

கய்ரில் மக்ழூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன் – என்ற அடியான் கூறும் போது,

இது என் அடியானுக்கே ஆனது. அவன் விரும்பியது அவனுக்குக் கிடைக்கும் – என்று அல்லாஹ் கூறுகிறான்.

தன்னுடைய ஒவ்வொரு வார்த்தையையும் வல்ல அல்லாஹ் கவனமாகக் கேட்டு பதில் அருளுகின்றான் என்ற எண்ணத்தோடு இறை நம்பிக்கையாளன் தொழுகின்றான். உரையாடல் என்றால் என்ன? இரண்டு பேர் தத்தமது பேச்சைப் பகிர்ந்து கொள்வது தானே உரையாடல். ஒருவர் பேசிக் கொண்டுள்ளார். இன்னொருவர் கவனமில்லாமல், அலட்சியமாக வேறெங்கோ பராக்கு பார்த்துக் கொண்டு உள்ளார் என்றால், அது உரையாடலாக இருக்குமா? அல்லது அவர்தான் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பாரா? எழுந்திரித்துப் போய்விட மாட்டாரா, என்ன?

நம்மைவிட மேலான ஒருவரை நாம் சந்திக்க செல்கின்றோம், அவரும் நமக்காக நேரம் ஒதுக்கி நம்மோடு உரையாட வருகின்றார். அவர் என்ன பேசுகிறார் என்பத கவனமாக கேட்டு அதற்குரிய சரியான பதிலைத் தந்தால் தானே அவர் மேற்கொண்டு உரையாடுவார். அலட்சியமாகவும், அக்கறை இல்லாமலும் நாம் பாட்டுக்கு தேமே என்று மூழ்கிப் போயிருந்தால் நம்மோடு தொடர்ந்து அவர் ‘பேசிக்’ கொண்டிருப்பாரா என்ன?

சாதாரண மனிதர்களே பதில் மரியாதையை எதிர்பார்க்கும் போது நாம் தொழுகையில் நின்று மனம் ஈடுபடாமல் கடகடவென்று ‘அல்ஹம்துவை’ உருட்டித் தள்ளினால் அது எப்படி உரையாடலாக அமையும்? அல்லாஹ் தான் அதற்கு எப்படி பதில் அளிப்பான்?

நாம் தொழுகையில் நிற்கின்றோம் என்றால், அங்கு மூன்று அம்சங்கள் இருக்க வேண்டும். நம்முடைய உடல், மனம், அறிவு நம்முடைய உடல் ஆஜராகியிருக்க வேண்டும். நம்முடைய அறிவு ஆஜராகியிருக்க வேண்டும் நாம் என்ன மொழிகின்றோம் என்பதை அது சிந்தித்து உணர வேண்டும். நாம் சில அடையாளச் சொற்களை உச்சரிக்கும் போது – உதாரணமாக துஆயே இப்றாஹீம், அதற்குரிய காட்சிகளை சிந்தையில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும். நம்முடைய மனம் ஆஜராகியிருக்க வேண்டும். இறைவனுக்கு முன்னால் நிற்கின்றோமே என்று அது அஞ்சி நடுங்க வேண்டும். பயந்து அழுக வேண்டும்!

அண்ணலெம் பெருமானார் (சல்லல்லாஹு அலைஹி வசல்லிம்) அவர்கள் ஒவ்வோர் ஆயத்தையும் நிறுத்தி நிறுத்தி தெளிவாக ஓதுவார்கள். இறைவனைத் துதிக்கின்ற வசனங்கள் வந்தால் இறைவனின் தூய்மையை துதிப்பார்கள். இறைவனிடம் பாதுகாப்பு கோருகின்ற இடங்கள் வந்தால் பாதுகாப்பு கோருவார்கள்.

நாம் என்ன ஓதுகின்றோம் என்பதையே புரிந்து கொள்ளாமல் எதனையோ ஓதி வைக்க கூடாது. மாறாக பொருளுணர்ந்து ஓத வேண்டும். நமக்கு ஒரு பதினைந்து இருபது சூராக்கள் தெரிந்திருக்கும் இல்லையா? அவற்றின் பொருளையும், விரிவுரையையும் பன்முறை படித்து மனதில் பதியவைத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய வாய் ஓதத் துவங்கியவுடன் அவற்றின் பொருளையும் தெளிவுரைகளையும் நம்முடைய அறிவு கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும். அதை நினைத்து மனம் பயப்பட வேண்டும். சுபச் செய்திகள், சுவனச் செய்திகள் வந்தால் இறைவனைப் புகழ வேண்டும். விசாரணை, தீர்ப்பு நாள், நரகம் பற்றியவை வந்தால் இறைவனிடம் பாதுகாவல் தேட வேண்டும். பிழை பொறுக்க வேண்டும்.

முதர்ரிஃப் இப்னு அப்துல்லாய் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்.

நான் அண்ணலாரிடம் வந்தேன். அண்ணலார் (சல்லல்லாஹு அலைஹி வசல்லிம்) தொழுது கொண்டிருந்தார்கள். கொதிக்கும் உலைப் பானையிலிருந்து எழும் சப்தத்தைப் போன்ற அவர்களுடைய நெஞ்சிலிருந்து சப்தம் எழும்பிக் கொண்டிருந்தது.

தொழுகையில் குர்ஆன் ஆயத்துகளை ஓதும் போது நிறுத்தி நிறுத்தி நிதானமாக ஓத வேண்டும். அண்ணலெம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லிம்) தொழுகையில் ஓதுவதைக் கேட்டால் எழுத்துக்களை எண்ணிச் சொல்லலாம் என்று அன்னை உம்மு ஸலமா (ரழியல்லாஹு அன்ஹா) அறிவிக்கிறார்கள். சில வசனங்களை, நம் மனம் நெகிழும் வசனங்களை மடக்கி மடக்கி பலமுறை ஓத வேண்டும்.

சூரத்துல் ஃபாதிஹாவுக்குப் பிறகு நாம் வேறு சூராக்களை ஓதுகின்றோம். அவற்றையும் இவ்வாறே ஓத வேண்டும். முடிந்த அளவு நிறைய சூராக்களை மனனம் செய்து கொள்ள வேண்டும். நம்முடைய உள்ளத்தை பாழடைந்த மண்டபமாக வைத்திருக்கக் கூடாது. குறைந்த பட்சம் ‘அம்ம’ ஜூஸ்வையாவது முழுவதுமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ருகூஃ –

அடுத்ததாக தலைகுனிந்து ருகூஃ செய்கின்றோம். ஏற்கனவே கண்டது போல, தொழுகையில் உடல், மனம், சிந்தை மூன்று பங்கு பெற வேண்டும். உடல் மட்டும் குனிந்து வணங்கினால் போதாது – மனமும் குனிய வேண்டும், சிந்தையும் தலைவணங்க வேண்டும். எவனுடைய மனதில் ஆணவமும், அதிகார போதையும் உள்ளதோ, யாருக்கு ஆளுமைவெறி தலைக்கேறி உள்ளதோ அவன் சிரம்குனிய மாட்டான். அவன் உடல் வேண்டுமானால் குனியலாம், உள்ளம் குனியாது. தலை வணங்காது. இறை நம்பிக்கையாளன் – அவன் வாழ்வின் எந்த மூலையிலாகட்டும் – தன்னுடைய இறைவனுக்கு அடிமையாகவே இருக்கின்றான், இறைவனுக்கு பணிந்து வாழ்வதில் தான் அவன் பெருமை கொள்கின்றான்.

சுப்ஹான ரப்பியல் அளீம் –

ருகூஃவில் நாம் தஸ்பீஹ் ஓதுகின்றோம். சுப்ஹானரப்பியல் அளீம். இவை ஏதோ மந்திர வார்த்தைகள் அல்ல. மனதின் அடியாழத்திலிருந்து உணர்வோடும், சிந்தைத் தெளிவோடும் வெளிக் கிளம்ப வேண்டியவை. சுப்ஹான ரப்பியல் அளீம் என்றால் என்ன பொருள்? என்பதை நாம் நன்கு விளங்கி வைத்திருக்க வேண்டும். சுப்ஹான ரப்பியல் அளீம் என்றால் ஆற்றல்மிக்க என்னிறைவன் தூய்மையானவன் எனப் பொருள்.

தூய்மையானவன் என்றால் எதனை விட்டுத் தூய்மையானவன்? இறைவன் என்று மக்கள் எதையெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ, அவற்றையெல்லாம் விட்டுத் தூய்மையானவன், கடவுள் என்ற பெயரில் மக்கள் கட்டும் கதைகளையெல்லாம் விட்டுத் தூய்மையானவன், ஷிர்க்கை விட்டு, குஃப்ரைவிட்டு, பித்அத்தை விட்டு, பிதற்றல்களை விட்டுத் தூய்மையானவன்.

அவர்களின் பொய்யான வர்ணனையிலிருந்து அர்ஷுக்கு உரியவனான அல்லாஹ் மிகப் புனிதமானவன். (அன்பியா – 22)

இவர்கள் புனைந்து கூறும் கற்பனைகளிலிருந்து அவன் தூய்மையானவன். உயர்ந்தவன்! (அன்ஆம் – 100)

இவர்கள் இணைவைப்பவற்றை விட்டு அவன் தூய்மையானவனும் உயர்ந்தவனும் ஆவான். (யூனுஸ் – 18)

இவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிகத் தூய்மையானவனும் மிக உயர்ந்தவனும் மேலானவனும் ஆவான். (பனூ இஸ்ராயீல் – 43)

கடவுள் என்ற பெயரால் நாட்டில் வழங்கி வருகின்ற கற்பனைக் கதைகள். கழிசடைக் கருத்துக்கள், இன்னும் என்னென்னவோ குப்பை கூளங்கள் இவை அனைத்தையும் விட்டு அவன் தூய்மையானவன்!

அடுத்து இன்னொரு கேள்வியும் எழுகின்றது.

தூய்மையானவன் என்றால் அவனுடைய தூய்மை எப்பேற்பட்டது? எத்தகையது? அவனுக்கென்று சிறப்பான பல குணங்கள் உள்ளன. புகழப்பட வேண்டிய பல பண்புகள் உள்ளன. தூய்மையான அந்தத் தன்மைகளுக்கு அவன் மட்டுமே சொந்தக்காரன்.

அல்லாஹ்வுக்கென்று அழகிய திருநாமங்கள் உள்ளன. (அஃராஃப் – 180)

இவை அனைத்தும் அவனுடைய அழகிய பண்புப் பெயர்கள். 99 தூய்மையான திருநாமங்களை அவன் பெற்றுள்ளான். அவை அனைத்துமே அவனுடைய தூய்மையை புனிதத் தன்மையை பறைசாற்றுகின்றன.

நாம் சுப்ஹான……. என்று ருகூஃவில் தஸ்பீஹ் ஓதும் போது இவ்விரு கோணங்களிலும் சிந்தனையைச் செலுத்தி கவனத்துக்குக் கொண்டவர வேண்டும். ஒன்றை முழுமையாக நிராகரிக்க வேண்டும். இன்னொன்றை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கடகடவென்ற பல்லில் கூடப் படாமல் தஸ்பீஹை உருட்டுகின்ற செயல் அல்ல இது! நிறுத்தி நிதானமாக மேற்கண்டவற்றை மனதில் எண்ணியவாறு சுப்ஹான ரப்பியல் அளீம் என்று ஓத வேண்டும். ஆற்றல் என்று ஏதும், அருமை பெருமை என்று ஏதும் என்னிடம் இல்லை. ஆற்றல் எல்லாம் உனக்கே சொந்தம் என்பதையும் நாம் வார்த்தைகளால் மொழிகின்றோம்.

ஸஜ்தா –

அவ்வாறே ஸஜ்தாவிலும் சுப்ஹானரப்பியல் அஃலா என்று கூறுகிறோம். அஃலா என்றால் மேலானவன் உயர்வானவன் என்று பொருள். தன்னை மிகவும் கீழ்த்தரமாக கருதிக் கொள்வதின், உச்சகட்ட அடிமைத்தனத்தின், தாழ்மையுணர்வின், பணிவின் அடையாளமான ஸஜ்தாவில் ‘அஃலா’ என்று மொழிகின்றோம். எவ்வளவு பொருத்தமான வார்த்தை அமைப்பு, பார்த்தீர்களா! சுப்ஹானல்லாஹ்!

தஷஹ்ஹுத் –

தொழுகையின் கடைசி நிலையான இருப்பில் பொதுவான மூன்று துஆக்கள் ஓதப்படுகின்றன. அத்தஹிய்யாத், ஸலவாத், இஸ்திக்ஃபார்.

எல்லோரையும் விட அதிகமாக மனிதன் இறைவனுக்கே கடமைப்பட்டுள்ளான். எனவே அவனுடைய திருச்சமூகத்தில் அவனுக்காக வணக்கங்களை (Salutation) சமர்ப்பிக்கின்றான். பின்பு அண்ணலார் மீதும் வாழ்த்துக்களை அனுப்புகின்றான்.

இரண்டாவதாக ஸலவாத். இருபெரும் முக்கிய முன்மாதிரி மனிதர்களை இங்கே இறையடியான் நினைவு கூறுகின்றான். அண்ணல் இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம், அருமைத்தூதர் சல்லல்லாஹு அலைஹி வசல்லம். இறைவன் வான்மறையில் இவ்விருவரையும் தானே அழகிய முன்மாதிரி – உஸ்வதுல்ஹஸனா – களாக முன்னிலைப் படுத்தி உள்ளான். (காண்க 60-4,33-21) ஏற்கனவே தொழுகையைத் துவக்கும் போதே ஃகலீலுல்லாஹ்வை நினைவு கூர்ந்து ஹனீஃபிய்யத்தான மனோ நிலையில் அவன் துவக்கினான். இப்போது முடிக்கும் முன்பும் நினைவுகூர்ந்து அவருக்காக உள்ளங்கனிந்த பிரார்த்தனையும் செய்கின்றான். இவ்விரு தூதர்களும் எப்படி வாழ்ந்தனர்? எத்தகைய வழிகாட்டதல்களை வழங்கினர்? இவ்விருவரின் அடியொற்றி பாதையில் பயணத்தில் பின்தொடரும் வைராக்கியம் பூண்டு கொள்கின்றான்.

மூன்றாவதாக, தன் குற்றங்களை, இறைவழிப்பயணத்தில் தனக்கு ஏற்பட்ட சறுக்கல்களை நினைவு கூர்ந்து கண்கள் கசிய, உள்ளம் நெகிழ பாவமன்னிப்பு தேடிக் கொள்கின்றான்.

ஓர் இறை நம்பிக்கையாளனின் தொழுகையை நாம் தொழுக விரும்பினால் நாம் குறைந்த பட்சம் இம்முறையைப் பின்பற்றியே ஆக வேண்டும்.

அண்ணலார் பெருமானார் (சல்லல்லாஹு அலைஹி வசல்லிம்) கூறியுள்ளார்கள்.

நீ தொழுவதற்காக நின்றால் இவ்வுலகை விட்டு விடை பெற்றுச் செல்லும் மனிதனைப்போல தொழுவாயாக! (மிஷ்காத்)

அதாவது இதுதான் என்னுடைய கடைசித் தொழுகை என்ற நினைப்பில் உள்ளச்சத்துடன் தொழுக வேண்டும்.

பாவங்களை கழுவும் நீரோடை –

இப்படி தூய உள்ளத்தோடு நாம் தொழுது வந்தால் அத்தொழுகை நம்முடைய குற்றங்குறைகளை எல்லாம் போக்கும் ஜீவநதியாக மாறிவிடுகின்றது.

அண்ணல் நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லிம்) தம் தோழர்களைப் பார்த்துக் கேட்டார்கள்.

‘உங்களில் ஒருவர் தன் வீட்டு வாசலருகே ஓடும் ஆற்றில் ஒரு நாளைக்கு ஐந்து வேளை குளித்து வந்தால் அவர் உடம்பில் அழுக்கு ஏதும் மிஞ்சுமோ?’

தோழர்கள் கூறினார்கள் – ‘இல்லை, அழுக்கு எதுவும் மிஞ்சாது’ அண்ணலார் பிறகு கூறினார்கள், ‘ஐவேளைத் தொழுகைகளின் நிலையும் இதுதான்! அவற்றைக் கொண்டு அல்லாஹ் குற்றங்களை அழித்து விடுகின்றான்.’ (சயீஹுல்புஃகாரி)

நாம் உலக விவகாரங்களில் முழுமையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது தொழுகைக்கான அழைப்போசை கேட்கின்றது. பர்ளுத் தொழுகையில் கலந்து கொள்ள வசதியாக நாம் இகாமத்துக்கு நான்கு நிமிடங்கள் முன்னதாக கிளம்பிச் சென்றால் நம்மால் மேற்கொண்ட முறைப்படி திருப்தியோடு தொழுக இயலுமா? என்றால் கண்டிப்பாக இயலாது. என்னதான் நாம் மனதை ஒருங்கிணைக்க, ஒரு நிலைப்படுத்த முயன்றாலம் அது கடினமே! எனவே பாங்கோசை கேட்டதும் நாம் பள்ளிக்கு விரைந்திட வேண்டும். பள்ளிக்கு சென்று, பள்ளியின் அமைதியான சூழ்நிலையில் உலகப் பரபரப்புகளை விட்டு விலகி இருப்பதும், முன் சுன்னத்துகளை தொழுதுவிட்டு, பர்ளு தொழுகையை எதிர்பார்த்து காத்திருப்பதும் நம்முடைய மனதை ஒரு நிலைப்படுத்துவதில், இறை நினைவைத் தூண்டவதில் பெரும்பங்கு ஆற்றும்.

ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு –

ஷைத்தான் நம்முடைய பகிரங்க விரோதி ஆவான். ஆதிமனிதர் காலத்திலிருந்து பகைமை தொடர்கின்றது. திக்ருல்லாஹ் – இறைவனை நினைவுகூறும் இடங்களில் ஷைத்தானின் சதிவலைகள் பயனற்றுப் போகின்றன. கழிப்பிடங்களில் நாம் திக்ரு செய்வதில்லை. அங்கே அவனுடைய ஆதிக்கம் அதிகமாக உள்ளது. எனவே உள்ளே செல்லும் போது நாம் கெட்ட ஜின்களை விட்டு பாதுகாப்பு தேடிக் கொள்கின்றோம்.

ஷைத்தான் வழிகேட்டுக்கு வழி வகுக்கும் செயல்களையே தூண்டுகின்றான்.

மானக்கேடானவை மற்றம் தீயவற்றைச் செய்யுமாறே ஷைத்தான் ஏவுவான். (நூர் – 21)

இறைநம்பிக்கையாளன் தொழுகையின் மூலமாக இறைவனுடனான ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்கின்றான். இறைநினைவு அவன் மனதில் நீங்கா இடம் பிடிக்கின்றது. இறைநினைவு எந்த நிமிடமும் அவனை விட்டு நீங்குவதே இல்லை. எனவே, அவனைக் காக்கும் கேடயமாக, இறை நினைவினை அவனுக்கு அளிக்கும் ‘தொழுகை’ மாறிவிடுகின்றது.

நிச்சயமாக தொழுகை மானக்கேடான மற்றும் தீயசெயல்களை தடுக்கின்றது. (அன்கபூத் – 45)

இவ்வசனத்தை விளக்குகையில் அல்லாமா இப்னு கஸீர் (ரஹ்) ஒரு கருத்தை அறிவிக்கின்றார். அது

மவ்கூஃப்ஹதீஸ் ஆகும். அதாவது நபித்தோழர்களோடு நின்றுவிடும் அறிவிப்பு. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், ஹஸன் ஆகியோர்களோடு நின்று விடுகின்றது. அதாவது –

தடுக்கப்பட்ட தீய செயல்களை விட்டும், மானக்கேடான ஆபாசமான காரியங்களை விட்டும் யாரை அவருடைய தொழுகை தடுக்கவில்லையோ, அது தொழுகையே அல்ல! (அல்லது அவர் தொழுகவே இல்லை)

இஹ்ஸானுஸ் சலாத் –

நாம் ஏற்கனவே இஹ்ஸானுல் ஒழுவைப் பற்றி பார்த்துள்ளோம். அதே போல இஹ்ஸானுஸ் சலாத் தும் உள்ளது. ஒவ்வொரு இபாதாவிலும் இஹ்ஸான் உள்ளது (உதாரணம் – இஹ்ஸானுத் துபுஹ், இஹ்ானுல் ஜிஹாத்) இஹ்ஸானுஸ் சலாத் என்றால் என்ன?

புகழ் பெற்ற ஹதீஸுஜிப்ரீல் – ஐக் காண்போம்.

பிறகு அவர் ‘இஹ்ஸான் என்றால் என்ன?’ என்று கேட்டார். அண்ணலெம் பெருமானார் பதில் கூறினார்கள், ‘நீ அல்லாஹ்வைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்ற உணர்வோடு அவனை வணங்க வேண்டும். அவ்வாறு வணங்க இயலவில்லை என்றால் அவன் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வுடனாவது வணங்க வேண்டும்………..’ (சஹீஹுல்புஃகாரி)

நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி இது! அண்ணலார் (சல்லல்லாஹூ அலைஹி வசல்லிம்) அவர்கள் இஹ்ஸான் என்பதற்கு தெளிவானதொரு விளக்கத்தை அளித்துள்ளார்கள். அதனடிப்படையில் ஒரு மனிதன் இருவித நிலைகளில் தொழலாம், தொழ வேண்டும்!

(1) அல்லாஹ்வுக்கு முன்னால் நாம் நின்று கொண்டு, அவனைப் பார்த்துக் கொண்டிருந்தால் எத்தகைய எண்ணங்கள், உணர்ச்சிகள் நம் உள்ளத்தில் மேலெழும்புமோ அவ்வுணர்வுகளோடு தொழுக வேண்டும்.

(2) அந்த அளவுக்கு நாம் இல்லை என்றால், அத்தகைய உணர்வுகளை நம்மால் அடைய இயலவில்லை என்றால், அவன் நம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான். நாம் பார்க்காவிட்டாலும் அவன் நம்மை கண்காணித்துக் கொண்டே உள்ளான் என்ற உணர்வோடு தொழுக வேண்டும்.

இந்த இருவித நிலைகளில் ஏதேனுமொரு நிலையில் நின்று தொழுதால் தான் அது இஹ்ஸானஸ் சலாத் ஆக இருக்கும். இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும். இவ்விரு நிலைகளைத் தவிர்த்து மூன்றாவதாக ஒரு நிலை கிடையாது.

நாம் ஒரு கடையில் வேலை செய்வதாக நினைத்துக் கொள்வோம். முதலாளிக்கு முன்னால் நின்று கொண்டுள்ளோம். நாம் முதலாளியின் பார்வையிலும் அவர் நம்முடைய பார்வையிலும் இருக்கும் போது நம்முடைய பொறுப்பு உணர்வு எந்த அளவு நன்றாக இருக்கும். வீண் காரியங்கள் செய்ய மாட்டோம். சக ஊழியர்களோடு அரட்டையில் ஈடுபட மாட்டோம். வாடிக்கையாளர்களைக் கவனிக்காமல் பொழுதைப் போக்க மாட்டோம். மாறாக, கடமையில் கண்ணுங்கருத்துமாக இருப்போம். இல்லையா?

இதே கடை, ஆனால் முதலாளி முன்னால் இல்லை. அவர் தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டார். நம்மால் அவரைப் பார்க்க இயலாது. ஆனால் அவர் குளிர்கண்ணாடிகளின் வழியாக நம்மைக் கண்காணித்துக் கொண்டே இருக்கும் போது, நாம் வெட்டிவேலைகளில், சேட்டைகளில் ஈடுபடுவோமா? இல்லை, கவனமாக இருப்போமா?

நாம் ஒரு சபையில் கலந்து கொள்ள செல்கின்றோம். மேன்மனிதர்கள், உயர் பெருமக்கள் அச்சபையில் அமர்ந்துள்ளார்கள். சபை மரியாதையோடு தன் அடக்கத்தோடு நடந்து கொள்கின்றோம். அதே அவைக்கு பார்வையற்ற ஒரு மனிதன் வருகிறார். அவரால் யாரையும் பார்க்க முடியாது. தன்னை விட அறிலிலும், அந்தஸ்திலும் பெரிய சான்றோர் பலர் அமர்ந்துள்ளார்கள் என்ற நினைப்போடு கண்ணியமாகவும் அடக்கமாகவும் அவர் நடந்து கொள்வாரா? இல்லை, தான்தான் யாரையும் பார்க்க இயலாதே என்ற எண்ணத்தில் கௌரவக் குறைவான வேலைகளை – கூச்சல் இடுவது, உடைகளை தாறுமாறாக ஆக்கிக் கொள்வது போன்ற செயல்களை செய்வாரா?

ஆக, சகோதர, சகோதரிகளே!இவ்விரண்டு நிலைகள் தாம் தொழுகைக்கான நிலைகள். நம்முடைய கொழுகை உண்மையிலேயே தொழுகையாக இருக்க வேண்டுமானால் நாம் இவற்றில் ஒன்றை கைக்கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் அது தொழுகையாக இருக்கும். தொழுகையின் தன்மைகளைப் பெற்றிருக்கும். இறைவனால் தொழுகையாக அங்கீகரிக்கப்படும், ஏற்றுக்கொள்ளப்படும். தொழுகை, தொழுகையாக இருந்தால் தான் அது தீமைகளை விட்டு, தடுக்கப்பட்ட செயல்களை விட்டு ஆபாசமான காரியங்களை விட்டு நம்மைத் தடுக்கும். கோழி தானியங்களைக் கொத்துவதைப் போல அவசர அவசரமாக கொத்தி எறிந்து விட்டு வந்தால் அது தொழுகையும் அல்ல. அது தன் வேலையையும் செய்யாதுஸ அவ்வாறு தொழுபவனை தொழுகைத் திருடன் என்று ஹதீஸ் வர்ணிக்கிறது.

தொழுகையை உடல், உயிர் என்று நாம் வகைப்படுத்தலாம். உயிர் இல்லாத உடல் பயனற்றது. ஒருவன் மிகவும் அழகாக கச்சிதமான உறுப்புகளைக் கொண்டவனாக இருக்கின்றான். ஆனால் அவன் உடம்பில் உயிர் இல்லை என்றால், அவன் என்று அதை நாம் சொல்லமாட்டோம். அது பிணம்! அதே சமயம் ஒருவன் கைகால் அற்றவனாக, அல்லது உறுப்புகள் சிதைந்த நிலையில் அல்லது ஹெலன் கெல்லரைப் போல புலனுணர்வுகள் அற்ற நிலையில் இருந்தாலும் நாம் அவனை மனிதன் என்றே கருதுவோம்.மதிப்போம். உயிரோட்டம் இல்லாத தொழுகை வடிவழகில் முழுமையானதாக இருந்தாலும்

அண்ணலாரை அப்படியே பின்பற்றினாலும் அது தொழுகையாக ஆகிவிடாது. பிணத்திற்கு எதற்கு அழகும் சௌந்தர்யமும்?

ஹிழுல் குர்ஆன்

அல்லாஹ்வுடைய கலாமாகிய வான்மறை குர்ஆனில் நம்மால் இயன்ற அளவு அதிகமதிகம் மனனம் செய்ய முயற்சிக்க வேண்டும். சகோதர, சகோதரிகளே! நம்மில் பலரும் இஸ்லாத்தை சரியாக விளங்கிக் கொள்ளும் முன் சினிமாவும் TVயும் பார்த்துக் கொண்டிருந்தோம். இல்லையா? அப்போதெல்லாம் கேட்ட எத்தனையோ படப்பாடல்கள், விளம்பரப்பாடல்கள் இன்றும் நினைவில் பசுமையாக உள்ளன. எப்போதோ கேட்ட பாடல்களுக்கும், தேவையற்ற செய்திகளுக்கும் நாம், நம்முடைய நினைவில் இடம் ஒதுகிகியுள்ள போது, ஏன் குர்ஆனுக்கொன்றும் ஓரிடத்தை ஒதுக்கக் கூடாது? மனித மூளை அற்புதமான திறன் கொண்டது. நாம் இப்போது சினிமாவே பார்ப்பதில்லை என்றாலும் எப்போதோ கேட்ட பாடல்கள் இன்றும் அழியாமல் நினைவில் வைத்துக் கொள்ளும் திறன் படைத்தது நம்முடைய மூளை! எனவே நாம் குர்ஆனை ஹிப்ழ் செய்ய முயற்சிக்க வேண்டும்.

நீண்ட சூராக்கள், நடுத்தரமான சூராக்கள், சிறிய சூராக்கள் என்று குர்ஆன் சூராக்களை வகைப்படுத்தியுள்ளனர். சிறிய சூராக்களுக்கு முஃபஸ்ஸல் என்று பெயர். அத்தியாயம் 49 (அல்ஹுஜுராத்)லிருந்து கடைசி வரை உள்ள அத்தியாயங்களே முஃபஸ்ஸல் அத்தியாயங்கள். எனவே, சிறிய அத்தியாயங்கள் முழுவதையும் நாம் மனனம் செய்து கொள்ளும் வைராக்கியத்தை மேற்கொள்ள வேண்டும். அல்லது குறைந்த பட்சம் கடைசி இரண்டு ஜுஸ்வுகளையாவது (29,30) மனப்பாடம் செய்தே தீர வேண்டும்.

அண்ணலார் சொன்னது போல கொஞ்சமேனும் குர்ஆன் இல்லாத உள்ளம், பாழடைந்த வீட்டைப் போன்றதாகும். கொஞ்சமேனும் என்பது குறைந்த பட்சம் ஒரு ஜுஸ்வு, இரண்டு ஜுஸ்வுவாக இருக்கக்கூடாதா என்ன?

3. தொழுகையை தாக்கும் நோய்கள்

எது உண்மையிலேயே தொழுகை? எப்படித் தொழுதால் நம்முடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படும்? எந்தத் தொழுகை தன் இயல்போடு தன் தன்மைகளை வெளிப்படுத்தி நம்மைக் காக்கும்? என்பதை அறிந்து கொண்டோம்! நாம் அவ்வாறு தொழ முயன்றாலும் சிலபல காரணங்களால் நம் தொழுகை பாதிப்படைகின்றது. தொழுகையை தாக்கம் நோய்கள் என்று அவற்றைக் கூறலாம். அவற்றைப் பற்றிக் காண்போம்

சோம்பல்

தொழுகையை அழிக்கவல்ல பொதுவான பாதிப்பு சோம்பல் ஆகும். யாரேனும் ஒருவனுக்கு இந்த வியாதி தொற்றிக் கொண்டால் அவன் நேரத்தோடு தொழ நினைப்பதில்லை. ஜமாஅத்தோடு தொழுக முக்கியத்துவம் அளிப்பதில்லை. நின்றால் ‘மனதை’யும் ‘அறிவை’யும் தன்னோடு வைத்துக் கொள்வதில்லை. இத்தகைய மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக தொழுகையைத் தொலைத்து விடுகிறான். அப்படியே தொழுதாலும் அது தொழுகையாக இருப்பதில்லை. தொழுகையின் தன்மைகள் அங்கே தென்படுவதில்லை.

சோம்பலுக்கு காரணமாக பல விஷயங்கள் அமைகின்றன. தூக்கம், வேலைப்பளு, உலக விவகாரங்களில் ஈடுபடும் ஆர்வம் இவை போன்ற பல காரணங்கள். ஆனால் ஆழமாக உற்று நோக்கினால் இவையனைத்தும் உண்மையான காரணங்கள் அல்ல! இவை வெறும் திரைகளே, உண்மையான காரணம் மனதில் உள்ளது என்பதை இனங்கண்டு கொள்ளலாம்.

ஒன்று இயற்கையான சோம்பல் ஆகும்! தூக்கம், களைப்பு, வேலைச்சுமை, உழைப்பை உறிஞ்சும் அலுவல்கள் போன்றவை சுறுசுறுப்பான மனிதனையும் அடித்து விடத்தான் செய்கின்றன. ஆனால், கொஞ்சமே கொஞ்சம் முயற்சி செய்தாலே போதும் இந்த சோம்பலை அடித்து விரட்டிவிடலாம்.

இன்னொரு வகையான சோம்பல் இருக்கின்றது. அது கொள்கைச் சோம்பல், அதாவது நிஃபாக், சாதாரண மருந்துகள் எல்லாம் அங்கே பலன் அளிக்காது. சூரத்துந் நிஸாவில் வான்மறை குர்ஆன் அவர்களை இவ்விதம் வர்ணிக்கிறது.

முனாஃபிக்குகள் அல்லாஹ்வை ஏமாற்றுகின்றார்கள். உண்மையில் அவனே இவர்களை ஏமாற்றத்துக்கு ஆளாக்கி இருக்கிறான். இவர்கள் தொழுகைக்காக எழுந்து நின்றால் சோம்பல் பட்டுக் கொண்டே நிற்கின்றார்கள். மக்களுக்கு காட்டிக் கொள்ளவே தொழுகின்றார்கள். இன்னும் அல்லாஹ்வை மிகக் குறைவாகவே நினைவு கூருகின்றார்கள். (நிஸா 142)

நாம் இங்கே முனாஃபிக்கீன்களைப் பற்றியோ நிஃபாக்கைப் பற்றியோ காணப்போவதில்லை. *தொழுகையைப் பாதிக்கும் சாதாரண சோம்பலிலிருந்து விடுபடம் வழிமுறைகளைக் காண்போம்.

முதலில் மனிதன், தீனில் தொழுகைக்கு உள்ள முக்கியத்துவத்தை மனதில் நன்றாக பதியவைத்துக் கொள்ள வேண்டும். ஈமான் கொண்ட பின்பு நிறைவேற்ற வேண்டிய முதற்கடமை தொழுகையேயாகும். தீன் நிலைகொண்ட தூண்களில் ஈமானுக்குப்பிறகு முக்கியமான தூண் தொழுகையேயாகும். தூண்களைத் தகர்த்துவிட்டால் கட்டடம் நிலைக்குமோ? எனவே தான் சஹாபாக்கள் தொழுகையை விடுவதை மிகப் பெரிய குற்றமாகக் கருதினார்கள். தொழுகைத் தொலைத்து விட்டவன் நாளடைவில் தீனையே தொலைத்து விடுவான். தொழ சோம்பல்படுகின்றவன் நாளடைவில் மனோ இச்சைகளின் அடிமையாகவே ஆகிவிடுவான். தொழுகையைத் தொலைத்த முன் சென்ற சமூகத்தினர் எப்படி அழிந்து போயினர் (19-59) என்பதை முன்பே கண்டோம்.

தீனில் தொழுகையின் நிலை என்ன என்பதையும் ஏற்கனவே விளங்கி வந்துள்ளோம். எனவே, தொழுகையில் பொழுதுபோக்காக, அலட்சியமாக இருப்பவர்கள் தீனுடைய மற்ற காரியங்களில் முனைப்போடு இருப்பதாகக் கூறினால் அது வடிகட்டின கேணத்தனம், அறியாமை ஆகும்! அஸ்திவாரம் இல்லாத கட்டடத்துக்கு அலங்காரம் எதற்கு? அடிப்படைக்கு, அதற்கான முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மற்ற விஷயங்கள் எல்லாம் அதற்குப் பிறத தான். இதனைத் தான் ஒரு ஹதீஸ் இவ்வாறு குறிப்பிடுகின்றது! அல்லாஹுத்தஆலா பர்ளுகளை (அடிப்படைக் கடமைகளை) நிறைவேற்றாதவரை ஒரு மனிதனின் நவாஃபில் (உபரி)களை ஒப்புக் கொள்வதில்லை. (ரியாள்)

சோம்பலை முறியடிக்கக் கூடிய இரண்டாவது வழிமுறை, இறைவனை நோக்கிய முயற்சி மற்றும் திக்ருல்லாஹ் என்றால் இறையில்லத்திலிருந்து தொழுகைக்கான அழைப்பொலி காதில் விழுந்ததும், செய்து கொண்டிருக்கும் எல்லாக் காரியங்களையும் அப்படியே விட்டவிட்டு தொழுகைக்காக தயாராவதிலும் பள்ளிக்கு செல்வதிலும் ஈடுபட வேண்டும். பாங்கொலி கேட்ட பின்பு வேறு எந்த வேலையையும் செய்து கொண்டிருக்கக் கூடாது. தீனில் அது மிக முக்கியமான வேலையாக இருந்தாலும் சரியே! போர்க்களத்திலேயே தொழுகையை விடக் கூடாது என்றிருக்கும் போது ஜிஹாதைவிடவும் முக்கியத்துவம் வேறு எந்த வேலைக்கு இருக்கப் போகின்றது? எஜமானன் அழைக்கும் போது கட்டுப்பட்டு உடனே ஓடும் விசுவாசமான அடிமையைப் போல உடனே ஓட வேண்டும். ஒன்றை நன்றாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். பாங்கு கொடுக்கப்பட்ட பிறகு அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமான அமல் தொழுகையைத் தவிர வேறு எதுவும் இல்லை. (நிர்ப்பந்தம், கட்டாயம் காரணமாக வேறு வேலைகளை செய்து கொள்ள விதிவிலக்கு உண்டு.)

பாங்கொலி கேட்டவுடன் எல்லா வேலைகளையும் விட்டு விடுவது. உடனே தொழுகைக்காக விரைந்து செல்வது என்பதை கஷ்டப்பட்டாவது நாம் பழக்கிக் கொண்டால் விரைவில் இதையே நம் பிரியத்துக்குரிய செயலாக அல்லாஹ் மாற்றிவிடுவான் என்பதிலும் ஆச்சர்யம் இல்லை.

தூக்கத்தின் காரணமாக ஏற்படும் சோம்பலைப் போக்க (குறிப்பாக இரவுத் தொழுகையில்) அண்ணலெம் பெருமானார் (சல்லல்லாஹு அலைஹி வசல்லிம்) ஓர் அருமையான வழிமுறையை கற்றுத் தருகிறார்கள்.

உங்களில் ஒருவர் உறங்கும் போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகின்றான். ஒவ்வொரு முடிச்சின் போதும் ‘இரவு இன்னும் இருக்கின்றது, உறங்கு!’ என்று சொல்லுகின்றான். அவர் விழித்தெழந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கின்றது. அவர் ஒழு செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கின்றது. தொழுக நின்றுவிட்டால் அடுத்த முடிச்சும் அவிழ்ந்து விடுகின்றது. அவர் சுறுசுறுப்பாகவும் உற்சாகமான மனதோடும் காலையை அடைகின்றார். இல்லாவிட்டால் சிடுசிடுப்போடும், சோம்பலோடும் காணப்படுகின்றார். (சஹீஹுல்புஃகாரி)

சுறுசுறுப்பையும் உற்சாகமான மனதையும் அவர் பெறுகின்றார். எந்த அளவுக்கு என்றால், இத்தனை நாள் இந்த இன்பத்தை இழந்து விட்டோமே என்று எண்ணி எண்ணி வருத்தப்படும் அளவுக்கு! ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். தூக்கத்தை தியாகம் செய்து தொழுகின்ற மனிதன் தூக்கம் போய்விட்டதே என்று நாளும் வருத்தப்பட மாட்டான். கற்று கஷ்டப்பட்டு உங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டால் அடித்துப் போட்டாற்போன்று ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தாலும் சரியான நேரத்தில் சட்டென்று முழிப்பு வந்து விடும்.

வஸ்வஸா – ஊசலாட்டங்கள்

அடுத்து தொழுகையைத் தாக்கும் முக்கியமான நோய் வஸ்வஸாஆகும். தொழுகைக்கு கைகட்டி நின்றவுடன் மனதில் ஏதேதோ எண்ணங்கள் ஊசலாட்டங்கள் படையெடுக்க ஆரம்பித்து விடுகின்றன. மழைக்காலத்தில் விளக்கை நோக்கி புற்றீசல்கள் படையெடுப்பது போல அலைஅலையாய் அலை அலையாய் எண்ணங்கள், மனதை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. ஓர் எண்ணம் தோன்றியவுடன் அதனைத் தொடர்ந்து இன்னொன்று அப்புறம் இன்னொன்று என்று இவை விரிவடைந்து கொண்டே செல்கின்றன. குளத்தில் எறிந்த கல் போல ஓர் எண்ணம் ஓராயிரம் எண்ணங்களைத் தோற்றுவித்து விடுகின்றது.

*நிஃபாக்கைப் பற்றியும் முனாஃபிக்கீன்களின் அடையாளங்களை விளக்கியும் இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் நம்முடைய பதிப்பகத்திலிருந்து நூலொன்று வெளிவர உள்ளது.

நம்முடைய மனம் சரியில்லை. அதனால் தான் இது போன்ற தொழுகையைப் பாதிக்கும் வேண்டத்தகாத எண்ணங்கள் தோன்றுகின்றன என்று சிலர் தங்களைத் தாங்களே நொந்து கொள்கின்றனர். ஆனால், இவ்வாறு கருதுவதும் சரியில்லை. தொழுகை எப்படி இறைவனுக்கு மிகவும் பிரியமான அமலாக உள்ளதோ, அது போன்றே ஷைத்தானுக்கு மிகவும் வெறுப்பைத் தரும் செயலாக உள்ளது. தொழுக நிற்கும் இறையடியானை எப்படியாவது திசை திருப்பி மனதைக் கலைத்து விட வேண்டும் என்று அவனும் அவன் படையினரும் பெருமுயற்சி செய்கின்றார்கள். அதுவும் யார் கொஞ்சம் உறுதியான ஈமானோடு உள்ளார்களோ, அவர்களையே ஷைத்தான் குறிப்பாக அணுகுகின்றான். வஸ்வஸாவையே தங்கள் ஆன்மீக திருப்தியாக நினைப்பவர்களைப் பற்றி அவன் அவ்வளவாக கவலைப்படுவதில்லை. ஓர் எண்ணத்தை மனதில் டெவலப் செய்து ஒரு லட்சம் வஸ்வஸாக்களாக்கி விடுகின்றனர்.

இவற்றிலிருந்து தப்பிக்க மூன்று வழிமுறைகள் பலன் அளிக்கும்.

(1) ஷைத்தானுடைய வஸ்வஸாவை மனதில் உணர்ந்தவுடன் அல்லாஹ்விடம் அபயம் பாதுகாப்பு தேடிக் கொள்ள வேண்டும். தொழுகைக்காக நிற்கும் போது ஷைத்தான் நம்முடைய பகிரங்க விரோதி. நாம் ஒழுங்காகத் தொழுவது அவனுக்குப் பிடிக்கவே பிடிக்காது. எதையாவத செய்து நம் தொழுகையைக் குலைக்கவே முயற்சி செய்வான், என்று மனதுள் கூறிக் கொண்டே நிற்க வேண்டும். எதிரியைச் சமாளிக்க எந்நிலையிலும் தயார் நிலையில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படைவீரனைப் போன்று தொழ ஆரம்பிக்க வேண்டும். வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் இதை நம்பிக்கையாளனின் தயார்நிலையே ஷைத்தானின் ஆயிரமாயிரம் மாயைகளை முறியடித்து விடும்.

(2) தொழுகையில் ஓதுகின்ற குர்ஆன் வசனங்களை மனதிலேயே மெதுவாக ஓதாமல் கொஞ்சம் வாய்விட்டு, தானே கேட்கும் அளவு சப்தமாக ஓத வேண்டும் (பள்ளிவாசலில் தொழுகும் போது பக்கத்தில் நிற்கும் ஆளைப் பாதிக்கும் வண்ணம் ஓதக் கூடாது ஜாக்கிரதை!) இப்படி மெதுவாக வாய்விட்டு ஓதும்போது என்ன ஓதுகின்றோம் என்று கவனமாக கேட்க முடியும். அதன் பொருளைப்பற்றி, விளக்கத்தைப் பற்றி சிந்தித்துப் பார்க்க முடியும். வஸ்வஸா மனதில் தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.

(3) மனிதன் தன்னடைய சாதாரண வாழ்க்கையில் நல்ல எண்ணங்களையே நினைத்துப் பழகிக் கொள்ள வேண்டும். தவறான எண்ணங்களுக்கு மனதின் ஓரத்தில் கூட இடம் அளிக்காமல் பழகிக் கொள்ள வேண்டும். மனிதனுடைய மனதினை மாவரைக்கும் மெஷினோடு ஒப்பிடலாம். கோதுமை அரைக்க மட்டுமே பயன்படும் மெஷினில் கற்கள் கலந்த கோதுமையையோ அரிசியையோ போட்டால் மெஷின் அரைக்காது. கடமுடா என்ற சத்தத்தோடு நின்று விடும். அதே சமயம் கண்டதையும் அரைக்கின்ற மெஷினில் கோதுமையைப் போட்டால் மாவு கிடைக்காது, தவிட்டு உமியோடு ரவைதான் கிடைக்கும். அதுபோல் நல்ல எண்ணங்களையே சிந்தித்துப் பழகிய மனதில் திடீரென்ற தவறான எண்ணமொன்ற தலை தூக்கினால், மனம் அதை அனுமதிக்காது. விரட்டித் தள்ளிவிடும். தவறான எண்ணங்களை நினைத்துப் பழகிப் போன மனம் தான் எல்லா எண்ணங்களுக்கும் இடம் கொடுக்கும், ஆக, நாம், நம் வாழ்வில் எந்நேரமும் திக்ருல்லாஹ் மற்றும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட தூய எண்ணங்களையே சிந்தித்துப் பழக வேண்டும். தவறான தீய, ஆபாசமான வக்கிர எண்ணங்கள் முளைவிட ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.

இவ்வளவு முன்னேற்பாடுகள், தடுக்கம் வழி முறைகளைப் பின் பற்றிய போதிலும் சில சமயங்களில் வேற்று எண்ணங்கள் தொழுகையின் போது மனதில் தலைதூக்குவதுண்டு. ஆனாலும் அவை தவறான எண்ணங்களாக இருக்காது. உமரிப்னு கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு போன்ற கண்ணுங்கருத்துமாக இருப்பவர்களுக்கும் கூட தொழுகையில் கவனம் சிதறிவிடத்தான் செய்கின்றது. உமரவர்கள் தொழநின்றால் அவர்கள் மனதில் ஈரானிலும், சிரியாவிலும் போராடும் இஸ்லாமியப் படை குறித்த எண்ணங்கள், கவலைகள் தோன்றுவதுண்டு. இதுவும் கூட ஒரு வகையான கவனத் தொலைப்பு தானே என்று சிலர் கேள்வி எழுப்பலாம். ஆம், இதுவும் ஒரு வகை தொலைப்பு தான்ஸ ஆனால் தன்னுடைய சொந்த வீதியிலேயே தொலைந்து போவதற்கும், வேற்று மொஹல்லாவில் விலாசம் தெரியாத இடத்தில் தொலைந்து போவதற்கும் வித்தியாசம் இருக்கின்றது அல்லவா?

இவை போக, இன்னும் சிலருக்கோ வேறு வகை வகையான ஊசலாட்டங்கள் தோன்றுவதுமுண்டு! இருமுறைக்கு நான்கு முறை கைகளைக் கழுவினாலும் இன்னும் சுத்தமாகவில்லையோ என்ற எண்ணம். ஒரு முறைக்குப் பலமுறை ஒரு விசயத்தை சோதித்து அறிந்த பின்பும் சந்தேகம். இது ஒரு வகையான மனக்குறைபாடு ஆகும். மனப்பயிற்சியும் மருத்துவர் ஆலோசனையும் கொண்டு இதைச் சரிப்படுத்தலாம் நமக்கு இங்கு இது தேவையில்லை.

இன்னம் சிலர் ஷரீஅத்தில் மிகமிக ஒழுங்காக இருக்க வேண்டும் என்ற நினைப்பில் இவை போன்ற வஸ்வஸாக்களில் மாட்டிக் கொள்வதுமுண்ட. ஷரிஅத் மிகவும் இலேசானது, எளிமையானது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒழு செய்தபிறகு ஏதேனும் கசிந்ததாக சந்தேகம் ஏற்பட்டால்

மறைவிடத்தின் மீதான ஆடையின் மீது தண்ணீர் தெளித்துக் கொண்டாலே போதுமானது. (மிஷ்காத்) எனவே, ஷரீஅத் இலேசானது. நாமாகவே வலிய கஷ்டத்தை வரவழைத்துக் கொள்ளக் கூடாது.

ஊசலாட்டங்கள் மனதில் ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும். ஊசலாட்டங்கள் ஏற்படாது தொழுதால் அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிக்கிறான் என்றொரு ஹதீஸ் சஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.

ஓதுவதில் கவனமின்மை

தொழுகையின் மீது தாக்குதல் தொடுக்கின்ற இன்னொரு ஆபத்து கவனமின்மை ஆகும். சாதாரணமாக நாம் எந்தக் காரியத்தை செய்தாலும் கவனத்தோடு செய்கின்றோம். ஐந்து ரூபாய் கொடுத்து வாங்கப்படும் ஒரு பத்திரிக்கையில் உள்ள கதைகளைக் கூட கவனமுடன் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றோம். ஆனால் தொழுகையில் நின்றால் என்ன ஓதுகின்றோம், என்ன சொல்கின்றோம் என்பதைக் குறித்த அக்கறையும் இல்லை. அவற்றில் கவனமும் இல்லை.

நம்மில் பெரும்பாலோர் அரபிமொழி தெரியாதவர்களாக இருப்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகும். அதானாலேயே அவர்கள் அலட்சியமாக இருக்கின்றார்கள். இறைவனுக்கு முன்னால் நின்று என்ன சொல்கின்றோம்? எதைப்பற்றிய ஒப்பந்தம் இது? இதனால் என்ன ஆகும்? என்பது ஏதும் தொரியாமல் வெறுமனே மந்திரங்களை ஓதி அர்ச்சனை செய்வது போலப் புரியாமல் விளங்காமல் ஓதிக் கொண்டுள்ளார்கள்.

இன்னும் சிலரோ ஓரளவு அரபி விளங்கியிருந்தாலும் அல்லது குறைந்த பட்சம் தங்களுக்குத் தெரிந்த அத்தியாயங்களின் பொருளுரை, தெளிவுரையை உணர்ந்து இருந்தாலும் அலட்சியமாக, அக்கறை இல்லாமல் இருக்கின்றார்கள். இதுவும் மிகவும் தவறான செயலாகும்.

அரபி தெரியாதவர்கள் குறைந்த பட்சம் தங்களுக்குத் தெரிந்த அத்தியாயங்கள், சூராக்கள், துஆக்கள் போன்றவற்றின் பொருளை கண்டிப்பாக மனனம் செய்து கொள்ள வேண்டும். அதில் கவனம் செலுத்த வேண்டும்.

ஓரளவு விவரம் தெரிந்திருந்தும் அலட்சியமாக இருப்பவர்கள் தங்கள் செயலை எண்ணி வருத்தப்பட வேண்டும். கொஞ்சம் சிரமம் எடுத்து முயற்சி செய்தால் இந்த அலட்சியத்தைப் போக்கி விடலாம். பழக்கப்படுத்தாதன் காரணமாக, கவனத்தோடு ஓதுவது நமக்கு கஷ்டமாகத் தெரிகின்றது. பழக்கப்படுத்திக் கொண்டால் எளிதாகி விடும்.

தினசரி தொழுவது தானே? தினந்தோறும் ஒரே அத்தியாயங்களைத் தானே திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டிருக்கின்றோம்? அதில் கவனம் என்ன செலுத்த வேண்டியிருக்கின்றது? எல்லாம் நமக்குத் தெரிந்தது தானே? என்று நினைக்கக் கூடாது. புதிய புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்காகவோ, நம்முடைய அறிவைப் பெருக்கிக் கொள்வதற்கோ நாம் தொழுது வரவில்லை என்பதை நாம் உணர வேண்டும். இறைவனோடு நாம் செய்து கொண்ட ஒப்பந்தத்தையே தொழுகையின் மூலம் நினைவு கூறுகின்றோம். ‘இறைவா! உன் வழியில் அகலாது நான் நிலைத்திருப்பேன்’ என்று நம் ஈமானை புதுப்பித்துக் கொள்கின்றோம்.

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு சுவை இருக்கின்றது. தொழுகைக்கும் ஒரு சுவை இருக்கின்றது. அந்தச் சுவையை அனுபவித்து விட்டால் நமக்கு தொழுகை ஏராளமான விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும், ஞானத்தை அள்ளி வழங்கும். அத்தகைய சிறப்பு பெற்றவர்களே பாக்கியவான்கள்!

திருட்டு

தொழுகையில் ஏற்படும் இன்னொரு கெடுதல் தொழுகை திருட்டுப் போவது ஆகும். தொழுகையை ஷைத்தான் திருடிக் கொள்வதில்லை. மாறாக தொழுபவனே தன்னுடைய தொழுகையை திருடிக் கொள்கின்றான். விரோதமாக இருக்கின்றது அல்லவா? ஆனால் நடப்பதென்னவோ அதுதான்!

‘கேடு கெட்ட திருடன் தன்னுடைய தொழுகையில் திருடுபவனே!’ என்று அண்ணலார் (சல்லல்லாஹு அலைஹு வசல்லிம்) கூறினார்கள். ‘தொழுகையில் எப்படி திருட முடியும்?’ என்று தோழர்கள் கேட்டார்கள். ‘அவன் ருகூஃவையும் ஒழுங்காகச் செய்ய மாட்டான். ஸஜ்தாவையும் ஒழுங்காகச் செய்ய மாட்டான்!’ என்று அண்ணலார் பதில் தந்தார்கள்.

இத்தகைய திருடர்கள் ஒழு செய்யும் போதே தங்களது திருட்டை ஆரம்பித்து விடுகின்றார்கள். கைகளைக் கழுவினால் முழங்கையில் சொட்டையாக விட்டுவிடுவார்கள். முகத்தையும் அப்படியே. கால்களைக் கழுவினால் குதிகால்களைக் கோட்டை விட்டுவிடுவார்கள். பிறகு தொழுகையில் போய் நின்றதும் சுடுதண்ணீரைக் காலில் கொட்டினால் போலப் பறப்பார்கள். தக்பீர் கட்டி நின்றதே தெரியாது. அதற்குள் என்ன ஓதுவார்களோ ருகூஃவுக்குச் சென்று விடுவார்கள். ருகூஃவுக்குப் போனதும் தெரியாது. எழுந்ததும் தெரியாது, பார்த்தால் ஸஜ்தாவில் இருப்பார்கள் கண்மூடி கண் திறப்பதற்குள் ஸஜ்தாக்களைத் தாண்டி ஸலாம் கொடுத்து விடுவார்கள்.

அதற்குக் காரணம் ஒரு சிலர் இயல்பாகவே வேக விரும்பிகளாக (வேறு வார்த்தைகளில் அவசரக் குடுக்கைகளாக) இருப்பார்கள். எந்த காரியத்தையும் வேகவேகமாகச் செய்தே பழகிப் போனவர்கள் இவர்கள். அதே பழக்கம் தான் தொழுகையிலும் இவர்களைத் தொற்றிக் கொள்கின்றது. தொழுகை என்பது நிதானமாகவும், நிம்மதியாகவும் நிறைவேற்ற வேண்டிய இபாதா என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். நாம் சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தொழுகையை கற்றுக் கொடுக்கும் போதே நிதானமாகத் தொழக் கற்றுக் கொடுக்க வேண்டும். தொழுகையை வேகவேகமாகத் தொழக்கூடாது என்பதை மனதில் பதிய வைக்க வேண்டும்.

இன்னுஞ் சிலர் இருக்கின்றார்கள். இவர்கள் வேக வேகமாகக் கொத்தி எடுப்பதற்கு காரணம் பழக்கம் அல்ல! மாறாக நோய்! மனதிலுள்ள நோயே காரணம். இவர்கள் வேண்டா வெறுப்பாக, தொழுதாக வேண்டுமே என்பதற்காக பள்ளிக்கு வருபவர்கள். ளுஹருடைய இகாமத் ஒரு மணிக்கு என்றால் சரியாக 12-58க்கு இவர்கள் பள்ளியில் நுழைவார்கள். இமாம் காலையில் அதிகநேரம் ஓதுவாரென்றால் ருகூஃவுக்கு போகும் நேரத்தை கணக்கிட்டு கலந்து கொள்வார்கள். இமாம் வலது பக்கம் ஸலாம் கெடுத்ததும் இடது பக்க ஸலாமை இவர்கள் பள்ளிவாசலுக்கு வெளியே கொடுப்பார்கள். சிட்டெனப் பறந்து விடுவார்கள். இது நீண்ட கால மருத்துவம் தேவைப்படுகின்ற நோய்! இத்தகையவர்கள் தங்கள் ஈமானைக் கையிலெடுத்து கழுவிச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். தாங்காளக மாற விரும்பி தங்கள் கொள்கைகளை தூய்மைப்படுத்திக் கொள்ளாத வரை இவர்களை ஒன்றும் செய்ய இயலாது.

பகட்டு-ரியா

தொழுகையைப் பாதிக்கும் வியாதிகளுள் பொதுவான, பயங்கரமான வியாதி ரியா ஆகும். எல்லோரையுமே பாதிக்கின்ற வியாதி, எப்பேற்பட்ட ஆளையும், எந்த அளவுக்கு அவன் எச்சரிக்கையாக இருந்தாலும் அவனையும் சாப்பிட்டு விடுகின்ற வியாதி என்பதால் பொதுவான வியாதி என்று செல்கின்றோம். இபாதத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றால் அதில் கலப்பற்ற தூய எண்ணம் இஃக்ளாஸ் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. இஃக்ளாாஸை ரியா அழித்து விடுவதால் இது பயங்கரமான வியாதியாகும். எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு கடும் பயிற்சி எடுத்து ரியாவிலிருந்து மீள வேண்டும்.

அண்ணலெம்பெருமானார் (சல்லல்லாஹு அலைஹி வசல்லிம்) கூறியுள்ளார்கள்.

எவன் பிறருக்கு காட்டுவதற்காகத் தொழுகின்றானோ அவன் இணை வைத்துவிட்டான். எவன் பகட்டுக்காக நோன்பு வைத்தானோ அவன் ஷிர்க் செய்து விட்டான். எவன் பகட்டுக்காக செலவழித்தானோ அவன் ஷிர்க் செய்து விட்டான்.

ரியா-விலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள இரண்டு வழிமுறைகள் பலன் தரலாம்.

(1) ரியாவின் அனைத்து வகைகளைப் பற்றியும் அறிந்த வைத்திருப்பது. அதன் பலதரப்பட்ட வடிவங்களைப் பற்றியும் தெரிந்து வைத்திருப்பது. இமாம் கஸ்ஸாலி (ரய்மத்துல்லாஹி அலைஹி) அவர்களுடைய இஹ்யாவு உலூமித்தீன் நூலில் ரியா பற்றி இமாமவர்கள் எழுதியுள்ளதை இங்கே குறிப்பிடலாம். அதைக் கண்டிப்பாக படிக்க வேண்டும். சாதாரண பாமர மக்களை விட மார்க்க அறிவு உள்ளவர்களும், இறையச்சம் உடையவர்களும் ரியா விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் தெரிந்தவர்களையே இது அதிகம் தாக்குகின்றது. பெரும் பெரும் உலமாக்களும் அறிஞர்களும் ஷைக்குகளுமே இதில் மாட்டிக் கொள்கின்றார்கள். பள்ளிவாசலில் நின்று நிதானமாக தொழுது கொண்டிருக்கின்றீர்கள். உங்களுக்குப் பக்கத்தில் ஒருவர் வந்து வேகவேகமாகத் தொழுகின்றார். இவர் என்ன இவ்வளவு அவசரமாக தொழுகின்றார். நாம் எவ்வளவு அழகாக, நிதானமாகத் தொழுகின்றோம் என்று நீங்கள் நினைப்பீர்களேயானால் அதுவும் ரியா ஆகிவிடும். எனவே மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அண்ணலெம் பெருமானார் (சல்லல்லாஹு அலைஹி வசல்லிம்) அவர்கள் கூறுகிறார்கள்.

எவனொருவன் மக்கள் பார்க்கும் போது அழகாகவும் நிதானமாகவும் தொழுது, தனித்து தொழுகும் போது வேகவேகமாகவும் தொழுகின்றானோ, அவன் வளமும் உயர்வும் கொண்ட அல்லாஹ்வைக் கிண்டல் செய்கின்றான் என்று அர்த்தம்! (தர்கீப்)

(2) ரியாவை ஒன்றும் இல்லாமல் செய்யும் இன்னொரு வழிமுறை இரவுத் தொழுகை – கியாமுல்லைல்- ஆகும். தஹஜ்ஜுத் தொழுகையை இரவில் யாருக்கும் தெரியாமல் தனித்து தொழுமாறு சொல்லப்பட்டுள்ளது. ரியாவை விரும்புபவர்களால் ஒரு போதும் இரவுத் தொழுகையை தொழுக இயலாது. இறைவனுக்கு மட்டுமே பயப்படுபவர்கள், ரியாவிலிருந்து பாதுகாப்பு தூய்மை பெற்றவர்களால் தான் இரவுத் தொழுகையை தொழுக முடியும். அதை மறைவாகவும் வைத்திருக்க வேண்டும். யாரிடமும் வெளிப்படுத்தக் கூடாது. தஷ(சல்லல்லாஹு அலைஹி வசல்லிம்) தஹுஜ்ஜத் தொழுது வருகின்றேன் என்பதை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ வெளிப்படுத்துகின்றவன் அதைப் பற்றி பெருமிதங் கொள்கின்றான் என்று பொருள். இது ரியாவையும் விடக் கொடியது. ரியாவை அழிக்கும் மருந்தையே ரியா ஆக்கிக் கொண்டால் அகை விடக் கொடுமை வேறு என்னவாக இருக்க முடியும்?

தொழுகையை பாதிக்கக் கூடிய மிக முக்கிற நோய்களே இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. நம்முடைய தொழுகை அப்போது தான் தொழுகையாக மாறும். அத்தொழுகை தான், நம்முடைய கண்களுக்கு குளிர்ச்சியையும் மனதுக்கு சாந்தி, அமைதியையும் ஆன்மாவுக்கு சந்தோஷத்தையும் தரக்கூடியதாக அமையும்!

4. இகாமத்துஸ் சலாத்தும் – இகாமத்துத் தீனும்

முஸ்லிம் உம்மாவின் கடமை

அல்லாஹ் ஜல்லஷானுஹூத்தஆலா முஸ்லிம் உம்மாவை சிறந்த சமூகமாக படைத்துள்ளான். உம்மத்தே முஸ்லிமாவைக் கொண்டு ஓர் உன்னதமான காரியத்தைச் செயற்படுத்த நினைத்துள்ளான். ஒரு சிறந்த சமூகத்தின் பணி என்னவாக இருக்க முடியும்?

மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த சமூகத்தவராய் நீங்கள் இருக்கின்றீர்கள். நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள். தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள். மேலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றீர்கள். (ஆலஇம்ரான் 110)

நன்மையை ஏவுவது தீமையைத் தடுப்பது சுருக்கமாகச் சொல்வதென்றால் ஷரீஅத்தை நிலைநாட்டுவது, தீனை நிலை நாட்டுவது. உலகின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று தீனைப் பரப்புவது, உலகின் ஏதேனும் ஒருபகுதியிலும் இறைவனுக்கு எதிரான அமைப்பு நிலவுகின்றது. இறைவனின் மக்கள் கொடுமைக்கு ஆளாகின்றார்கள் என்றால் அதனைக் கண்டு கொதித்து எழுவது. அங்கும் சென்று இறைவனுடைய தூயதீனை எடுத்துரைப்பது. இதையே நாம் இகாமத்துத் தீன் – தீனை நிலைநாட்டுவது – என்று சொல்கின்றோம். இந்த இகாமத்துத் தீன் பணியை செய்வதற்குத் தான் அல்லாஹ் நம்மை, உம்மத்தன்வஸத் ஆக நடுநிலை சமுதாயமாக ஆக்கியுள்ளான்.

இவ்வாறே (முஸ்லிம்களான) உங்களை நாம் உம்மத்தன் வஸத்தன் சமநிலையுடைய சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாயும் இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக! (பகறா – 143)

இன்றைக்கு உலகில் உள்ள முஸ்லிம் சமுதாயம் தன்மீது சுமக்கப்பட்டுள்ள கடமையை நிறைவேற்றுகின்றதா? என்று கேட்டால் இல்லை என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிடலாம். இன்றைக்கு முஸ்லிம்களுக்கு வருகின்ற வேதனைகள், அவமானம், கஷ்டம், இழிவு அனைத்துக்கும் இதுதான் காரணம்ஸ நாம் நம்முடைய பொறுப்பை ஒழுங்காக நிறைவேற்ற எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என்று சொல்லுவதோடு, நாம் நம்முடைய பொறுப்பு என்ன? என்பதைக் கூட சரியாக விளங்கிக் கொள்ளவில்லை என்பது தான் உண்மையாகும்.

உயர்ந்த ஓர் இலட்சியத்துக்காக படைக்கப்பட்ட சமுதாயம் தன்னுடைய பொறுப்பை மறந்துவிட்டால், தன்னடைய கடமையை நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருந்தால் அச்சமுதாயம் வீழ்ச்சி அடைவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாதுஸ நமக்கு முந்தைய சமுதாயங்களின் வீழ்ச்சிகளில் இருந்து நாம் பெறவேண்டிய படிப்பினை இதுவே!

செயல் அளவில் நீர்த்துப் போன ஒரு சமுதாயத்தை அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டுமானால் குறைந்தபட்சம் சொல் அளவில் கடமையுணர்வு இருந்தால் காப்பாற்றலாம். அதாவது செயல் அளவில் தன்னுடைய கடமையைச் செய்யாமல் அலட்சியமாக உள்ள ஒரு சமுதாயத்தில் அதனுடைய உண்மையான குறிக்கோள் என்ன? எந்த நோக்கத்திற்காக அது தோற்றுவிக்கப்பட்டது. என்பதை ஓயாமல் பிரச்சாரம் செய்யும் அழைப்பாளர்கள் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

இத்தகைய அழைப்பாளர்கள் இருக்கும் வலை அச்சமுதாயத்தின் குறிக்கோள் குறைந்தபட்சம் பேச்சுக்களாக, எழுத்துக்களாக அங்கே வலம் வந்து கொண்டிருக்கும். இந்த குறைந்தபட்ச அளவும் இல்லை என்றால் அந்த சமுதாயம் அழிந்து போய்விடும். அதன் அழிவைப் பற்றி அல்லாஹ் கொஞ்சம் கூடக் கவலைப்படமாட்டான் என்பதையே குர்ஆன், சுன்னாவிலிருந்து நாம் அறிகின்றோம்.

இத்தகைய ஒரு மோசமான சூழ்நிலையை விட்டு இகாமத்துஸ் சலாத் அது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால், தடுக்கின்றதுஸ நாம் ஏற்கனவே சலாத் என்பது ஈமானுக்கும், அமலுக்கும் இடைப்பட்ட கவ்ல் (சொல்) என்பதைப் பார்த்துள்ளோம். ஓர் இறை நம்பிக்கையாளன் உண்மையான இறையச்சத்தோடும், பயபக்தியோடும் தொழுது வந்தால் தொழுகையை நிலை நாட்டினால் அது அவனுடைய வாழ்க்கைக் குறிக்கோளை நினைவு படுத்துகின்றது. அவன் செய்ய வேண்டிய பணி என்ன? செல்ல வேண்டிய பாதை என்ன? என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது.

ஒரு மனிதன் தொழுகையில் குர்ஆன் வசனங்களை ஓதுகின்றான். குர்ஆனில் அல்லாஹ் ஆணையிட்டுள்ளான் என்பதற்காகத்தான் அவன் தொழுகவே வந்துள்ளான். குர்ஆனில் கூறப்பட்டுள்ள ஆறாயிரத்து அறுறூற்றுச் சொச்சம் வசனங்களையும் மாறி மாறி அவன் தொழுகையில் ஓதுகின்றான். ஓர் இறையடியானைப் பொறுத்தவரையிலும் குர்ஆன் வசனங்கள் அனைத்தும் சமமானவையே! அனைத்துமே கடைப்பிடிக்க வேண்டியவையே! ஒரு சிலதை மட்டும் ஏற்றுக் கொண்டு ஒரு சிலதைப் புறக்கணிக்க ஓர் இறை நம்பிக்கையாளனால் இயலாது.

குர்ஆனில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான வசனங்களைத் தன்னால் நடைமுறைப்படுத்த இயலாத நிர்க்கதியான நிலையை அவன் உணருகின்றான். ஆறாயிரம் வசனங்களில் ஏறத்தாழ பெரும்பாலானவற்றை விட்டும் தான் வெகு தொலைவில் நின்று கொண்டிருப்பதை அவன் நினைத்துப் பார்க்கின்றான். ஐவேளை தொழுக வேண்டும் என்பது எப்படி அல்லாஹ்வின் கடமையோ அது போன்று தானே, திருடனின் கையைத் துண்டிக்க வேண்டும் என்பதும் அல்லாய்வின் கடமைஸ தொழும் முன்னால் ஒழு செய்து தூய்மையாகிக் கொள்ளுங்கள் என்பது எவ்வாறு இறை ஆணையோ, அது போன்று தானே விபச்சாரம் செய்பவரைத் தண்டிப்பதும் இறை ஆணை!

தன்னால் நடைமுறைப்படுத்த இயலாத ஏராளமான இறை ஆணைகளை நிறைவேற்ற வேண்டுமானால் அதற்க இஸ்லாமிய சமூக அமைப்பு அவசியம் தேவை என்பதை அவன் புரிந்து கொள்கின்றான். குர்ஆனைப் பின்பற்றுகின்ற அமைப்பில் தான் தன்னால் முழுமையான முஃமினாக வாழ இயலும் என்பதை அவன் ஏற்றுக் கொள்கின்றான். அத்தகையதொரு சமூக அமைப்பு உருவாகத் தன்னால் இயன்ற பங்களிப்பை வழங்கியாக வேண்டும் என்னும் முடிவுக்கு வருகின்றான். அதாவது இகாமத்துத் தீனுக்காக பாடுபடவும், பணியாற்றவும் அவன் தயாராகிவிடுகின்றான். அவனுடைய தொழுகை அவனைத் தயார்படுத்தி விடுகின்றது.

ஆபாசமான காரியங்களை விட்டும், தீய செயல்களை விட்டும் தொழுகை தடுக்கின்றது, இல்லையா? அநீதியும், அராஜகமும், அக்கிரமும், கொடுங்கோன்மையும் அநியாயம் இல்லையா? தீய செயல்கள் இல்லையா? இவற்றை எவ்வாறு தொழுகை தடுக்கும்? தன்னுடைய தொழுகையாளியை தயார்படுத்துவதன் மூலம்!

திக்ருல்லாஹ் – அல்லாஹ்வை நினைவு கூரத்தானே ஓர் இறை நம்பிக்கையாளன் தொழுகின்றான். பள்ளிவாசலில் இறைவனை திக்ரு செய்தால் மட்டும் போதுமா? கடைவீதிகளில், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்களில், தொழிற்சாலைகளில் நினைவு கூர வேண்டாமா? பொருளாதாரத் துறைகளில், சமூக அமைப்புகளில், சட்டசபைகளில் திக்ரு செய்ய வேண்டாமா? அங்கேயெல்லாம் இறைவனுக்கு எதிரான, மாற்றமான வழிமுறைகளைப் பின்பற்றும் ஒருவனால் பள்ளிவாசல் சுவர்களுக்குள் மட்டும் எப்படி மனப்பூர்வமாக திக்ருல்லாஹ்வில் ஈடுபட இயலும்?

ஆக, ஒரு மனிதன் உண்மையாகவே இஃக்ளாஸாக தொழுது வந்தால் அந்தத் தொழுகை சமூகக் கொடுமைகளுக்கெதிரான அவனது குரலை உயர்த்தும். சமூக மாற்றத்தில் அவனுடைய பங்களிப்பை முன்னிறுத்தும்.

“ஷுஐபே! எங்கள் மூதாதையர் வணங்கி வந்தவற்றை நாங்கள் விட்டுவிட வேண்டும் என்றா – அல்லது எங்களுடைய செல்வத்தை எங்கள் விருப்பப்படி பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கக் கூடாது என்றா – உம்முடைய தொழுகை உமக்குக் கற்றுத் தருகின்றது?” (ஹூத் – 87)

ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய தொழுகையை, பிரச்சாரத்தைக் கண்டு அவருடைய சமூக மக்கள் கூறிய கூற்று இதுஸ இறைவனை அலட்சியப்படுத்திவிட்டு தம் மனம் போன போக்கில் உல்லாசமாக, தீய வழிமுறைகளில் வாழ நினைக்கும் சமூகங்களில் இன்றைக்கும் இந்தக் குரலை நம்மால் கேட்க முடியும்.

நாம் ஏற்கனவே கண்டது போல ‘தொழுகை’ என்பது தீனுடைய தலைவாசல். மனோ இச்சைகளின்படி வாழ விரும்புபவர்கள், மார்க்க நெறிமுறைகளை எப்படி சகித்துக் கொள்வார்கள்? எனவே, மார்க்கத்தின் தலையாய அமலும், தலைசிறந்த அமலுமான தொழுகையை அவர்கள் ஒரு ‘தீராப் பெருநோய்’ ஆகவே பார்ப்பார்கள். தொழுபவனைப் பார்த்து ஙமார்க்க வியாதிங இவனைப் பிடித்துக் கொண்டது என்று கிண்டல் அடிப்பார்கள். ஏனென்றால் எவன் தொழுகும் தன்மையை வளர்த்துக் கொள்கிறானோ, அவன் தன்னளவில் அதை நிறுத்திக் கொள்வதில்லை. நாலு பேருக்கு சொல்லிக் கொடுப்பான். நாலாபுறமும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விடுவான். தான் சீரடைந்ததோடு நின்று விடாமல் தன்னைச் சுற்றியுள்ள மக்களையும் சீர்திருக்கும் முயற்சிகளில் இறங்கிவிடுவான். ஒழுக்கச் சீர்கேடுகளை தட்டிக் கேட்பான். தனக்குள் ஒருவன் தொழத் துவங்கிவிட்டானே என்பதற்காக அல்ல, இவன் வெகுவிரைவில் ஒழுக்கப் போதனையை துவக்கிவிடுவானே, தன்னையே விமர்சனம் செய்ய ஆரம்பித்து, தலைவலியாய் மாறிவிடுவானே என்பதை எண்ணித்தான், அவனை அச்சமூகம் எதிர்க்கின்றது. எனவே தான் அத்தகைய சமூகம் எல்லாவற்றுக்கும் மேலாக தொழுகையை, தொழுகையாளிகளை எதிர்க்கின்றது.

எனவே, தொழுகை எனும் தலைவாசலுக்குள் நுழைந்து தீனைக் கடைப்பிடிக்க ஆரம்பிக்கின்றவன் சமுதாயச் சீர்கேடுகளைக் கண்டும் காணாதவனைப் போல இருக்க மாட்டான். துணிந்து நின்று எதிர்ப்பான் என்பதை நாம் உணர்ந்து கொள்கின்றோம்.

இகாமத்துஸ் சலாத்தை ஒழுங்காக முறைப்படி நிறைவேற்றுகின்றவன் கண்டிப்பாக இகாமத்துத் தீனில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வான்.

இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் இகாமத்துத் தீனில் முழு மூச்சோடு ஈடுபடுகின்றவன் மட்டுமே இகாமத்துஸ் சலாத்தை முறைப்படி செய்ய இயலும்.

இன்னல்களுக்கான அருமருந்து

இகாமத்துத் தீன் எனும் கடமையில் ஈடுபடச் சொல்லி தொழுகை நம்மைத் தூண்டுகிறது. வலியுறுத்துகிறது. இகாமத்துத் தீன் என்பது ஏதோ சாதாரணபாதை அல்லவேஸ முற்களும் கற்களும் இடையூறுகளும் இடர்ப்பாடுகளும் நிரம்பிய துன்பப் பாதை ஆயிற்றே அதுஸ எனவே, எந்தத் தொழுகை ஊக்கமூட்டுகின்றதோ அதே தொழுகை பாதையில் படுகின்ற காயங்களுக்கு மருந்தாகவும், மனவலிகளுக்கு ஒத்தடமாகவும் ஆகின்றது.

குஃப்பார்களுக்கு எதிராக உறுதியுடன் நில்லுங்கள் என்று எங்கேயெல்லாம் குர்ஆன் கற்றுத் தருகின்றதோ, அங்கேயெல்லாம், தொழுகையையும் திக்ருல்லாஹ்வையும் கடைபிடிக்கச் சொல்லி வலியுறுத்துகின்றது. பாத்திலை முறியடித்து, தீனை நிலை நாட்டுவதற்குத் தேவையான துணிச்சல், வலிமை தொழுகையின் மூலமாகத் தான் கிடைக்கும் என்பதை அது உணர்த்துகின்றது.

குர்ஆன் கற்றுக் கொடுக்கின்றது.

“எனவே, நீர் உம் அதிபதியின் கட்டளைப்படி பொறுமையை மேற்கொள்ளும்! இவர்களில் தீய செயல் செய்பவனுக்கோ – சத்தியத்தை நிராகரிப்பவனுக்கோ இணங்கிப் போகாதீர்! உன் அதிபதியின் பெயரைக் காலையிலும் மாலையிலும் (தொழுது) நினைவு கூரும்!” (தஹ்ர் – 24,25)

தொடர்ந்து வரும் துன்பங்கள், இன்னல்களைக் கண்டு வருத்தம் அடையாதீர்கள். உங்கள் இறைவனின் வாக்கு ஒரு நாள் வென்றே தீரும் என்று திடமாக நம்புங்கள். தளராமல் கொள்கையில் குன்றாமல் தொடர்ந்து பேராடுங்கள். அதற்குத் தேவையான வலிமையைத் தொழுகைகையின் மூலம் திரட்டிக் கொள்ளுங்கள் என்று குர்ஆன் கூறுகிறது.

“எனவே, நீர் பொறுமையாய் இரும்! அல்லாஹ்வின் வாக்குறுதி முற்றிலும் உண்மையானது. மேலும் (இலக்கை அடைய அவசரப்படும்) உம்முடைய தவறுக்காக மன்னிப்புக் கோரும்ஸ காலையிலும், மாலையிலும் உம் இறைவனைப் புகழ்வதுடன் தொழுது அவனைத் துதித்துக் கொண்டுமிரும்!” (முஃமின் -55)

“ஈமான் கொண்ட நம்பிக்கையாளர்களே! (பொறுமை) நிலை குலையாமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் உதவி தேடுவீர்களாக!” (பகறா – 153) (மேலும் காண்க – 50 – 39,40) (52-48)

துன்பங்களைப் போக்க வல்லது

தொழுகையின் தன்மை, பயன்களை அறிந்து கொண்ட பின்பு அது துன்பங்களைத் தீர்க்க வல்லது என்பதைத் தயக்கமின்றி ஒப்புக் கொண்டிருப்பீர்கள். அண்ணலெம்பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லிம்) ஏதேனும் வருத்தமான செயல், சிக்கல் ஏற்பட்டுவிட்டால் உடனே தொழுவார்கள் என்பதை ஹதீஸ்களில் பார்க்கின்றோம்.

அண்ணலாருக்கு ஆரம்ப காலத்தில் நபிப்பட்டம் அருளப்பட்ட போதே, இது சாதாரண வேலையல்ல, முதுகெலும்பை முறித்துவிடும். எனவே நீங்கள் தொழுது உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்! என்று கூறப்பட்டது.

“நாம் உம்மீது கனமாகதொரு வாக்கை விரைவில் இறக்கப் போகின்றோம். இரவில் எழுந்திருப்பதோ, மனதிக் கட்டுப்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாகவும் (குர்ஆனை) நேர்த்தியாக ஓதுவதற்கு மிகவும் ஏற்றதாகவும் இருக்கின்றது.” (முஸ்ஸம்மில் – 5,6)

தொழுகை எவ்வாறு துன்பங்களைப் போக்கும்? இன்னல்களை நீக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்! அதற்கும் முன்பாக துன்பம், கவலை என்றால் என்ன? என்பதைப் பற்றியும் சிந்தித்துப் பாருங்கள்!

வருத்தம், கவலை, துன்பம், துயரம் இவை எல்லாமே நம் சிந்தையில் உண்டாகுபவைகளே! எண்ணங்கள் தாம் உணர்ச்சிகளுக்கு வடிவம் கொடுக்கின்றன. அவற்றுக்குப் பெயரும் சூட்டுகின்றன. இவை அனைத்தும் ‘சிந்தனை’யின் விளைவுகளே என்பதை உணர்ந்து கொள்ளும் மனிதன் உணர்ச்சிகளின் சிக்கல்களுக்குள் அகப்படுவதில்லை.

ஒரே விஷயம் ஒருவனுக்கு சந்தோஷமாகவும், இன்னொருவனுக்கு வருத்தமாகவும் இருப்பதை நாம் பார்க்கின்றோம். ஒரே பொருள் ஒருவனுக்கு நன்றாகவும் மற்றவனுக்கு கெட்டதாகவும் இருக்கின்றது. ஒரே வேலையை இருவர் செய்கின்றார்கள். ஒருவன் விருப்பத்தோடு செய்கின்றான். நேரம் போவதே அவனுக்குத் தெரிவதில்லை. இன்னொருவன் வேண்டா வெறுப்பாக செய்கின்றான். அவனுக்கு நேரம் நகரவே மாட்டேன் என்கிறது. வேண்டா வெறுப்போடு சாப்பிட்டால் தேனும் கசக்கும். விரும்பித் தின்றால் பாகலும் இனிக்கும். ஆக, நம்முடைய ‘சிந்தனை’யைப் பொறுத்துத் தான் உணர்ச்சிகள் வடிவங்கொள்கின்றன. எனவே தான், நன்கு உணர்ந்த இறைநம்பிக்கையாளன் செல்வம் கொழித்து சந்தோஷம் மிகைக்கும் போது துள்ளிக் குதியாட்டம் போடுவதுமில்லை. வறுமை மிகைத்துவிடும் போது வருத்தம் தொண்டைணை அடைக்க வானத்தை வெறித்தப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து விடுவதுமில்லை.

வான்மறை திருக்குர்ஆன் இதனையே வெகு அழகாகக் கூறுகின்றது.

“பூமியில் ஏற்படுகின்ற அல்லது உங்கள் மீது இறங்குகின்ற எந்தத் துன்பமானாலும் – அதனை நாம் உருவாக்குவதற்கு முன்பு அதைக் குறித்து ஒரு சுவடியில் (அதாவது விதி ஏட்டில்) எழுதி வைக்காமல் இல்லை. அப்படிச் செய்வது அல்லாஹ்விற்கு மிக எளிதானதாகும். (இவையனைத்தும்) எதற்காகவெனில், உங்களுக்கு எந்த நஷ்டம் ஏற்பட்டாலும், நீங்கள் மனம் துவண்டுவிடக் கூடாது. மேலும் அல்லாஹ் உங்களுக்கு வழங்கி இருப்பவற்றைக் கொண்ட நீங்கள் பூரித்துப் போய்விடக் கூடாது என்பதற்காகத்தான்! தம்மையே பெரிதாக நினைத்துக் கொள்கின்ற, பெருமையடித்துத் திரிகின்ற யாரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை!” (ஹதீத் – 22,23)

தெளிவான ஈமானைப் பெற்றவர்கள் எத்தகைய பொருளாதார இழப்புகள், உயிர் இழப்புகள் ஏற்பட்டாலும், அவை ஏற்கனவே தமது இறைவனால் தீர்மானிக்கப்பட்டவை ஏட்டில் எழுதப்பட்டவை என்பதைப் புரிந்து கொண்டு வருத்தம் அடைவதுமில்லை, கலங்கிப் போவதுமில்லை என்பதையே இவ்வசனம் நமக்கு உணர்த்துகின்றது. அவ்வாறே, அவர்கள் நிஃமத்துகள், அருட்கொடைகளைப் பெறும்போது அளவுக்கதிகமான மகிழ்ச்சியினால் குதூகலம் அடைவதுமில்லை.

அவர்கள் மிகத் தெளிவாக இருக்கின்றார்கள். எந்த துன்பத்தையும் அது என்னதான் மலை போன்று இருப்பினும் கண்டு கலங்கிவிடுவதில்லை.

நீர் கூறுவீராக – “(நன்மையோ, தீமையே) அல்லாஹ் எங்களுக்காக விதித்து வைத்திருப்பவற்றைத் தவிர வேறெதுவும் எங்களை அடையாது. அவன்தான் எங்களின் பாதுகாவலன். ஈமான் கொண்டோர் அல்லாஹ்வையே முழுமையாக சார்ந்து இருக்க வேண்டும்.” (தவ்பா – 51)

துன்பங்கள், துயரங்களை எதிர்கொள்ளும் போது மனித மனம் விநோதமாகத் தான் நடந்து கொள்கின்றது. மலை போன்ற துன்பங்களையும் ஒரு மனிதன் தாங்கிக் கொள்கின்றான். அதே மனிதனால் ஒரு சாதாரண இழப்பை சமயங்களில் சகித்துக் கொள்ள இயலாமல் போய்விடுகின்றது.

மனிதர்களுள் ஒரு பிரிவினரைப் பற்றி குர்ஆன் இவ்விதம் கூறுகிறது.

“அல்லாஹ் முஃமின்களிடமிருந்து அவர்களுடைய உயிர்களையும், பொருள்களையும் சொர்க்கத்திற்குப் பதிலாக விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் வழியில் போர் புரிகின்றார்கள். கொல்கின்றார்கள். கொல்லப்படுகின்றார்கள்.” (தவ்பா – 111)

இதே மனிதர்களில் தாம் இப்படியும் ஒரு பிரிவினர் இருக்கின்றார்கள்.

“ஒவ்வொரு உரத்த சப்தத்தையும் இவர்கள் தங்களுக்கு எதிரானதாய்க் கருதுகின்றனர். இவர் தாம் கடும் பகைவர்கள் ஆவர். எனவே இவர்களைப் பற்றி எச்சரிக்கையாக இரும்!” (முனாஃபிக்கூன் – 4)

ஒரே மனித இனத்தில் துருவங்களுக்கு இணையான இந்த வேறுபாடு ஏன் ஏற்படுகின்றது என்றால், சரியான, முழுமையான அறிவு இல்லாததினால் தான்ஸ முழுமையான, உண்மையான அறிவைப் பெற்றவர்கள் கடுகை மலையாக என்றும் நினைப்பதில்லை. அவர்கள் நஃப்ஸுல் முத்ம இன்னாவைப் பெற்றவர்கள். கொள்கையுறுதியில் மலைபோல் உயர்ந்தவர்கள். இந்த சிறப்பிடத்தை அவர்கள் தொழுகையைக் கொண்டே அடைந்தார்கள். உண்மையான அறிவிற்கான ஆதார சுனை தொழுகைதான் என்பதை நாம் ஏற்கனவே கண்டுள்ளோமே!

இதை நாம் இன்னொரு கோணத்தில் அணுகலாம். வருத்தமும், துயரமும் அல்லாஹ்வை விட்டு நம்மை தூர அழைத்துச் செல்கின்றன. அல்லது அல்லாஹ்வை விட்டு தூர விலகுவதால் அவை ஏற்படுகின்றன. அல்லாஹ்வின் அருகாமை இருந்தால் வருத்தமோ, கவலையோ நம்மை அடைவதில்லை. இதே போன்ற ஒரு நேரத்தில் தாம் அண்ணலார் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லிம்) கூறினார்கள்.

“வருத்தமடையாதே! அல்லாஹ் நம்மோடு உள்ளான்!” (தவ்பா – 40)

அல்லாஹ்வுக்கு அருகில் இருந்தால் நம்மை கவலையோ, வருத்தமோ, துன்பமோ எதுவுமே அணுகாது. சொர்க்கவாசிகளைப் பற்றிக் கூறும் போது,

“அத்தகையவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்!“(பகறா-ள112)

ஏனென்றால் அவர்கள் அல்லாஹ்வுக்கு அருகில் உள்ளார்கள். இப்பூவுலகில் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற வேண்டுமானால் என்ன வழி? தொழுகை ஒன்றே வழி!

“ஸஜ்தா செய்வீராக! (உம் இறைவனின்) நெருக்கத்தைப் பெறுவீராக!” (அலக் – 19)

துன்ப, துயர காலங்களில் தொழுகையைக் கொண்டும், பொறுமையைக் கொண்டும் உதவி தேடுங்கள் என்று அல்பகறாவில் அல்லாஹ் கூறுகிறான்.

அதே கருத்தை அஃராபில் சொல்லும்போது,

“அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையை மேற்கொள்ளுங்கள்!” (128)

என்று கூறுகிறான். இவ்விரு வசனங்களையும் கவனமாகப் பார்த்தால் முதல் வசனத்தில் ‘சலாத்’என்ற சொல் உள்ளது. இரண்டாவது வசனத்தில் அதே இடத்தில் ‘அல்லாஹ்’ என்ற சொல் உள்ளது. அதாவது எந்த அளவு தொழுகை அல்லாஹ்வுக்கு நெருக்கமானதாய் உள்ளது என்றால், இவ்வுலகில் இறை நெருக்கத்தின் மாற்று வடிவமாய் உள்ளது. இதையே அண்ணலெம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லிம்) தெளிவாகச் சொல்லியுள்ளார்கள்.

“தொழுகை இறைவனை நெருங்கச் செய்கின்றது!” (தர்கீப்)

இறைவனை நெருங்கி விட்டால் அன்பு, பாசம், அபயம் எல்லாமே கிடைத்துவிடுகின்றன.

“உம் இறைவன் பெயரை நினைவு கூறுவீராக! எல்லாவற்றையும் விட்டு அவனையே தஞ்சம் அடைந்து அவனுக்காகவே ஆகி விடுவீராக!” (முஸ்ஸம்மில் -8)

அன்பு உள்ள இடத்தில் தான் ஆறுதல் இருக்கும். அரவணைப்பும் இருக்கும். அன்பையும், ஆறுதலையம் அரவணைப்பையும் தானே மனித மனம் தேடி அலைகின்றது. இதைத்தான் அண்ணலார் கூறுகின்றார்கள்.

“என் கண்களின் குளிர்ச்சி தொழுகையில் உள்ளது.”

அண்ணலார் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லிம்) பிலால் (ரழி) அவர்களை அழைத்து “ஆறுதலைத் தரமாட்டாயா?” என்றும் கேட்டுள்ளார்கள்.

இன்னொரு கோணத்தில் பார்த்தாலும், ஏற்கனவே கண்டது போல தொழுகை திக்ருல்லாஹ் ஆகும். திக்ருல்லாஹ்வில் மனம் பூரண அமைதியை, முழு நிம்மதியை அடைந்து விடுகின்றதே

*முழு ஹதீஸ் வருமாறு

“இறைவனின் நினைவில் உள்ளங்கள் அமைதி அடைவதில்லையா?” ரஃது -28

நிம்மதி என்பது எப்போது கிடைக்கும்? அறிவும், சிந்தனையும் தெளிவடைந்து விட்டால் அமைதி கிடைக்கும். நிம்மதி பிறக்கும். முழுமையான அறிவு கிடைத்துவிட்டால் உள்ளத்தில் பேரொளி பிறக்கும். வருத்தம் மகிழ்ச்சி, இன்பம், துன்பம் அனைத்தையும் ஒன்றாகப் பாவிக்கும் மனப்பான்மை தோன்றிவிடும். இது தான்,

நிலை ஆகும்!

இன்னும், இதுவே தான்

இந்த நிலை தொழுகையாளிகளுக்கு மட்டுமே சொந்தமானதாகும். அவர்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடியது.

மனிதன் பதற்றக்காரனாய் படைக்கப்பட்டிருக்கின்றான். ஒரு துன்பம் அவனுக்கு வந்தால் பொறுமையிழந்து போகின்றான். வசதி வாய்ப்புகள் அவனுக்கு வரும்போது கஞ்சத்தனம் செய்யத் தலைப்படுகின்றான், தொழுகையாளிகளைத் தவிர! (அவர்கள் இத்தகைய தன்மைகளிலிருந்து தூரவிலகி உள்ளார்கள்). அவர்களோ தொழுகையை நிரந்தரமாக தொடர்ந்து நிறைவேற்றுகிறார்கள். (மஆரிஜ் – 19-23)

5. சமூகங்களின் வாழ்வும் வீழ்ச்சியும்

தொழுகையைப் பற்றிய விளக்கத்தின் இந்த இடத்தில், சமூகங்கள் நிலைத்து இருப்பதற்கும் அழிந்து போவதற்கும் தொழுகை ஒரு முக்கிய காரணியாக விளங்குகின்றது என்று கூறப்பட்டால் நீங்கள் ஆட்சேபிக்க மாட்டீர்கள். ஒத்துக் கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன். எந்த சமூகம் தொழுகையை உணர்ந்து நிறைவேற்றுகின்றதோ, அது தன் குறிக்கோளில் தெளிவாக இருக்கும். வெற்றி அடையும். மாறாக எந்த சமூகம் தொழுகையைப் பற்றி உணராமல் அதன் இயற்தன்மையை முதலிலும், பிறகு .நாளடைவில் தொழுகையையே தொலைந்து விடுகின்றதோ அது இலக்கில்லாமல் மலடாகிப் போகும். அழிந்து போகும். இதுவரை விளக்கப்பட்டது போதவில்லை என்றால், இக்கருத்தை மேலும் நன்றாக விளங்கிக் கொள்ள முயற்சிப்போம்.

உலகில் உள்ள அனைத்தும் ஒழுங்காய் தொழுது வருகின்றன என்பதை முன்பே பார்த்தோம். எனவே, யாராவது தொழுக ஆட்சேபணை தெரிவிக்கின்றான், நிராகரிக்கின்றான் என்றால் அவன் இறைவனுக்கு மாறு செய்வதோடு உலக இயங்குமுறைக்கு எதிர்த்திசையில் பயணிக்கின்றான் என்றும் பொருள்! உலகளாவிய இயங்கு முறையோடு ஒத்திசைந்து போக மறுக்கின்றான் என்று பொருள். அவன் தேர்ந்தெடுக்கும் பாதையில் அவனுக்கு துணையாக யாரையும் பார்க்க முடியாது. சூரியனையோ வானம், பூமியையோ உயிரினங்கள், தாவரங்களையோ வானவர்களையோ யாரையும் காண இயலாது. உலகப் போக்கில் அவன் எதிர்நீச்சல் போடுகின்றான். உலகோடு இணைந்து சேர்ந்திசைசதற்குப் பதிலாக அவன் தனி ஆவர்த்தனம் செய்கின்றான். கடலை எதிர்த்து தனியொரு துளியாக இருக்க விரும்புகின்றான். அவன் வெற்றி பெறுவது கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியாத ஒன்று. மரத்திலிருந்து உதிர்ந்து விழுந்த இலை, சருகாகத்தான் ஆகின்றது. மந்தையிலிருந்து பிரிந்த ஆடு, ஓநாய்க்குத் தான் இரையாகின்றது பாலைவனத்து மரம் போல தனித்து இருக்கும் அவன் அழிவைப் பற்றி இன்னும் ஏதாவது சந்தேகம் இருக்குமா என்ன? சூரத்துல் ஹஜ் உடைய இவ்வசனத்தை கவனித்துப் பாருங்கள்.

வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், உயிரினங்களும், மற்றும் மனிதர்களில் பெரும்பாலோரும் அல்லாஹ்வை ஸஜ்தா செய்து கொண்டிருப்பதை நீர் காணவில்லையா? இன்னும் பெரும்பாலோர் (அதை நிராகரித்து முகம் திருப்பிக் கொண்ட காரணத்தால் அவர்கள்) மீது அல்லாஹ்வின் வேதனை இறங்குவது உறுதியாகிவிட்டது! (ஹஜ் 18)

அகிலமே அல்லாஹ்வுக்கு முன்னால் தலைவணங்கி நிற்பதை இவ்வசனம் படம் பிடித்துக் காட்டுகின்றது. சூரியன், சந்திரன், கடல், மலை, காற்று, மேகன், மரம், கல், விலங்குகள், பறவைகள் என அனைத்தும் ஆற்றல் கொண்ட அர்ஷுக்கு அடிபணிந்து இயங்குகின்றன. ஓர் இனம் கூட அதைப் புறக்கணித்து முறைத்துக் கொண்டு நிற்பதில்லை. நல் உள்ளம் கொண்ட, மனிதருள் ஒரு கூட்டம் இவர்களோடு சேர்ந்து கொள்கின்றது. ஆதவன் அல்லாஹ்வுக்கு முன்னால் அடிபணியத் தயாராகும் போது அவனோடு இவர்களும் சேர்ந்து கொள்கின்றார்கள். நட்சத்திரங்கள் நாயனுக்கு முன்னால் தலைகுனிந்து நிற்கும் போது இவர்களும் பணிகின்றார்கள். மனிதன் பகுத்தறிவு படைத்தவன் என்பதால் நினைத்த போதெல்லாம் தன்னிறைவன் புகழ்பாட எழுந்து நிற்கின்றான். அலட்சியம் படைத்த ஆணவ மனிதர்கள் துணை தராவிட்டால், வான்வெளியின் பறவைகளை துணைக்கு அழைத்துக் கொள்கின்றான். கல்லுள்ளம் கொண்ட சிலைமனிதர்கள் சேர்ந்து நிற்காவிட்டால் பாறை, மலைகளை தன்துதிக்கு துணை சேர்த்துக் கொள்கின்றான். ஏனென்றால், மனிதனைத் தவிர வெறெந்தப் படைப்பினமும் இறைவனைப் புகழ்வதை, அவனைத் துதிப்பதை நிராகரிப்பதில்லை. எனவே தான் தாவுது அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி குறிப்பிடும் போது குர்ஆன்,

“நாம் மலைகளை அவருக்கு வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். அவை காலையிலும் மாவையிலும் அவருடன் சேர்ந்து (இறைவனைத்) துதி செய்த வண்ணம்இருந்தன. பறவைகளும் ஒன்று திரண்டு வந்தன. இவை அனைத்துமே அல்லாஹ்வை துதிப்பதில் கவனம் செலுத்தக்கூடியனவாய் இருந்தன” (ஸாத் – 18,19)

இத்தகைய மனிதர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்.

“தங்களுடைய தொழுகையில் பயபக்தி மேற்கொண்டுள்ள முஃமின்கள் வெற்றி பெற்றுவிட்டனர்!” (முஃமினூன் – 1,2)

ஏனென்றால், அவர்கள் அகிலத்தை எல்லாம் வெறுத்துத் தள்ளிவிட்ட தம் பாதையில் தனித்து இருக்க ஆசைப்படவதில்லை. அகிலத்தோடு ஒட்டிவாழ, கடலில் ஒரு துளியாக இருக்க விரும்புகின்றனர். எனவே அகிலமும், அகிலப் பொருட்களும் அவர்களை நேசிக்கின்றன. அகிலத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் தனித்தனியாக அவர்கள் மீது அன்பு செலுத்துகின்றது. பூமி அவர்களுக்காக உணவைத் தயாரிக்கின்றது. மழைமேகங்கள் அவர்களுக்காக கொட்டுகின்றன. தென்றல் அவர்களுக்காக பயிர்களை செழிக்கச் செய்கின்றது. பகலவன் அவர்களுக்காக வெப்பத்தைத் தருகின்றது. குளிர் நிலவு அவர்களுக்காக காய்கின்றது. விண்மீன்கள் அவர்களுக்ாக வழிகாட்டுகின்றன. அவர்கள் அகிலத்திலுள்ள அனைத்தையும் நேசிக்கின்றார்கள். அகிலம் அனைத்தும் அவர்களை நேசிக்கின்றது. அவர்கள் இறைவனுக்கு பிரியமானவர்களாக ஆகிவிடுகின்றார்கள். எனவே அல்லாஹ் அவர்களை நேசிக்குமாறு அனைத்துப் பொருள்களுக்கும் ஆணையிடுகிறான்.

அண்ணலெம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லிம்) கூறுகிறார்கள் – அல்லாஹ் ஓர் அடியானை நேசித்தால் ஜிப்ரீலை அழைத்து ‘நான் அவ்வடியானை நேசிக்கிறேன். நீயும் அவரை நேசி’ என்று கூறுகிற்ான். அவரை ஜிப்ரீலும் நேசிக்கிறார். பிறகு வானில் உள்ளோரை ஜிப்ரீல் அழைத்து ‘இந்த அடியானை அல்லாஹ் நேசிக்கிறான். எனவே நீங்களும் அவரை நேசியுங்கள்’ என்று கூறுகிறார். பிறகு அவருக்கு பூமியில் அங்கீகாரம் வழங்கப்படுகின்றது. (அதாவது பூமியில் உள்ள அனைத்தும் அவரை நேசிக்கத் துவங்குகின்றன!) (ரியாளுஸ்ஸாலிஹீன்)

இதையே தான் வான்மறையும் தெளிவுபடுத்துகிறது.

‘எவர்கள் ஈமான் கொண்டு, நல் அமல்கள் செய்த கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்காக கருணைமிக்க இறைவன், ரஹ்மான்(அகிலத்திலுள்ள அனைத்திலும்) அன்பைத் தோற்றுவிப்பான்!’ (மர்யம் – 96)

இதையே அல்லாஹ் வேறோர் இடத்தில் வேறு வார்த்தைகளில்………….

“வேதம் அருளப்பட்டவர்கள் ஈமான் கொண்டு இறைவனுக்கு மட்டுமே பயப்பட்டு தக்வாவைக் கைக்கொண்டிருந்தால் அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டு நாம் அகற்றியிருப்போம். மேலும் அருட்கொடை நிரம்பிய ஜன்னத்துந் நயீமில் அவர்களை நுழையச் செய்திருப்போம். தவ்ராத்தையும், இன்ஜீலையும் இன்னும் தம் இறைவனிடமிருந்து தமக்கு இறக்கியருளப்பட்ட வேறு வேதங்களையும் அவர்கள் முழுமையாக நிலைநாட்டியிருந்தால் அவர்களுக்காக ஆதாரம் மேலிருந்தும் பொழிந்திருக்கும். கீழிருந்தும் பொங்கிப் பெருகி இருக்கும். (வானம், பூமியின், வற்றாச் சுரங்களைக் கொண்டு அவர்கள் வளம் பெற்றிருப்பர்!” (மாயிதா-65,66)

இகாமத் தவ்ராத்தை, இகாமத்துல் இன்ஜீலைச் செய்திருந்தால் வானம், பூமியின் வாசல்கள் அவர்களுக்காகத் திறந்திருக்கும். தலைக்கு மேலிருக்கும்” என்று அல்லாஹ் இங்கு கூறியுள்ளான். நம்முடைய தலைப்பான ‘தொழுகை’யைப் பற்றி எந்தக் குறிப்பும் இதில் இல்லை, அல்லவா?

இகாமத்துத் தவ்ராத் ஆகட்டும், அல்லது இகாமத்துல் இன்ஜீல் ஆகட்டும், அல்லது இவற்றைவிடவும் விளக்கமாக இகாமத்துஷ் ஷரீஆ என்று கூறப்பட்டிருந்தாலும் அதற்கு ஒரு மாற்றுச் சொல் இருக்கின்றது. அதுவே இகாமத்துஸ் சலாத்! குர்ஆனை – அல்லாய்வின் கலாமை – ஆழமாகக் கருத்தூன்றிப் படிப்பவர்கள் இங்கே அகாமுத் தவ்ராத், அகாமுல் இன்ஜீலுக்குப் பதிலாக அகாமுஸ் சலாத் என்று சொல்லப்பட்டிருந்தாலும் பொருள் மாறுபாடு ஏற்படாது என்பதை உணர்ந்திருப்பார்கள். இதைப் பற்றி நாம் ஏற்கனவே விவரித்துள்ளோம். எனினும், சுட்டிக் காட்டலுக்காக சில வசனங்கள் – சூரத்துல் அஃராஃபில் (170) கூறப்பட்டுள்ளதாவது –

“யார் யார் வேதத்தை முறையாகக் கடைப்பிடித்து தொழுகையை நிலை நிறுத்துகின்றார்களோ, அத்தகைய நல் ஒழுக்கம் உடையவர்களுக்கான கூலியை நாம் வீணாக்கிட மாட்டோம்!”

இவ்வசனத்தில் ‘தமஸ்ஸுக் பில் கிதாப்’ உடைய அடையாளமாக தொழுகையே கூறப்பட்டள்ளது. அதாவது எந்த சமூகம் தொழுகையை அதன் சரியான வடிவத்தில் முறையாக நிறைவேற்றுகின்றதோ, அது தன்னுடைய வேதத்தையும் ஒழுங்காக கடைபிடிக்கும். அத்தகையவர்களின் கூலியை நாம் வீணாக்கிவிட மாட்டோம்.

இதையே தான் வேறிடத்தில் தொழுகையைத் தொலைத்தவர்கள் ஷரீஅத்தையும் தொலைத்துவிட்டார்கள். மன இச்சைகளின் அடிமைகளாகவும் ஆகிவிட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. தொழுகை அழிந்துவிட்டால் ஷரீஅத்தும் அழிந்து போகும்.

ஷரீஅத்தைப் பின்பற்றுவது தொடர்பாக யூதர்களோடு செய்து கொண்ட வாக்குறுதியைப் பற்றி அல்லாஹ் மாயிதாவில் குறிப்பிடுகிறான். அங்கே வேதம் அல்லது தவ்ராத் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. மாறாக, தொழுகையை நிலைநாட்டுவதில் உறுதியாக இருங்கள் என்றே வலியுறுத்தப் பட்டுள்ளது. அதாவது தொழுகையை முறையாக நிலை நாட்டுவதில் உறுதியாக உள்ள காலம் வரைக்கும் இறைவனுடனான உடன்படிக்கையிலும் உறுதியோடு இருப்பீர்கள். தொழுகையில் சுணக்கம் ஏற்பட்டுவிட்டால் உடன்படிக்கையும் வலுவிழந்து போய் செல்லாக்காசாகிவிடும் என்பதே இதன் பொருள் ஆகும்.

“இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம் அல்லாஹ் வலுவான வாக்குறுதி வாங்கியிருந்தான். அவர்களில் பன்னிரண்டு பேரை கண்காணிப்பாளர்களாய் நியமித்திருந்தான். இன்னும் அல்லாஹ் அவர்களிடம் கூறினான். நிச்சயமாக, நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தியும், ஜகாத் வழங்கியும் வந்திர்களாயின்!” (மாஇதா – 12)

இதோ, இந்த வசனத்தையும் கருத்தில் கொள்ளுங்கள்.

“இது ஒரு வேதமாகும், இதனை நாம் இறக்கி வைத்திருக்கிறோம். இது அருள்வளம் மிக்கதாகவும் தனக்கு முன்னால் வந்த வேதத்தை செய்ப்படுத்துவதாகவும் இருக்கிறது. மேலும், இத்தலை நகரத்திலும்ஞி (மக்காவிலும்) அதன் சுற்றுப் புறங்களிலும் வசிப்பவர்களுக்கு நீர் எச்சரிக்கை செய்வதற்காகவும் இதுஅருளப்பட்டுள்ளது. மேலும் எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இவ்வேதத்தையும் நம்புவார்கள். தமது தொழுகையிலும் பேணுதலாக இருப்பார்கள்!” (அன்ஆம் – 92)

இது வரை அளிக்கப்பட்ட குர்ஆனுடைய விளக்கங்களைப் படித்தறிந்த பின்பும் யாருக்கேனும் முழு திருப்தி ஏற்படவில்லையென்றால் அவர் கீழ் வரும் வசனத்தை ஆராய்ந்து பார்க்கட்டும். சந்தேகமே இல்லாமல் தொழுகையின் ‘இடத்தை’ அது உறுதி செய்கின்றது.

“மூஸா தம் மக்களை நோக்கிக் கூறினார் – அல்லாஹ்விடம் உதவி கோருங்கள். மேலும் பொறுமையை மேற்கொள்ளுங்கள்! நிச்சயமாக இந்த பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தன் அடிமைகளில் தான் நாடுவோரை அதற்கு அவன் உரிமையாக்குகிறான். அவனுக்கு அஞ்சிய வண்ணம் வாழ்பவர்களுக்கே இறுதி வெற்றி இருக்கின்றது.” அஃராஃப் – 128

இவ்வசனம் சூரத்துல் பகறாவில் உள்ள (153)

என்ற வசனத்தின் ஒத்த பொருளைக் கொண்டதாகவே உள்ளது. மேற்கூறப்பட்ட ஆயத்தில் அல்லாஹ் என்ற சொல் உள்ளது. இங்கே சலாத் என்ற சொல் உள்ளது. ஏற்கனவே நாம் விளக்கிவிட்டது போல இவ்விரு சொற்களையும் பயன்படுத்தி அல்லாஹ் ஒரே கருத்தையே செல்லியுள்ளான். அல்லாஹ்வின் உதவியைப் பெற வேண்டுமென்றால் ஒழுங்காக முறையாகத் தொழுது வரவேண்டம். ஒரு வசனத்தில் வழிமுறை கூறப்பட்டுள்ளது. இன்னொருவசனத்திலோ இலக்கு தெளிவாக்கப்பட்டுள்ளது.

நாம் இந்த அத்தியாயத்தில் சொல்ல வருவது என்னவென்றால், எந்த சமுதாயம் ஒழுங்காக முறையாகக்ஷத் தொழுது வருகின்றதோ, அது அகிலத்தில் உள்ள அனைத்துப் பொருட்களோடும் இணங்கி, ஒத்திசைகின்றது. இதன் காரணமாக அகிலத்தில் உள்ள ஒவ்வோர் அணுவும் அதை நேசிக்கின்றன. நலம் விசாரிக்கின்றன. வான்வெளியில், பூமிப்பரப்பில் உள்ள பொருள்களிலேயே எல்லாப் பொருட்களோடும் அந்தச் சமுதாயத்திற்கு உறவு ஏற்பட்டுவிடுகின்றது. இவை அனைத்திலும் பகுத்தறிவு கொண்டதாக அந்த சமுதாயம் மட்டுமே இருப்பதால் ‘அரசியற் தலைமை’ எனும் கடிவாளம் அதன் கையில் ஒப்படைக்கப்படுகின்றது.

இதற்கு நேர்மாற்றமாக எந்த சமுதாயம் தொழுகையை நிராகரிக்கின்றதோ, அது அகிலத்தோடான தனது உறவை முறித்துக் கொள்கின்றது. வான், பூமியோடான அதன் இணக்கம் சிதைந்து விடுகின்றது. எனவே, இறைவனின் நியதியின் அடிப்படையில் அந்தச் சமுதாயத்தின் வேர்கள் பிடுங்கப்படுகின்றன. ஏனென்றால் சுற்றியுள்ளவர்களோடான உறவை தானாக அந்தச் சமுதாயம் அறுத்துக் கொண்டுவிட்டது. ‘வாழ்வதற்கான’ தகுதி இனிமேல் அதற்கு இல்லை!

அரசியற் தலைமை, ஆட்சியமைப்பு, கிலாஃபத் பற்றிய அல்லாஹ்வின் சுன்னத்தை மேலும் விளக்கிக் கூறிவிட ஆவலாய்த்தான் உள்ளது. ஆனால் இங்கே இப்போதைக்கு இந்த அளவு போதும் என்று கருதுகின்றேன். இன்ஷா அல்லாஹ் வேறொரு நூலில் அதைப் பற்றி விளக்கமாகக் காணலாம்.

6. நினைவிலேயே கழிகின்றன நிமிடங்கள்

எந்நேரமும் இறைவனை நினைவில் நிறுத்துவதே தொழுகையின் நோக்கம் என்பதைப் புரிந்து கொண்டோம். இறை நம்பிக்கையாளனின் வாழ்வில் ஒரு நிமிடம் கூட இறை நினைவிலிருந்து விலகி இருப்பதில்லை.

“அவர்கள் எத்தகையவர்கள் எனில் நிற்கும் போதம், உட்காரும்போதும், படுத்திருக்கும் போதும் – ஆக எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை நினைத்துக் கொண்டே இருக்கின்றார்கள்!” (ஆலஇம்ரான் – 191)

இன்னோர் இடத்தில் வான்மறை இதையே கூறுகிறது.

“நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமாக நினைவு கூருங்கள்! காலையிலும், மாலையிலும் அவனை துதித்துக் கொண்டிருங்கள்!” (அஹ்ஸாப் – 41,42)

ஓர் இறைநம்பிக்கையாளன் பள்ளிவாசலில் மட்டுமே தொழுவதில்லை. மாறாக எந்த நேரத்தில் எங்கு இருந்தாலும் தொழுது கொண்டே உள்ளான். இறைநினைவை பசுமையாக வைத்திருப்பது தானே தொழுகையின் பணி. அவன் பள்ளிவாசலை விட்டும் பிரிந்து இருக்கலாம். ஆனால் இறைநினைவை விட்டும் எந்நிமிடமும் விலகி இருக்க மாட்டான். இறை நினைவை விட்டு விலகும் சந்தப்ப்பம் நேர்ந்தால் அதில் அவனுக்கு அமைதியோ, நிம்மதியோ, சுவையோ தென்படாது.

அலட்சியம், இலட்சியத்தில் அக்கறையின்மை, மறதி போன்ற அழுக்குகளை இறைநினைவு கழுவித் தூய்மைப்படத்திக் கொண்டே உள்ளது. ஒரு கட்டத்தில் தொழுகையும் இறைநினைவும் இதைத் துடைத்தும் தூண்டியும் மென்மேலும் மெருகேற்றிக் கொண்டே உள்ளன. மன இச்சை இருள் தலை தூக்கும் போதெல்லாம் இச்சுடர் பிரகாசமாக எரிந்து இருளை விரட்டிவிடுகின்றது. உள்ளத்தில் அபிலாசைகள் உசுப்பேற்றி மேலிருந்த உங்களை உருட்டிவிட்டால் கீழே விழுந்து விடாமல் உங்களை மேலிருந்து உங்களை உருட்டிவிட்டால் கீழே விழுந்துவிடாமல் உங்களை இப்பேரொளி பாதுகாக்கிறது. இப்பேரொளிப் பெருஞ்சுடரை உருவாக்குவதானால் தான் தொழுகையை ஒரு ஹதீஸ் “புர்ஹான்” என்று வர்ணிக்கிறது. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அந்த ஹதீஸை விவரிக்கிறார்கள்-

ஒரு முறை அண்ணலார் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லிம்) தொழுகையைப் பற்றி கூறினார்கள். “எவன் தொழுகையைப் பேணுதலோடு கண்காணித்து வருவானோ அது அவனுக்கு ஒளியாகவும், புர்ஹான் (சான்று) ஆகவும், மறுமை நாளின் வெற்றியாகவும் ஆகி விடும்!

பாதுகாப்பு வளையமாக இந்தப் பேரொளி உங்களைச் சுற்றிச்சுற்றி வந்து கொண்டேயிருக்கும். அண்ணல் யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் பேரழகு இளமங்கையின் கண்ணசைவில் தடுமாறி விழுந்து பாழடைந்து போய்விடாமல் காத்ததும் இந்த ‘புர்ஹான்’ தான்!

“அவள் அவரை அடைய முனைந்துவிட்டாள். தன் அதிபதியின் தெளிவான புர்ஹானை – சான்றினை – உணராதிருந்தால் அவரும் அவளை அடைய முனைந்திருப்பார்!” (யூஸுஃப் – 24)

இதனால் தான் இந்தக் காரணத்தினால் தான் ஷரீஅத்தைச் சுற்றி ஒரு ‘வரையறை வட்டமாக’தொழுகை அமைந்துள்ளது. அதாவது தொழுகை எனும் வட்டத்தை வரைந்து அதற்குள் அல்லாஹ் ஷரீஅத்தைப் பாதுகாப்பாக வைத்துள்ளான். வரையறை வட்டம் பாதுகாப்பாக இருக்கும் வரை ஷரீஅத்தின் எந்த மூலையிலும், எந்தப் பகுதிக்கும் யாதொரு ஆபத்தும் ஏற்பட்டு விடாது. ஏதேனும் ஒரு பகுதியில் உடைப்பு, சேதம் ஏற்பட்டால் அப்பகுதியின் வழியாக ‘ஷஹவாத் இச்சைகள்’, ‘ஷஹவாதுஷ் ஷயாதீன் ஷைத்தானிய எண்ணங்கள்’ படையெடுக்கும். மற்ற பகுதிகள் அனைத்தையுமே பாழ்படுத்திவிடும்.

சூரத்துல் முஃமினீன் உடைய இவ்வசனங்களை கவனியுங்கள் –

“நிச்சயமாக முஃமின்கள் வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையவர்கள் எனில் தொழுகையில் பயபக்தியை மேற்கொள்கின்றார்கள். வீணானவற்றை விட்டு விலகி இருக்கின்றார்கள். ஜகாத்தை அதன் நெறிமுறைப்படி செயற்படுத்தக் கூடியவர்களால் இருக்கின்றார்கள். தங்களுடைய மனைவிகளிடமோ, தங்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களிடமோ தவிர! அத்தகைய நிலையில் அவர்கள் பழிக்கப்பட மாட்டார்கள். ஆயினும், எவர்கள் இதற்கு அப்பாலும் ஆசைப்படுகின்றார்களோ அவர்களே வரம்பு மீறக் கூடியவர்கள் ஆவர். இன்னும் அவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப் பட்ட அமானிதங்களையும், தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளையும் பேணிக் காக்கக் கூடியவர்களாய் இருக்கின்றார்கள். மேலும், தங்களுடைய தொழுகைகளையும் பேணுபவர்களாய் இருக்கின்றார்கள்!” (முஃமினூன் – 1-9)

‘வரைமுறை வட்டம்’ தென்படுகின்றதா இல்லையா? இங்கே கூறப்பட்டுள்ள எல்லா நற்செயல்களும் தொழுகையில் அச்சத்தோடு இருப்பதில் ஆரம்பிக்கின்றன. தொழுகையை முறையாகக் கண்காணித்து வருவதில் வந்து முடிவடைகின்றன. தொழுகையைப் பாதுகாப்பதில் தான் ஷரீஅத்தின் பாதுகாப்பு உள்ளது என்பதையே இது காட்டுகின்றது. வெற்றிக்கு வழிகாட்டிக் கொடுக்கும் தொழுகையின் உயிரோட்டம் ‘ஃகுஷூஃ’ (பயம், அச்சம்) விலும் அதனுடைய சிறப்பம்சம் தொடர் கண்காணிப்பிலும் தான் உள்ளது என்பதையும் கூடவே உணர்த்துகின்றன.

வழிகாட்ட வந்த வான்மறையின் துவக்க வசனங்களும் இவ்வுண்மையையே நமக்கு உணர்த்துகின்றன.

“இறையச்சமுடையோருக்கு இது சீரிய வழிகாட்டியாகும். அவர்கள் எத்தகையோர் என்றால் மறைவானவற்றை நம்புகின்றார்கள். தொழுகையை நிலைபெறச் செய்கின்றார்கள்.” (பகறா – 2,3)

சட்டங்கள், இறையாணைகள் விளக்கப்படும்போது அவற்றுக்கு இறுதியில் கையில் தடியேந்திக் கொண்டு காக்கும் தண்டல்காரனாக இவ்வசனம் வருகின்றது. உதாரணமாக –

“எல்லாத் தொழுகைகளையும் (குறிப்பாக, தொழுகையின் சிறப்பனைத்தையும் ஒருங்கே பெற்றுள்ள) ஸலாத்துல் உஸ்தாவையும் நீங்கள் பேணித் தொழுது வாருங்கள்!” (பகறா – 238)

இவ்’வரைமுறை வட்டத்’தை நாம் சூரத்துல் மஆரிஜ் இலும் காணமுடியும். (வசனங்கள் – 22-320 இவ்வாறு எங்கேயெல்லாம் குறிப்பிடப்படுகின்றதோ அங்கேயெல்லாம் ‘முஹாஃபளத்துஸ் சலாத்’தொழுகையைக் கண்காணிக்குமாறு கூறப்பட்டுள்ளதையும் காணலாம். ஆக, தொழுகையைக் கண்காணித்து வந்தால் தான் ஷரீஅத்தைக் காப்பாற்ற இயலும்.

எவன் தன்னுடைய தொழுகையை கண்காணித்த வரவில்லையோ, அது அவனுக்கு ஒளியாகவும் அமையாது. புர்ஹான் ஆகவும் அமையாது. மறுமை நாளின் வெற்றியாகவும் அமையாது!

அண்ணலார் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லிம்) கூறுகிறார்கள்.

“அமானிதம் இல்லாதவனிடம் ஈமான் இல்லை. தூய்மையில்லாதவனுக்கு தொழுகையில்லை. தொழுகை இல்லாதவனிடம் தீன் இல்லை. தீனில் தொழுகைக்கான அந்தஸ்து, உடலில் தலைக்குரிய அந்தஸ்தைப் போன்றதாகும்.”

இத்தகைய சிறப்பும், முக்கியத்துவமும் பொருந்திய தொழுகையை கவனமுடனும், கண்காணிப்புடனும் தொழக்கூடிய மக்களாக நாம் மாற வேண்டும்!

 

தொழுகை என்பதற்கான சாதாரண விளக்கமே இச்சிறு நூல்! இறைவனை நெருங்கச் செய்யும் வீரிய மிக்க தொழுகை என்பது இதற்கும் அப்பால் உள்ளது சஹாபாக்கள் தொழுது வந்த அத்தொழுகையின் தன்மை குறித்து விளக்கவோ, உணர்த்தவோ அடியேனால் இயலாது!

 

நூற்பட்டியல்

1. வான்மறை குர்அன்

2. அபுல்ஃபிதா ஹாபிழ் இப்னு கஸீர் அத்திமிஷ்கி தஃப்ஸீருல் குர்ஆனில் அழீம்

3. அப்துல் ஹமீது அல்ஃபராஹி

நிளாமுல் குர்ஆன் வதஃவீலுல் ஃபுர்கான் பில்ஃபுர்கான்

4. சையித் அபுல் அஃலா மௌதூதி

தஃப்ஹீமுல் குர்ஆன்

5. முஹம்மது இப்னு இஸ்மாயீல் அல் புஃகாரி

சஹீஹ் புஃகாரி

6. அபுல் ஹுஸைன் முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ் நைஷாபூரி

சஹீஹ் முஸ்லிம்

7. அபு ஈஸா முஹம்மது இப்னு ஈஸா திர்மிதீ ஜாமிஃதிர்மிதீ

8. வலியுத்தீன் முஹம்மது இப்னு அப்துல்லாஹ் அல்ஃகதீ தப்ரேஜி மிஷ்காத்துல் மஸாபீஹ்

9. அபு ஜக்கரிய்யா யஹ்யா இப்னு ஷரஃபின் னவவீ ரியாழுஸ் ஸாலிஹீன்

10. நள்முல் குர்ஆன் ஏக் தஆருஃப்

11. அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி தஸ்கியத்துந் நஃப்ஸ்

12. அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி ஹகீகத்தே நமாஸ்

13. அபுஹாமித் முஹம்மது கஸ்ஸாலி கீமியாயே ஸஆதத்

 

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: